என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.
    • ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    திண்டுக்கல்:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையிலும் நேற்று மாலை முதலே இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.

    திண்டுக்கல் மட்டுமின்றி கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    நேற்று மாலையில் தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர்.

    அதேபோல் இன்று காலையிலும் குடைபிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் சிரமத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதேபோல் அன்றாட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


    கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் நீடித்து வந்த நிலையில் தற்போது பனி மற்றும் மழையும் சேர்ந்து மக்களை வாட்டி எடுத்து வருகிறது.

    சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    இதனால் ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணத்தால் பெரும்பாறை அருகே உள்ள மூலக்கடை-புல்லாவெளி இடையே இஞ்சோடை என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் அதிகாலை சுமார் 4 மணி அளவில் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் மின் கம்பத்தை அகற்றினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. ஆனால் மீண்டும் மின்சாரம் வராததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திண்டுக்கல் 7.40, காமாட்சிபுரம் 13.80, நத்தம் 6, நிலக்கோட்டை 6.20, சத்திரப்பட்டி 12.40, வேடசந்தூர் 11.20, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 11, பழனி 6, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 28.50, பிரையண்ட் பூங்கா 28 என மாவட்டத்தில் இன்று காலை வரை 130.50 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறை எச்சரிக்கை.
    • விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று நள்ளிரவு நாகமங்கலம் கிராமத்தை கடந்து சானமாவு வனப்பகுதிக்குள் புகுந்தன.

    இந்த யானைக்கூட்டம், அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

    எனவே, சானமாவு, சினிகிரிப்பள்ளி, அனுமந்தபுரம், டி.கொத்தப் பள்ளி, கொம்மேப்பள்ளி, பென்னிக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்து செல்பவர்கள் என அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தாசில்தார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை.
    • கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி க்குட்பட்ட 55-வது வார்டு பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் 192 குடும்பங்கள் 38 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு , வீடு இல்லாமல் வாழ்விடத்திற்காக குடி பெயர்ந்தவர்கள் என ஏராளமானோர் இங்கு வந்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 38 ஆண்டு காலமாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


    தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நல சங்கம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற பட்டுக்கோட்டையார் நகர் பகுதி பொதுமக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து சம்பவ இடத்தில் திருப்பூர் தெற்கு தாசில்தார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • திருத்துறைப்பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்குமாறு மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • கொங்கு மண்டலங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது மேலும் வலுவடைந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஃபெங்கல் புயலானது சென்னை - கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே வருகிற 30-ந்தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    மேலும், இன்று உருவாகும் ஃபெங்கல் புயல் 30-ந்தேதி கரையை கடக்கும் போது சென்னையில் அதிகனமழை பெய்யும். புயல் கரையை கடந்த பிறகு உள் மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையில் இன்று முதல் மிதமான மழை தொடங்கி படிப்படியாக புயல் கரையை கடக்கும் 30-ந்தேதி கனமழை கொட்டி தீர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


    • தெலுங்கானாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள்தொகை வெறும் 52% மட்டும் தான்.
    • அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தெலுங்கானாவில் கடந்த 6-ஆம் நாள் தொடங்கிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 20 நாட்களில் 92% நிறைவடைந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் சமூகநீதியைக் காப்பதில் அம்மாநில காங்கிரஸ் அரசு காட்டும் அக்கறை வரவேற்கத்தக்கது.

    தெலுங்கானா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும். திசம்பர் 9-ஆம் நாள் அதன் அறிக்கை அம்மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார். தெலுங்கானாவில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி நிர்வாகத்தில் வரலாற்றுச் சாதனை என்றும், மாநிலங்களில் சமூகநீதி வழங்க இது அவசியம் என்றும் காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

    தெலுங்கானாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள்தொகை வெறும் 52% மட்டும் தான். ஆனால், அவர்களுக்காக சமூகநீதியை வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வியக்க வைக்கின்றன. சமூகநீதியில் தெலுங்கானா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

    தெலுங்கானாவுக்கு மிக அருகில் தான் தமிழ்நாடு என்ற மாநிலமும் உள்ளது. அதற்கு சமூகநீதியின் தொட்டில் என்று பெயர். தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 69.10% . ஆனால், அங்கு அவர்களுக்கு சமூகநீதி வழங்கப்படுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்காக மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால் அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தட்டிக்கழிக்கிறது தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் சமூக அநீதி அரசு.மொத்தத்தில் தமிழ்நாட்டுக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது திமுக அரசு.

    தெலுங்கானாவில் 20 முதல் 25 நாட்களில் நடத்தி முடிக்கப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணகெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த முடியாதா? அதற்கான மனிதவளம் தமிழ்நாட்டில் இல்லையா? அதற்கான நிதி தமிழ்நாட்டில் இல்லையா? எல்லாம் இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இல்லை.

