என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.
- இந்தியா முழுதும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.
பெரம்பலூர்:
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகள், அரசாங்கமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டி சர்ச்சை கருத்துக்களை சொல்லுவதோ, பரபரப்பு உருவாக்குவதற்காக மட்டமான அரசியல் செய்வதில் யாரும் ஈடுபட வேண்டாம்.
இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட கலெக்டரை டிரான்ஸ்பர் செய்து உள்ளனர். மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இது மாத்திரம் இல்லாமல் சம்பந்தப்பட்ட குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த சில பேரையும் கைது செய்து உள்ளனர்.
கடந்த 30, 40 வருடங்களாக தொடர்ச்சியாக கள்ளச்சாராய மரணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இது ஒரு நாடு தழுவிய ஒரு பிரச்சனை. பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பா.ஜ.க. ஆளுகின்ற குஜராத் மாநிலம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இருக்கும் பீகாரிலும் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இது போன்ற கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கேற்ப இந்த அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
இன்று இந்தியா முழுதும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.
மக்களவையில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது தமிழக மக்கள் மற்றும் திருச்சி தொகுதி மக்களுக்கான முக்கிய பிரச்சனைக்கு கண்டிப்பாக குரல் கொடுப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
- சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தனர்.
வடவள்ளி:
கோவை மருதமலை அடிவார பகுதியான இந்திரா நகர், ஐ.ஓ.பி.காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாடி வருகின்றன.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
ஐ.ஓ.பி.காலனி பகுதியில் அந்த யானை நடமாடி கொண்டிருந்தது. அப்போது சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தனர்.
அந்த பெண்ணின் கணவர் நுழைவு வாயில் வழியாக வெளியே சென்றார். அப்போது அங்கு சுற்றி திரிந்த யானை திடீரென அவரை தாக்க முயன்றது.
அவர் அங்கிருந்து ஓடி வீட்டிற்குள் நுழைந்தார். அவருடன் அவரது மனைவியும் உள்ளே ஒடியதால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இருவரும் காட்டு யானையிடம் இருந்து தப்பியோடிய சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து பாரதியார் பல்லைக்கழக வளாகம் மற்றும் நீச்சல் குளம் பகுதியில் யானை முகாமிட்டிருந்தது.
இதையடுத்து இரவு முழுவதும் அந்த யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
- கோவை பீளமேடு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் கோவை விமான நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இன்று காலையும் விமான நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்திருந்தனர்.
அவர்களை வழி அனுப்பி வைக்கவும், ஊர்களில் இருந்து வருபவர்களை வரவேற்கவும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. விமானநிலைய ஊழியர்களும் தங்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இன்று காலை 7.30 மணிக்கு விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்திருந்தது. அதில் விமான நிலையத்தின் குளியலறை தண்ணீர் குழாயில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோவை பீளமேடு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசாரும் மோப்ப நாய்களுடன் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் விமான நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.
குளியலறை மற்றும் கழிப்பிடங்களிலும் சோதனை நடைபெற்றது. ஆனாலும் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடி குண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மிரட்டல் எங்கிருந்து வந்தது. எந்த மின்னஞ்சல் முகவரியில் வந்தது. மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கோவை விமான நிலையத்திற்கு 2முறை வெடிகுண்டு மெட்டல் வந்தது. தற்போது 3-வது முறையாகவும் மிரட்டல் வந்துள்ளது.
இதற்கிடையே கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- தனது பாடல்கள் மூலம் பாமரர்களிடம் கொண்டு சேர்த்த மாபெரும் கவிஞர் கவியரசு கண்ணதாசன்.
- கவியரசு கண்ணதாசனின் 98-வது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் உள்ள அற்புதமான கருத்துகளை எளிமைப்படுத்தி, தனது பாடல்கள் மூலம் பாமரர்களிடம் கொண்டு சேர்த்த மாபெரும் கவிஞர் கவியரசு கண்ணதாசன்.
அவரது திரையிசைப் பாடல்கள் இசை நூலில் கோர்க்கப்பட்ட வார்த்தை மணிகள் அல்ல; வாழ்க்கையை சாறுபிழிந்து வடிகட்டிய தேனமுது.
கவியரசு கண்ணதாசனின் 98-வது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை தி.நகரில் கண்ணதாசன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் சாமிநாதன், கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
- குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
- குட்டி யானைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல நிலையில் உள்ளது என்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அப்பர் கார்குடி அருகே, பிறந்து சில நாட்களே ஆன குட்டி யானை நேற்று தாயுடன் உலா வந்தது.
