search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuruvai Cultivation"

    • கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற பிடிவாதத்தில் உறுதியுடன் உள்ளது.
    • காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து நாளை டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுவதில் மேட்டூர் அணை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீரை நம்பி தான் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது. மேலும் குடிநீர் தேவையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. சில இடங்களில் பம்ப் செட் மூலம் சாகுபடி செய்தாலும் மேட்டூர் அணையை நம்பி தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி திறந்து விடப்பட்டது. அந்த சமயத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது. குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை விஞ்சியும் சாகுபடி செய்யப்பட்டன.

    விவசாயிகள் நம்பிக்கையுடன் குறுவையில் நல்ல விளைச்சல் பெறலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் சில நாட்களில் நிலைமை மாறியது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைய தொடங்கியது. தென்மேற்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை. மேலும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்புப்படி தமிழகத்திற்கு மாத வாரியாக வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காமல் வஞ்சித்தது. இந்த காரணங்களினால் குறுவை பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். 3 லட்சம் ஏக்கர் அளவுக்கு தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து கருகின.

    இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள். தொடர் போராட்டங்கள் நடத்தியும் கர்நாடகா அரசு இறங்கி வரவில்லை. தமிழக அரசு பலமுறை உரிய அழுத்தம் கொடுத்தும் தண்ணீர் திறந்து விட மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்டாவில் குறுவை பயிர்கள் காவிரி நீரின்றி காய்ந்து சேதம் அடைந்தன. எஞ்சிய பயிர்களை காப்பாற்றவும் தண்ணீர் திறந்து விடவில்லை. அடுத்து சம்பா சாகுபடி தொடங்குவதே கேள்வி குறியாக தான் உள்ளது.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வந்தன. இன்று அணையின் நீர்மட்டம் 30 அடியாக குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமான மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி தண்ணீர் நிறுத்தப்படும்.

    இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் நிறுத்தப்படுவதால் டெல்டா விவசாயிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளனர். எஞ்சிய குறுவை பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். பல இடங்களில் பம்பு செட் மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களுக்கு பாய்ச்சும் அவல நிலை நடந்து வருகிறது.

    மேலும் அரசு அறிவித்த இழப்பீடு தொகையும் குறைவானது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் கூறும்போது:-

    வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் பெருமளவில் கருகிவிட்டன. கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற பிடிவாதத்தில் உறுதியுடன் உள்ளது.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி தான் தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் கேட்கிறோம். ஆனால் அதையும் தராமல் வஞ்சிக்கிறது. இவ்வளவுக்கும் கர்நாடகாவில் பெரும்பாலான அணைகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது. ஆனால் காவிரியில் அவர்கள் போதிய தண்ணீர் திறந்து விடாததால் குறுவை பயிர்கள் வீணாகி விட்டது. இன்று நீர்மட்டம் குறைந்து வந்ததால் மேட்டூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எஞ்சிய குறுவை பயிர்களை காப்பற்றவும் தண்ணீர் இல்லை. அடுத்து சம்பா சாகுபடி தொடங்கவும் தண்ணீர் இல்லை. இதற்கும் மேலாக நீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகையும் கண்டிப்பாக போதாது. ஏனென்றால் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு கேட்டிருந்தோம். ஆனால் அறிவித்ததோ ஏக்கருக்கு ரூ.5300 தான். நாங்கள் கேட்டதிலிருந்து கால் பங்கு கூட இழப்பீடு தொகை அறிவிக்கவில்லை.

    ஒருபுறம் கர்நாடக அரசு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடாமல் ஏமாற்றி வருகிறது. மறுபடியும் மத்திய அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது. இன்று மேட்டூர் அணையில் தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது. இப்படி பல்வேறு கட்ட பிரச்சனைகளால் டெல்டாவில் குறுவை பயிர்கள் வீணாகி விட்டன. கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற முடியாமல் பரிதவிப்பில் உள்ளோம். அடுத்து சம்பா சாகுபடி தொடங்கலாமா? வேண்டாமா ? என்பதை அரசு உறுதியுடன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் காவிரி நீரை நம்பி தான் பெருமளவில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. கர்நாடக அரசு உரிய காவிரி நீரை வழங்கினால் மட்டுமே அடுத்து சாகுபடி பற்றி யோசிக்க முடியும்.

    காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து நாளை டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெறும். அதன் பிறகும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் போராட்டம் மேலும் விரிவடையும் என்றார்.

    • திருப்பழனம் ஓடம் போக்கி பாசன வாய்க்கால்கள் தலா 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நஞ்சை விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன ஆதாரமாக விளங்குகிறது.
    • கல்லணைக்கு அருகில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றுக்கு அருகில் உள்ள பல பாசன வாய்க்கால்களை தண்ணீர் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவையாறு:

    திருவையாறு அருகே திருப்பழனம் ஊராட்சியில் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து கும்பகோணம் மெயின்ரோடின் குறுக்கே செல்லும் திங்களூர் முனியாண்டவன் கோவில் பாசன வாய்க்கால் மற்றும் திருப்பழனம் ஓடம் போக்கி பாசன வாய்க்கால்கள் தலா 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நஞ்சை விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன ஆதாரமாக விளங்குகிறது.

    ஆனால் இந்த மெயின் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தண்ணீர் போகாதவாறு புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும் இப்பாசன வாய்க்கால்களிலிருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் உள்ளது. தற்போது குறுவை பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்களில் மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளை காவிரிநீர் சென்றடைந்து விட்டது.

