என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசியல் ரீதியாக எடப்பாடியாரை சந்திக்கத் திராணியற்ற, துணிவற்ற, அறிவாலய அறிவிலிகள், தனி மனிதத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
- நீட் என்றால் பயம்! மேகதாது என்றால் பயம்! குடையின் நிறத்தையே மாற்றி வெள்ளைக்குடை காட்டும் அளவுக்கு பயம்!
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத்துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித்துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம்!
இப்படி பழனிசாமியின் பயப்பட்டியலும் "எல்லாம் பயம் மயம்" எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலைியல் கே.என். நேருவுக்கு அதிமுக-வின் எஸ்.பி. வேலுமணி பதில் அளித்துள்ளார்.
கே.என். நேரு அறிக்கை தொடர்பான அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களின் குரலாக வீறுகொண்டு ஒலிப்பதைக்கண்டு அஞ்சி நடுங்கி, விடியா திமுக மந்திரி நேரு பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது ஸ்டாலினின் திமுக.
அச்சம் என்ற சொல்லே எடப்பாடியின் அகராதியில் கிடையாது. "மக்களுக்காக உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம்" என்று எடப்பாடியார் சட்டப் பேரவையில் கர்ஜித்த போது, எதிர் பக்கத்தில் இருந்த ஸ்டாலின் தலைமையிலான மொத்த திமுக கூட்டமும் பயந்து நடுங்கியதை தமிழ் நாட்டு மக்கள் பார்த்த பிறகும், எங்களைப் பார்த்து பயம் என்ற சொல்லை திமுக பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், பல நூறு கோடி ரூபாய் கடன்களுக்குச் சொந்தக்காரர்களான உங்களுடைய குடும்பத்திற்கு, தற்போது அத்தனை கடனையும் அடைப்பதற்கு எங்கிருந்து பணம் வந்தது? மீண்டும் செல்வச் சீமானாக வலம் வருவது எப்படி என்பதை "பயம்" இல்லாமல் சொல்வாரா பம்(மியு)மல்நேரு?
தன்னுடைய தம்பி ராமஜெயம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பின், உயிருக்கு பயந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் பம்மித் திரிந்ததை திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும், தன் தம்பியை கொன்ற உண்மை கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க துப்பில்லாத நேருவும், துப்பில்லாத திமுக அரசும், அதிமுக பொதுக்குழுவின் வெற்றி கண்டு பொங்குவது வேடிக்கை!

உங்கள் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த, இப்போதும் அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோவில், குறுகிய காலத்தில் சுமார் 30,000 கோடி ரூபாயை ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சுருட்டியதாகச் சொன்னாரே யார் அவர்கள் என்று "பயம்" இல்லாமல் சொல்வாரா பம்மல் நேரு?
இந்த 30,000 கோடி ரூபாய் உட்பட உங்களுடைய அனைத்து ஊழல்களும் அம்பலப்படும் என்பதால், ரெய்டுக்கும், வருமானவரித் துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் "பயந்து" இந்தியா கூட்டணியில் இருந்தும் கூட, பாஜ.க-வின் தலைவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அழைத்து கருணாநிதி நாணயத்தை வெளியிட்டு, 'சூரியன்-தாமரை' கூட்டணியை தமிழ் நாட்டு மக்களுக்கு திரையிட்டுக் காட்டியவர்களே நீங்கள்தானே!
டங்ஸ்டன் சுரங்கம் பற்றி பிதற்றியுள்ளார் பம்மல் நேரு. டங்ஸ்டன், கிராபைட் உள்ளிட்ட 10 வகை கனிமங்களை அரியவகை கனிமங்களாக அறிவித்தும், அவற்றை ஏலமிடும் உரிமை மத்திய அரசிற்கு மட்டுமே உள்ளது போன்ற பல திருத்தங்கள் அடங்கிய கனிம வள திருத்தச் சட்டம்- 2023 நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பதை அச்சமின்றி சொல்வாரா பம்மல் நேரு?
