என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

SIR திருத்தப்பணி: கோவையில் அர்ச்சனா பட்நாயக்- மத்திய தேர்தல் அதிகாரி இன்று ஆய்வு
- வாக்காளரிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- 5 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மாநில அளவில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு-வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மத்திய தேர்தல் துணை கமிஷனர் கே.கே.திவாரி, மாநில தலைமை தேர்தல் கமிஷனர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் தலைமையில்கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதற்கு முன்பாக கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து நேரடியாக களஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் கமிஷனர்கள், அதன்பிறகு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி எவ்வாறு நடைபெறுகிறது? அடுத்து செய்ய வேண்டிய பணிகள் என்ன, இந்த பணியில் உள்ள தொய்வுகள் மற்றும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை சிறப்பாக செயல்படுத்துவது, வாக்காளர் நீக்கம், சேர்த்தல் ஆகியவற்றில் சரியான, உண்மையான விவரங்களை கேட்டு பெற்று செயல்படுத்துவது ஆகியவை குறித்தும் தேர்தல் கமிஷனர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர்.
அதுவும் தவிர தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடைபெறுவதால் இந்த பணிகளில் ஈடுபட்டு உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் என்ன நிலவரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதில் உள்ள நிறை குறைகள் என்ன மற்றும் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.