    தமிழ்நாட்டை தற்போது ஆளும் அரசால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது; சமூகநீதி வழங்கப்படாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். சமூகநீதிக்கு இந்த அளவுக்கு துரோகம் செய்யும் தமிழ்நாட்டின் அரசை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கப்படும். இது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார்.
    • மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் விஜயகுமார் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார்.

    அப்போது, குறிப்பிட்ட ஒரு இசைக்கருவியின் பெயரை குறிப்பிட்டு அந்த இசைக்கருவியை குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பார்கள் எனக்கூறி ஒரு மாணவரின் பாடப்புத்தகத்தில், மாணவரின் சாதி பெயரை குறிப்பிட்டு எழுதி அனைத்து மாணவர்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவன் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறி அழுதான். இதையடுத்து, 2 நாட்கள் கழித்து ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

    பின்னர் குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, திருப்பத்தூர் தாசில்தார் நவநீதம், கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுலவர் உத்தரவிட்டுள்ளார். விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • வெள்ளி விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
    • திருவள்ளுவர் சிலை இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    இந்த சிலையின் முதலாம் ஆண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. அதன்பிறகு இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி வெள்ளி விழா கொண்டாட்டம் அரசு சார்பில் கன்னியாகுமரியில் வருகிற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    இந்த வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளூவர் சிலைக்கு இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழையிலான கூண்டு பாலமும் திறக்கப்படுகிறது.

    மேலும் திருவள்ளுவர் சிலையில் ரூ.3 கோடி செலவில் லேசர் மின் விளக்கு வசதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இந்த விழாவில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரியில் பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் முதல் கட்டமாக ரூ.10 கோடி செலவில் கன்னியாகுமரி நகரை அழகுபடுத்தும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் சிலை இரவு பகலாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சம்பவம் தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று உள்ளது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தனியார் பள்ளி மாணவ- மாணவர்களை மைதானத்தில் நிற்க வைத்து ஹாப்பி பர்த்-டே உதய் அண்ணா என்று தி.மு.க. நிர்வாகிகள் சொல்ல சொல்ல மாணவர்களும் சொல்கின்றனர். அப்போது மாணவர்கள் உதயநிதி ஸ்டாலினின் கட்சி சார்ந்த புகைப்படத்தை கையில் ஏந்தி நிற்கின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இச்சம்பவம் தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று உள்ளது. 



    • தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஈரோடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்பார்கள்.

    ஈரோடு:

    மத்திய அரசு கடை வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பை கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் அமலாக்கி உள்ளது. இந்த முறையால் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த வரி விதிப்பு முறையை முழுமையாக நீக்கம் செய்யக்கோரி வருகிற 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு நடத்த அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பினை கண்டித்து வருகிற 29-ந்தேதி ஈரோடு மாவட்டம் முழுவதிலும் ஒரு நாள் கடையடைப்பு, தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் கூறியதாவது:-

    அனைத்து வகை வாடகை கட்டடங்கள், கடைகளுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி என்பது வணிகர்களை கடுமையாக பாதிக்கும். ரூ.10 ஆயிரம் வாடகையில் கடை நடத்தும் வியாபாரி ரூ.1,800 செலுத்த வேண்டி வரும். பெரிய வியாபாரிகள், வணிகர்கள், ஜிஎஸ்டி.யை 'இன்புட்' என்ற ரீதியில் திரும்ப பெற இயலும்.

    குறைந்த வர்த்தகத்தில் தொழில் செய்யும், 'கன்சல்டேட்டேட்' முறையில் ஜி.எஸ்.டி.யாக, 1 சதவீதம் செலுத்தும் வணிகர்கள், 18 சதவீத ஜி.எஸ்.டி தொகையை திரும்ப பெற இயலாது. தவிர மிக மிக குறைந்த அளவிலும், பில் இன்றி பரிமாற்றம் செய்யப்படும் வணிகத்தில் உள்ளோரும் கடுமையாக பாதிப்பார்கள்.

    எனவே 18 சதவீத ஜி.எஸ்.டி.யை வணிகர்களுக்கு முழுமையாக நீக்க கோரி வருகிற 29-ந் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் மற்றும் இதனுடன் இணைந்த அமைப்புகளும் நடத்துகிறது. ஈரோடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்பார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த போராட்டத்திற்கு ஈரோடு நகை வியாபாரிகள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு சங்கத்தினரும் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    • இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.
    • திருச்சி லால்குடியில் 24.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திருச்சி:

    வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவானதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி திருச்சி, கரூர், அரியலூர்,பெரம்பலூர் ,புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையினால் திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று கலெக்டர் பிரதீப் குமார் விடுமுறை அறிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் கலெக்டர் ரத்தினசாமி விடுமுறை அளித்தார்.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் கலெக்டர் அருணா விடுமுறை அறிவித்து உள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்று பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    திருச்சி மாவட்டத்தில் மாநகர் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று விடிய விடிய மழை பெய்தது. மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இடைவிடாத மழையினால் ஊட்டி போன்ற குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    திருச்சியில் அதிக பட்சமாக லால்குடியில் 24.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மாவட்டத்தின் இதர பகுதிகளான கள்ளக்குடி 18.4, நந்தியாறு அணைக் கட்டு 9.2,புள்ளம்பாடி 21.8, தேவி மங்கலம் 12.4, சமயபுரம் 17,சிறுகுடி 22.2, வாத்தலை அணைக்கட்டு 18.4,மணப்பாறை 6,பொன்னடியாறு அணை 8, கோவில்பட்டி 14.2, மருங்காபுரி 13.4, முசிறி 13, புலிவலம் 4, தாப்பேட்டை 12, நவலூர் கொட்டப்பட்டு 11 ,துவாக்குடி 22.5, கொப்பம்பட்டி 11, தென்பர நாடு 16, துறையூர் 13, பொன்மலை 16.4, திருச்சி ஏர்போர்ட் 18.4, திருச்சி ஜங்ஷன் 17.6, திருச்சி டவுன் 17.3 என்ற மில்லி மீட்டர் அளவில் மழை பதிவானது.

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அரியலூர் புதுமார்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்தி சந்தை, வெள்ளாளத் தெரு, பெரம்பலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. பிற்பகலிலேயே பெரம்ப லூர் தஞ்சாவூர் சாலையில் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு வாகனங்கள் சென்றன.

    ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், கீழப்பழுவூர், திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இந்த மழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    பெரும்பாலன பகுதி களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-

    அரியலூர்-27 , திருமானூர்-31 , ஜெயங்கொண்டம்-50, செந்துறை-27.8, ஆண்டிமடம்-16.8, குருவாடி-27, தா.பழுர்-23.2, சுத்தமல்லி டேம்-45.

    அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 247.8 மி.மீ.மழை பெய்துள்ளது. இதன் சராசரி 30.97 மி.மீட்டர் ஆகும். இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. காலையிலும் மழை பெய்து வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் விடிய விடிய மழை பெய்தது சில இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்ச மாக அயன்குடி பகுதியில் 57.40 மில்லி மீட்டர் மழை பதிவானது இதர பகுதி களான கந்தர்வகோட்டை 23.40 , கறம்பக்குடி 41.20 ,மலையூர் 30.20, கிளநிலை 14.60, திருமயம் 12.30, அரிமளம் 21.60,

    அறந்தாங்கி 32, நகுடி 39 . 40, மீமிசல 18.40, ஆவுடையார் கோவில் 19 .80,மணமேல்குடி 20, இலுப்பூர் 8 குடுமியான்மலை 14 அன்ன வாசல் 5.40 விராலிமலை 3 உடையாளிப்பட்டி 9 கீரனூர் 16.80 பொன்னம ராவதி 8 ,புள்ளி 20 ,கரையூர் 9.20 என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 489. 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. இது சராசரி மழை அளவு 20.40 ஆகும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று இரண்டாவது நாளாக இங்கு மழை நீடித்துள்ளது மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 178 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    அதன்படி பெரம்பலூர் 11, இறையூர் 17, கிருஷ்ணாபுரம் 16, வி களத்தூர் 15 , தழுதலை 25, வேப்பந்தட்டை 27, அகரம் சீ கூர்17, லப்பை குடிக்காடு 13 புது வெட்டக்குடி 17 பாடாலூர் 13, செட்டிகுளம் 5 என மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று 99.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது.
    • அக்னிதீர்த்தக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது.

    மண்டபம்:

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது. வட கிழக்கு பருவ மழையுடன் புயலும் சேர்ந்ததால் தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் மேக வெடிப்பு காரணமாக ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவானது.

    ராமேசுவரத்தை புரட்டிப்போட்ட இந்த மழை பாதிப்பில் இருந்து மக்கள் சற்று மீண்டு வந்த நிலையில், புயல் சின்னம் காரணமாக நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

    வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை எதிரொலியாக பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் மீன்பிடி இறங்குதளங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

    கடுமையான பனி மூட்டத்துடன் பலத்த மழையும் பெய்து வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளுக்குள் முடங்கினர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியது.

    அரிச்சல் முனை, தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம், கோதண்டராமர் கோவில், ராமர்பாதம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது.

    குந்துகால் முதல் குரு சடைதீவு வரையில் இயக்கப்படும் சுற்றுலா படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அக்னிதீர்த்தக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது.

    தனுஷ்கோடி, குந்துகால் கடல் பகுதி, பாம்பன் ஆகிய இடங்களில் அலைகளின் சீற்றம் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதிலும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் பல மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து தாக்கியது.

    சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் மீண்டும் கடலில் இழுக்கப்பட்டன. அத்துடன் கடற்கரையை ஒட்டிய மீனவர் குடியிருப்புகளையும் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் புயலால் ராமேசுவரம் கடலில் இன்று மணிக்கு 55 முதல் 63 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அதற்கேற்க இன்று காலை முதலே பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 60 கி.மீ. வேகத் தில் சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் கடற்கரை வெறிச்சோடியது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    ×