என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குறுவை சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
- மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 69 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி:
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கியது. இதனால் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் தேனி மாவட்டத்திலும் ஜூன் முதல் வாரத்தில் கனமழை பெய்த நிலையில் அதன் பிறகு சற்று ஓய்ந்தது. தற்போது மீண்டும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1190 கன அடி தண்ணீர் வருகிறது. நேற்று வரை 1200 கன அடி தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்துக்கு திறக்கப்பட்ட நிலையில் தற்போது 1622 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 128.20 அடியாக உள்ளது. நீர் இருப்பு 4309 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாகவும் வைகை அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. 71 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை நிலவரப்படி 60.73 அடி நீர்மட்டம் உள்ளது. நீர் வரத்து 929 கன அடி. மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 69 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3744 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள மதுரை மாவட்டத்தின் குறுவை நெல் சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் போதுமான நீர் இருப்பு இல்லாததால் தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த ஆண்டிலும் ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதாலும் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேல் நீடிப்பதாலும் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக நெல் சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து நாளை (15-ந் தேதி) முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் இருப்பு, நீர் வரத்தை பொறுத்து முதல் போக நெல் சாகுபடி பகுதிகளுக்கு வினாடிக்கு 900 கன அடி நீர் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைவை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி வட்டம், வடக்கு வட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பெரியாறு அணை 41, தேக்கடி 16.4, சோத்துப்பாறை மற்றும் வைகை அணை தலா 2, வீரபாண்டி 5.2, சண்முகா நதி அணை 1.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