பிற்பகல் குட்டி யானை, எதிர்பாராமல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து. வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தது. தாய் யானை பிளிறியபடி, அதனை மீட்க போராடியது.
தகவல் அறிந்த வனச்சரகர் விஜய், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதிக்கு சென்று தாய் யானையை அங்கிருந்து விரட்டினர்.
தொடர்ந்து குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கால்வாயில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.
பின்னர் குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்த்தனர். தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், குட்டி யானையை கால்வாயில் இருந்து பாதுகாப்பாக மீட்டு தாயுடன் சேர்த்து கண்காணித்து வருகிறோம்.
குட்டி யானைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல நிலையில் உள்ளது என்றனர்.
- 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
- சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 19-ந் தேதி 17 பேரும், 20-ந் தேதி 24 பேரும், 21-ந் தேதி 9 பேரும், நேற்று முன்தினம் 5 பேரும் என மொத்தம் 55 போ் உயிாிழந்தனா்.
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சோ்ந்த சவுந்தரராஜன் மகன் மதன் (வயது 46) என்பவா் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தொடர்ந்து மாலையில் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சாமுண்டி (70) என்பவர் சிகிச்சை இறந்து போனார்.
இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவங்கூரை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் ஒரு பெண் இறந்து போனார்கள். பிரேத பரிசோதனை அறிக்கைப்படி கள்ளச்சாராய பலி 59 என அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் (45), இளையராஜா (35) ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளதால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 61 ஆக உயா்ந்துள்ளது.
மேலும் இன்று காலை 7 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனையில் 109 பேரும், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவ மனையில் 30 பேரும், புதுச்சரி ஜிப்மா் மருத்துவ மனையில் 12 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவ மனையில் 4 பேரும் என மொத்தம் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் ஓய்வு பெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையமும் விசாரித்து வருகிறது.
- திமுக எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்று கூறி இருந்தனர்.
- நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் மற்றும் பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு மூல காரணமானவர்கள் என்று சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் குற்றம்சாட்டி இருந்தனர்.
கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அன்புமணி ராமதாஸ் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்று குற்றம்சாட்டியிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்று கூறி இருந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் சார்பில் வக்கீல் வில்சன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
- சாராயத்தில் அதிக போதைக்காக மெத்தனால் கலந்திருந்ததால் விஷமாக மாறியது.
- அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ம் தேதி நள்ளிரவு முதல் விடிய விடிய விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி 150-க்கும் மேற்பட்டோர் குடித்தனர். அந்த சாராயத்தில் அதிக போதைக்காக மெத்தனால் கலந்திருந்ததால் விஷமாக மாறியது. இதனால் அதை குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 55 போ் உயிாிழந்தனா்.
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சோ்ந்த மதன் (வயது 46) என்பவா் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிாிழந்தாா். தொடர்ந்து பகலில் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சாமுண்டி (70) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவா்களின் எண்ணிக்கை 57 ஆக உயா்ந்துள்ளது.
மேலும் நேற்று மாலை 3 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 111 பேரும், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 29 பேரும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் 12 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கள்ளச்சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சக்திவேல், கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசாா், சக்திவேலின் வீட்டில் இருந்து சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தொிகிறது.
- தங்க நகை தொலைந்ததையடுத்து அப்பகுதி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
- சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களை வரவழைத்து கடற்கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சாமி தரிசனம் செய்த வந்த பெண் ஒருவர் கடலில் புனித நீராடும்போது தன்னுடைய 5 சவரன் தங்க நகையை கரையில் தவறவிட்டார்.
தங்க நகை தொலைந்ததையடுத்து இதுகுறித்து அப்பகுதி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களை வரவழைத்து கடற்கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கடற்கரையில் தங்க நகையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின் முடிவாக தங்க நகை ஒரு பணியாளரின் கைகளில் சிக்கியது. நகையை கண்ட அந்த பெண் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து தங்க நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகையை மீட்டுக்கொடுத்த குழுவினருக்கு அங்கிருந்தோர் பாராட்டுகள் தெரிவித்தனர்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- ஒரு தெருவில் மருந்துக்கடைகளை விட அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன என்றார் கமல்ஹாசன்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார். அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது:
இந்தத் தருணத்தில் இதை அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவோ பார்க்கக் கூடாது. அனைவருக்கும் கடமை உள்ளது.
ஒரு தெருவில் இருக்கவேண்டிய மருந்துக்கடைகளை விட அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன.
குடிக்காதே எனும் அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள். உங்கள் உயிர் தான் முக்கியம் என அறிவுரை செய்யலாம்.
