என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இன்று மாலை 5.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
- புயல் உருவாவதை ஒட்டி சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புயல் உருவாவதை ஒட்டி சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் போலீசார் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக்கால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
- ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா காரை மடக்கி சோதனை செய்தனர்
- ஊட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
ஊட்டியில் லஞ்ச ஒழிப்பு போலீசில் ரூ.11 லட்சத்துடன் சிக்கிய நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் கமிஷனராக பணியாற்றிய ஜஹாங்கீர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
அங்கு அனுமதி இல்லாத மற்றும் விதிகளை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி, வாகனங்களை நிறுத்த தனியாருக்கு அனுமதி என பணம் வாங்கிக்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 9-ந் தேதி பணியை முடித்துக் கொண்டு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு ஜஹாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் சில மேற்கூறிய செயல்கள் தொடர்பாக லஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுகொண்டிருப்பதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா காரை மடக்கி சோதனை செய்ததில் அவரது காரில் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் கண்டெடுக்கப்பட்டது. இது லஞ்ச பணம் என்பதை உறுதி செய்யப்பட்ட பின்னர் ஜஹாங்கீர் பாஷா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஜஹாங்கீர் பாஷா ஊட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அவரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது நேருக்கு மாறாக அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

- ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
- கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் சாலை ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரும் பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்த உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சரமாறியாக அடித்தனர்.
கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரை பிடித்த போலீசார் விபத்து தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என வலியுறுத்தி உடல்களை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் கிராம மக்களுடன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
- கழகத் தலைவர் தொடர்ச்சியாக 2-வது முறையாக முதல்வர் நாற்காலியில் தமிழ்நாட்டு மக்கள் உங்களோட ஒத்துழைப்பால உட்கார வைக்கப்போவது உறுதி.
- எதிர் அணியில் இருக்கக்கூடிய கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
சென்னை:
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
அமைச்சர் சேகர் பாபு ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறார். முதலமைச்சர் தலைமையில் கடந்த மூன்றரை வருடங்களாக சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறோம். சென்ற பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் நமக்கு தந்துள்ளார்கள். அதுவே மிகப்பெரிய சான்றிதழ். ஆனால் அதைவிட மிகமிக முக்கியம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மிகமிக முக்கியம்னு தலைவர் சொல்லி இருக்கார். ஆணையிட்டுள்ளார். உறுதிமொழி கொடுத்து இருக்கார். 234 தொகுதிகளில் குறைந்தது 200 தொகுதி ஜெயிப்போம்னுங்கற உறுதி மொழி எனக்கு வேண்டும்.
எல்லோரும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஒரு திராவிட மாடல் நிகழ்ச்சின்னு சொல்லலாம். கழகத்தின் மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி, 250 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, 375 விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் 500 பெண்கள் அடங்கிய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி தொகை, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என இன்றைக்கு மட்டும்1,335 நபர்களுக்குநலத்திட்ட உதவிகளை வழங்க அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்து இருக்கார்.
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தயார் ஆக வேண்டும். கழகத்தின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கணும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து எப்போதும் சென்னை கிழக்கு மாவட்டம் நம் கழகத்தின் கோட்டை என்பதை நிச்சயம் ஜெயிக்கப்போவது உறுதி. கடந்த 3 நாட்களாக டெல்டா பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அரசு நிகழ்ச்சி, கழக நிகழ்ச்சி என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். மக்களிடம் அப்படி ஒரு எழுப்பி உள்ளது. குறிப்பாக தாய்மார்களிடம் அப்படி ஒரு எழுச்சி இருக்கு. நிச்சயம் இந்த முறை 7 முறையாக திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. கழகத் தலைவர் தொடர்ச்சியாக 2-வது முறையாக முதல்வர் நாற்காலியில் தமிழ்நாட்டு மக்கள் உங்களோட ஒத்துழைப்பால உட்கார வைக்கப்போவது உறுதி.
