search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Investors Conference"

    • உயர்மட்ட குழு ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், தைவான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது.
    • சுமார் 5 ஆயிரம் பிரதிநிதிகள் சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயித்து மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

    இதற்காக வெளிநாட்டு முதலீடுகளை பெரிய அளவில் ஈர்த்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வைப்பதுடன் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடவும் திட்டமிட்டு வருகிறது.

    இதற்காக உலக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் உயர்மட்ட குழு ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், தைவான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது.

    சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மே 23-ந்தேதி முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடு களை ஈர்க்கும் விதமாகவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று வந்தார். அவருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உயர் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

    இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் 3,233 கோடி ரூபாய் அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் சென்னையில் வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான சின்னத்தை (லோகோ) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்துவதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் இப்போதே திட்டமிடப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டுக்காக 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் பல நாடுகள் மாநாட் டில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து வருகின்றன.

    இதன் மூலம் இந்த நாடுகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் பிரதிநிதிகள் சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாநாட்டுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதால் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக வரவேற்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே இத்தகைய சாதனையை அடைந்திருக்கிறோம்.
    • தமிழ் நாடு அரசின் தொழில் துறையை தங்கமாக மாற்றிய தங்கம் தென்னரசுவை நான் பாராட்டுகிறேன்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடுகளுக்கு 60 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

    இதையடுத்து ரூ.1,497 கோடி செலவில் 12 நிறுவனங்களின் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. மேலும் ரூ.22 ஆயிரத்து 252 கோடி செலவில் 21 நிறுவனங்களின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    எனது உரையை தொடங்குவதற்கு முன்னால் மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை உங்களோடு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் நம்முடைய தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது என்ற செய்தி மிகப்பெரிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.

    14-வது இடத்தில் இருந்து இன்றைக்கு தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்திருக்கிறது. இது இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்க கூடிய மிகப்பெரிய ஒரு நற்சான்றிதழாக அமைந்திருக்கிறது.

    ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே இத்தகைய சாதனையை அடைந்திருக்கிறோம். இதற்கு முழு முதற்காரணமாக அமைந்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    கடந்த காலங்களில் நம்முடைய கழக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்து மிக சிறப்பாக பணியாற்றியவர் தங்கம் தென்னரசு. இந்த முறை அமைச்சரவையில் அவருக்கு அதே துறையை வழங்குவதா? வேறு துறையை வழங்குவதா? என்று நான் சிந்தித்த போது திடீரென தொழில்துறையை நான் தேர்ந்தெடுத்தேன்.

    கடந்த காலத்தில் மிக மிக தொய்வாக இருந்த இந்த துறையை மீட்டெடுப்பதற்கு ஆர்வமான, திறமையான, துடிப்பான பல்வேறு முயற்சிகளை துணிச்சலாக செய்யக்கூடிய தங்கம் தென்னரசு இருந்தால் தான் சரியாக இருக்கும் என நினைத்து அவரது பெயரை தேர்ந்தெடுத்தேன்.

    என்னுடைய தேர்வு சரியாக இருந்தது என்பதை இப்பவும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் நாடு அரசின் தொழில் துறையை தங்கமாக மாற்றிய தங்கம் தென்னரசுவை நான் பாராட்டுகிறேன்.

    இந்த மாநாடு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு தொடங்கி உள்ளது. இந்த முதலீட்டு மாநாட்டில் பங்கேற்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். நமது அரசு ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 5 மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். சென்னையில் 2, கோவையில் 1, தூத்துக்குடியில் 1, துபாயில் 1 மாநாடும் நடந்துள்ளது.

    இந்த மாநாடு 6-வது மாநாடாக இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு காலத்திற்குள் 6 முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை.

    அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம் என்பதை அடிப்படையாக கொண்ட திராவிட மாடல் மாநிலத்தை நோக்கி இந்திய தொழில் அதிபர்கள் உலக நிறுவனங்கள் வரத்தொடங்கியதன் அடையாளமாக இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

    இந்த மாநாட்டில் நிதி நுட்பங்களுக்கான தொழில் திட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம். 10 நாட்களுக்கு முன்பு தான் மேம்பட்ட உற்பத்தி தொடர்பான ஒரு சிறப்பு மாநாட்டையும் நடத்தினோம். இந்த முதலீட்டு மாநாடுக்கு உயர்ந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முதலாவதாக தமிழ் நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். 2-வதாக தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ் நாடு விளங்க வேண்டும்.

    3-வதாக உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய 'மேட்இன்' தமிழ் நாடு பொருட்கள் சென்றடையைனும். 4-வதாக மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும்.

    இந்த இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் அனைத்து தொழில் முயற்சிகளும் இந்த 4 இலக்குகளை அடிப்படையாக கொண்டுள்ளது. இவை அனைத்தும் அனைத்து நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    அதன் அடையாளம் தான் தமிழகத்தை நோக்கி தொழில் நிறுவனங்கள் வருகின்றன. தமிழ்நாடு அரசு மீது அபார நம்பிக்கை வைத்து தொழில் அதிபர்களும், தொழில் நிறுவனங்களும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முன்வந்துள்ளன.

    இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்துள்ள உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். உங்கள் தொழில் திட்டங்களுக்கு தேவையான உதவிகளையும் அனுமதிகளையும், பெறுவதற்கும் உங்கள் தொழில் சிறந்திடவும், உறுதுணையாக இருப்போம்.

