என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பெரியார் காலத்தில் திராவிடம் என்ற அரசியல் தேவைப்பட்டது.
ஈரோடு:
ஈரோட்டில் நடைபெற்ற குடியரசு சுயமரியாதை நூற்றாண்டு விழா மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தாலும் பெரியார் குடும்பத்தை சார்ந்தவர். காங்கிரசில் இருந்தாலும் தன்மான தலைவர் என பெயர் பெற்றவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியார் பகுத்தறிவு பகலவனாக இந்தியா முழுவதும் இருக்கிறார்.
இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமே பெரியாரை உற்று நோக்குகிறது. அவரின் கருத்துக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.பெரியார் கடவுள் மறுப்பாளர், பார்பனர் எதிர்பாளர் என செய்தி பரப்பட்டுள்ளது. இது அவரின் கொள்கையும் கோட்பாடும் அல்ல. இவற்றை வலுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ராஜ தந்திரம்.
பார்ப்பன எதிர்ப்பு என்பது பெரியாரில் இருந்து தோன்றியது அல்ல. அதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே கவுதமபுத்தர் எதிர்த்துள்ளார். இவரின் வரிசையில் தான் பெரியார் வந்துள்ளார். பெரியார் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தான் காங்கிரசில் இருந்து வெளியே வந்தார்.
பெரியார் எளிய மக்களுக்காக காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருந்து வெளியே வந்தவர். இந்தியாவில் 2 மரபினராக ஆரியம், திராவிட இருந்தது. ஆரிய எதிர்ப்பாக இருந்தது பெரியாரின் காலத்தில் பார்ப்பின எதிர்பாக இருந்தது. சனாதனம் என்பது கோட்பாடு, கல்வி, உரிமை, உழைப்பு, சுரண்டப்பட்ட நிலம், பறிக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி அதிகாரம் வழங்க குறிப்பிட்ட இடம், ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவை சமூக நீதியின் கோட்பாட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. திராவிடம் என்று சொன்னதால் தான் தமிழர் என்ற உணர்வு வரவில்லை என்பது அரசியல் மூடத்தனம். காந்தி இருந்த காலத்தில் சாதி, மதம், மொழியை மறந்து பிரிட்டிஷை இந்தியராக எதிர்த்தோம். பெரியார் காலத்தில் திராவிடம் என்ற அரசியல் தேவைப்பட்டது.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது வரலாற்று பிழை. பா.ஜ.க.வினர் குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை மக்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் பாடம் புகட்டியுள்ளனர்.
இது பெரியார் தொடங்கி வைத்த சமத்துவ போராட்டத்தின் விளைச்சல். 1938-ல் பெரியார் இந்தியை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் 1965-ல் போராட்டம் வெடித்திருக்காது. இப்போது நாம் இந்தி பேசக்கூடிய சமூகமாக மாறி இருந்திருந்தால் மோடியின் வித்தை எடுபட்டிருக்கும். உன்னாலும் போராட முடியும், சாதிக்க முடியும், வாழ்ந்து காட்ட முடியும், நீதிபதி, முதலமைச்சர், பிரதமராக முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் பெரியார் தான்.
தலித்துகள் இங்கு முதலமைச்சராக முடியாது என நான் சொன்னது எனது வேட்கையில் சொல்லவில்லை. இயலாமையால் உலறவில்லை. இன்றைக்கு இருக்கிற சமூக இருப்பு எவ்வாறாக உள்ளது, சாதிய கட்டமைப்பு எவ்வாறு வலுமையாக உள்ளது. அவற்றை தகர்க்கின்ற சூழல் இன்னும் கனியவில்லை. எனவே இதை தகர்க்க ஜனநாயக சக்திகள் தயாராக வேண்டும் என்கிற எச்சரிக்கையை கொடுக்கின்ற உரை.
மாநில அரசுகளிடம் சமூகங்களை இட ஒதுக்கீடு என்ற பெயரில் கூறு போடுகிற அதிகாரத்தை தருவது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை கொடுத்துள்ளது. இது குறித்த விமர்சனம் தான் என் மீது எதிர்மறையாக கருத்து உருவாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் பொறுத்தவரை அருந்ததியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீட்டை முதலில் இருந்து ஆதரித்துள்ளது.
