என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 19). இவரும் பாடியூர் கிராமத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்நிலையில் முத்துலட்சுமி செல்போனில் அடிக்கடி பேசுவதை அவரது பெற்றோர் நோட்டமிட்ட போது அவர் காதலில் விழுந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிக்க முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவீட்டில் இருந்தும் பெற்றோர் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனால் பெற்றோர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என நினைத்து தாங்களாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வீட்டிற்கு சென்றால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என அவர்களது பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு மணமகன் வீட்டாருடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.

    மகளிடம் அவரது தாய் மன்றாடி தன்னுடன் வருமாறு கேட்டும், வராமல் காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்ததால் கதறி அழுது புலம்பியது அங்கிருந்தவர்கள் மத்தியில் கண்கலங்க வைத்தது.

    • ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
    • நாணய மூட்டைகளை நோட்டாக மாற்ற நீதிபதி உத்தரவு.

    கோவை:

    கோவையை சேர்ந்த ஒரு தம்பதியர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    பின்னர் அந்த நபர் உடனடியாக காருக்கு சென்று அங்கு பத்திரமாக வைத்திருந்த நாணய மூட்டைகளை எடுத்து வந்தார்.

    அப்போது அவர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு தர வேண்டிய ஜீவனாம்ச பணத்தில் ரூ.80 ஆயிரம் பணத்தை ஒரு ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களாக மாற்றி சுமார் 20 மூட்டைகளில் கட்டிவந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதனை பார்த்து நீதிமன்ற ஊழியர்கள் திடுக்கிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் அதிர்ச்சிக்குள்ளானார்.

    பின்னர் நாணய மூட்டைகளை நோட்டாக மாற்றி கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியதுடன் வழக்கை ஒத்தி வைத்தார். தொடர்ந்து அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்திருந்த நாணயங்களை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.

    • பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்றவர்கள் உயரிய பதவியில் அமரலாமா?
    • மரியாதை நிமித்தமாக சவ ஊர்வலத்தில் சென்று உடல் அடக்கத்தில் பங்கேற்பது மனித மாண்பு.

    திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பாஷாவுக்கு இறுதி ஊர்வலம் நடந்தது தொடர்பாக சீமான் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    * சிறையில் 50 நாட்கள் பாஷாவுடன் இருந்த காலத்தில் இருந்து அவரை அப்பா என்று தான் கூப்பிடுவேன்.

    * இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் இடத்திற்கு எப்படி எடுத்து செல்வது?

    * ஆர்.எஸ்.எஸ். பேரணியின் போது இஸ்லாமிய அமைப்பினர் யாராவது போராடினார்களா?

    * விநாயகர் ஊர்வலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த அரசு அனுமதி கொடுக்கத்தான் செய்கிறது.

    * பாஷா குற்றவழக்கில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை யாரும் மறுக்கவில்லை.

    * குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியாதா?

    * பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்றவர்கள் உயரிய பதவியில் அமரலாமா?

    * 2 லட்சம் ராணுவ வீரர்களை அனுப்பி 26 ஆயிரம் மக்களை கொன்றுகுவித்த ஒரு நாட்டின் தலைவரை பற்றி பேசமாட்டீர்கள். அந்த செயலையும் பேசுங்க.

    * ஒரு தரப்பில் மட்டும் பேசிக்கொண்டு இருப்பது எப்படி?

    * மரியாதை நிமித்தமாக சவ ஊர்வலத்தில் சென்று உடல் அடக்கத்தில் பங்கேற்பது மனித மாண்பு. அது குறிப்பாக தமிழ் பேரினத்தின் மாண்பு.

    * மக்களோடு மக்களாக நிற்பவர்களை அப்படி பேசுவதை ஏற்க கூடாது.

    * பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்வதை சடங்கு என்பது தவறான வார்த்தை. அப்படி சொல்லக்கூடாது. விஜய் ஏன் அந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை என்றார். 

    • இன்று மாலை 3 மணிக்கு அண்ணாசாலை தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்.
    • அமித் ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித் ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் அறைகூவல் விடுத்திருக்கிறது.

    அதன்படி சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு அண்ணாசாலை தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

    இந்தியாவிற்கு அரசமைப்புச் சட்டத்தை வழங்கி 140 கோடி மக்களும் ஜனநாயக உரிமையோடு வாழ்வதற்கு அடித்தளம் அமைத்த அம்பேத்கரை இழிவு படுத்துகிற பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்களின் முயற்சிகளை முறியடிக்க காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும்.

    சென்னை:

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின்னர் மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனிடையே எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என அஸ்வினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- சென்னை முதல் உலக அரங்கு வரை, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

    ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு விக்கெட்டிலும், ஒவ்வொரு ஸ்பெல்லிலும், ஒவ்வொரு போட்டியிலும், நீங்கள் விளையாட்டை உயர்த்தி, எண்ணற்ற நினைவுகளை எங்களுக்குக் கொடுத்தீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்! என கூறியுள்ளார். 



    • கழகத்திற்கும், கலைஞருக்கும் தூண்போல உடன் நின்றவர்.
    • தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கழகத்திற்கும், கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர்.

    "தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்" என இனமான வகுப்பெடுத்து-கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்!

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்கள் ஓடி வருவதை பார்த்த அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
    • போலீசார் ரோந்து மேற்கொண்டு, அந்த மர்மநபரை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை குறித்து வைத்து மர்மநபர் ஒருவர் வீடுகளின் கதவை தட்டி வருகிறார்.

