என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 6 அடி உயர வேல் பரிசாக வழங்கப்பட்டது.
- மயில், சேவல், வேல் பொறிக்கப்பட்ட நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
பழனி:
பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன.
2-ம் நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சிறப்புரையாற்றினார். அப்போது நாத்திக தோட்டத்தில் பூத்த ஆன்மீக மலர் சேகர்பாபு என அவருக்கு புகழாரம் சூட்டினார். தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 24-ந் தேதி தொடங்கிய நிலையில் அதற்கு முதல் நாள் 23-ந் தேதியே பழனிக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு மாநாட்டுக்கான ஏற்பாடுகள், வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநாடு நிறைவுபெறும் வரை அங்கேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் கண்காணித்து வந்தார். அமைச்சருடன் கலெக்டர் பூங்கொடி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர் ஆகியோரும் விழா நடந்த 2 நாட்களும் அங்கேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

விழா நிறைவில் பல்வேறு ஆதீனங்கள் சார்பில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆன்மீகச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையை சிறப்பாக நடத்தி வருவதற்காக அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் பாராட்டு தெரிவித்ததுடன் விழாக்குழு சார்பில் மயில், சேவல், வேல் பொறிக்கப்பட்ட நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் 6 அடி உயர வேல் பரிசாக வழங்கப்பட்டது. இதனை பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் வழங்கினார்.
- வாக்குறுதி அளித்த தி.மு.க. மவுனம் சாதிக்கிறது.
- பணிக்கொடை மற்றும் இதர பணப் பலன்களை வழங்கவும், முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதி எண் 309-ல், "புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்" என்று குறிப்பிட்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னமும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில் எவ்வித வாக்குறுதியும் அளிக்காத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென்ற எண்ணத்தில் ஒரு முயற்சி எடுத்து மேற்படி திட்டத்தினை மத்திய அரசு 1.4.2025 முதல் செயல்படுத்தப்படவுள்ளது. ஆனால், வாக்குறுதி அளித்த தி.மு.க. மவுனம் சாதிக்கிறது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் துளிகூட இல்லாத தி.மு.க. அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென்றும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற மறுநாளிலிருந்து ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் இதர பணப் பலன்களை வழங்கவும், முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.
- சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் மழை பெய்யும்.
வங்கக்கடலில் வரும் 29ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 1ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிராலியால், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- புளியந்தோப்பு பகுதியில் பல இடங்களில் நாட்டு வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் வருவதை பார்த்ததும் 2 பேர் தப்பியோட முயன்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காடுவெட்டி பகுதியில் பெரியகுளம் அரண்மனைக்கு சொந்தமான புளியந்தோப்பு உள்ளது. இந்த பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாட்டுக் கொழுப்புக்குள் நாட்டு வெடிகுண்டுகளை உள்ளே வைத்து பல இடங்களில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் கிராம காவல் தலைவருக்கு புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கிராம காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக புளியந்தோப்பு பகுதியில் பல இடங்களில் நாட்டு வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு யாரேனும் உள்ளார்களா என்று விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வருவதை பார்த்ததும் 2 பேர் தப்பியோட முயன்றனர். இருந்தபோதும் துரத்திச் சென்று போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் சிக்கினார். பிடிபட்டவர் பெரியகுளம் அருகே உள்ள ஏ. வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 30 ) என்பதும், தப்பி ஓடிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 36) என்பதும் தெரியவந்தது.

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துவிட்டு தப்பி ஓட முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபரை வைத்து புளியந்தோப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியகுளம் வடகரை போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 29 நாட்டு வெடிகுண்டுகளையும் செயலிழக்க வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வரும் போலீசார் இவர்கள் வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயன்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் அண்ணாமலை தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார்.
- கருத்துகள் ஒவ்வொன்றும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அண்ணாமலை தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார். இவர் வெற்றி பெறும் தொகுதியில் தோற்கக்கூடிய தலைமை பொறுப்பில் இருக்கிறார். இதனால் அவருக்கு பயம் வந்துவிட்டது.
ஏனென்றால் அண்ணாமலை தனக்கு தலைமை பொறுப்பு நமக்கு தொடர்ந்து இருக்காது. அதனால் இருக்கின்றவரையில் ஏதாவது கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
நிச்சயமாக அக்கட்சியின் தலைமையில் உள்ளவர்கள் உணர்ந்து, விரைவில் அவரை இந்த தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற்றுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.
