என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறி... அண்ணாமலை கடும் தாக்கு
- நேர்மை, நாணயத்தை பற்றி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 4-வது இடம் கூட கிடையாது.
தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டுமென்றால், 2026-ஐ தவிர வேறு வாய்ப்பு கிடையாது. காலம் கனிந்து இருக்கிறது. இதற்காக, பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சை பார்க்கும்போது, 'துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் இருக்கும் மேடையில், உதயநிதி ஸ்டாலின் அரியணை ஏறினால் கலவரம் வெடிக்கும் என்பதை சொல்லாமல் சொன்னதுபோல் உள்ளது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் ஊரில் சிலுவம்பாளையத்தில் கொலை நடந்தது. கைது செய்யப்பட்ட ஒருவர் சிறைக்கு சென்றார். கைது செய்யப்படாதவர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்து இருந்தார். இன்று தி.மு.க.வில் இருக்கும் மூத்த அமைச்சர், அன்று அ.தி.மு.க.வின் அமைச்சர். அவர் கை, காலை பிடித்து, வழக்கை முடித்து வெளியே வந்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் தோற்றவர் நீங்கள்.
நேர்மை, நாணயத்தை பற்றி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். அதே கொங்கு பகுதியில் வந்தவன் நான். கூவத்தூரில் நடந்தது அலங்கோலம். கூவத்தூரில் ஒப்பந்தம் அமைப்பில் முதலமைச்சரை தேர்வு செய்தீர்கள்.
அதன்பிறகு தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 4-வது இடம் கூட கிடையாது. எனக்கும், அ.தி.மு.க. தலைவர்களுக்கும் ஏன் சண்டை?. இந்த மேடையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று நினைக்கும் தலைவர்களும் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வுக்கும், எனக்கும் வாய்க்கால் பிரச்சினையா?. 2019-ல் வாரணாசியில் மோடி வேட்பு மனுதாக்கல் செய்ய போகும்போது, எடப்பாடி பழனிசாமியை கூட்டணியில் உள்ள ஒரு தலைவர் கூப்பிடுகிறார். அதற்கு அவர், தோற்கப் போகிற மோடிக்காக நான் ஏன் வரவேண்டும் என்று சொன்னார். என்னுடைய தலைவரை பற்றி எடப்பாடி பழனிசாமி அன்று எப்படி பேசினாரோ? மானமுள்ள அண்ணாமலை கூட்டணி கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டது கிடையாது.
கலைஞர் நாணயம் வெளியீடு நிகழ்ச்சியில் பாஜக கலந்து கொண்டதை வைத்து, தி.மு.க.வுக்கும், பாஜக-வுக்கும் உறவு என்று பேசுகிறார்கள். இப்போது உறுதியாக சொல்கிறேன். பாஜக ஒரு போதும் தி.மு.க.வுடன் உறவு வைக்காது. இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.