தமிழகத்தில் ஓ.பி.சி சமூகத்தில் உள்ள சிறுபான்மையினர் முதல்வராக வர முடிகிறது, தமிழர் அல்லாதவர் முதலமைச்சராக வர முடிகிறது. பெரும்பான்மைச் சமூகமாக இருக்கக்கூடிய முக்குலத்தோர், வன்னியர், நாடார், கவுண்டர் முதல்வராக வர முடியவில்லை. இதுவும் ஒரு அரசியல். ஒரு தலித் முதலமைச்சர் ஆக வர முடியாது என்ற சோசியல் ஸ்ட்ரக்சர் (சமூக கட்டமைப்பு) இங்கு உள்ளது. இந்திய குடியரசுத் தலைவராக பழங்குடியினர், தலித் வகுப்பைச் சேர்ந்தவர் வரமுடியும் ஆனால் பிரதமராக வர முடியுமா? விடுதலை சிறுத்தைகள் பெரியாரின் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட பெரியார் இயக்கம்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பெரியாரை கொண்டு சேர்த்தது திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகளும் தான். அம்பேத்கர் இயக்கங்கள் பெரியாரை ஓ.பி.சி தலைவராக பார்த்ததை உடைத்தது விடுதலை சிறுத்தைகள் தான். சமத்துவத்தை நிலை நாட்டும் வரை பெரியார் தேவைப்படுகிறார்.
பெரியாரின் அரசியல் சமூக நீதி மற்றும் சமத்துவ அரசியல். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான எதிர்ப்பு அரசியல் இல்லை. இதை தான் தலித் இந்த மண்ணில் முதலமைச்சராக முடியாத நிலை உள்ளது என கூறினேனே தவிர எனது ஏக்கம் மற்றும் இயலாமையால் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறான உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர்.
- எனது மக்கள் பணி, கழக செயல்பாடுகள் இன்னும் வேகமாக இருக்கும்.
சென்னை:
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவிய வதந்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சமயத்தில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து விருந்து வைத்த எம்.எல்.ஏ. என்று மற்றொரு தகவலும் பரவியது. ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று சேலம் இரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
அமைச்சர் பதவியை எதிர்பார்த்து விருந்து வைத்த எம்.எல்.ஏ. என்று என்னை குறிப்பிட்டு ஒரு செய்தி வெளி வந்துள்ளதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நான் எந்த விருந்தும் வைக்கவில்லை.
எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறான உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர். அதில் எந்த உண்மையும் இல்லை.
கழக வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்ற வகையில் நான் செயல்பட்டு வருகிறேன். எனது பெயருக்கு யாரும் களங்கம் கற்பிக்க விட மாட்டேன். எனது மக்கள் பணி, கழக செயல் பாடுகள் இன்னும் வேகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேசன் கடை உள்ளது.
- வனப்பகுதியையொட்டி உள்ள அனைத்து ரேசன் கடைகளையும் பாதுகாக்க இந்த நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்.
ஊட்டி:
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வனத்தையொட்டிய கிராமங்களில் யானைகள் புகுந்து ரேசன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், உணவு பொருட்கள் சேதம் அடைவதால் அதற்கான தொகையை ஊழியர்கள் ஈடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதனால் வனப்பகுதிகளையொட்டி உள்ள ரேசன் கடைகளில் பணிபுரிவதற்கு ஊழியர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை ஆகிய இடங்களில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது.
மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேசன் கடை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் ரேசன் கடையை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை காட்டு யானை தூக்கி வெளியே வீசியுள்ளது.
இதில் கடையின் கதவுகள் உள்பட பல்வேறு பொருட்களும் சேதமாகின. இதனால் அருகே உள்ள கட்டிடத்தில் பொருட்களை மாற்றி வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன.
காட்டு யானை சேதப்படுத்திய ரேசன் கடை கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த காட்டு யானை சீரமைக்கப்பட்ட ரேசன் கடையை மீண்டும் சேதப்படுத்தி ஷட்டரை உடைத்தது.
இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் அறிவுரைப்படி மசினகுடி ரேசன் கடைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரேசன் கடையை சுற்றிலும் சூரிய மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் கூறியதாவது:-
மசினகுடி ரேசன் கடையை பாதுகாக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பி வலை, இரும்பு கேட்ட, இரும்பு ஷட்டர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக ரேசன் கடைகளை யானைகள் சேதப்படுத்துவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல் வனப்பகுதியையொட்டி உள்ள அனைத்து ரேசன் கடைகளையும் பாதுகாக்க இந்த நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது.
- தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல.