எப்படி வெளியேற்றுவது என்று அக்கட்சிக்கு தெரியாமல்தான் அண்ணாமலை லண்டனுக்கு படிப்பதற்காக செல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றி வருகிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஆகி உள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 3 ஆண்டுகளில் அவர் எந்த மக்களையும் சந்திக்கவில்லை. மாறாக ஊடகங்களையும், பத்திரிகைகளையும் சந்தித்து அரசியல் செய்து வருகிறார்.
இந்த 3 ஆண்டுகளில் ஒரு தற்குறி எப்படி பேசுவாரோ அதுபோல்தான் அவர் கூறும் கருத்துகள் ஒவ்வொன்றும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஊடகங்களுக்கு அவர் கூறியதாவது, இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னார்.
மேலும் அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்றும், பா.ஜ.க. 2-வது பெரிய கட்சி என்றும் கூறினார். இதுகுறித்து நான் அவரிடம் கேட்கிறேன், 2-வது பெரிய கட்சி கூறினீர்கள் ஆனால் ஒரு இடத்திலாவது நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்களா?
கடந்த முறை வென்ற கன்னியாகுமரி தொகுதியில் தோல்வியடைந்த அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டதால் தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார்.
- கட்சிக்கு கடுமையாக உழைத்த துரைமுருகன் இன்றும் ஸ்டாலினுக்கு கீழ் இருக்கிறார்.
- சீனியர்கள் பலரிடம் இருந்த பொறுப்புகள் தற்போது மற்றவர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணு கோபால சுவாமி கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் என்பதே எங்களது ஒற்றை குறிக்கோள். செப்டம்பர் 25 வரை எங்களது முழு கவனம் உறுப்பினர் சேர்க்கை.
தி.மு.க.வின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆலமரம் போன்றது எனக் கூறியிருந்தார். அப்படி தான் தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் ஆலமரம் என்றார்கள். அங்கு ஆட்சி மாறி இருக்கிறது. ரஜினிகாந்த் தி.மு.க.வில் புயலையும் சுனாமியையும் உருவாக்கி இருக்கிறார்.
கட்சிக்கு கடுமையாக உழைத்த துரைமுருகன் இன்றும் ஸ்டாலினுக்கு கீழ் இருக்கிறார். அடுத்ததாக உதயநிதிக்கு கீழும் இருக்க வேண்டியுள்ளது. இதனால தான் வாரிசு அரசியலை நாங்கள் வேண்டாம் என்கிறோம். உதயநிதி ஸ்டாலின் துரைமுருகனின் பேச்சை மட்டும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சொல்லி இருக்கிறார். அப்போ ரஜினி காந்தின் பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ளலாமா?
சீனியர்கள் பலரிடம் இருந்த பொறுப்புகள் தற்போது மற்றவர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தொண்டர்கள் இதனை சிந்திக்க வேண்டும். பா.ஜ.க.வின் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மூத்தவர்களுக்கு பா.ஜ.க.வில் அதிகம் மரியாதை கிடைக்கும். அதனால் உறுப்பினராக பா.ஜ.க.வில் சேர்ந்து கொள்ளுங்கள்.
கலைஞரின் வீட்டிற்கு முன் நின்று அவர்களையே விமர்சனம் செய்யும் அளவிற்கு பாரதத்தில் ஜனநாயகம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.4,378 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
- புதிய தாலுகா அலுவலகம்-நவீன சலவை கூடம் திறப்பு
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14.3.2024 அன்று சென்னை, தங்க சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை பகுதிக்கு விரிவான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் ரூ.4,378 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின்கீழ், சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் 53.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,25,402 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தரைதளத்தில் 64 கடைகளும், அலுவலக அறையும், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், முதல் தளத்தில் 70 கடைகளும், இரண்டாம் தளத்தில் உணவு விடுதி வளாகம் உள்பட 54 கடைகளும், முற்றத்தில் மீன் வள அமைப்புகள் என மொத்தம் 188 கடைகளுடன் அமைக்கப்பட உள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைவதற்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும் ராயபுரம் மூலகொத்தலத்தில் சுமார் 0.67 ஏக்கர் பரப்பளவில் 14.31 கோடி ரூபாய் மதிப் பீட்டில் 41,593 சதுர அடி கட்டிட பரப்பளவில் அடித்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய சமுதாய நலக்கூடம், புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் சுமார் 1.04 ஏக்கர் பரப்பளவில் 11.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45,198 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரைதளத்தில் சலவைக் கூடங்கள், எந்திரக் கூடங்கள், துவைக்கும் கூடங்கள், உலர்த்தும் இயந்திரங்கள் மற்றும் துணி துவைக்கும் இடம், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், முதல் தளத்தில் துணி உலர்த்தும் இடம், என 60 அறைகள் கொண்ட நவீன சலவைக்கூடம்.
