என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வாக்காளரிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • 5 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக மாநில அளவில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு-வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே மத்திய தேர்தல் துணை கமிஷனர் கே.கே.திவாரி, மாநில தலைமை தேர்தல் கமிஷனர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் தலைமையில்கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    அதற்கு முன்பாக கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து நேரடியாக களஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் கமிஷனர்கள், அதன்பிறகு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி எவ்வாறு நடைபெறுகிறது? அடுத்து செய்ய வேண்டிய பணிகள் என்ன, இந்த பணியில் உள்ள தொய்வுகள் மற்றும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மேலும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை சிறப்பாக செயல்படுத்துவது, வாக்காளர் நீக்கம், சேர்த்தல் ஆகியவற்றில் சரியான, உண்மையான விவரங்களை கேட்டு பெற்று செயல்படுத்துவது ஆகியவை குறித்தும் தேர்தல் கமிஷனர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர்.

    அதுவும் தவிர தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடைபெறுவதால் இந்த பணிகளில் ஈடுபட்டு உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் என்ன நிலவரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதில் உள்ள நிறை குறைகள் என்ன மற்றும் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

    • கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
    • எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுக-வின் சாதனை!

    தேசத்தையே உலுக்கச் செய்த கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளாகவே கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படாமல், உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

    திறனற்ற நிர்வாகத்தையும், சீரழிந்த சட்டம் ஒழுங்கையும் வைத்துக் கொண்டு எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அரசை நாடு போற்றும் நல்லாட்சி என்று கூறும் அவலத்தை வேறு கேட்க நேருவது பெரும் சாபக்கேடு! என கூறியுள்ளார். 



    • நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க் கும் விற்பனை ஆனது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு தள்ளியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது.

    அதன் தொடர்ச்சியாக 28-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருக்கிறது.

    அதிலும் ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலையிலேயே ஏறுவதும், பின்னர் குறைவதுமாக நீடிக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் விலை குறைந்து, ரூ.90 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இந்த நிலையில் நேற்று விலை அதிகரித்து ரூ.90 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

    நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்வை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலிலும் இதேபோல் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது.

    மொத்தமாக நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க் கும் விற்பனை ஆனது.

    வெகு நாட்களுக்கு பிறகு, ஒரே நாளில் 2 முறை விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படி இருந்த விலை உயர்வினால்தான், தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. மீண்டும் தங்கம் விலை ஏற்றப்பாதைக்கு செல்ல தயாராகிவிட்டதா? என பலரையும் நினைக்கத் தோன்ற செய்கிறது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,270-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,160 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,560

    05-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,440

    04-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,000

    03-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,800

    02-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-11-2025- ஒரு கிராம் ரூ.165

    05-11-2025- ஒரு கிராம் ரூ.163

    04-11-2025- ஒரு கிராம் ரூ.165

    03-11-2025- ஒரு கிராம் ரூ.168

    02-11-2025- ஒரு கிராம் ரூ.166

    01-11-2025- ஒரு கிராம் ரூ.166

    • 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு.

    கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் இருந்த காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

    பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கோவை இருகூர் அத்தப்பகவுண்டன்புதூர் ரோட்டில் 25 வயது இளம்பெண் ஒருவரை 3 பேர் தாக்கி காருக்குள் தூக்கிப் போட்டுள்ளனர். பின்னர் அந்த கார் அங்கிருந்து இருகூர் நோக்கிச் சென்றுள்ளது. அந்த காரில் இருந்த பெண் சத்தம் போட்டு அலறி இருக்கிறார்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளை நிற கார் சம்பவ இடத்தில் இருந்து வேகமாக செல்வதும், காரில் இருந்து பெண் கதறி அழுவதும் பதிவாகி இருந்தது.

    இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காரில் கடத்தப்பட்ட பெண் யார், அவரை கடத்தியவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. அந்த காரின் எண்ணை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்துகிறார்கள். குடும்ப பிரச்சினை எதாவது இருந்து காரில் அழைத்து செல்லும் போது சத்தம் போட்டாரா அல்லது காதல் விவகாரத்தில் அந்த பெண் கடத்தப்பட்டாரா, பணிக்கு சென்று திரும்பிய பெண் யாராவது கடத்தப்பட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் இளம்பெண் யாரும் மாயமாகி உள்ளனரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே காரில் கடத்தப்படும் இளம்பெண் கதறி அழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை செய்துவிட்டு உடலை கல்குவாரியில் வீசிய நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
    • மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்குவாரியில் 2 மூதாட்டிகள் சடலமாக மீட்கப்பட்டனர். மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தன நிலையில், 2 மூதாட்டிகளை கொலை செய்துவிட்டு உடலை கல்குவாரியில் வீசிய நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    நகைக்காக மூதாட்டி பாவாயி, பெரியம்மாளை கொலை செய்து குவாரி குட்டையில் வீசிய அய்யானர் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த அய்யனாரின் காலில் துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர்.

