என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் தேர்வு நடைபெற உள்ளது.
    • ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப் பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெறுகிறது.

    சென்னை:

    தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    அதே போன்று, ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

    அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் தேர்வு நடைபெற உள்ளது.

    அதில் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப் பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெறுகிறது. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம் பெறும்.

    அதற்கான பாடத் திட்டங்கள் https://www.nmc.org.in/ என்ற இணைய தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம்.
    • எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது.

    சென்னை :

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவை விடுவித்தார்.

    அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார்.

    நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75ஆம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று பாராளுமன்றத்தின் மரியாதைமிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, நேற்றுமுன்தினம் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். இந்த கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 



    • அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
    • பிற மாநில முதலமைச்சர்களும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.

    இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், பிற மாநில முதலமைச்சர்களும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து, திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

    • சென்னை துறைமுகத்தில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலில் விழுந்தது.
    • காயமடைந்த கடற்படை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னை துறைமுகத்தில் கடற்படை வீரர்களை அழைத்து வர நேற்று முன்தினம் இரவு கார் சென்றது. அந்த காரை முகமது சகி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார்.

    துறைமுகத்தில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் கடற்படை வீரர் ஒருவரை காயங்களுடன் உயிர் தப்பினார்.

    ஆனால், கார் டிரைவர் முகமது சகி காருடன் கடலில் மாயமானார். அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், கடலில் மூழ்கிய காரை மீட்டனர்.

    ஆனால், காருக்கும் முகமது சகி இல்லாதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, முகமது சகியை மீட்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், காருடன் கடலில் விழுந்த ஓட்டுனர் முகமது சகி கடலமாக மீட்கப்பட்டார். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதேவேளை, காயமடைந்த கடற்படை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    • வடிவமைப்பு, பொறியியல் மையம், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் வளாகம், திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதிகள் உள்ளது.
    • ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதி.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் ஏரோ ஸ்பேஸ் பூங்காவில் உள்ள ஏரோஹப் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளுக்கு ஏரோஹப் திட்டம் உதவும் என்றும் இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமையும்.

    வடிவமைப்பு, பொறியியல் மையம், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் வளாகம், திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதிகள் உள்ளது.

    ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதி என்று அரசு தெரிவித்துள்ளது. 

    • 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைமிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.

    இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நேற்று தெரிவிக்கப்பட்டது.

    20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இது இரவு முழுவதும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைமிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக சமைத்து, பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா, நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, வருகிற 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    உணவு திருவிழாவில், உயர்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையான உணவுகள் மட்டுமன்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி - மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தர்மபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி - அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி,

    சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சை பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகை மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக சமைத்து, பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    உடனடியாக சமைப்பதற்கும் மற்றும் உண்ணுவதற்கும் ஏற்ற 67 வகையான தயார் நிலை உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் பெற்ற 24 குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையிலும், கலப்படமின்றியும் தயாரித்து தகுந்த முறையில் விற்பனை செய்ய 6 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன.

    நாளை (வெள்ளிக்கிழமை) மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் உணவு திருவிழா, 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

    உணவு திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திராவிட முன்னேற்றக் கழகம், சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாவலனாக போற்றப்படுகிறது.
    • சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    திருச்சியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், சிறுபான்மைச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களைப் பார்த்துப் பார்த்து பாசத்தோடு செய்வோம். அதனால்தான், வரலாற்றுப் பக்கங்களில் திராவிட முன்னேற்றக் கழகம், சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாவலனாக போற்றப்படுகிறது.

    சிறுபான்மையின சகோதர, சகோதரிகளின் அரணாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. சிறுபான்மை மக்களின் உரிமை, வாழ்வாதாரத்தை காப்பதில், தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது. மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து பாதுகாப்போம்.

