என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம்.
    • 15 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.7.5 லட்சம்.

    தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் நிதி உதவியினை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.

    அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும். போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- (ரூபாய் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு நியமித்த தேடுதல் குழுவின் யுஜிசி பிரதிநிதி இல்லாமல் இருப்பது விதிகளுக்கு முரணானது.
    • நான் பிறப்பித்து உத்தரவை அமல்படுத்துங்கள் என்று தமிழக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

    அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்..

    தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும் என்றும் அரசு நியமித்த தேடுதல் குழுவின் யுஜிசி பிரதிநிதி இல்லாமல் இருப்பது விதிகளுக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், துணை வேந்தரை தேர்ந்தெடுக்க பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியையும் தேடுதல் குழுவில் சேர்த்து ஏற்கனவே நான் பிறப்பித்து உத்தரவை அமல்படுத்துங்கள் என்று தமிழக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஏழை தொழிலாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காமல் மிகவும் தாமதமாக ஊதியம் வழங்கப்படுகிறது.
    • அரசு இவற்றை கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் மக்களவையில் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் வசந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் குறித்த நேரத்தில் ஊதியம் கிடைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

    நாட்டில் பெருகி வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தினமும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 500 வழங்க வேண்டும். ஏழை தொழிலாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காமல் மிகவும் தாமதமாக இந்த ஊதியம் வழங்கப்படுகிறது.

    அரசு இவற்றை கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? .
    • அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    'அம்பேத்கர்! அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது 'பேஷன்' ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்" என்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

    உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும். அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

    "அழகும், நிறைவும் கொண்ட வாழ்க்கையை சொர்க்கத்தில் அல்லாது நாம் வாழ்கிற பூமியில் படைக்கப் பாடுபடுகிறேன்" என்றார் பொதுவுடமைத் தத்துவத்தின் பிதாமகன் எங்கள் தாத்தா ஜீவானந்தம். அப்படியொரு சொர்க்கத்தில் எப்படியெல்லாம் வாழலாம் என்று சொல்லி வைத்தார்களோ, அப்படியெல்லாம் இப்போது வாழுகின்ற பூமியிலேயே தன் மக்களை வாழ வைக்க அரும்பாடாற்றியவர் அண்ணல் அம்பேத்கர்.

    "எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அங்கு வென்றார், இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க?

    இவ்வாறு சீமான் தனது எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பத்மஸ்ரீ. டாக்டர். வி. மோகன் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தார்.
    • மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தில் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு அந்நிறுவனத்தின் வேந்தர் ஜெயந்தி இராதாகிருஷ்ண தலைமை தாங்கினார். இந்த விழாவில் நிறுவனத்தின் கவுரவ வேந்தரும் தலைமை புரவலரும் ஆன கோமதி ராதாகிருஷ்ணன் மற்றும் இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிறுவனரானஏ.என் ராதாகிருஷ்ணன் அவர்களை நினைவூட்டும் வகையில் விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பிறகு, பட்டமளிப்பு விழா தொடங்கியது.

    வரவேற்புரை நிகழ்த்திய ஜெயந்தி ராதாகிருஷ்ணன், 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER)க்கான சிறப்பான பயணத்தைப் பற்றியும், தரமான கல்வியை வழங்குவதை பற்றியும் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மேம்பாட்டில் இந்த கல்வி நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்பை பற்றியும் எடுத்துரைத்தார்.

    டாக்டர். மோகனின் நீரிழிவு நோயிற்கான சிறப்பு மருத்துவ மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஆன பத்மஸ்ரீ. டாக்டர். V. மோகன் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தார்.

    சுகாதாரத் துறையில் பத்மஸ்ரீ. டாக்டர். V. மோகன் செய்த அசாதாரண பங்களிப்பை மேலும் ஊக்கப்படுத்தும் படி, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் சார்பில் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    நுண்ணியல் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் தன்னை அர்ப்பணித்த, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கே. ஆர். சுரேஷ் பாபுவுக்கு "D.Sc (Honoris Causa)" பட்டம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் 705 இளங்கலை மாணவர்கள், 103 மேற்படிப்பு மாணவர்கள், மற்றும் 24 முனைவர் பட்ட மாணவர்கள் என மொத்தம் 832 பேர் தங்கள் பட்டங்களைப் பெற்றனர். 

    மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங், மருத்துவம் சார்ந்த அறிவியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் மாணவர்கள் 76 பேர் தங்கள் படிப்பில் தனித்துவமான வெற்றியை அடைந்ததற்காக பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.

    விழாவின் சிறப்பான தருணமாக மருத்துவ (MBBS) பட்டமளிப்பு மாணவி ஹரிதா குமாரி P.L மொத்தம் 11 பதக்கங்களைப் பெற்று, அதிக பதக்கங்களைப் பெற்ற சாதனையாளராக இருந்தது தான்.

    இவ்விழாவில், இந்நிறுவனத்தின் எட்டு சிறந்த பழைய மாணவர்களுக்கு கோமதி ராதாகிருஷ்ணன் "மிகச்சிறந்த பழைய மாணவர் விருது 2024" வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    மற்றொரு பெருமைமிகுந்த தருணமாக, அன்பாக "இட்லி பாட்டி" என அழைக்கப்படும் திருமதி. கமலாத்தாள் அவர்களுக்கு திருமதி. ஜெயந்தி இராதாகிருஷ்ணன் பரிசு (மகத்தான மனிதாபிமான சேவைக்கான விருது 2024 வழங்கப்பட்டது.