இதுபோன்ற விழிப்புணர்வு பதாகைகள் டாஸ்மாக் கடை அருகில் இருக்க வேண்டும்.
மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பது தவறான கருத்து. இதற்கு உலகத்தில் பல முன்னுதாரணங்கள் உள்ளது.
வருமானம் ஈட்டும் எந்த அரசும் அதை திரும்பவும் மக்களுக்கு போய்சேரும் ஒரு நற்பயனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
விஷ சாராயம், கள்ளச்சாராயம், மது உள்ளிட்டவை ஆபத்து என்பதை மக்களின் மனதில் படும்படி எடுத்துச்சொல்லும் அறிவுரைகள் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
- ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.
இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மாடுகளால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மாடு வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
- பல்வேறு உணவு பொருட்களின் கண்காட்சி மக்களை பெரிதும் ஈர்த்தது.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு - மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பயிற்சி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று புதுக்கோட்டையில் நடைப்பெற்றது. சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளை சேர்ந்த விவசாயிகளையும் இவ்விழா ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற இவ்விழாவை ராஜ்யசபா உறுப்பினர் அப்துல்லா அவர்கள் துவங்கி வைத்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் ஏற்பாடு செய்ப்பட்டு இருந்த கண்காட்சியில் இடம்பெற்று இருந்து நூற்றுக்கணக்கான முக்கனி ரகங்களை கண்டு விவசாயிகளும், பொது மக்களும் அசந்துப் போயினர்.

காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் முக்கனிகள் சார்ந்து உணவுக்காடு உற்பத்தி செய்வது குறித்து இவ்விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவின் நோக்கம் குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில் "தற்சமயம் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால், பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். குறிப்பாக இந்த ஆண்டு மாம்பழத்தில் வெறும் 30% மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. பலாவின் காய்ப்பு பாதியாக குறைந்து விட்டது, கணிக்க முடியாத சூறாவளிக் காற்று வீசினால் வாழை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த அனைத்திற்கும் தீர்வாக நம் பாரம்பரியத்தில் இருக்கும் பலப் பயிர், பல அடுக்கு முறையை பின்பற்ற வேண்டும். எனவே உணவுக்காடு வளர்ப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவவும், மண்ணில் நுண்ணுயிர்களை பெருக்கவும், ஆரோக்கியமான வாழ்வை பெறவும் முடியும். இதனை வலியுறுத்தும் விதமாகவே இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது" எனப் பேசினார்.

இவ்விழாவை துவங்கி வைத்த அப்துல்லா பேசுகையில், "ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனமாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நம் நாட்டில் வெறும் 21% தான் வனமாக இருக்கிறது. ஒருப்பயிர் சாகுபடியில் சென்றதால் தான் இந்நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த சூழலை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஈஷா அமைப்பிற்கும், மற்ற தோழர்களுக்கும் வாழ்த்துகள்" எனப் பேசினார்.
மேலும் இவ்விழாவில் சித்த மருத்துவர் சிவராமன் அவர்களின் 'நோய்க்கு தீர்வு நல்ல உணவுக்கான தேடலே' என்ற தலைப்பிலான காணொளி உரை திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூழலியலாளர் ஏங்கல்ஸ் ராஜா, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஆர்.செல்வராஜன், பெங்களூர் IIHR -இன் முதன்மை விஞ்ஞானி ஜி. கருணாகரன், கேரளா மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CTCRI) முதன்மை விஞ்ஞானி முத்துராஜ், இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்ப கழகத்தை (NIFTEM) சேர்ந்த முனைவர். வின்சென்ட் ஆகியோர் உணவுக்காடு குறித்த பல முக்கியத் தலைப்புகளில் பேசினர்.

மேலும் அக்ரி.பி. ஹரிதாஸ், இயற்கை மருத்துவர் கோ. சித்தர், கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர், குருபிரசாத் ஆகிய உணவுக்காடு முன்னோடி விவசாயிகளும், வல்லுநர்களும் முக்கனி விவசாயம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா மற்றும் வாழைப்பழ ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டது. இத்துடன் முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று குறிப்பிட்ட சில வகை மா மற்றும் பலா கன்றுகளை வாங்கிச் சென்றனர். கேரளாவை சேர்ந்த சக்கை கூட்டம் அமைப்பினரின் பலாவை கொண்டு செய்யப்படும் பல்வேறு உணவு பொருட்களின் கண்காட்சி மக்களை பெரிதும் ஈர்த்தது.
காவேரி கூக்குரல் இயக்கம் இவ்விழாவை இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.