    பெரும்பான்மையை பார்த்து பயப்பட தேவையில்லாத சூழலில் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவது தான் மதச்சார்பின்மை கொள்கையின் மகத்துவம். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான். இருந்தாலும் இந்திய அளவில் தற்போது நிலவக்கூடிய சூழல் நம்மை கவலைப்பட வைப்பதாக உள்ளது. அத்தகைய சூழலை எதிர்கொள்ள சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை கொள்கையை திராவிடல் மாடல் அரசு எந்நாளும், எந்த நிலையிலும் பாதுகாக்கும். சிறுபான்மையினருக்கு திமுக என்றென்றும் அரணாக திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, மதியம் 2 மணிக்கு முன் மின் விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தண்டையார்பேட்டை: நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம்பிள்ளை நகர், இ.எச்.ரோடு, அன்னைசத்தியா நகர், பட்டேல் நகர், பரமேஸ்வரன் நகர், அஜீஸ் நகர், நாவலர் குவார்ட்டர்ஸ், துர்காதேவி நகர், பேசின் சாலை, பர்மா காலனி, ராஜீவ்காந்தி நகர், கருணாநிதி நகர், இந்திரகாந்தி நகர், CISF குடியிருப்புகள், நெடுஞ்செழியன் நகர், வைத்தியநாதன் தெரு, கார்னேஷன் நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர், கே.எச். சாலை, மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், மீனாம்பாள் நகர், அண்ணா நகர், ஜே.ஜே.நகர், சுன்னம்புகல்வாய், வி.ஓ.சி. நகர், கருமாரியம்மன் நகர், மாதா கோயில் தெரு, தியாகப்பசெட்டி தெரு, ஜீவா நகர், காமராஜ் நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், பாரதி நகர், பாரதி நகர் குவார்ட்டர்ஸ், ரிக்ஷா காலனி, நியூ சாஸ்திரி நகர்.

    பணிகள் முடிவடைந்தால், மதியம் 2 மணிக்கு முன் மின் விநியோகம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல கல்குவாரிகளையும் அரசே நடத்த வேண்டும்.
    • கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து விலை நிர்ணயிப்பதை அரசே முடிவு செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தியாகராய நகர் ஜி.ஆர்.டி ஹோட்டலில் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளின் சார்பாக நடைபெற்றது.

    அதன்பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திருசங்கு கூறியதாவது:-

    கல்குவாரி முதலாளிகள் சல்லி, எம் சன்ட் மணல்களின் விலைகளை 40 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த விலையேற்றம் ஏற்படுகிறது.

    கரூர், நாமக்கல்,சேலம்,ஈரோடு, கோயம்புத்தூர்,திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் சிண்டிகேட் அமைத்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை விலையேற்றம் செய்கிறார்கள்.

    மூலப்பொருள்கள் ஏதும் விலை ஏறாத நிலையிலும் இந்த விலையேற்றம் தொடர்கிறது.

    எனவே மூலப்பொருட்களின் விலை ஏற்றம் இல்லாத போதும் திடீரென்று ஜல்லி, M-sand போன்ற கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பதால் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்கள் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு சங்கம் அமைத்து ஒரு கல்குவாரி மற்றும் கிரஷர் அமைப்பது, மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல கல்குவாரிகளையும் அரசே நடத்த வேண்டும்.

    கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து விலை நிர்ணயிப்பதை அரசே முடிவு செய்ய வேண்டும்

    மணல் குவாரிகளை தமிழக அரசு திறக்க வேண்டும்.

    தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மணல், ஜல்லி, M-sand போன்ற பொருட்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சங்கமும், இந்திய கட்டுனர் சங்கமும் சேர்ந்து பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கல்குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விலை நிர்ணயிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் விலையேற்றத்தை கண்டித்தும் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி நாமக்கலில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களை கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளது.
    • புதிய முயற்சியிலும் அஸ்வின் மகத்தான வெற்றியை பெற வேண்டும்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அஸ்வினுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளித்துள்ளது. அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களை கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளது.

    புதிய முயற்சியிலும் அஸ்வின் மகத்தான வெற்றியை பெற வேண்டும். ஒவ்வொரு முயற்சியிலும் புத்திசாலித்தனத்தை வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×