    ஆனால் கல்லணைக்கு அருகில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றுக்கு அருகில் உள்ள பல பாசன வாய்க்கால்களை தண்ணீர் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவிரி ஆற்றுப் பாசன நீரை மட்டுமே நம்பி நெல் பயிர் செய்யும் விவசாயிகள் இந்த பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி குறுவை சாகுபடியை விரைவாக தொடங்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாலம் கட்டுமான பணி மெதுவாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • இதனால் வளப்பாற்றில் பாசனம் பெறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற வேதனையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை இன்னும் தொடங்கவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பய த்தங்குடி வளப்பாற்றில் நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் வழியாக திருப்பயத்தங்குடி, பில்லாளி, திருச்செங்காட்டங்குடி, தென்னமரக்குடி, கீழப்பூ தனூர், நத்தம், வீரபெரு மாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் சென்று வர முக்கிய வழியாக உள்ளது.மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வரவும் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி மெதுவாக நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பாலம் கட்டும் பணியால் காவிரி நீர் கடைமடை பகுதியான திருமருகல் பகுதிகளுக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வளப்பாற்றில் பாசனம் பெறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற வேதனையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை இன்னும் தொடங்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்க கோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். #Cauvery #KamalHaasan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்ககோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன். எங்கள் விவசாயிகளுக்காக வெட்கம் பார்க்காமல் சென்று கேட்டேன். அதை அரசியலில் காவிரி ஆணையம் வேண்டாம் என்று கேட்கச் சென்றதாக திரித்து விட்டனர்.

    காவிரி ஆணையம் வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர்விடும் கணக்குகளை பார்க்கத்தான் ஆணையம் வேண்டும் என்று கோரப்பட்டது. ஆணையம் கிடைத்தது பெரிய வெற்றிதான். 2 மாநிலங்களும் அதைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மீண்டும் பஸ்களை உடைப்பதுதான் வேலையாக இருக்கும்.

    ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு பற்றி விசாரணை நடப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று தமிழகம் வழிமொழிவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. இதுபற்றி நான் ஒரு வருடத்துக்கு முன் சொன்னேன்.

    இதுபோன்ற நிலவரங்கள் அதிகரித்து வந்ததால்தான் நான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழக அரசு நீங்க வேண்டும் என்று நான் சொல்லி நீண்ட நாளாகிவிட்டது. தனி நபருக்காக ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய சம்பவம் அரசியல் மாண்பு சிரழிந்து வருவதாக நினைக்கிறேன்.

    எம்.ஜி.ஆர். உயிருக்காக போராடியபோது தனியார் விமானத்தில்தான் போனார். சேலம்-சென்னை இடையேயான 8 வழி சாலை பற்றி எந்த ஒரு ஏழையும் பேசலாம். 8 வழி சாலை வேண்டுமா? வேண்டாமா? என்பதை பற்றி மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதுபற்றி பேசக்கூடாது என்று எச்.ராஜா எப்படி சொல்லலாம்.

    கருத்து சுதந்திரம் மெதுவாக பறிக்கப்பட்டு வருகிறது. யாரும் தங்களுடைய கருத்துகளை வெளியிடக்கூடாது என்ற பதட்டமான சூழல்தான் உள்ளது. அது மாறவேண்டும் என்பது இந்தியாவின் தேவையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #KamalHaasan

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தராத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி விழா நடத்துவதா என்று காவிரி உரிமை மீட்பு குழு கேள்வியெழுப்பியுள்ளது. #CauveryIssue
    தஞ்சாவூர்:

    காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய பேரியக்க தலைவருமான மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி என்னும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

    இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க முடியாது. எனவே நிலத்தடி நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் கடந்த 9-ந் தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதற்கிடையே 9 நாட்களுக்குள் காவிரியில் எந்த உரிமையை மீட்டார்? என்ன வெற்றி கண்டார்? எதற்காக அவருக்கு வெற்றி விழா? மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய அரசு நியமிக்க வேண்டிய உறுப்பினர்களை கர்நாடகா நியமிக்காமல் இருப்பதும், ஆணைய கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும், திட்டமிட்டு தமிழகத்தை பழிவாங்குகிறது என்பதற்கு சான்றாகும்.

    மத்திய அரசின் இந்த பழிவாங்கலுக்கு, துணை போகிறது தமிழக அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து அதில் வெற்றிபெற்று ஜூன் மாதத்துக்குரிய 9 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருந்தால் அதற்காக ஆளுங்கட்சி வெற்றி விழா கொண்டாடலாம்.


    முதல்வர் பழனிசாமி, காவிரி உரிமை மீட்பில் தனது தோல்வியை தானே ஒத்துகொள்ளும் வகையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்து விட்டு இப்போது காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா நடத்துவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது. கர்நாடகத்தின் 4 அணைகளில் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகள் நிரம்பிவிட்டன. கிருஷ்ணராஜசாகரும் நிரம்ப போகிறது.

    எனவே மாத வாரியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இதற்குமேல் கர்நாடகத்துக்கு தண்ணீர் தேவை என்ன இருக்கிறது? தமிழக முதல்வர் இதை செயல்படுத்திவைக்க உருப்படியான நடவடிக்கை எடுத்தால், அவரை கேட்காமலேயே மக்கள் பாராட்டுவார்கள்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். #CauveryIssue
    ×