search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்: குறுவை பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
    X

    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்: குறுவை பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

    • கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற பிடிவாதத்தில் உறுதியுடன் உள்ளது.
    • காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து நாளை டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுவதில் மேட்டூர் அணை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீரை நம்பி தான் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது. மேலும் குடிநீர் தேவையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. சில இடங்களில் பம்ப் செட் மூலம் சாகுபடி செய்தாலும் மேட்டூர் அணையை நம்பி தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி திறந்து விடப்பட்டது. அந்த சமயத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது. குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை விஞ்சியும் சாகுபடி செய்யப்பட்டன.

    விவசாயிகள் நம்பிக்கையுடன் குறுவையில் நல்ல விளைச்சல் பெறலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் சில நாட்களில் நிலைமை மாறியது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைய தொடங்கியது. தென்மேற்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை. மேலும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்புப்படி தமிழகத்திற்கு மாத வாரியாக வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காமல் வஞ்சித்தது. இந்த காரணங்களினால் குறுவை பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். 3 லட்சம் ஏக்கர் அளவுக்கு தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து கருகின.

    இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள். தொடர் போராட்டங்கள் நடத்தியும் கர்நாடகா அரசு இறங்கி வரவில்லை. தமிழக அரசு பலமுறை உரிய அழுத்தம் கொடுத்தும் தண்ணீர் திறந்து விட மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்டாவில் குறுவை பயிர்கள் காவிரி நீரின்றி காய்ந்து சேதம் அடைந்தன. எஞ்சிய பயிர்களை காப்பாற்றவும் தண்ணீர் திறந்து விடவில்லை. அடுத்து சம்பா சாகுபடி தொடங்குவதே கேள்வி குறியாக தான் உள்ளது.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வந்தன. இன்று அணையின் நீர்மட்டம் 30 அடியாக குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமான மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி தண்ணீர் நிறுத்தப்படும்.

    இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் நிறுத்தப்படுவதால் டெல்டா விவசாயிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளனர். எஞ்சிய குறுவை பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். பல இடங்களில் பம்பு செட் மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களுக்கு பாய்ச்சும் அவல நிலை நடந்து வருகிறது.

    மேலும் அரசு அறிவித்த இழப்பீடு தொகையும் குறைவானது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் கூறும்போது:-

    வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் பெருமளவில் கருகிவிட்டன. கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற பிடிவாதத்தில் உறுதியுடன் உள்ளது.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி தான் தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் கேட்கிறோம். ஆனால் அதையும் தராமல் வஞ்சிக்கிறது. இவ்வளவுக்கும் கர்நாடகாவில் பெரும்பாலான அணைகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளது. ஆனால் காவிரியில் அவர்கள் போதிய தண்ணீர் திறந்து விடாததால் குறுவை பயிர்கள் வீணாகி விட்டது. இன்று நீர்மட்டம் குறைந்து வந்ததால் மேட்டூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எஞ்சிய குறுவை பயிர்களை காப்பற்றவும் தண்ணீர் இல்லை. அடுத்து சம்பா சாகுபடி தொடங்கவும் தண்ணீர் இல்லை. இதற்கும் மேலாக நீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகையும் கண்டிப்பாக போதாது. ஏனென்றால் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு கேட்டிருந்தோம். ஆனால் அறிவித்ததோ ஏக்கருக்கு ரூ.5300 தான். நாங்கள் கேட்டதிலிருந்து கால் பங்கு கூட இழப்பீடு தொகை அறிவிக்கவில்லை.

    ஒருபுறம் கர்நாடக அரசு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடாமல் ஏமாற்றி வருகிறது. மறுபடியும் மத்திய அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது. இன்று மேட்டூர் அணையில் தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது. இப்படி பல்வேறு கட்ட பிரச்சனைகளால் டெல்டாவில் குறுவை பயிர்கள் வீணாகி விட்டன. கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற முடியாமல் பரிதவிப்பில் உள்ளோம். அடுத்து சம்பா சாகுபடி தொடங்கலாமா? வேண்டாமா ? என்பதை அரசு உறுதியுடன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் காவிரி நீரை நம்பி தான் பெருமளவில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. கர்நாடக அரசு உரிய காவிரி நீரை வழங்கினால் மட்டுமே அடுத்து சாகுபடி பற்றி யோசிக்க முடியும்.

    காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து நாளை டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெறும். அதன் பிறகும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் போராட்டம் மேலும் விரிவடையும் என்றார்.

    Next Story
    ×