search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்- 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
    X

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்- 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

    • சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஏராளமான தொழில் அதிபர்கள் வந்திருந்தனர்.
    • இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார்.

    தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் தமிழகத்தில் நிறைந்து உள்ளதாகவும், எனவே தொழில் அதிபர்கள் தாராளமாக இங்கு வந்து தொழில் முதலீடு செய்யலாம் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்கும் மார்ச் மாதம் நேரில் சென்று தொழில் அதிபர்களை சந்தித்து ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார்.

    தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் அப்போது கையெழுத்தானது.

    அதில் 2500 கோடி ரூபாய் முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் 1000 கோடி ரூபாய் முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டமும் தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் என்று லுலு நிறுவனம் அறிவித்தது.

    அதன்படி வணிக வளாகங்கள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனை தொடர்ந்து சர்வதேச முதலீடுகளை மேலும் ஈர்க்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்லவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

    இதனிடையே தொழில் செய்ய ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது மட்டுமின்றி தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மை மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கும் இடம் கிடைத்துள்ளது.

    தி.மு.க. அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெற்று உள்ள நிலையில் இதுவரை ரூ.2 லட்சத்துக்கு 20 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும், இதன்மூலம் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

    இந்த சூழலில் மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஏராளமான தொழில் அதிபர்கள் வந்திருந்தனர்.

    இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள்ளதாகவும், சாலை வசதி, ஏற்றுமதி, இறக்குமதிக்கான வசதிகள், குடிநீர், மின்சார வசதி உள்ளதாகவும் தெரிவித்த அவர், தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு உடனே அனுமதி கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு முன்னின்று செய்து தரும் என்று கூறினார்.

    அதன்பிறகு புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. மொத்தம் 60 நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.

    இதன்மூலம் புதிதாக 1.25 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு வரும் நிலையில் 74,898 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

    அது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் ரூ.1,494 கோடி முதலீட்டில் முடிவுற்ற 12 நிறுவனங்களின் புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும் ரூ.22,252 கோடி முதலீட்டில் அமைய உள்ள 21 தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்மூலமும் 24,754 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவன இயக்குனர் பூஜா குல்கர்னி உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை-2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022, தமிழ்நாடு டெக்ஸ்பீரியன்ஸ் இணையம் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.

    Next Story
    ×