என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பருவம் தவறிய மழை: திருவாரூரில் 10 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் அழுகும் அபாயம்
- தற்சமயம் இந்தக் குறுவை நெற்பயிர்கள் சராசரியாக 40 நாட்கள் வயதுடைய இளம் பயிராக வளர்ந்துள்ளது.
- வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர்:
மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ஆற்றில் வந்த நீரை வைத்து விவசாயிகள் நெல்நடவு செய்து, போதிய உரமிட்டு வளர்த்து எடுத்துள்ளனர். இதற்காக ஏக்கருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.
தற்சமயம் இந்தக் குறுவை நெற்பயிர்கள் சராசரியாக 40 நாட்கள் வயதுடைய இளம் பயிராக வளர்ந்துள்ளது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று மதியம் வரை பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.
பருவம் தவறிய இந்த மழையால் திருவாரூர் அருகே உள்ள பழையவலம், தென்ஓடாச்சேரி கானூர், கள்ளிக்குடி, அலிவலம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
வயலில் தேங்கி உள்ள மழைநீரை வடிய வைக்க வடிகால்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் இளம் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்ப தற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