புழல் ஏரிக்கரையில் சுமார் 8.17 ஏக்கர் பரப்பளவில் 16.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, இயற்கை காட்சி அமைப்புடன் கூடிய உயர்மட்ட நடைபாதை, மியாவாக்கி காடு வளர்ப்பு, குழந்தைகளுக்கான கண்காட்சி இடம், இயற்கை குளம், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ள புழல் ஏரிக்கரை.
ரெட்டேரி ஏரிக்கரையில் சுமார் 4.38 ஏக்கர் பரப்பளவில் 13.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நுழை வாயில் அரங்கம், இணைக்கும் பாலங்கள், இயற்கை தோட்டம் மற்றும் பூங்கா, நடைபாதை, சூரிய மின்கலம் கொண்ட நிழல் இருக்கைகள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைக ளுக்கான விளையாட்டு பகுதி, வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள ரெட்டேரி ஏரிக்கரை.
கொளத்தூர் ஏரிக்கரையில் சுமார் 0.4 ஏக்கர் பரப்பளவில் 6.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை நடைபாதை, படகு சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, செயற்கை நீர்வீழ்ச்சி, இசை பூங்கா, ஒளிரும் மீன் சிற்பங்கள், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ள கொளத்தூர் ஏரிக்கரை என மொத்தம் 115.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர், நேர்மை நகரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்டல உதவி ஆணையாளர் அலுவலகம், கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம், அயனாவரம், சி.கே.சாலையில் 2.27 கோடி ரூபாய் செலவில் நவீன சலவைக் கூடம் மற்றும் 45 லட்சம் ரூபாய் செலவில் 3 நியாய விலைக் கடைகள் என மொத்தம் 5.22 கோடி செலவில் முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், தாயகம் கவி, வெற்றியழகன், ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் ரங்கநாதன்மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பா.ஜ.க.வை போல காங்கிரஸ் கட்சி என்றைக்குமே அடிமைகளாக இருந்ததில்லை.
- 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 12 லட்சம்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நீண்ட காலமாகவே விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆதாரமற்ற கருத்துகளை கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்த அவர், பதவியை விட்டு விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியடைந்து, பதவி உயர்வு பெற்று தமிழக பா.ஜ.க. தலைவராக அமர்ந்தவர்.
2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 12 லட்சம். வாக்கு சதவிகிதம் 2.86 தான். அதே போல, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வுடன் சேர்ந்து 23 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
பா.ம.க.வும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், 18 சதவிகித வாக்கு வங்கியை பெற்றதாக அண்ணாமலை கூறுகிறார். கூட்டணியில் போட்டியிடுகிற போது எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் என்பதை துல்லியமாக கூற முடியாது என்பதை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாக இருக்கிற அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர்களுக்கு பஞ்சம் இருக்கிற பா.ஜ.க.வில் அண்ணாமலை தலைவராகி விட்டார். ஒன்றிய அரசில் பா.ஜ.க. இருப்பதனால் பண பலத்தை கொண்டு அரசியல் நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் திராவிட இயக்கங்களோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்த போது சுயமரியாதையோடு தான் நடத்தப்பட்டதே தவிர, பா.ஜ.க.வை போல காங்கிரஸ் கட்சி என்றைக்குமே அடிமைகளாக இருந்ததில்லை.
எனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்களே, உங்களது நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்று சொன்னால் வருகிற ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உங்களது மக்கள் விரோத போக்கிற்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள். நீங்களாக உங்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால் மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன்?
- மத்திய அமைச்சர் பதவியை மீண்டும் எல்.முருகனுக்கு தர என்ன காரணம்?
திருச்சி:
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழரல்லாத எல்.முருகனுக்கு மீண்டும் மத்திய இணையமைச்சர் பதவியை பாஜக கொடுத்தது ஏன்?
* தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன்?
* எல்.முருகனோடு தோற்றுப்போன மற்ற பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி தராதது ஏன்?
* மத்திய அமைச்சர் பதவியை மீண்டும் எல்.முருகனுக்கு தர என்ன காரணம்?
* அண்ணாமலை, கே.பி.ராமலிங்கம் போன்றோருக்கு மத்திய அமைச்சராக தகுதியில்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதால் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இடைக்கால முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும்.
- தலைவர்களில அதிபுத்திசாலி எடப்பாடி பழனிசாமிதான்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதால் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இடைக்கால முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும். இப்போது இருக்கிற தலைவர்களில அதிபுத்திசாலி எடப்பாடி பழனிசாமிதான். அவரை தற்குறி என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசி இருக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எனது காசிலிருந்தும் தான் சம்பளம் பெறுகிறாய். ஒழுங்காக ஐபிஎஸ் வேலையை பார்க்கட்டும்.
