என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
- திமுக அரசு இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த விடியா திமுக அரசின் மூன்றாண்டு சாதனை.
வெளிநாட்டில் அமர்ந்தவாரே கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்திய விடியா திமுக முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா?
தனது பிரதானப் பணிகளையே மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சீரழியும் சட்டம் ஒழுங்கை இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இருந்தால் பா.ஜ.க. ஆட்சியில் மக்களின் வாழ்வாதார நிலை, வறுமை சூழல் ஆகியவை குறித்த முழு விவரங்களும் வெளி வந்திருக்கும். 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 20 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டதாக கூறுகிற புள்ளி விவரம் உண்மையானதல்ல.
தலைவர் ராகுல்காந்தி கோரிக்கையின்படி உடனடியாக மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக இணைத்து நடத்த வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
- மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூடநம்பிக்கை கருத்துக்களை பரப்பிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு பேசிய வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த வகையில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான அமீர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
அமீர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது,
சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிற்போக்குத்தனமான விஷக் கருத்துகளைப் பரப்பிய மகா விஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியும் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும், அவரது வார்த்தைக்கேற்ப உரிய நடவடிக்கையை எடுத்த தமிழக காவல்துறைக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.
சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப் பார்க்கின்ற சனாதன கருத்திற்கு எதிராக விழித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தை, இப்போது ஆன்மிகம் என்கிற போர்வையில் "முற்பிறவி பாவங்கள்" என்ற சொல்லின் மூலம், வர்க்க ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது என்பதையே அசோக் நகர் அரசினர் மகளிர் பள்ளியின் நிகழ்வு நம் எல்லோருக்கும் உணர்த்துகிறது.
தங்கள் கண் முன்னே நடைபெற்ற பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையான பேச்சுக்களை தடுக்காமல், கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மத்தியில் தனது ஞானக்கண் கொண்டு அநீதியை தட்டிக் கேட்ட மானமிகு தமிழாசிரியர் சங்கர் அவர்களுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை வழங்கியதோடு நின்றுவிடாமல், அதே பள்ளியில் அவரைத் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களையும் தமிழக முதல்வர் அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
சமூகத்தை வழி நடத்தக்கூடிய அறிவார்ந்த நாளைய தலைமுறையை உருவாக்கும் பட்டறையாக கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்லாது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமை என்பதை மறந்து, சமீப காலமாக தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களில், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களிலும் யூட்யூப் போன்ற ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருகிறது.
எந்த விதமான கல்வித் தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமாகும்.
அதே போல, பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரைக் கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாகவே இருந்தாலும், வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் திரைப்பட அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியதே. திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு கல்வி நிறுவனங்களில் திரைக் கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவர்களை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
- மதுரையில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் பசியாறி வருகிறார்கள்.
மதுரை:
மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் இந்த விழா நான் அமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே கடந்த 2024-ம் ஆண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியதிலும், 72 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழு வினருக்கு கடனுதவி வழங்கியதிலும் இடம் பிடித்துள்ளது.
மதுரை என்றாலே அமைச்சர் மூர்த்தி, மூர்த்தி என்றாலே மதுரை என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆவார். இன்று நடைபெறும் விழாவில் 12 ஆயிரத்து 307 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு ரூ.108 கோடியில் கடனுதவியும், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.298 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நான் மதுரையில் தான் தொடங்கினேன். மதுரை, விருதுநகர், தேனி ஆகிய தொகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு கேட்டேன்.
அவர்களும் வாக்களித்து எங்கள் கூட்டணியை வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளி மாணவர் என்றால் தேர்வு நடத்தியும், விளையாட்டு வீரராக இருந்தால் விளையாட்டுத் திறன் மூலமாகவும் மதிப்பீடு செய்யப்படுகிறது.