மேலும், 2023, அக்டோபர் மாதம் திமுக அரசு மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் 'டங்ஸ்டன் உள்ளிட்ட அரிய வகை கனிமங்களை ஏலம் விடும் உரிமையை மாநில அரசுக்கே வழங்க வேண்டும்' என்று கோரியதே தவிர, கனிமவள திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியோ, டங்ஸ்டன் கரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரியோ ஏன் கடிதம் எழுதவில்லை? என்பதை பயமில்லாமல் விளக்குவாரா பம்மல் நேரு.
மதுரை மாவட்டம் மேலூரில், அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமைக்காக ஒப்பந்தப் புள்ளி கோரியதில் இருந்து. 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டங்ஸ்டன் கரங்க எலம் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் வரை, அதாவது 10 மாதங்கள் நடுங்கி, ஸ்டாலினின் தலைமையிலான விடியா திமுக அரசு, எதிர்ப்பு தெரிவித்தோ, சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரியோ ஏன் கடிதம் எழுதவில்லை என்று மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் எழுப்பிய எக்ஸ் வலைதளக் கேள்விக்கு மதுரை, மேலூர் மக்களுக்கு பயமில்லாமல் பம்மல் நேரு பதில் அளிப்பாரா?
சிறுபான்மையினரின் காவலனாக போலி வேடமிடும் விடியா திமுக அரசு எதற்காக பயந்தது போய் சென்னையில் உள்ள NIA அலுவலகத்திற்கு கூடுதலாக காவல் நிலைய அங்கீகாரம் அளித்தது? அதுமட்டுமல்லாமல், தானாக FIR பதியும் அதிகாரத்தையும் அளித்தது எந்த பயத்தின் அடிப்படையில்? பயம், பயம் என்று தெனாலி திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டிய பம்மல் நேருவுக்கு, நானும் அதே மேற்கோளைத் தர விழைகிறேன்.
நீட் என்றால் பயம்! மேகதாது என்றால் பயம்! மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கலைஞர் டி.வி-யில் ரெய்டு பயம்! குடையின் நிறத்தையே மாற்றி வெள்ளைக்குடை காட்டும் அளவுக்கு பயம்! பிரஸ் மீட் என்றால் பயம்! சட்டப் பேரவை என்றால் பயம்! நேரலை என்றால் இன்னும் பயம்! தற்போது டங்ஸ்டன் என்றால் பயம்!
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச எழுந்தாலே பயமோ பயம்! காற்றடித்தால் பயம்- துண்டுச் சீட்டு பறந்துவிடுமே என்பதால்! அதனால்தான். 2 நாட்களில் சட்டமன்றத்தையே நடத்தும் ஸ்டாலின், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அறிக்கைகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், தனது அடிமை மந்திரிகள் மூலம் பதில் அளிக்கிறார் என்பதை பம்மல் நேரு பயமில்லாமல் மக்களுக்கு தெளிவுபடுத்துவாரா?
அரசியல் ரீதியாக எடப்பாடியாரை சந்திக்கத் திராணியற்ற, துணிவற்ற, அறிவாலய அறிவிலிகள், தனி மனிதத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. எதிர்காலம் தரப்போகும் தோல்வியை உணர்ந்ததால் என்பதை சிறு பிள்ளைகூட உணரும் திருச்சியின் தி.மு.க. தாதா தான்தான் என்று கூறும் இந்த நபரை, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மந்திரியான அன்பில் மகேஷ் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மதிக்காத நிலைதான் உள்ளது.
தங்களை சம்பாதிக்கவிடாமல், தொழில் செய்யவிடாமல் செயல்படுவதாக, சொந்தக் கட்சியினரே புலம்புகிறார்கள். தன் மகன் அருண் நேருவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் மாப்பிளைக்கும், வாரிசுக்கும் இவர் கால் கழுவியதை சொல்லிச் சொல்லி திருச்சி உடன்பிறப்புகள் காரி துப்புகிறார்கள்.