- திருச்சி, புதுக்கோட்டையில் அருகருகே கணவன், மனைவிக்கு யார் சிபாரிசில் பதவி கிடைத்தது.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பிச்சை எடுத்தது அல்ல ஐபிஎஸ் பதவி என்ற வருண்குமாரின் ஸ்டேட்மெண்டுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* என்னிடம் காசு இல்லை. மக்களிடம் கையேந்தி தான் கட்சியை நடத்துகிறேன். பிச்சை எடுத்து, திரள் நிதி திரட்டி கட்சி நடத்துகிறேன்.
* எனது காசிலிருந்தும் தான் சம்பளம் பெறுகிறாய். ஒழுங்காக ஐபிஎஸ் வேலையை பார்க்கட்டும்.
* கன்னியாகுமரியில் பேசிய துரைமுருகனை திருவள்ளூரில் கைது செய்தததற்கான காரணம் என்ன?
* சாட்டை துரைமுருகனை கைது செய்த பின்னர் அவரது செல்போன் உரையாடலை வெளியே கசியவிட்டதற்கான காரணம் என்ன?
* யாருக்கு வேலை செய்கிறீர்கள், ஆடியோ வெளியிடுவதற்கு ஐடி விங்கில் வேலை செய்ய வேண்டியது தானே.
* ஆடியோவை எடுத்து வெட்டி ஒட்டி வெளியிடுவதால் எத்தனை பேரின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
* வருண்குமார் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து விடலாம்.
* நாம் தமிழர் கட்சியினர் ஆபாசமாக எழுத மாட்டார்கள்.
* விருதுநகரில் எழுதியவனை திருச்சிக்கு தூக்கி வந்து கண்ணை கட்டி அடித்தது ஏன்?
* திருச்சி, புதுக்கோட்டையில் அருகருகே கணவன், மனைவிக்கு யார் சிபாரிசில் பதவி கிடைத்தது.
* என் குடும்பத்தை பற்றியும் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
* எங்கே குற்றம் நடந்தாலும், திருச்சிக்கு அழைத்து வந்து விசாரிப்பது ஏன்?
* செல்போனை ஆய்வு செய்ய வேண்டிய வேலை போலீசாருடையது அல்ல. நாங்கள் செல்போனில் பேசுவது எப்படி பொதுவெளியில் கசிகிறது?
* கட்சிக்காரர்களுடன் ஆயிரம் பேசுவோம், அதை எப்படி பொதுவெளியில் வெளியிடுவீர்கள்? என்று கூறினார்.
- எம்.எல்.ஏ. வின் இந்த நடவடிக்கை அதிகாரிகளை ஒரு கணம் திகைக்க செய்தது.
- பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
திருச்சி:
திருச்சி காவிரி ஆறு முக்கொம்பு பகுதியில் இருந்து கொள்ளிடம், காவிரி என 2 ஆறுகளாக பிரிந்து செல்கிறது. காவிரி நீர் புதுவாத்தலை மற்றும் ராமாவா்த்தலை ஆகிய 2 வாய்க்கால்கள் வழியாக ஸ்ரீரங்கம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த வாய்க்கால்கள் தற்போது ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகள் மண்டி வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல். இதனால் இப்பகுதி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்வது காலதாமதம் ஆகி வருகிறது.
இதனை அடுத்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை நேரில் சந்தித்து வாய்க்காலை தூர்வார கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து உடனடியாக நீர்வளத்துறை அலுவலகத்திற்கு விவசாயிகளுடன் நேரில் சென்ற பழனியாண்டி எம்.எல்.ஏ அங்கிருந்த செயற்பொறியாளர் நித்தியானந்தத்தை சந்தித்து கரையை பலப்படுத்தவும், காவிரி ஆற்றில் குறம்பு தேக்கி வாய்க்கால்களில் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த கோரிக்கை மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் காவிரி ஆற்றில் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் மணல் மூட்டைகளுடன் பணியில் ஈடுபட்டனர். இந்த வேளையில் அங்கு சென்ற பழனியாண்டி எம்.எல்.ஏ. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று ஆற்றுக்குள் இறங்கினார்.
ஆற்று தண்ணீரின் அளவை கண்டு, அதற்கு ஏற்றார் போல் கரையின் உயரத்தை உயர்த்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எம்.எல்.ஏ. வின் இந்த நடவடிக்கை அதிகாரிகளை ஒரு கணம் திகைக்க செய்தது. அதே வேளையில் அந்த பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.






