என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு - மேகமூட்டம் காரணமாக கோவையில் இருந்து காரில் சென்றார்
    X

    ஊட்டியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு - மேகமூட்டம் காரணமாக கோவையில் இருந்து காரில் சென்றார்

    • ஜனாதிபதி ஊட்டி வருகையை முன்னிட்டு நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • நீலகிரியில் 6 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை தந்தார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி, கோவை விமான நிலையம் வந்தார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நீலகிரி மாவட்டம் புறப்பட்டுச் சென்றார்.

    விமான நிலையத்தில் இருந்து அன்னூர், மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக காரில் ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். அங்கு ஜனாதிபதியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இன்று ஜனாதிபதி ராஜ்பவன் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    நாளை காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு, குன்னூர் வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு வரவேற்பு மற்றும் ராணுவ மரியாதை அளிக்கப்பட உள்ளது.

    பின்னர் அவர் போரில் உயிர்நீத்த வீரர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.

    29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இன மக்களை சந்திக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    நீலகிரியில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 30-ந்தேதி (சனிக்கிழமை) கோவை வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து திருவாரூர் சென்று, மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். அதனை தொடர்ந்து மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து டெல்லிக்கு செல்ல உள்ளார்.

    ஜனாதிபதி ஊட்டி வருகையை முன்னிட்டு நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் மேற்பார்வையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராஜ்பவன், ராஜ்பவனில் இருந்து குன்னூர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகள் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் தங்கும் விடுதிகளும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமாக யாராவது இருந்தால் தகவல் கொடுக்கவும் போலீசார் விடுதி உரிமையாளர்களை அறிவுறுத்தி சென்றனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரியில் 6 நாட்கள் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஜனாதிபதி வருகையையொட்டி நேற்று ஊட்டி ராஜ்பவனில் இருந்து ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும், கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் சாலையிலும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

    முன்னதாக கோவையில் இருந்து ஊட்டிக்கு ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணிப்பதாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாகவே கோவை, நீலகிரியில் கடும் மேகமூட்டம் நிலவி வந்தது. இன்று காலையும் மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு, ஜனாதிபதி காரில் சாலை மார்க்கமாக ஊட்டிக்கு பயணமானார்.

    Next Story
    ×