என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குப்பைகளைக் கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்?
- தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கின்றன.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் வளங்களான கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு, கேரளாவிற்குக் கடத்திக் கொண்டு இருக்கின்றனர். கேரளாவில் இருக்கின்ற கழிவு பொருட்களை அதாவது மருத்துவ கழிவு, குப்பைகள், ஏலக்ட்ரானிக் கழிவுகள், போன்றவற்றைத் தமிழ்நாட்டின் எல்கைகளில் டன்னு டன்னாக கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
எல்லைகளைப் பாதுகாக்காமல் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அனுமதித்து தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிக்கொண்டு இருக்கும் இந்த அரசின் செயல்கள் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தலைகுனிவு. பக்கத்தில் இருக்கும் கேரளா எல்லா வளத்தோடும், நயத்தோடும் சிறப்பாக உள்ளது. அங்கே இருக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்? அரசாங்கத்தின் அதிகாரிகள், சுங்கச்சாவடியில் பணியாற்றுபவர்களும் என்ன செய்கின்றனர்? இந்த அளவிற்குக் கேவலமான நிகழ்வுகள் தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கின்றன.
இதைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது. இது மிகமிக ஒரு கண்டிக்கத்தக்க விஷயம். தமிழக மக்கள் சார்பாக உடனடியாக அந்த குப்பைகளை அகற்றி யார் அந்த குப்பைகளை கொட்டினார்கள் என்பதை கண்டறிந்து அவர்களின் நாட்டிற்கே அதே குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.
இதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு அதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிய கேரள அரசைக் கடுமையா கண்டிக்கிறோம்.
- தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
- கன முதல் மிக கனமழை பெய்யும்.
வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்கள் (இன்று, நாளை) மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
- மீனவர்கள் தாக்குதல்களை நிறுத்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எவரும் அணுவளவும் முயன்றதில்லை.
- கச்சத்தீவை மீட்க முயற்சி மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவிடம், இலங்கை ராணுவத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி உள்ள போதும், அவர்களில் யாருமே தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்பது குறித்து வாய் திறவாதது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
கச்சத்தீவை மீட்காமல் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும், என்ன தீர்வை எட்டினாலும், அவை ஒருபோதும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிலைத்த பயனோ, பாதுகாப்போ தரப்போவதில்லை.
தமிழின முன்னோர்களான ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட 285 ஏக்கர் கச்சத்தீவானது வரலாறு அடிப்படையிலும், வாழ்வியல் அடிப்படையிலும் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதியாகும். கடந்த 1974 -ம் ஆண்டு அம்மையார் இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட சட்டவிரோத ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்ட எந்த ஒரு நிலப்பகுதியையும் பிற நாட்டிற்கு வழங்க மத்திய அரசு விரும்பினால் இந்திய நாடாளுமன்றத்திடமும், தொடர்புடைய மாநில அரசிடமும் ஒப்புதல் பெற வேண்டுமென இந்திய அரசமைப்பு விதி வரையறுக்கிறது.

ஆனால், அவற்றில் எந்த விதியையும் பின்பற்றாமல் சட்டத்திற்குப் புறம்பாக அம்மையார் இந்திராகாந்தி தன்னிச்சையாகத் தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தார். அன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்ட கருணாநிதி தலைமையிலான அன்றைய தி.மு.க. அரசு அதனைத் தடுத்து நிறுத்தாது, கைகட்டி வேடிக்கைபார்த்து பச்சைத்துரோகம் புரிந்தது. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததற்குப் பிறகுதான் இலங்கை கடற்படையால் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் கொடுமைகள் தொடங்கின.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள இனவெறி ராணுவம் சிறைபிடிப்பது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, படகுகள், மீன்களைப் பறித்துக்கொள்வது, உடைமைகளை அபகரித்துக்கொள்வது, வலைகள், படகுகளைச் சேதப்படுத்துவது, துப்பாக்கிச்சூடு நடத்தி உயிர் பறிப்பது என அரங்கேற்றிய கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல. தமிழ்நாட்டில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும், தற்போதைய தி.மு.க. ஆட்சிக்காலத்திலும், அதேபோன்று இந்திய ஒன்றியத்தை காங்கிரசு ஆண்டபோதும், அதன் பிறகான பா.ஜ.க. ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்துவரும் தமிழக மீனவர்கள் தாக்குதல்களை நிறுத்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எவரும் அணுவளவும் முயன்றதில்லை.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதிகார மாற்றம் எத்தனை முறை நிகழ்ந்தாலும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் மட்டும் தொடர்கதையாகவே உள்ளது. அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது ஒப்புக்கு கடிதம் எழுதிவிட்டு, கடமை முடிந்ததாய் ஆட்சியாளர்கள், கடந்துபோவதுதான் இன்றுவரை தமிழ்நாட்டு மீனவர்கள் கண்ணீர் கடலில் தத்தளிக்கும் கொடுந்துயர்மிகு வரலாறாகும்.
