என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய் வாழ்த்துகள்.
    • துரைமுருகனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:

    விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியது குறித்த கேள்விக்கு,

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

    வயதான நடிகர்களால் சினிமாவில் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை என துரைமுருகன் கூறியது குறித்த கேள்விக்கு,

    துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும்.

    துரைமுருகனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என்று கூறினார்.

    முன்னதாக, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

    இதுதொடர்பாக பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்,

    மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதை மறந்துட்டு ஏதோ ரஜினிகாந்த் பேசுகிறார் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் இந்த கருத்து மோதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்ற ரக்‌ஷாபந்தன் விழா.
    • தமிழகத்தில் இருந்து 4 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து- ஆனந்தி தம்பதியின் மகள் சந்தியா (வயது 14). இவர் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ரக்சாபந்தன் விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதன்படி, தமிழகத்தில் இருந்து 4 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கல்வித்திறன் மற்றும் தனித்திறன் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவி சந்தியாவும் தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து அவர் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ரக்சாபந்தன் வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார்.

    இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவி சந்தியாவுக்கு தலைமையாசிரியர் தர்மராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

    • இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
    • இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமேலம்பட்டி கிராமத்தில் கந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புறனமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து கோவில் கட்டுமான பணிகள் மற்றும் வண்ணம் தீட்டும் பணிகளை செய்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து விரதம் இருந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிலையில் காலை, மாலை என கடந்த 15 நாட்களாக பூஜை நடந்து வந்த நிலையில் வட மலைப்பட்டி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாமிக்கு சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.

    இதில் சாமிக்கு சீர் கொண்டு வந்து அதனை மேளதாளம் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலின் முன்பு இந்து, இஸ்லாமிய மக்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஆரத்தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

    பின்னர் சீர்வரிசைகளை கோவில் நிர்வாகத்திடம் வழங்க அதனை பூசாரியிடம் கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். இரு சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்து கோவிலுக்கு சீர் கொண்டு வந்து பூஜை செய்து அன்னதான வழங்கிய சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது. 

    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலுமணி. இவர் இடுவம்பாளையம் செல்லும் வழியில் சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். பின்னலாடை துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதற்காக பின்னலாடை உற்பத்திக்கு பயன்படக்கூடிய சிங்கர், ஓவர்லாக், பேட்லாக் தையல் எந்திரங்கள் மற்றும் பின்னலாடை துணிகள் வைக்கப்பட்டிருந்தது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் நிறுவனம் பூட்டப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை நிறுவனத்தில் தீ பற்றி எரிந்துள்ளது. நிறுவனம் முழுவதும் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பின்னலாடை நிறுவன உரிமையாளருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.


    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த 200 தையல் எந்திரங்கள், நூல் பண்டல்கள், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த டீசர்ட்டுகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • நாட்டு மக்கள் அனைவருக்கும் ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பகவத் கீதையின் வழி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு அளித்துள்ள போதனைகளை ஆழமாக பின்பற்றி, நாட்டில் ஒற்றுமை தழைத்தோங்க செய்து வாழ்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    • சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
    • மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை காண கேரளா, கா்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டியிலுள்ள உலகப்புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை ஆகிய தொடா் விடுமுறையையொட்டி ஊட்டி சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    அதிலும் குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள வானுயா்ந்த மரங்கள், கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கும் வண்ண-வண்ண மலா்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனா்.

    மேலும் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தபடி உற்சாகமாக படகு சவாரி செய்து விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனா்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழையின் காரணமாக வெறிச்சோடி இருந்த சுற்றுலா மையங்கள், தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகிறது.

    மேலும் ஊட்டிக்கு வந்து செல்பவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குன்னுார்-ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    • போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சனை நிலுவையில் உள்ளது.
    • 106 மாதங்களாக அக விலைப்படி உயர்வு வழங்கப்பட வில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது:-

    போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சனை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அக விலைப்படி உயர்வு வழங்கப்பட வில்லை. இதனை வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும், மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை.

    இந்த பிரச்சனைகளில் விரைந்து தீர்வு காண வலியுறுத்தி, கடந்த 16-ந்தேதி முதல் வீடு தோறும் தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை நடத்தி உள்ளோம்.

    இதன்தொடர்ச்சியாக நாளை (27-ந்தேதி) தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் பல்லவன் இல்லம் அருகே மறியல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்ரீமத் பகவத் கீதை காலத்தால் அழியாத ஞானத்தையும் தழுவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது.
    • அனைத்து மனிதகுலத்தின் நலன் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றவும் நமக்குள் உறுதி கொள்வோம்.

    சென்னை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    இந்த மகிழ்ச்சியான திருவிழா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக மகத்துவத்தையும், ஸ்ரீமத் பகவத் கீதையின் காலத்தால் அழியாத ஞானத்தையும் தழுவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது. கர்ம கோட்பாட்டின்படி நடக்கவும் தேச வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படவும் அனைத்து மனிதகுலத்தின் நலன் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றவும் நமக்குள் உறுதி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    • மேட்டூர் அணை கடந்த மாதம் 30-ந் தேதி நிரம்பியது.
    • அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணை கடந்த மாதம் 30-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் நிரம்பியது. தற்போது அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து காணப்படுகிறது. நேற்று 6 ஆயிரத்து 598 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 4 ஆயிரத்து 284 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 117.90 அடியாக குறைந்து காணப்பட்டது.

    • திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்குள் 2 பீர்பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணையில் கோவர்தன் கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்குள் 2 பீர்பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இருசக்கர வாகனத்தில் வந்து அண்ணா அறிவாலயத்திற்குள் 2 பீர்பாட்டில்களை வீசிய கோவர்தனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் கோவர்தன் கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் அவரிடம் பீர் பாட்டில்களை வீசியது ஏன் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேர்மை, நாணயத்தை பற்றி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
    • 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 4-வது இடம் கூட கிடையாது.

    தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டுமென்றால், 2026-ஐ தவிர வேறு வாய்ப்பு கிடையாது. காலம் கனிந்து இருக்கிறது. இதற்காக, பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சை பார்க்கும்போது, 'துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் இருக்கும் மேடையில், உதயநிதி ஸ்டாலின் அரியணை ஏறினால் கலவரம் வெடிக்கும் என்பதை சொல்லாமல் சொன்னதுபோல் உள்ளது.

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் ஊரில் சிலுவம்பாளையத்தில் கொலை நடந்தது. கைது செய்யப்பட்ட ஒருவர் சிறைக்கு சென்றார். கைது செய்யப்படாதவர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்து இருந்தார். இன்று தி.மு.க.வில் இருக்கும் மூத்த அமைச்சர், அன்று அ.தி.மு.க.வின் அமைச்சர். அவர் கை, காலை பிடித்து, வழக்கை முடித்து வெளியே வந்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் தோற்றவர் நீங்கள்.

    நேர்மை, நாணயத்தை பற்றி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். அதே கொங்கு பகுதியில் வந்தவன் நான். கூவத்தூரில் நடந்தது அலங்கோலம். கூவத்தூரில் ஒப்பந்தம் அமைப்பில் முதலமைச்சரை தேர்வு செய்தீர்கள்.

    அதன்பிறகு தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

    2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 4-வது இடம் கூட கிடையாது. எனக்கும், அ.தி.மு.க. தலைவர்களுக்கும் ஏன் சண்டை?. இந்த மேடையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று நினைக்கும் தலைவர்களும் இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வுக்கும், எனக்கும் வாய்க்கால் பிரச்சினையா?. 2019-ல் வாரணாசியில் மோடி வேட்பு மனுதாக்கல் செய்ய போகும்போது, எடப்பாடி பழனிசாமியை கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் கூப்பிடுகிறார். அதற்கு அவர், தோற்கப் போகிற மோடிக்காக நான் ஏன் வரவேண்டும் என்று சொன்னார். என்னுடைய தலைவரை பற்றி எடப்பாடி பழனிசாமி அன்று எப்படி பேசினாரோ? மானமுள்ள அண்ணாமலை கூட்டணி கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டது கிடையாது.

    கலைஞர் நாணயம் வெளியீடு நிகழ்ச்சியில் பாஜக கலந்து கொண்டதை வைத்து, தி.மு.க.வுக்கும், பாஜக-வுக்கும் உறவு என்று பேசுகிறார்கள். இப்போது உறுதியாக சொல்கிறேன். பாஜக ஒரு போதும் தி.மு.க.வுடன் உறவு வைக்காது. இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கலைஞர் உரிமைத்திட்டம் தொடங்கப்பட்டு அடுத்த மாதம் 15-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
    • தமிழக அரசு, இந்த திட்டத்திற்கு இந்தாண்டு ரூ.13 ஆயிரத்து 722 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய்நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்க வேண்டும். ஒரு ஆண்டிற்கு வீட்டு உபயோக மின்பயன்பாடு 3,600 யூனிட்டிற்குள் இருக்க வேண்டும்.

    இந்த நிபந்தனைகளால் பல பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை. எனவே இந்த நிபந்தனைகளை தளர்த்தி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மவுனமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கலைஞர் உரிமைத்திட்டம் தொடங்கப்பட்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எனவே இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் வரலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் என நிர்ணயிக்கலாம் என்று திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

    தமிழக அரசு, இந்த திட்டத்திற்கு இந்தாண்டு ரூ.13 ஆயிரத்து 722 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியின் மூலம் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 பெண்களுக்கு நிதி வழங்க முடியும். ஆனால் இப்போது அதனைவிட குறைவான பெண்களுக்கு தான் நிதி உதவி வழங்கப்படுகிறது.

    எனவே வருமான உச்சவரம்பை உயர்த்தும்பட்சத்தில் கூடுதலாக லட்சகணக்கான பெண்கள் பலன் பெற வாய்ப்பு உள்ளது.

    ஏனென்றால் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதலில் அரசு பள்ளியில் நிறைவேற்றப்பட்டு தற்போது அரசு உதவிப்பெறும் பள்ளிக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கலைஞர் மகளிர் உதவித்தொகையும் அனைவருக்கும் நிச்சயம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஒருபிரிவினர் கூறுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அடுத்த மாதம் 14-ந் தேதிதான் சென்னை திரும்புவார்.

    எனவே அடுத்த மாதம் 15-ந் தேதி இதற்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால்தான் இதுபற்றி தெரிய வரும். இதற்கிடையில் இந்த திட்டத்தில் புதிதாக சிலரை சேர்க்க விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    ×