தன்மான சிங்கமாக பீடு நடைபோடும் 'புரட்சித் தமிழர்' எடப்பாடியார் பற்றி பேசுவதற்கு, இவருக்கு எந்த அருகதையும் இல்லை. "பயம்" மட்டுமே உருவான உண்மையான கோழை, ஸ்டாலினின் சீனியர் கொத்தடிமையாக இருந்து, மாநகராட்சி கவுன்சிலர்களின் அடிதடிகளை கட்டப் பஞ்சாயத்து செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் நேருவுக்கு, அதிமுகவை பற்றி பேசுவதற்கு எள்ளளவும் அருகதை இல்லை.
இவ்வாறு வேலுமணி அறிக்கையில் மூலம் பதில் அளித்துள்ளார்.
- சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டது.
- சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவராக சுரேஷ் வேதநாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972ம் ஆண் தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கசைசியாக 1999ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, 25 ஆண்டுகளுக்கும் மேல் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இதைதொடர்ந்து, பதிவுத்துறை சட்டத்தின்படி சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. அதன்படி, கடந்த 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைதொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது.
தலைவர் - சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் - அஃசீப் முகமது, இணைச் செயலாளர் - நெல்சன் சேவியர், பொருளாளர் - மணிகண்டன், துணைத் தலைவர் - சுந்தர பாரதி, துணைத் தலைவர் - மதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

நிர்வாக குழு உறுப்பினர்களாக, ஸ்டாலின், பழனி, கவாஸ்கர், விஜய் கோபால், அகிலா உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், " சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (Chennai Press Club) 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, என்றும் நடுநிலையுடன் ஊடக அறத்தைப் போற்றி, புதிய நிர்வாகக் குழு வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகிறேன்" என்றார்.
- டிடிவி தினகரன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்
- ஒரு நடிகரா அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நானே பல பேட்டிகளில் கூறியுள்ளேன்
சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே அஜித்தே" என்று கூறி வருகின்றனர். இந்த கோஷம் சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்
இதனால், டிடிவி தினகரன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு பேச்சை தொடர்ந்தார்.
இதனையடுத்து கடவுளே அஜித்தே என்று பொது இடங்களில் கோஷம் போடுவதை தவிர்க்க வேண்டுமென நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்" என்று அஜித் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "திருப்பூர் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுக்க சென்றிருந்தேன். அப்போது நான் பேச தொடங்கியபோது அங்கிருந்த பள்ளி மாணவர்கள் கோஷமிட்டனர். எனக்கு அந்த கோஷம் தெளிவாக கேட்கவில்லை. உடன் பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன கோஷம் போடுகிறார்கள் என்று கேட்டேன். கடவுளே அஜித்தே என்று கோஷம் போடுவதாகவும் இது தற்போது ட்ரெண்டாகி வருவதாகவும் கூறினார்கள்.
நானும் அஜித்தினுடைய ரசிகன் தான். ஒரு நடிகரா அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நானே பல பேட்டிகளில் கூறியுள்ளேன். பல குழந்தைகளுக்கு நான் அஜித்குமார் என்றே பெயர் வைத்துள்ளேன்.
நல்ல படங்களை பார்ப்பேன். தற்போது கூட தங்கலான் திரைப்படம் ஓடிடி-யில் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. கங்குவா திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.
- தினசரி 45-க்கும் அதிகமான வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வரும்.
- மல்லி, சாக்லேட் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக ஓசூர், சேலம், ஆந்திரா மாநிலம் கடப்பா, வேலூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 45-க்கும் அதிகமான வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வரும்.
ஆனால் பரவலாக பெய்த மழை மற்றும் பனி காரணமாக தற்போது 30-க்கும் குறைவான வாகனங்களில் மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு பூக்கள் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக மல்லி, சாக்லேட் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
இதன் காரணமாக சாமந்தி, ரோஜா, மல்லி ஆகிய பூக்களின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. வரத்து குறைவால் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2500 வரை விற்கப்படுகிறது.
இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற சாமந்தி பூ தற்போது ரூ.160-க்கும், கிலோ ரூ.160-க்கு விற்ற சாக்லேட் ரோஸ் ரூ.240-க்கும், கிலோ ரூ.100-க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சாம்சங் நிறுவன தொழிற்சாலை உள்ளது.
- தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஆலை நிர்வாகம் ஈடுபடுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சாம்சங் நிறுவன தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் மாதம் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
இந்த நிலையில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் நாளை மறுநாள்(19-ந்தேதி) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளனர். தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஆலை நிர்வாகம் ஈடுபடுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு திரும்பிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு முந்தைய பணி வழங்கப்படவில்லை என்றும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிர்வாகத்தின் அழுத்தம் தாங்காமல் ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் சி.ஐ.டி.யூ. போராட்டம் நடத்த முடிவு எடுத்து இருப்பதாக தெரிகிறது. தொழிற்சாலைக்கு உள்ளேயே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
- அறநிலையத்துறை சார்பில் உணவு, போர்வை, துண்டு, சோப்பு, பிரஷ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி:
தமிழகத்தில் அறுபடை வீடுகளாக போற்றப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களுக்கு கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பேரை ஆண்டுக்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைக்கும் திட்டத்தை அறநிலையத்துறை தொடங்கியது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயணத்தில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அறுபடை வீடுகளை தரிசனம் செய்தனர்.
2ம் கட்டமாக இந்த ஆண்டும் ஆன்மிக பயணம் செல்லும் திட்டம் இன்று பழனியில் தொடங்கியது.
அவர்கள் இன்று காலை பழனியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணத்துக்கு புறப்பட்டு சென்றனர். இதில் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளைச் சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பஸ்களில் நேற்று பழனிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை பழனி கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். நேற்றிரவு பழனி மலைக்கோவிலுக்கு சென்ற மூத்த குடிமக்கள் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர், இன்று காலை அவர்கள் பழனியில் இருந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களை பழனி சார் ஆட்சியர் கிஷன் குமார், கோவில் துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லெட்சுமி, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் உணவு, போர்வை, துண்டு, சோப்பு, பிரஷ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிலர் திட்டமிட்டு தாக்கியதால் விட்டல் குமார் படுகாயம் ஏற்பட்டு இறந்துள்ளார்.
- விட்டல் குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் விட்டல் குமார் (வயது 40). பா.ஜ.க. ஆன்மீக பிரிவு மாவட்ட துணை தலைவராக இருந்து வந்தார்.
நேற்று அந்தப் பகுதியில் இவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விட்டல் குமார் இறந்தார்.
அந்த பகுதியை சேர்ந்த சிலர் திட்டமிட்டு தாக்கியதால் விட்டல் குமார் படுகாயம் ஏற்பட்டு இறந்துள்ளார். அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனக்கூறிய அவருடைய குடும்பத்தினர் விட்டல்குமார் உடலை வாங்க மறுத்தனர்.
மேலும் பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
விட்டல் குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
அதுவரை உடலை வாங்க மாட்டோம். போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் குவிப்பு மற்றும் பா.ஜ.க.வினர் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
- பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
- கவர்னர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பாக அதானி உள்ளிட்டோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மணிப்பூர் கலவரத்தை அடக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்க்காதது குறித்தும் விவாதிப்பதற்காக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உரிய விதிப்படி அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
நாட்டை உலுக்குகிற முக்கியமான பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியினர் அனுமதி மறுத்ததை கண்டித்து நாடு முழுவதும் மாநிலங்களில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
அதன்படி, நாளை (18-ந்தேதி) காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 20-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்து காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-12-2024 முதல் 23-12-2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தரைக்காற்று எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்து காணப்படும். நகரில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23°-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி, மின்னலுடன் கூடிய, கனமழை மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23°-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தேனியில் தங்கி இருந்த சவுக்கு சங்கர், கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர்.
- கடந்த சில விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை.
