search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்க கோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன் - கமல்ஹாசன்
    X

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்க கோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன் - கமல்ஹாசன்

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்க கோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். #Cauvery #KamalHaasan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்ககோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன். எங்கள் விவசாயிகளுக்காக வெட்கம் பார்க்காமல் சென்று கேட்டேன். அதை அரசியலில் காவிரி ஆணையம் வேண்டாம் என்று கேட்கச் சென்றதாக திரித்து விட்டனர்.

    காவிரி ஆணையம் வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர்விடும் கணக்குகளை பார்க்கத்தான் ஆணையம் வேண்டும் என்று கோரப்பட்டது. ஆணையம் கிடைத்தது பெரிய வெற்றிதான். 2 மாநிலங்களும் அதைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மீண்டும் பஸ்களை உடைப்பதுதான் வேலையாக இருக்கும்.

    ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு பற்றி விசாரணை நடப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று தமிழகம் வழிமொழிவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. இதுபற்றி நான் ஒரு வருடத்துக்கு முன் சொன்னேன்.

    இதுபோன்ற நிலவரங்கள் அதிகரித்து வந்ததால்தான் நான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழக அரசு நீங்க வேண்டும் என்று நான் சொல்லி நீண்ட நாளாகிவிட்டது. தனி நபருக்காக ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய சம்பவம் அரசியல் மாண்பு சிரழிந்து வருவதாக நினைக்கிறேன்.

    எம்.ஜி.ஆர். உயிருக்காக போராடியபோது தனியார் விமானத்தில்தான் போனார். சேலம்-சென்னை இடையேயான 8 வழி சாலை பற்றி எந்த ஒரு ஏழையும் பேசலாம். 8 வழி சாலை வேண்டுமா? வேண்டாமா? என்பதை பற்றி மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதுபற்றி பேசக்கூடாது என்று எச்.ராஜா எப்படி சொல்லலாம்.

    கருத்து சுதந்திரம் மெதுவாக பறிக்கப்பட்டு வருகிறது. யாரும் தங்களுடைய கருத்துகளை வெளியிடக்கூடாது என்ற பதட்டமான சூழல்தான் உள்ளது. அது மாறவேண்டும் என்பது இந்தியாவின் தேவையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #KamalHaasan

    Next Story
    ×