அரியலூர்:
நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல. 2 கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தங்கள் கட்சியில் 100 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். தி.மு.க.வில் 90 சதவீத இந்துக்கள் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
எனவே, இரண்டுக்கும் 10 சதவீதம்தான் வித்தி யாசம். விஜய் தனது கட்சி மாநாட்டுக்கு என்னை அழைக்க மாட்டார். அழைக்கவும் கூடாது. அவரது கட்சியின் தொடக்க விழாவுக்கு, மற்றவர்களை அழைக்க மாட்டார்.
நாம் தமிழர் கட்சி எப்போதும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று நான் முடிவெடுத்து இருக்கிறேன். ஆனால், தேர்தல் காலத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கூட்டணி குறித்து யோசிப்பேன்.
2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, 50 தொகுதி களில் வேட்பாளர்களை தேர்வு செய்துவைத்து உள்ளேன். ஆனால் செய்தியாளர்களிடம் இது குறித்து இதுவரை நான் தெரிவிக்கவில்லை.
இவ்வாறூ அவர் கூறினார்.
- நானும் ரஜினியும் எப்போதும் போல் நண்பர்களாக இருப்போம்.
- துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது.
நடிகர் ரஜினிகாந்த் பேட்டியை தொடர்ந்து பேட்டி அளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:
நானும் ரஜினியும் எப்போதும் போல் நண்பர்களாக இருப்போம்.
நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என்று கூறினார்.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பேசி இருந்தார்.
இதற்கு அமைச்சர் துரைமுருகன், மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதை மறந்துட்டு ஏதோ ரஜினிகாந்த் பேசுகிறார் என்று கூறி இருந்தார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த், துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும். துரைமுருகனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என்று கூறினார்.
இருவரது பேச்சும் சர்ச்சையான நிலையில் இருவரும் தற்போது விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
- சென்னை லயன்ஸ் பெற்ற முதல் வெற்றியாகும்.
- டெல்லி அணி 2-வது தோல்வியை தழுவியது.
8 அணிகள் பங்கேற்கும் 5-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சரத்கமல் தலைமையிலான சென்னை லயன்ஸ் 8-7 என்ற கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது. சென்னை லயன்ஸ் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 4-11 என்ற கணக்கில் பெங்களூருவிடம் தோற்று இருந்தது. சென்னை லய்ன்ஸ் 3-வது போட்டியில் மும்பையுடன் வருகிற 30 -ந்தேதி மோதுகிறது.
டெல்லி அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே மும்பையிடம் தோற்று இருந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் 9-6 என்ற கணக்கில் மும்பையை வீழ்த்தியது. ஜெய்ப்பூர் முதல் வெற்றியை பெற்றது. மும்பைக்கு முதல் தோல்வி ஏற்பட்டது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ஸ்மாஷர்ஸ்-புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. புனே அணி தொடக்க ஆட்டத்தில் 10-5 என்ற கணக்கில் அகமதாபாத்தையும், பெங்களூரு அணி முதல் போட்டியில் 11-4 என்ற கணக்கில் சென்னை லயன்சையும் வென்று இருந்தது.
- அ.தி.மு.க. மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
- அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மானாமதுரை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே வார்த்தை போர் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலைவர்களின் கருத்து மோதல் அதனை பொய்யாக்கியது.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திதோடு மோதல் போக்கையும் அதிகரிக்க செய்தது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே 2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது என்றும், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்தது தொடர்பாகவும் சர்ச்சைக் குரிய கருத்துகளை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் மீண்டும் தெரிவித்து இருந்தார். இதற்கு அ.தி.மு.க. மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட் டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அ.தி.மு.க. பற்றியோ, கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பற்றியோ, கழக அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பற்றியோ தவறாக பேசினால், அண்ணாமலையே நீ செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று எச்சரிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தேன்.
- கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர்.
பாஜக உறுப்பினரும் நடிகையுமான நடிகை நமீதா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தார்.
அப்போது அதிகாரி ஒருவர் அவரிடம் உங்களுடைய மதம் என்ன, எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேள்வி எழுப்பியதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தேன். அப்போது பெண் அதிகாரி ஒருவர் தன்னிடம் உங்களுடைய மதம் என்ன, எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேட்டார். கோவில் நிர்வாகம் தன்னிடம் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டனர்.
தான் இந்து மதத்தை சேர்ந்தவள். என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைக்கு கூட கிருஷ்ணனின் பெயர் தான் வைத்துள்ளேன். கோவில்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது என்பது வருத்தமாக உள்ளது.
இந்தியாவில் எந்த கோவிலிலும் தன்னிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை.
மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வருகிறது.