தேர்தல் என்றால் வாக்காளர்கள் மூலம் அவர்கள் அளிக்கும் வெற்றியின் அடிப்படையில் அரசின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
அந்த வகையில், திராவிட மாடல் அரசுக்கு நற்சான்றிதழ் அளிக்கும் விதமாக பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை 40-க்கு 40 என்ற விகிதத்தில் வெற்றி பெறச்செய்து இன்னும் எங்களை கூடுதலாக உங்களுக்கு உழைக்க நிர்பந்தித்து உள்ளீர்கள்.
தமிழ் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மதுரையை நோக்கி ஏராளமான திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இன்று நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினர் அதிகளவில் வந்துள்ளார்கள்.
அரசின் சேவைகளை நீங்கள் தேடிச்சென்ற காலம் மாறி இன்று உங்களை தேடி அரசின் திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த காலத்தில் ரூ.30 ஆயிரத்து 75 கோடி என்று இருந்த வங்கி கடன் இணைப்பு தற்போது ரூ.35ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.17 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இணைப்புகளை திராவிட மாடல் அரசு வழங்கி உள்ளது.
31 ஆயிரம் மகளிர் குழுவைச்சேர்ந்த 3 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு ரூ.290 கோடி கடன் வழங்கியிருக்கிறோம். 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வீட்டுமனை பட்டா பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து இருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய விழாவின் மூலம் வீட்டுமனை பட்டா பெற்ற 12 ஆயிரம் பேரும் இனிமேல் தங்கள் வீடுகளில் நிம்மதியாக தூங்கலாம். உங்களின் உரிமைகளை திராவிட மாடல் அரசு நிலைநாட்டி இருக்கிறது.
2-வது முறையாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் 520 பேர் பயணம் செய்துள்ளனர். மதுரையில் மட்டும் 21 கோடி பேர் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பசியுடன் செல்லக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் காலை உணவுத்திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளார். இந்த காலை உணவுத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.
மதுரையில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் பசியாறி வருகிறார்கள். இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேரும், மதுரையில் மட்டும் 15 ஆயிரம் பேரும் பயனடைந்து உள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 16 லட்சம் பேர் மாதந்தோறும் ரூ.1000 பெறுகிறார்கள். மதுரையில் மட்டும் 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் இந்த உரிமைத்தொகையை பெறுகின்றனர்.
இதேபோல் உயர்கல்வியில் தமிழக முதலிடத்தை பிடித்துள்ளது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம் ஆகியவற்றிலும் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.
இன்று நலத்திட்ட உதவிகள் பெற்ற பொதுமக்கள், மகளிர் குழுவினர் அரசின் சாதனைகளை பிறருக்கும் எடுத்துக்கூற வேண்டும். மகளிர் குழுவுக்கு வழங்கப்பட்டது வெறும் கடன் அல்ல.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. இந்த கடன் உதவியை கொண்டு மகளிர் குழுவினர் தொழில் முனைவோராக உருவாக வேண்டும். அதற்கு அரசும், முதல்-அமைச்சரும் துணை நிற்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாங்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை.
- அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார்.
தஞ்சாவூர்:
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தஞ்சையில் அவருக்கு நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இருக்கிற அ.தி.மு.க. தொண்டர்களில் 100 சதவீதத்தில் 99.9 சதவீதம் பேர் அ.தி.மு.க. இணைய வேண்டும். 2026-ல் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சி கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை நிச்சயமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 2026-ல் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி ஏற்படும்.
நாங்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களாக வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். அதாவது ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்பது இணையும்போது ஒரு முடிவுக்கு வரும். அடுத்த ஆண்டு (2025) டிசம்பர் மாதத்திற்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும்.
பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் செயல்பாடுகள், சட்டமன்ற தேர்தலில் அவர்களின் செயல்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை அழித்து விடுவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். உண்மையும் அதுதான். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாங்கள் அ.ம.மு.க., தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். அன்றைக்கு நாம் தனித்து நின்று 150 இடத்திற்கு மேல் வந்து விடலாம் என்று சொல்லி எல்லோரையும் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். அதுபோல பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி வரும், 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று விடலாம் என்று கூறினார். ஆனால், 20 சதவீத வாக்குகள் வரும் அளவுக்கு மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார். சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். டிசம்பருக்குள் நிச்சயம் ஒற்றுமை வரும். 2026-ம் ஆண்டு நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் சங்கப் பொதுக்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.
- உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் நடிகர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் நடிகர் விஷால், பொருளாளர் நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்பட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் கட்டப்படுவதற்கு அளித்துவரும் ஆதரவுகளுக்காக நடிகர் சங்கப் பொதுக்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

நடிகர் சங்கக் கட்டிடம் 25 கோடி ரூபாய் வங்கிக் கடன் மூலம் கட்டப்படுகிறது.
இதற்கு தேவையான 12 கோடி ரூபாய் வங்கிக் கடன் டெபாசிட் தொகைக்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
மேலும் தம் நண்பர்கள் மூலம் 5 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் பரிந்துரைகள் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது, அதில் பேசிய சங்க நிர்வாகிகள், சங்க கட்டிடத்துக்காக கடன் வாங்கும் போது தேவையான டெபாசிட் தொகையில் பெரும் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துப் பாராட்டி பேசினர்.
மேலும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் பெருமக்களுக்கும், குறிப்பாக வங்கி வைப்புத் தொகைக்காக பெரும் நிதி திரட்டிட ஏற்பாடு செய்தமைக்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம்.
- வருகிற 29, 30, அக்டோபர் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் முற்றுகை போராட்டம்.
சென்னை:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக் குழு உறுப்பி னர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர் மட்டக் குழுக் கூட்டம் 8-ந்தேதி காணொலி வழியே நடைபெற்றது.
கூட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளருமான (பொறுப்பு) ஈ.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி. ரக்ஷித், வின்சென்ட் பால்ராஜ், மயில், தாஸ், சேகர், தியோடர் ராபின்சன், மன்றம் நா.சண்முகநாதன், வி.எஸ்.முத்துராமசாமி, கோ.காமராஜ், ஜெகநாதன், டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10-ந்தேதி) நடத்த உள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29-ந்தேதி, 30-ந்தேதி, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தொடர் கோட்டை முற்றுகை போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளை தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை 6-ந்தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை சுமூக மாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளி யிடபப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர் மட்டக் குழு, டிட்டோஜாக் கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு நாளை (10-ந்தேதி) அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும், வருகிற 29, 30, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கும்படி கோரிக்கை வைத்தோம்.
பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைபடுத்துதல் அரசாணை 243-ஐ ரத்து செய்ய கேட்டிருந்தோம்.
இது உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எதுவும் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதால், தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக நாளை காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்" என்றார்.
- ஆண்களுக்கு இணையாக பெண்களும், மாற்றுத்திறனாளிகளும், பயிற்சி ஆசிரியர்களும் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனையில் இடம்பிடித்தனர்.
- குன்னூர் சிலம்ப சாதனை நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் மைதானத்தில் தேசிய சிலம்ப பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமாக 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனை நிகழ்த்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
வெலிங்டன் கண்டோன் மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் லோட்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து சுமார் 1200 மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு 78 நிமிடங்கள் சிலம்பம் சுழற்றி சாதனை நிகழ்த்தினர்.
அப்போது வீரர்-வீராங்கனைகள் கண்ணை கட்டியும், பானைகள் மீது நின்றும் சிலம்பம் சுழற்றியது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும், மாற்றுத்திறனாளிகளும், பயிற்சி ஆசிரியர்களும் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனையில் இடம்பிடித்தனர்.
குன்னூர் சிலம்ப சாதனை நிகழ்ச்சியில் பரத நாட்டியம், கராத்தே, கேரம் போர்டு, ஓவியம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. பின்னர் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
நெல்லை:
புரட்டாசி மாதம் பிறப்பதையொட்டி நெல்லையில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு சென்று வர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி(2), பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
அந்த வகையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளான வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த சிறப்பு பஸ்களானது புரட்டாசி மாத சனிக்கிழமை காலை 7 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நவ திருப்பதிகளுக்கு சென்று பின்னர் இரவில் மீண்டும் புதிய பஸ் நிலையம் வந்து சேரும்.
