என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.
    • பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர் குரல் கொடுத்த கமல்ஹாசனுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.


    அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.

    மேலும் இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்து பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர் குரல் கொடுத்த கமல்ஹாசனுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

    • கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம்.
    • அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை.

    சென்னை:

    2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைதியைச் சீர்லைக்கும் வகையில் பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (உபா) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதற்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம். தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக.

    கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம்.

    அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை.

    தேசம் அருந்ததிராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும் என பதிவிட்டுள்ளார்.



    • மீனவர்கள் சம்பவம் நடந்த நடுக்கடலுக்கு சென்று 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • கடலில் மூழ்கி மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மண்டபம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 61 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை ஆர்வத்துடன் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.

    மண்டபத்தை சேர்ந்த சுதர்சன் என்பவரது படகில் பாம்பனை சேர்ந்த மீனவர்கள் பரக்கத்துல்லா, கலீல்ரகுமான், ஆரோக்கியம், பிரசாத், மண்டபம் முகமது அனீபா ஆகிய 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    மண்டபத்தில் இருந்து சில மைல் தொலைவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சூறாவளி காற்றால் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் விசைப்படகு கட்டுப்பாடின்றி தள்ளாடியது.

    தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக விசைப்படகில் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தண்ணீரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து கடல் தண்ணீர் உள்புகுந்ததால் படகு மூழ்க தொடங்கியது.

    செய்வதறியாது தவித்த மீனவர்கள் கடலில் குதித்தனர். இதில் பிரசாத், முகமது அனீபா ஆகியோர் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகில் ஏறி உயிர்தப்பினர். ஆனால் மற்ற மீனவர்களான பரக்கத்துல்லா, கலீல்ரகுமான், ஆரோக்கியம் ஆகியோர் கடல் சீற்றத்தால் மாயமானார்கள். அவர்களை பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து கரைக்கு அவசரமாக திரும்பிய மீனவர்கள் படகு மூழ்கி மீனவர்கள் மாயமானது தொடர்பாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடலோர காவல்படை போலீசார் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் சம்பவம் நடந்த நடுக்கடலுக்கு சென்று 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் படகு மூழ்கிய இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் 2 மீனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. உறவினர்கள் வரவழைக்கப்பட்டு உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலில் மூழ்கி மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    தடை காலம் முடிந்து முதல் நாளிலேயே விசைப் படகு மூழ்கி 2 மீனவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.

    • மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
    • எங்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பெற முடியவில்லை என்றாலும் கூட, மக்களின் நம்பிக்கையை பெற்று, மரியாதைக்குரிய சதவீதத்தை பெற்றிருக்கிறோம்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் 23 இந்தியா கூட்டணிகள் சேர்த்து பெற முடியாத மத்திய ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மை என கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைந்துள்ளது. மத்திய அரசு அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது.

    வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. எங்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பெற முடியவில்லை என்றாலும் கூட, மக்களின் நம்பிக்கையை பெற்று, மரியாதைக்குரிய சதவீதத்தை பெற்றிருக்கிறோம். அந்த சதவீதத்தின் அடிப்படையிலே பா.ஜனதா தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் தொடர்புடைய உழைப்பை நான் பாராட்டுகிறேன். இந்த சதவீதம் என்பது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நிச்சயமாக எங்களுக்கு அடித்தளமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதனை நோக்கியே எங்களது பயணம் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போளூர்:

    ஆந்திர மாநிலம், குண்டூர் பெண் குறையாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சசிதருர் (வயது 39). இவரது மனைவி கல்யாணி (33). இவர்களுக்கு பின்கா ராமச்சந்திரன் (11) என்ற மகனும், ஸ்ரீ ரித்திஷா என்ற மகளும் உள்ளனர்.

    இவரது உறவினர்கள் பெங்களுருவை சேர்ந்த ரவி (24), ஈஸ்வரி (62).

    இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை குண்டூரில் இருந்து இவர்கள் 6 பேரும் காரில் புறப்பட்டனர்.

