என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.- வி.சி.க. கூட்டணி முறிய வாய்ப்பு இல்லை: திருமாவளவன்
    X

    தி.மு.க.- வி.சி.க. கூட்டணி முறிய வாய்ப்பு இல்லை: திருமாவளவன்

    • விஜய் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது.
    • வருகிற சட்டசபை தேர்தலில் விஜயால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

    சென்னை:

    கரூர் சம்பவத்தில் விஜய் மீது போலீசார் ஏன் இதுவரையில் வழக்கு பதிவு செய்யவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்கமாக கேள்வி எழுப்பியதை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள அவர் இவ்வாறு கருத்து கூறிய நிலையில் அதற்கு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் திருமாவளவனிடம் இது குறித்து சிறப்பு பேட்டி காணப்பட்டது. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:- கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியதன் நோக்கம் என்ன?

    பதில்:- விஜய் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது. அவரை கைது செய்து சிறையில் அடக்க வேண்டும் என்ற விருப்பமில்லை. இந்த சம்பவத்தில் புஸ்சி ஆனந்த் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களும் விஜயை போல அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான். ஆனால் விஜய் மீது மட்டும் வழக்கு போடவில்லை. இது ஒரு தலைப்பட்சமான அணுகுமுறை என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள். அதைத்தான் நான் பிரதிபலிக்கிறேன்.

    பொதுச்செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யும்போது ஏன் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது. அவரும் அங்கு வந்து சென்றிருக்கிறார். காவல்துறை ஒரு சாரராக செயல்படுவதாக நான் அறிகிறேன்.

    கே:- தி.மு.க. கூட்டணியில் தாங்கள் இருந்து கொண்டு அவர்களுக்கு எதிராக கருத்து கூறுவது சரியா?

    பதில்:- கரூர் சம்பவத்தை பொருத்தமட்டில் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் சரியானது தான். இதை அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதாக ஏன் பார்க்க வேண்டும். விஜய்க்கு எதிராக பேசுவதாக ஏன் பார்க்க வேண்டும். போலீஸ் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்க கூடிய நிலையில் ஒரு சிலர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துவிட்டு விஜய் மீது வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை. கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்திருக்கலாமே?

    இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் முறிவு ஏற்பட வாய்ப்பு இல்லை.

    கேள்வி:- கரூர் சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு பாடமாக அமைந்துள்ளதா?

    பதில்:- இந்த சம்பவம் விஜய்க்கு மட்டும் பாடமல்ல பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் பாடம்தான். பொதுக்கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வரக்கூடிய அரசியல் தலைவர்கள் அவர்களை பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்ற சமூகப் பொறுப்பை கொடுத்துள்ளது. இது அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.

    கேள்வி:- கரூர் நெரிசல் சம்பவம் தமிழக அரசியல் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

    பதில்: இந்தப் பிரச்சனை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் விஜய்யை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., ஜி.கே.வாசன் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர்.

    தேர்தல் வரை இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டால் கவலை தருவதாக அமைந்துவிடும். இதை வைத்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்பதுதான் என் விருப்பம்.

    கேள்வி:- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை பற்றி?

    பதில்:- கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் செயல்பாடு பாராட்டுக்குரியது. அவர் நேரில் சென்றதால் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய உயிர் பலி தடுத்து நிறுத்தப்பட்டது.

    கேள்வி:- கரூர் சம்பவத்தில் விஜயின் அணுகுமுறை எப்படி?

    பதில்:- அவருடைய பேச்சுக்கள் எல்லாம் தி.மு.க. மீது வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் பொதுக்கூட்டத்தில் எந்த செய்தியும் கொடுக்கவில்லை. அவருடைய பேச்சு அணுகுமுறை இதே நிலையில் நீடித்தால் விஜய் பொது மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு விடுவார்.

    கேள்வி:- விடுதலை சிறுத்தையின் தேர்தல் பணிகள் எவ்வாறு உள்ளது?

    பதில்:- விடுதலைச் சிறுத்தைகள் பொருத்தவரையில் தேர்தல் பணி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தான் தொடங்கும். புதிய மாவட்ட செயலாளர்கள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நியமிக்கப்படுவார்கள். பூத் கமிட்டி அமைக்கப்பட்டு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் ஜனவரி மாதத்தில் இருந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளேன்.

    கேள்வி:- வருகின்ற தேர்தல் தி.மு.க. கூட்டணிக்கு எப்படி இருக்கும்?

    பதில்:- வருகிற சட்டசபை தேர்தலில் விஜயால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. திரைப்படத்தின் அடிப்படையில் ரசிகர்கள், இளைஞர்கள் அவரிடம் இருக்கிறார்கள். அவரால் தி.மு.க. கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது. ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    Next Story
    ×