எண்ணூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்ட போதிலும், மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்ட போதிலும் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் அதனைத் துளியும் பொருட்படுத்துவதில்லை; உலகில் எந்த ஒரு நாடும் தனது நாட்டுக் குடிகள், அந்நிய நாட்டு இராணுவத்தால் தாக்கப்படுவதை இப்படி சகித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிராது.

இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவத்தை வைத்துள்ள இந்திய அரசு, இலங்கை அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காது அமைதி காப்பதும், தமிழ்நாட்டு வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடிகளை அள்ளிக்கொடுத்து நட்பு பாராட்டுவதும் தமிழர்களுக்கு இழைத்திடும் பச்சைத்துரோகமாகும்.
குஜராத் மாநில மீனவர் பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பதறி துடித்த பா.ஜ.க. அரசு, உடனடியாக அவர்கள் மீது கொலை வழக்கு பதிந்து, பன்னாட்டு பிரச்சனையாக்கி அதற்கு பிறகு அப்படி ஒரு நிகழ்வு இன்றுவரை மீண்டும் நடைபெறாதவாறு அம்மீனவர்களைப் பாதுகாத்தது.
தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க அப்படி ஒரு நடவடிக்கையை இதுவரை எந்த அரசும் எடுக்காதது ஏன்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? தமிழர்கள் இந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்கு செலுத்தவில்லையா? கடந்த கால துரோக வரலாற்றை இனியும் தொடர்ந்தால் இந்த நாட்டின் மீது என்ன பற்று எங்களுக்கு இருக்கும்?
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்க முயற்சி மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காரில் இருந்த கடற்படை வீரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
- கார் டிரைவர் முகமது சகி கடலில் விழுந்து மாயமானார்.
சென்னை:
சென்னை துறைமுகத்தில் கடற்படை வீரர்களை அழைத்து வர நேற்று இரவு கார் சென்றது. அந்த காரை முகமது சகி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார்.
துறைமுகத்தில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலில் விழுந்தது. இதையடுத்தும் காரில் இருந்த கடற்படை வீரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆனால், கார் டிரைவர் முகமது சகி கடலில் விழுந்து மாயமானார். அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அதேவேளை, காயமடைந்த கடற்படை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது.
- 90 சதவிகிதத்திற்கும் மேலான குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரித்துள்ளது.
சென்னை:
காலை உணவுத் திட்டத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலை உணவுத் திட்டத்தை உலகமே பின்பற்றி வரும் நிலையில், மாநில திட்டக் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது என்றும், 90 சதவிகிதத்திற்கும் மேலான குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரித்துள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சீரிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வரும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக நினைவு பரிசு வழங்கி, நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டோம் என தெரிவித்துள்ளார் .
- மீண்டும் ஒருமுறை, பள்ளிக் குழந்தைகளுக்கு, மதிய உணவில் அழுகிய முட்டைகளை வழங்கியிருக்கிறது Disaster model திமுக அரசு.
- உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி குழந்தைகள் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதை அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
மீண்டும் ஒருமுறை, பள்ளிக் குழந்தைகளுக்கு, மதிய உணவில் அழுகிய முட்டைகளை வழங்கியிருக்கிறது Disaster model திமுக அரசு. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது, தமிழகப் பள்ளிகளில் இது நிகழ்கிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக, பாரதப் பிரதமர் மோடி அரசு வழங்கும் நிதி, எங்கு செல்கிறது?
பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கு தரமற்ற முட்டைகள் கொடுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் பொறுப்பான அழுகிய முட்டை அமைச்சர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி, குழந்தைகள் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதை, அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும். இனியும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், திமுக அரசுக்கு, பெற்றோர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அண்ணாமலை அதில் குறிப்பிட்டுள்ளார்.
- தலைமைச் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
- பின்னர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிப்பு.
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டட தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 22-12-2024 ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும்.
அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
ஏற்கனவே அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தினை தவறாது கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
- தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் Home of Chess Academy தொடங்கப்படும்.
உலக சாம்பியன் குகேஷ்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு குகேஷ் பரிசாக வழங்கினார்.
பின்னர் உலக செஸ் சாம்பியன் குகேஷிற்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனையடுத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு புகழ்மாலை சூட்டுகிறேன். நம்ம சென்னை பையன் குகேஷ். செஸ் என்பது வெறும் விளையாட்டு அல்ல. அது அறிவு சார்ந்த விளையாட்டு. திறமை, விடாமுயற்சி, இலக்கை நோக்கிய பயணத்தால் 11 ஆண்டுகளில் இந்த உலக சாதனையை அவர் படைத்துள்ளார். ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்.
விஸ்வநாதன் ஆனந்த் முதல்முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றபோது அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தினார். இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் Home of Chess Academy தொடங்கப்படும்.
தமிழக விளையாட்டு வீரர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. பாரீஸ் பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு 5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
பொறுமையாக சரியான நகர்வுகள் மூலம் ஆற்றல் குறைவான சிப்பாயைக் கூட சக்திவாய்ந்த ராணியாக மாற்றலாம்.. அதே போல் பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான். வெற்றி தோல்வி முக்கியம் அல்ல, பங்கேற்புதான் முக்கியம், பங்கேற்பதே பெரிய வெற்றிதான்
விளையாட்டு துறையை சிறப்பாக நடத்தி வரும் உதயநிதிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.
- தமிழ்நாடு அரசின் நிதியுதவி எனது வெற்றி பயணத்துக்கு உறுதுணையாக இருந்தது.
- வெற்றியுடன் திரும்பும்போதெல்லாம் முதலமைச்சர் வாழ்த்துவது மகிழ்ச்சி தருகிறது
உலக சாம்பியன் குகேஷ்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு குகேஷ் பரிசாக வழங்கினார்.
இதனையடுத்து உரையாற்றிய உலக செஸ் சாம்பியன் குகேஷ், "இளம் செஸ் சாம்பியனாக வெற்றி பெற வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதியுதவி எனது வெற்றி பயணத்துக்கு உறுதுணையாக இருந்தது. வெற்றியுடன் திரும்பும்போதெல்லாம் முதலமைச்சர் வாழ்த்துவது மகிழ்ச்சி தருகிறது
என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது. செஸ் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு தமிழ்நாடு அரசு அளப்பரிய பணியாற்றுகிறது" என்று தெரிவித்தார்.
- சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவராக சுரேஷ் வேதநாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
1972ம் ஆண் தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கசைசியாக 1999ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, 25 ஆண்டுகளுக்கும் மேல் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இதைதொடர்ந்து, பதிவுத்துறை சட்டத்தின்படி சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. அதன்படி, கடந்த 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைதொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது.
தலைவர் - சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் - அஃசீப் முகமது, இணைச் செயலாளர் - நெல்சன் சேவியர், பொருளாளர் - மணிகண்டன், துணைத் தலைவர் - சுந்தர பாரதி, துணைத் தலைவர் - மதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நிர்வாக குழு உறுப்பினர்களாக, ஸ்டாலின், பழனி, கவாஸ்கர், விஜய் கோபால், அகிலா உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க,.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள். அவர்கள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'Journalism'-த்திற்கும் 'Sensationalism'-த்திற்கும் உள்ள வேறுபாட்டினையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்குப் பயிற்றுவித்து, அறமுடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் உணர்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- காயமடைந்த 4 பெரும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- காரை ஓட்டி வந்த பிரகதீஷ் (வயது 29) என்பவர் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாகச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மற்ற வாகனங்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார், இரு சக்கர வாகனம், ஆட்டோ, ட்ரை சைக்கிள் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த 4 பெரும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரை ஓட்டி வந்த பிரகதீஷ் (வயது 29) என்பவர் கைது செய்தனர். விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