    காரை சசிதருர் ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலை அருகே வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுக்கியது.

    காரில் பயணம் செய்த கல்யாணி, ரவி, சிறுமி ஸ்ரீ ரித்திஷா ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    மனைவி, மகள் தனது கண்முன்பே இறந்ததால் சசிதருர் கதறி அழுதார். இதனை பார்த்தவர்களின் கண்களில் கண்ணீரை வர வழைத்தது. ஈஸ்வரி, பின்கா ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போளூர் போலீசார் கல்யாணி, ரவி, ஸ்ரீ ரித்திஷா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

    • மீண்டும் மீண்டும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி வருகிறார்.
    • பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் நடிகை குஷ்பு எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று சொல்வார்கள். அது போன்று மீண்டும் மீண்டும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி வருகிறார். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவர் அவதூறான கருத்துக்களை கூறி உள்ளார். இதனால் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடர உள்ளேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை திரும்ப அழைப்பதற்காக மட்டும் சஸ்பெண்டு செய்கிறார். ஏனென்றால் அவர்களை மகிழ்விக்க இந்த வகையான நோயுற்ற மனம் கொண்டவர்கள் தேவை.

    இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசிய வீடியோ பதிவையும் நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.
    • வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குவைத்தில் நடந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், மத்திய அரசு ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.

    நீட் தேர்வில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கும். தி.மு.க. வெற்றிக்காக பாடுபடுவோம்.

    வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து, தற்பொழுது பட்டுப்போன மூங்கில் மரங்களை வனப்பகுதியில் வாழும் பழங்குடியினரே அதனை எடுத்துச்செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைநகரம் சென்னை, கொலை நகரமாகவே மாறிவிட்டது.
    • போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க முடியவில்லை.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன.

    ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வரி மாறாமல் வாசித்து விட்டுச் செல்கிறார். முதலமைச்சர் உண்மையில் செய்திகளைப் படிக்கிறாரா அல்லது அவருக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கிறார்களா என்பது கூடத் தெரியவில்லை.

    குறிப்பாக, தலைநகரம் சென்னை, கொலை நகரமாகவே மாறிவிட்டது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் குற்றங்களுக்குப் பழி தீர்க்கும் இடமாக, சென்னை மாறியிருக்கிறது. சென்னையின் பரபரப்பான சாலைகளில், பொதுமக்கள் மத்தியில், ஓடஓட விரட்டிக் கொல்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாக மாறியிருக்கிறது. கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கிறார்கள்.

    தாங்கள் செய்யும் குற்றத்திற்கான விளைவுகளை எண்ணிப் பார்க்கும் நிலையில் கூட அவர்கள் இல்லை. பெருகி இருக்கும் கஞ்சா புழக்கத்தினால் இளைஞர்களை அடிமையாக்கி குற்றச் செயல்களில் கூலிப்படையாகச் செயல்பட தூண்டப்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது.

    கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தி.மு.க. அரசு கண்டும் காணாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

    நேற்றைய தினம் தமிழக பா.ஜனதா மகளிர் அணியின் மாநிலப் பொதுச் செயலாளர் வக்கீல் நதியாவின் கணவர் சீனிவாசன் மீது கூலிப்படையினரை கொண்டு கொலை வெறித் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

    தி.மு.க.வின் மூன்று ஆண்டு கால அலங்கோல ஆட்சியில், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க முடியவில்லை. இவை பல மடங்கு அதிகரித்திருக்கின்றன.

    இவை குறித்து எதுவும் அறியாமல், துண்டுச் சீட்டைப் பார்த்து, நாங்கள் நம்பர் ஒன் என்று கனவுலகில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை, தூக்கத்தில் இருந்து யாரேனும் தட்டி எழுப்ப வேண்டும். தமிழகத்தில் குற்றச் செயல்களையும், போதைப் பொருள்கள் புழக்கத்தையும் இனியும் கட்டுப்படுத்தவில்லை என்றால், பெரும் எதிர்விளைவுகளை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
    • செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை தென்மாவட்டத்தில் புகழ் பெற்ற சந்தையாகும். இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம்.

    தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். இங்கு சாதாரண நாட்களில் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.

    இந்நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நேற்று காலை முதல் வியாபாரம் தொடங்கியது. இதற்காக வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.9 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. அதேபோல் எடைக்கு ஏற்ப ரூ.33 ஆயிரம் வரை விற்பனையானது. ஜோடி ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம்வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவத்தனர்.

    கடந்த ஆண்டு ரூ.6 கோடி விற்பனையான நிலையில் ஆடுகளின் விலை அதிகமாக இருந்ததால் விற்பனை இந்தாண்டு சற்று குறைந்து காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகளிடம் கேட்டபோது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விலை அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கு முந்தைய வாரங்களில் நடைபெற்ற சந்தைகளில் ஆடுகளை வாங்கியதால் இன்று விற்பனை குறைவாக இருந்தது என தெரிவித்தனர்.

    • குறைந்தது 16 மணி நேரமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
    • குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் குறுவைத் தொகுப்பு திட்ட உதவிகளை நீட்டிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், அங்குள்ள உழவர்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதற்கு வசதியாக குறுவை சாகுபடி தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

    ஆனாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிலப்பரப்புக்கு மட்டும் தான் குறுவைத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருப்பது நியாயமல்ல.

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.78.67 கோடி மதிப்பிலான குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்படி, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பளவில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் விதை நெல் மானியமும், இயந்திர நடவு மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

    இப்போது இயந்திர நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.4000 மட்டுமே வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகையை உழவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாக ஜிப்சம் உரம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது ஜிப்சம் மானியமாக ஏக்கருக்கு ரூ.250 மட்டுமே வழங்கப்படும். அதுவும் 25000 ஏக்கருக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    குறைந்தது 16 மணி நேரமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் குறுவைத் தொகுப்பு திட்ட உதவிகளை நீட்டிக்க வேண்டும். இயந்திர நடவு மானியம், ஜிப்சம் உர மானியம் ஆகியவற்றை முழுமையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தானும் மரியாதை செலுத்தி தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
    • ராமு உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடி தென்னவனூக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா தென்னவனூரை சேர்ந்தவர் கருப்பணன் மகன் ராமு (வயது 60). இவர் தற்போது அடுத்த பட்டணம்காத்தான் செக்போஸ்ட் அருகில் குடியிருந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி குருவம்மாள் என்ற மனைவியும், சரவணக்குமார் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். மகள் சத்யாவுக்கு திருமணமாகி கணவருடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார்.

    ராமு முதலில் உள்ளூரில் வேலை பார்த்தார். ஆனால் குழந்தைகளை படிக்க வைக்கவும், மகளை திருமணம் செய்து கொடுக்கவும், குடும்பம் நடத்தவும் பணம் பற்றாக்குறையாக இருந்ததால் ராமு வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.

    அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்தான் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் மூச்சுத்திணறலில் ராமு உள்பட 7 தமிழர்கள் என மொத்தம் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

    இவர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை கேரளா முதல்வர் பினராயி விஜயன் முறைப்படி பெற்றுக்கொண்டார்.

    அங்கு தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தானும் மரியாதை செலுத்தி தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அதன்படி ராமு உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடி தென்னவனூக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.

    அங்கு கூடியிருந்த மனைவி மற்றும் உறவினர்கள் ராமு உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ராமு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக அரசு சார்பில் அறிவித்த ரூ.5 லட்சத்திற்கான காசோலையை ராமுவின் குடும்பத்தாரிடம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு வழங்கினார்.

    • புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக அளித்து உற்சாகமாக வரவேற்றனர்.
    • தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

    கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 5 மணி அளவில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார்.

    சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் திரண்டு வரவேற்றனர். புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக அளித்து உற்சாகமாக வரவேற்றனர்.

    கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவினாசி சாலை நீலாம்பூர் பகுதிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு உள்ள தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கிறார். அதன்பின்பு மாலை நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்பு இரவு 7.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.

    ×