இதற்காக ஒரு நபருக்கு கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்புதிவு செய்ய விரும்புவோர் நெல்லை புதிய பஸ் நிலையம், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டண தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அல்லது அரசு போக்கு வரத்து கழக இணையதளம் www.tnstc.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இத்தகவலை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
- தொழில் செய்வதற்கு உகந்த மாநிலமாக இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துவிட்டது.
- அநீதியும், அதர்மமும் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், காவல் துறையினருக்கும், தொழில் முனைவோர்களுக்கும் இடையூறு அளித்து வருகின்ற அவலநிலை தொடர்கிறது. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் தொழில் துவங்க தொழில் முனைவோர் ஆர்வம் காட்டுவது வெகுவாக குறைந்து வருவதுடன், ஏற்கெனவே உள்ளவர்களும் பிற மாநிலங்களை நாடிச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். தொழில் செய்வதற்கு உகந்த மாநிலமாக இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துவிட்டது.
தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகம்தான் இதற்கு எல்லாம் காரணம். நாட்டைப் பற்றி கவலை கொள்ளாமல் மனம் போன போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தன்னல அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கின்றது. அநீதியும், அதர்மமும் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தட்டிக் கேட்க திராணி இல்லாத அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சட்டம்-ஒழுங்கு சீர் செய்யப்படாவிட்டால் தமிழகம் சீரழிந்துவிடும் என்பதைக் கருத்தில் கொண்டு, பூரண மது விலக்கை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை தணிந்துள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 19ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை தணிந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 18,553 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 16,194 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்றும் நீர்வரத்து குறைந்து விநாடிக்கு 11,736 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 19ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் 116.12 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 115.93 அடியாக குறைந்தது. தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு 115.45 அடியானது. நீர் இருப்பு 86.39 டி.எம்.சி. உள்ளது.
- ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
- குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வந்தார்.
தனியார் விடுதியில் தங்கி இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை திடீரென்று விடுதி அருகே இருந்த கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வருவதை பார்த்ததும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அமைச்சரை வரவேற்றனர்.

அதன்பின் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள், வகுப்புகள், அங்குள்ள ஆய்வரங்கங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளி வகுப்பறை, மாணவ-மாணவிகளுக்கான குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகஷே் பேசியதாவது:-
உங்களுடைய திறமைகளை கண்டறிந்து கனவுகளை நோக்கி பயணம் செய்யுங்கள். ஆசிரியர்களிடம் அதிகமான சந்தேகங்களை கேளுங்கள். அப்போதுதான் உங்களுடைய பாடங்களைப் பற்றி முழுமையாக அறிய முடியும்.
எந்த நிலைக்கு போனாலும் படித்து வந்த பள்ளியையும், ஆசிரியர்களையும் மறந்து விடக்கூடாது. உங்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு தங்களது பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு இடங்களில் தொழில் அதிபர், டாக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு செல்வதே அவர்களது விருப்பமாக இருக்கும். அந்த விருப்பமே அவர்களுக்கு நல்லாசிரியர் விருதாகவும் அமையும்.
மலைப் பகுதிகளில் அதிக தூரம் பயணம் செய்து படிக்க வரும் மாணவர்களை கண்டு மெய் சிலிர்க்கிறேன். தங்களுக்கு பஸ் பாஸ் வேண்டும் என்று மாணவர்கள் கேட்டிருந்த நிலையில் சீருடை அணிந்து சென்றால் பஸ்சில் பாஸ் கேட்கமாட்டார்கள் என்றார். இருந்த போதும் மாணவர்களுக்கு பஸ்பாஸ் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அதனை தொடர்ந்து சிறந்த மாணவ-மாணவிகளுக்கு அப்துல்கலாம் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். பள்ளி கல்வித்துறைக்கு தேவையான பல்வேறு உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருவதால் அரசு பள்ளி மாணவர்கள் அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களாக மாறவேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.