- வாகனஓட்டிகள் கரடியை வீடியோ பதிவு செய்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவாரங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களில் கைகாட்டி-மஞ்சூர் சாலை வழியாக ஊட்டிக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது பெங்கால் மட்டம்-கேரிகண்டி சாலையில் ஒரு கரடி சாலையோரம் நடந்துசென்றது.
தொடர்ந்து அவ்வழியே சென்ற வாகனஓட்டிகள் அந்த கரடியை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தனர்.
இதனை பார்த்த கரடி "நான் சும்மா தானே போய்கிட்டு இருக்கேன், என்னை ஏன்டா தொந்தரவு பண்றீங்க" என்பதுபோல் கையெடுத்து கும்பிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

குன்னூர் கிளண்டல் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் வாசு என்பவரின் வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் 2 கரடிகள் புகுந்தன. பின்னர் அவை சமையல் அறையில் இருந்த சமையல் எண்ணெயை ஆசை தீர குடித்து தீர்த்தன.
அப்போது வாசு தற்செயலாக சமையல் அறைக்கு வந்தார். அங்கு 2 கரடிகள் நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீப்பந்தங்களை காட்டி வீட்டுக்குள் நின்ற கரடிகளை விரட்டினார். இருப்பினும் அந்த கரடிகள் சமையல் அறையில் இருந்த எண்ணை கேனையும் எடுத்துச் சென்றன.
- நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சி பள்ளிக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
- திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் டச்சுக்கோட்டை அருகே உள்ள கடற்கரையில் தற்காப்பு கலையின் "வேல்டு ரெக்கார்ட்" சான்றிதழ் தேர்விற்காக ஆசான் மார்ஷியல் அரிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடெமி இன்டர்நேஷனல் சார்பில், குலோபல் வேல்டு ரெக்கார்ட் அமைப்பின் அதிகாரி ராஜேஸ்குமார் முன்னிலையில் 30 நிமிடத்தில், 3 வயது முதல் 20 வயது வரையான 102 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சுருள் வாள் வீச்சு, வேல்கம்பு, வாட்டர் பேலன்ஸ், பைட்டிங் ஸ்டிக், சிலம்பம் ஒற்றை சுற்று, இரட்டை சுற்று ஆகிய தற்காப்பு கலைகளை தொடர்ந்து செய்து காண்பித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சி பள்ளிக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மாமல்லன் தெக்கன்களரி ஆசான் அசோக்குமார், ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- சிகாகோவில் தமிழர்களை சந்தித்து பேச ஏற்பாடு.
- 29-ந்தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.
இதற்காக அவர் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில் ஏற்னவே முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ரூ.2,80,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிற வகையில் 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.
3-ம் கட்டமாக 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது.
இந்த மாநாடு மூலம் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளும், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 13 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டது.
4-ம் கட்டமாக 27.1.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள் தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
இதன் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ந்தேதி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,7,616 கோடி முதலீட்டில் 64,968 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய 19 தொழில் திட்டங்களை தொடங்கி வைத்து ரூ.51,157 கோடி முதலீட்டில் அமைய உள்ள 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க நாளை இரவு அமெரிக்கா செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை இரவு 10 மணி அளவில் அமெரிக்கா புறப்பட்டு 28-ந்தேதி சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைகிறார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அமெர்ரிக்காவுக்கான இந்திய தூதர் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து 29-ந்தேதி சான்பிரான்சிஸ் கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து 31-ந்தேதி புலம் பெயர்ந்த இந்தியர்களுடனான சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். சிகாகோவில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அமெரிக்காவில் பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சுமார் 30 இடங்களுக்கு சென்று முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இதில் அமெரிக்காவில் முன்னணி 500 நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் 14-ந்தேதி (செப்டம்பர்) சென்னை திரும்புவார் என தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்வதை யொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பே தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்று விட்டார்.
சிகாகோவில் அமெரிக்க தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதையொட்டி அது குறித்து சிகாகோவில் அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதேபோல் அங்கு நடைபெற உள்ள மற்ற நிகழ்ச்சிகள் குறித்தும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
- வாகன சோதனையில் பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திரேஸ்புரம் கடற்கரையின் வடக்கு பகுதியில் படகு பழுது சரி பார்க்கும் இடத்தில் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லோடு ஆட்டோவை சோதனை செய்தனர்.
அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவற்றையும், அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜான்சன் (வயது 36) என்பரை கைது செய்தனர்.
மேலும் ஆரோக்கிய ஜான்சனுக்கு சொந்தமான பைபர் படகில் கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்கள், மீதி இருந்த பீடி இலை மூட்டைகளுடன் கடலுக்குள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