எதிர் அணியில் இருக்கக்கூடிய கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் கள ஆய்வு நடத்துறோம்னு சொல்லி ஒவ்வொரு இடத்திலும் பெரிய கலவர ஆய்வுதான் நடத்துறாங்க. எல்லா நிகழ்ச்சியிலும் சண்டை. ஆனா நம்முடைய கூட்டணி.. மிகப்பெரிய ஒரு வெற்றி கூட்டணி.. சொல்லப்போனால் நம் எதிர் அணியில் இருக்கக்கூடிய அதிமுகவோட பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் சொல்றாரு.. கூட்டணிக்கு வரச்சொன்னா ஒருத்தர் நூறு கோடி கேட்கறான். மற்றொருத்தன் 20 தொகுதி கேட்கறான்னு ஓபனா பேச ஆரம்பிச்சிட்டாங்க.. ஆனா நம்ம கூட்டணி வெற்றி கூட்டணி. நம்ம தலைவர் கழகத்தின் தலைவவரா பொறுப்பேற்று சந்தித்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். அதற்கு ஒரு விஷயம் தான். கழகத்தோழர்கள்...கலைஞரின் உடன்பிறப்புகள் என அனைவரும் களத்தில் இறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வெற்றியை உறுதி செய்யணும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சமூகநீதிப் பார்வையும் மதச்சார்பின்மையும் நிச்சயம் முக்கியம்.
- மக்களுடைய கஷ்டங்களை தீர்க்க பாடுபட வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நடை பெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப் பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 1000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்த வரைக்கும், காவலர்களை போற்றும் அரசாக, காவல் துறையில் இருப்பவர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றித் தரும் அரசாக, மக்களைக் காப்பாற்றும் அரசாக அமைந்து இருக்கிறது.
அதனால்தான், இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையாக, தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது, அதை யாரும் மறுக்கமுடியாது.
முதன் முதலாக காவல் ஆணையம் அமைத்ததுடன், பல்வேறு முன்னோடி நலத் திட்டங்களை நிறைவேற்றியது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.
கடந்த மூன்று ஆண்டுகளில் காவலர்கள் முதல் டி.எஸ்.பி., வரை 17 ஆயிரத்து 435 நபர்களை காவல்துறையிலும், ஆயி ரத்து 252 பேரை தீய ணைப்புத் துறையிலும், 366 பேரை சிறைத்துறையிலும் புதிதாக நியமித்திருக்கிறோம்.

திராவிட மாடல் அரசின் காலம்தான், தமிழ்நாடு காவல்துறையின் பொற்காலமாக அமைந்திருக்கிறது. நீங்கள் மக்களுடைய கஷ்டங்களை தீர்க்க பாடுபட வேண்டும்.
புதிதாக தமிழ்நாடு காவல்துறையில் இணைந்திருக்கும், உங்க ளுக்கு ஏராளமான கடமை கள் காத்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதுடன் குற்றங்களே நடைபெறாமல் தடுப்பது தான் நம்முடைய இலக்காக இருக்கவேண்டும்.
சைபர் குற்றங்கள், போதைப் பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்! இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
உங்களுக்கு, சமூகநீதிப் பார்வையும் மதச்சார் பின்மையும் நிச்சயம் முக்கியம். சாதி பாகுபாடு பார்க்கக் கூடாது. அனைவருக்கும் பொதுவான நிலையில் இருந்து நீங்கள் பணியாற்றவேண்டும்! உங்களுக்கு சட்டம்தான் முக்கியம்.
பிரச்சினை என்று உங்களிடம் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசுங்கள். உங்களின் பேச்சும், நீங்கள் நடந்துக்கொள்வதிலும் தான், நம்முடைய பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு உருவாக்கும்.
புதிதாக பணியில் சேரும் உங்களுக்கு, நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, குற்றங்கள் குறைந்துவிட்டது என்று சொல்வது சாதனை இல்லை; குற்றங்களே இல்லை என்று சொல்வது தான் சாதனை.
குற்றவாளிகளை கண்டு பிடித்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்வது சாதனை இல்லை; குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து விட்டோம் என்று சொல்வது தான் நம்முடைய சாதனையாக இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கலந்து கொண்டனர்.
- பாமகவினர் போராடி வருவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
- அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவிலான கோரிக்கையாக மாறிருக்கிறது.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில், "முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமகவினர் போராடி வருவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், "கருத்துச் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
மேலும், திருமாவளவன் கூறியதாவது:-
மதத்தை அல்லது மத உணர்வுகளை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாடப்பட்ட பாடல் அல்ல. ஐயப்பன் துஇருக்கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது என்கிற சர்ச்சை எழுந்தபோது, ஒரு பெண்ணியக் குரலாக அந்த குரல், பெரியாரின் குரலாக அந்த குரல் இசையாக வெளிவந்து இருக்கிறதே தவிர அதில் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தக்கூடியதாக இல்லை.
அதானி போன்ற பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக தமிழ்நாட்டில் இதை பெரிதுப்படுத்துகிறார்கள்.
அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவிலான கோரிக்கையாக மாறிருக்கிறது. அவற்றை எல்லாம் திசைத்திருப்பவே இதுபோன்ற சிறு பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள் என்று கருதுகிறேன். அது ஏற்புடையது அல்ல.
இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று சொல்லுவது பொறுத்தமானது அல்ல. அது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன.
- 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தற்போது மரக்காணம் பகுதிகளில் விவசாய நிலங்களின் மணிலா நெல்லு, மரவள்ளிக்கிழங்கு விவசாய நிலங்களில் பயிரிட்டு உள்ளார்கள். அது தற்போது மழையினால் மூழ்கியது.
கந்தாடு வண்டிப்பாளையம் கிளாப்பக்கம், ஓமிப்பேர், நாமக்கல் மேடுகாயல், மேலே எடசேரி, உப்பு வேலூர், கீழ்பெட்டை, அனுமந்தை, கூனிமேடு, மண்டபாய், ஆலப்பாக்கம் கலியங்குப்பம், செய்யாங்குப்பம் போன்ற கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்தது மழை தண்ணீரில் மூழ்கியது.
அதுபோல், பக்கிங்காம் கால்வாயில் மழைநீர் செல்வதால் வண்டிப்பாளையம் ஆதிகுப்பம் பகுதியில் தண்ணீர் செல்வதால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 25 கிலோமீட்டர் சுற்றி புதுவைக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
தற்போது மரக்காணம் பகுதிகளின் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
- கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி காலை 10 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
அதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை - திரிகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும்,
சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 30-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திரு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 1-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 3-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வரும் 29-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜனாதிபதி ஊட்டி வருகையை முன்னிட்டு நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- நீலகிரியில் 6 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை தந்தார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி, கோவை விமான நிலையம் வந்தார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நீலகிரி மாவட்டம் புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் இருந்து அன்னூர், மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக காரில் ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். அங்கு ஜனாதிபதியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இன்று ஜனாதிபதி ராஜ்பவன் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு, குன்னூர் வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு வரவேற்பு மற்றும் ராணுவ மரியாதை அளிக்கப்பட உள்ளது.
பின்னர் அவர் போரில் உயிர்நீத்த வீரர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இன மக்களை சந்திக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
நீலகிரியில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 30-ந்தேதி (சனிக்கிழமை) கோவை வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து திருவாரூர் சென்று, மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். அதனை தொடர்ந்து மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து டெல்லிக்கு செல்ல உள்ளார்.
ஜனாதிபதி ஊட்டி வருகையை முன்னிட்டு நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் மேற்பார்வையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராஜ்பவன், ராஜ்பவனில் இருந்து குன்னூர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகள் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் தங்கும் விடுதிகளும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமாக யாராவது இருந்தால் தகவல் கொடுக்கவும் போலீசார் விடுதி உரிமையாளர்களை அறிவுறுத்தி சென்றனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரியில் 6 நாட்கள் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதி வருகையையொட்டி நேற்று ஊட்டி ராஜ்பவனில் இருந்து ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும், கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் சாலையிலும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
முன்னதாக கோவையில் இருந்து ஊட்டிக்கு ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணிப்பதாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாகவே கோவை, நீலகிரியில் கடும் மேகமூட்டம் நிலவி வந்தது. இன்று காலையும் மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு, ஜனாதிபதி காரில் சாலை மார்க்கமாக ஊட்டிக்கு பயணமானார்.
- சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- புயலை எதிர்கொள்ள போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை:
சென்னையில் புயலை எதிர்கொள்ள போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மாநகரம் முழு வதும் 12 பேரிடர் மீட்பு படையினர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாது காப்பதற்காக உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 12 போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்களுக்கும் ஒரு பேரிடர் மீட்பு படையினர் செயலாற்றும் வகையில் 12 மீட்பு குழுவினர் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மீட்பு குழுவில் புயல் பாதிப்பை முழுமையாக எதிர்கொள்ளும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற போலீசார் இடம் பெற்றுள்ளனர்.
புயல் பாதிப்பின்போது மரங்கள் சாய்ந்து விழுந்தால் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தும் வகையில் இந்த குழுவினரிடம் மரம் அகற்றும் எந்திரங்களும் உள்ளன.
பாதிப்பு ஏற்படும் இடங் களுக்கு உடனடியாக சென்று இந்த மீட்பு படையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவார்கள்.
அதேபோன்று சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீசாரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் இருக்கிறார்கள்.
சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் போலீசார் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் மற்றும் இணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 800 தீயணைப்பு படை வீரர்களும் சென்னையில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
- தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
- திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.