மதுரை:
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தேனியில் தங்கி இருந்த அவர், கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் அவர் கைதானார். கஞ்சா பதுக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர் ஆஜராகி வந்தார். கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி செங்கமல செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும் சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- தி.மு.க.வுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறார்.
- பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வந்தால் ஏற்க தயார்
மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வுடன் கூட்டணி சேர அதிக வாய்ப்புகள் உள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பாரா இல்லையா என்பதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதிமுக கூட்டணி சேர வாய்ப்புகள் உள்ளது.
ஏனென்றால் அ.தி.மு.க.-வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எங்களுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் உள்ளனர்.
மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இல்லாதது மிகப்பெரிய அரசியல் தவறு என்பதை கட்சியினர் உணர்ந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியிடம் சரியாக எடுத்துக்கூறவில்லை. வரும் காலங்களில் அம்மாவின் கட்சியான அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமானால் உறுதியாக அவர்கள் பா.ஜ.க. கூட்டணியில் சேருவது தான் சிறந்தது. அவர்கள் வேறு யாருடன் கூட்டணி அமைத்தாலும் அது மெகா கூட்டணியாக அமையாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் மத்திய அரசோ, மாநில அரசோ கவிழும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசு அ.தி.மு.க. அரசை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை. மாறாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டால் 2026 க்கு பிறகு அ.தி.மு.க. இருக்குமா? என்கிற கேள்வி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தனது 4 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் பயத்தால் தி.மு.க.வுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறார். அவர் தி.மு.க. வுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல அரசியல் கட்சிகள் வர உள்ளன. பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையத்தால் கிடைத்த வெற்றி தற்காலிக வெற்றியாக உள்ளது.
அ.திமு.க.வில் என்னுடைய சிலிப்பர் செல் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அம்மாநில அரசு தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
- விதிமீறலுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இன்றும் நிலவுகிறது.
கடவுளின் தேசமாக கூறப்படும் கேரளா மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள் காலங்காலமாக மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் மலைப் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கேரளாவின் இயற்கை வளங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அம்மாநில அரசு தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
இதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் விவகாரங்களில் கேரள அரசு அதிகாரிகளும் மிகக் கடுமையாக பின்பற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களை போன்றில்லாமல், கேரளாவில் லஞ்சப் புழக்கம் மிகக் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. அதுவும் சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களில் காசு கொடுத்தாலும் விதிமீறலுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இன்றும் நிலவுகிறது.

இந்த நிலையில், கேரளா மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழவுகள் அதன் அண்டை மாநிலங்களாக இருக்கும் தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் பலமுறை இது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தும், புகார்களை தெரிவித்தும் இதுநாள் வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.

கேரளா போன்றில்லாமல் தமிழ் நாட்டில் லஞ்சம் கொடுத்தால் இதுபோன்ற வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கலாம் என்ற நிலையை, கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிவரும் கனரக வாகனங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள கிரமாங்களில் கேரள கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுவதாக அறப்போர் இயக்கமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இது குறித்த எக்ஸ் தள பதிவுகளில் தமிழகத்தில் கொட்டப்பட்டு வரும் கேரள கழிவுகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. பலரும் இதனை அதிகம் பகிரத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் தொடர்ச்சியாக கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காவல்துறை, சுங்கச் சாவடி அதிகாரிகள் அனுமதியின்றி தமிழ்நாடு எல்லைக்குள் கேரள கனரக வாகனங்கள் வரமுடியாது. அதையும் மீறி வாகனங்கள் வருகின்றன, கழிவுகள் கொட்டப்படுகின்றன என்றால் தமிழ்நாடு அதிகாரிகள் உதவியின்றி இது நடைபெற வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது. வாகனங்களுக்கு அபராதம் விதித்து அவற்றை அனுமதிப்பதால்தான் தமிழ்நாட்டில் கேரளா கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரளா பதிவெண் கொண்ட கனரக வாகனங்களால் தமிழகம் வரும் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளால் தென் மாவட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தமிழ் நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இது தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகளுக்கு இனியாவது செவி சாய்ப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்..!