    ஆன்லைன் விற்பனை இன்று பலமடங்கு அதிகரித்துள்ளது. மின்னணு மயமாக்கப்பட்ட வங்கி சேவைகளும் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன் படுத்திக்கொண்டு நாமும் வளர்ந்திட வேண்டியதை அரசின் கடமையாக கருதுகிறேன்.

    வளர்ந்து வரும் நிதி சேவைகள், துறையின் ஆதரவோடு, உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப துறையை தமிழ்நாடு கொண்டுள்ளது. இதற்காகவே தமிழ் நாடு நிதிநுட்ப கொள்கை 2021 அறிக்கையை கோவையில் நான் வெளியிட்டேன். இன்று டெக்ஸ்பிரியன்ஸ் இணையதளத்தையும் நான் தொடங்கி வைத்துள்ளேன்.

    இந்த திட்டம் மூலம் தொழில்நுட்ப சேவைகள் ஒரு குடையின் கீழ் அளிக்கப்படும். எனது கனவு திட்டமாக இருக்கக்கூடிய நான் முதல்வன் திட்டம் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். தொழில் மற்றும் கல்வித்துறை இணைந்து இன்போசிஸ் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    சென்னையில் நிதி நுட்ப நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் நிதி சேவைகள், அது தொடர்பான சேவையாக நிதிநுட்ப நகரம் செயல்படும். தமிழ் நாட்டில் உள்ள தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையில் தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில், தமிழ்நாடு நிதிநுட்ப கள விழா இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்கும் அளவுக்கு தமிழ்நாட்டை ஒரு 'ஸ்மார்ட்' மாநிலமாக உருவாக்குவது தான் இந்த அரசின் இலக்கு.

    நிதி நுட்ப தொழில்களை மதி நுட்பத்தோடு மாநிலத்திற்கு ஈர்க்க நினைக்கிறோம். அதன் முதற் கட்டத்திலேயே வெற்றியும் பெற்றுள்ளோம். இன்றைய தினம் 11 நிதி நுட்ப திட்டங்களுக்கு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஏராளமான தொழில் அதிபர்கள் வந்திருந்தனர்.
    • இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார்.

    தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் தமிழகத்தில் நிறைந்து உள்ளதாகவும், எனவே தொழில் அதிபர்கள் தாராளமாக இங்கு வந்து தொழில் முதலீடு செய்யலாம் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்கும் மார்ச் மாதம் நேரில் சென்று தொழில் அதிபர்களை சந்தித்து ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார்.

    தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் அப்போது கையெழுத்தானது.

    அதில் 2500 கோடி ரூபாய் முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் 1000 கோடி ரூபாய் முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டமும் தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் என்று லுலு நிறுவனம் அறிவித்தது.

    அதன்படி வணிக வளாகங்கள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனை தொடர்ந்து சர்வதேச முதலீடுகளை மேலும் ஈர்க்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்லவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

    இதனிடையே தொழில் செய்ய ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது மட்டுமின்றி தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மை மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கும் இடம் கிடைத்துள்ளது.

    தி.மு.க. அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெற்று உள்ள நிலையில் இதுவரை ரூ.2 லட்சத்துக்கு 20 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும், இதன்மூலம் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

    இந்த சூழலில் மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஏராளமான தொழில் அதிபர்கள் வந்திருந்தனர்.

    இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள்ளதாகவும், சாலை வசதி, ஏற்றுமதி, இறக்குமதிக்கான வசதிகள், குடிநீர், மின்சார வசதி உள்ளதாகவும் தெரிவித்த அவர், தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு உடனே அனுமதி கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு முன்னின்று செய்து தரும் என்று கூறினார்.

    அதன்பிறகு புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. மொத்தம் 60 நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.

    இதன்மூலம் புதிதாக 1.25 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு வரும் நிலையில் 74,898 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

    அது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் ரூ.1,494 கோடி முதலீட்டில் முடிவுற்ற 12 நிறுவனங்களின் புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும் ரூ.22,252 கோடி முதலீட்டில் அமைய உள்ள 21 தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்மூலமும் 24,754 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவன இயக்குனர் பூஜா குல்கர்னி உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை-2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022, தமிழ்நாடு டெக்ஸ்பீரியன்ஸ் இணையம் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் மட்டும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய வகைகளில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.
    • மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை சந்திப்பதற்கும் முதல்-அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜூலை 4-ந்தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    3 மாதங்களுக்கு ஒரு முறையாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற முனைப்பில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் சென்னையிலும், நவம்பர் மாதம் கோவையிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

    இதேபோல் இந்த ஆண்டு மார்ச் மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற சர்வதேச அணிகலன்களுக்கான பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிலும் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அது மட்டுமின்றி துபாய், அபுதாபி போன்ற நாடுகளிலும் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் மட்டும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய வகைகளில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

    மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை சந்திப்பதற்கும் முதல்-அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் அடுத்த கட்ட முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த மாதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் உள்ளிட்ட அரசு சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    இந்த மாநாட்டில் எத்தனை நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தங்கள் மேற்கொள்வது, எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில் ஒப்பந்தங்கள் போடப்படும் என்பது குறித்து அதிகாரிகள் விரிவாக ஆலோசித்து வருகின்றனர்.

    ×