என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயரம்: பாஜக Version விசாரணை - முதல்வர் ஸ்டாலினுக்கு 3 கேள்விகள் - அறிக்கை கேட்கும் அனுராக் தாக்கூர்
- பிரபல நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி தலைமையில் தமிழகம் வந்துள்ளது.
- தேஜஸ்வி சூர்யா, கூட்டத்தில் கைகள் கத்தியால் கிழிக்கப்பட்டன என தன்னிடம் ஒருவர் கூறியதாக பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த சனிக்கிழமை, கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.
இதற்கிடையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க தங்கள் கட்சி எம்.பி.க்கள் குழுவை அமைத்து தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார்.
இந்த குழுவில் பிரபல நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இந்த குழு கரூரில் ஆய்வு செய்து, பலரிடமும் சம்பவத்தன்று நடந்தது குறித்து கேட்டறிந்து வருகிறது. மேலும் குழு கொடுத்த பேட்டியில் தமிழக அரசை குற்றம்சாட்டியது. குறிப்பாக தேஜஸ்வி சூர்யா, கூட்டத்தில் கைகள் கத்தியால் கிழிக்கப்பட்டன என தன்னிடம் ஒருவர் கூறியதாக பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி. அனுராக் தாக்கூர் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தங்கள் குழு சார்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
"இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுப் பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகள் என்னென்ன?
நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன?.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் இந்த சோக நிகழ்வுக்கு வழிவகுத்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு என்ன திட்டமிட்டுள்ளது? உள்ளிட்டவறிற்கான பதில்களை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