    அவருடைய மிகச் சிறந்த மனிதாபிமான முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில் 2 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

    • கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்.
    • அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்; நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் இந்தியா முழுவதும் போற்றக்கூடிய மாபெரும் தலைவர் போற்றப்பட வேண்டுமே தவிர, அவர் புகழை சிறுமைப் படுத்தக்கூடிய செயலை செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கலகம் என்பதை 'எழுச்சி' எனப் பதிவுசெய்தவர் ஆ.இரா. வேங்கடாசலபதி

    வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக Swadeshi Steam நூலை ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது!

    கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் 'எழுச்சி' எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்!" என்று பதிவிட்டுள்ளார். 

    • உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப்பில் காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்தார்.
    • மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.

    உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர். சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், கேரம் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தமிழக அரசு எந்த ஊக்கத்தொகையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கேரம் சாம்பியன் காசிமாவின் தந்தை தமிழக அரசு தனது மகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்காததில் வருத்தம் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம் வென்ற காசிமாவுக்கு ரூ. 1 கோடியும் குழு போட்டியில் தங்கம் வென்ற நாகஜோதிக்கு ரூ. 50 லட்சமும் இரட்டையர் போட்டியில் தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ. 50 லட்சமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது..

    இந்நிலையில், உலக கேரம் போட்டியில் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி இன்று பரிசுத்தொகையை வழங்கினார்

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.

    அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற தங்கை காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்து திரும்பினார்.

    அவரைப்போலவே, தங்கை மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.

    வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.

    எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தங்கை எம்.காசிமா -க்கு ரூ.1 கோடி, தங்கை வி.மித்ரா -க்கு ரூ.50 லட்சம், தங்கை கே.நாகஜோதி -க்கு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம்.

    தங்கைகள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் கழக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • இன்று வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.

    இன்று வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தரைக்காற்று எச்சரிக்கை:

    இன்று வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான கனமழை பெய்யக்கூடும். அவ்வப்போது பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    20-ந்தேதி வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
    • மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    கே.கே.நகர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கலாமணி(வயது 45). அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(32). இவர்கள் இருவரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

    திருச்சி ஓலையூர் ரிங் ரோடு அருகே ஒரு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் இந்த பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது. இதில் கலாமணி, மாணிக்கம் ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர். இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.

    அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. 2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.

    மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் திரண்டு மாணிக்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் கம்பத்திலேயே பலியான மாணிக்கம் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ரூ.2 ஆயிரம் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்.
    • போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்களவாய் கிராம பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்த புயல் நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்காததை கண்டித்து செஞ்சி சேத்பட் சாலையில் மேல்களவாய் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவில் மேல்மலையனூர் தாலுக்கா மற்றும் செஞ்சி தாலுகாவில் ஒரு சில பகுதிகளுக்கு குறிப்பாக வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்கலவாய், வடவானூர், வடபுத்தூர், முடையூர் உள்பட ஏராளமான கிராம பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை, எனக் கூறி இருந்த நிலையில், தற்போது மேல்களவாய் கிராம பொதுமக்கள் செஞ்சி சேத்பட் சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது ஃபெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்டு எங்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் புயல் நிவாரண நிதி எங்கள் பக்கத்தில் இருக்கும் ஊர்களின் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியை புறக்கணித்து விட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தற்போது செஞ்சி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை செய்து நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்குவது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டனர்.

    • இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து அதானி தொழிலை நடத்தி வருகிறார்.
    • உலக நாடுகளுக்கெல்லாம் சுற்றுலா செல்லும் பாரத பிரதமர் மணிப்பூர் செல்லாததற்கான காரணம் என்ன?

    சென்னை:

    அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பிரதமர் மோடி நேரில் சென்று சந்திக்காதது உள்ளிட்ட முக்கிய பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், முன்னிலையில் இன்று கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

    அதானி இந்திய அதிகாரிகளுக்கு எத்தனை ஆயிரம் கோடிகளை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதானி தொழில் எந்தவிதத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    அதானி தொழில் நியாயமான முறையில் நடக்கிறதா, எத்தனை அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்துள்ளார். மத்திய அரசு அதானி என்ற ஒற்றை நபருக்காக தேசத்தை அடகு வைக்கிறது.

    பங்குச்சந்தை ஊழலுக்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அதானி பெரிய ஊழல் நடத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என அந்நிய நாடுகள் சொல்லும் போது ஏன் இந்தியா மறுக்கிறது.

    இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து அதானி தொழிலை நடத்தி வருகிறார்.

    உலக நாடுகளுக்கெல்லாம் சுற்றுலா செல்லும் பாரத பிரதமர் மணிப்பூர் செல்லாததற்கான காரணம் என்ன?

    மணிப்பூர் இந்தியாவின் மாநிலம் தானே? தமிழக அரசு நிதி கேட்டால் கொடுக்க மறுக்கிறீர்கள். தமிழக அரசு கொடுக்கும் வரி பணத்தில் எங்கள் பங்களிப்பை தாருங்கள் என்றால் மறுக்கிறீர்கள்.

    தமிழ்நாட்டின் உரிமையை, மாநிலத்திற்கான சுயாட்சியை பேசுங்கள் என்றால் மத்திய அரசு பேச மறுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத் தொடர்ந்து கிண்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் செல்வப்பெருந்தகை மற்றும் ரூபி மனோகரன், ராஜேஷ்குமார், துரை சந்திரசேகர், அசன் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், கே.விஜயன், இமயா கக்கன், பொதுச்செயலாளர்கள் இல பாஸ்கரன், டி.செல்வம், தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாவட்ட தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், சிவ ராஜசேகரன், அடையாறு டி.துரை, மற்றும் எஸ்.எம்.குமார், மயிலை தரணி, அரும்பாக்கம் வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×