    • பெண்களுக்கு பாதுகாப்பான ஊர் என்று கொங்கு மண்டலத்திற்கு ஒரு பெயர் இருந்தது.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கஞ்சா, போதைப் பொருள் பயன்பாடு அதிகமாகிவிட்டது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு துளியும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான ஊர் என்று கொங்கு மண்டலத்திற்கு ஒரு பெயர் இருந்தது.

    கோவை மருத்துவமனையில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு ஆணும், பெண்ணும் தனியாக பேசிக் கொண்டிருந்த நிலையில் அந்த ஆணை அறிவாளால் வெட்டிவிட்டு அந்த பெண்ணை இழுத்துப்போய் முள் புதருக்குள் கூட்டிச் சென்று விடியற்காலை 4 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

    காவல்துறை என்ன செய்துக் கொண்டிருந்தது? காவல்துறையை கையில் வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் எனது கேள்வியாக இருக்கிறது.

    உடனடியாக கோவைக்கு சென்று போராட்டம் நடத்தினோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கஞ்சா, போதைப் பொருள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. பல்லடத்தில் மூன்று பேரை வெட்டிக் கொல்கிறார்கள்.

    தொடர்ந்து கொலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. ஆனால், முதலமைச்சர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார். ஆனால், இதுபோன்ற கொலை சம்பவங்களின்போது பெயருக்கு இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். போராட்டத்திற்கு பிறகு 4 பேரை கைது செய்கின்றனர். வெளியில் இருப்பவன் 17 கொலைகள் நான்தான் செய்தேன் என்கிறான். அப்போ கைது செய்து சிறையில் இருப்பவன் உண்மை குற்றவாளியா ? இல்லையா? என்கிற சந்தேகம் எழுகிறது.

    இதேபோல், கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திலும் உடனடியாக 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரும் உண்மையான குற்றவாளியா? இல்லையா ? என்பது தெரியாது?

    இதையெல்லாம் மாற்றி அமைப்பதற்கு கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்.
    • அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்!

    சென்னை:

    நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்- கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!

    நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, பாராளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார். 



    • வருகிற 14-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.
    • வருகிற 19-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதன்பிறகு உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இதையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மோன்தா புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 14-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்.

    இதனை தொடர்ந்து, வருகிற 19-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
    • டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?

    மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் மேலும் கூறியதாவது:-

    ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.

    நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.

    டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?

    டிடிவி தினகரனுடன் இருந்த தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக சென்றபோது ஏன் கவலைப்படவில்லை?

    பொதுவெளியில் டிடிவி தினகரன் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
    • ஏற்கனவே செங்கேட்டையன் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 12 பேரை நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் சுந்தவேல் முருகன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே செங்கேட்டையன் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 12 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசிலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    சென்னை:

    தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

    பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அஜித்குமாரின் கருத்து வைரலாகி பெரும் கவனம் பெற்றது.
    • ஒரு தரப்பு விஜய்க்கு ஆதரவாக உள்ளது என்றும் இன்னொரு தரப்பு விஜய்க்கு எதிராக உள்ளது என்றனர்.

    சென்னை:

    நடிகர் அஜித்குமார் சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,''கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி எதுவும் நடப்பதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

    அஜித்குமாரின் இந்தக் கருத்து வைரலாகி பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாக பேசினார் என்றும், இன்னொரு தரப்பினர் விஜய்க்கு எதிராக இந்தக் கருத்து உள்ளது என விமர்சனங்களும், விவாதங்களும் எழுந்தன.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமாரே இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அஜித்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது.

    இதற்கு முன்பு ஆந்திரா சினிமா தியேட்டரில் நடந்துள்ளது. பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது. பல நாடுகளில் நடந்துள்ளது.

    பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் நான் உள்பட அனைவருக்கும் பொருந்தும்.

    எனது இந்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படாது என்று நம்புகிறேன். ஒரு சிலர் ரசிகர்கள் மீது பழியை சுமத்துகிறார்கள்.

    எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது.

    என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன்.

    எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×