    மேலும் கதவை திறக்கும் பெண்களின் மீது மிளகாய் பொடியையும் தூவி சென்று வருகிறார். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    குன்னூர் வி.பி.தெரு பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. நள்ளிரவு நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டதால் அந்த பெண் அதிர்ச்சியானார்.

    சுதாரித்து கொண்ட அந்த பெண் வீட்டின் கதவை திறக்காமல், வீட்டின் மேல் பகுதியில் வசிப்பவர்களை போனில் தொடர்பு கொண்டு, கதவை யாரோ தட்டுகிறார்கள். யார் என தெரியவில்லை என தெரிவித்தார். உடனே அந்த வீட்டில் இருந்தவர், வீட்டின் விளக்கை எரியவிட்டார். இதனால் அதிர்ச்சியான மர்மநபர் அங்கிருந்து ஓடி விட்டார்.

    மீண்டும் 1 மணி நேரத்திற்கு பின்பு அதே மர்மநபர், மீண்டும் அந்த பகுதிக்குள் நுழைந்தார். அந்த பகுதியில் குழந்தையுடன் தனியாக வசித்து வரும் பெண்ணின் வீட்டின் அருகே சென்ற நபர், அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். இரவில் யார் கதவை தட்டுகிறார்கள் என அந்த பெண்ணும் கதவை திறந்துள்ளார். அப்போது வெளியில் நின்றிருந்த மர்மநபர், தான் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை, அந்த பெண்ணின் முகத்தில் வீசினார்.

    இதனால் அதிர்ச்சியான அந்த பெண் சத்தம் போட்டார். பெண்ணின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வீடுகளை திறந்து வெளியில் ஓடி வந்தனர். மக்கள் ஓடி வருவதை பார்த்த அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து பொதுமக்கள், குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்குள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் தெருவில் ஒரு நபர் கையில் பையுடன் சுற்றுவதும், ஒரு வீட்டின் அருகே வந்து கதவை தட்டும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    அந்த காட்சிகளை கைப்பற்றி அந்த நபர் யார்? உள்ளூரை சேர்ந்தவரா? அல்லது வெளியூர் நபரா? நள்ளிரவு நேரத்தில் சுற்றி திரியும் அந்த நபர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இங்கு வந்தரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோன்ட்மென்ட் அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், ஒரு வீட்டின் கதவை வேகமாக தட்டியுள்ளார்.

    இதனால் பயந்து போன வீட்டில் இருந்த பெண், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது வெளியில் மர்மநபர் நிற்பதை பார்த்ததும், உடனடியாக அருகே உள்ளவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

    அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து வெளியில் ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தனியாக இருக்கும் பெண்களின் வீடுகளை குறி வைத்து மர்மநபர் கதவை தட்டுவதும், கதவை திறக்கும் பெண்களின் மீது மிளகாய் பொடியை வீசி செல்லும் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து மேற்கொண்டு, அந்த மர்மநபரை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார்.
    • வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனம்.

    கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தான் திராணியில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார்.

    வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல!

    கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்; இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



    • 23-ந்தேதி தேர்வு முடிகிறது
    • தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நாளை வரை தேர்வு நடக்கிறது.

    சென்னை:

    அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு 23-ந்தேதியுடன் தேர்வுகள் முடிகிறது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது.

    அனைத்து பள்ளிக் கூடங்களும் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைக்கிறது.

    தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வரை தேர்வு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது.

    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுகிறவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னையில் இருந்து கேரளா செல்லும் ரெயில்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் எல்லாம் நிரம்பி விட்டன. அரசு, ஆம்னி பஸ்களில் இடங்கள் காலியாக உள்ளன.

    கிறிஸ்துமஸ் பண்டிகை வார நாட்களின் நடுவில் வருவதால் கூட்டம் இல்லை. வார இறுதி நாட்களில் வந்திருந்தால் முன்பதிவு அதிகமாக இருக்கும் என்று தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • வருமானவரி துறை அதிகாரிகள் 15 பேர் 6 கார்களில் செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்துவற்காக வந்தனர்.
    • ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 15 பேர் 6 கார்களில் செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்துவற்காக வந்தனர். வீட்டின் பிரதான நுழைவு வாயிலை பூட்டிய அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறவும், உள்ளே நுழையும் வெளி நபர்களையும் சோதனையிட்டனர்.

    இந்த வீட்டின் அருகில் இருந்த அலுவலகம், விருந்தினர் ஓய்வு இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கனியாவதி ஆகிய குடும்பத்தினர் மட்டும் வீட்டில் இருந்தனர். பள்ளிக்கு சென்ற செந்தில்குமாரின் மகள் வீட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டார். நேற்று இரவு வரை நடந்த இந்த சோதனை இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

    இதனால் அவரது வீடு மற்றும் அலுவலகம் முன்பு உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

    செந்தில்குமாரின் உறவினர்களான குழந்தைவேல் மற்றும் இவரது தம்பி முருகன் ஆகியோர் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் இவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கும் இயங்கி வருகிறது. இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் குழந்தைவேல், முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். பைனான்ஸ் அதிபர் செந்தில்குமார் பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு உறவினர் என்று கூறப்படும் நிலையில் அவரது வீட்டில் நடந்த இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 91.78 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 118.94 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நேற்று 6268 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 4266 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 91.78 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
    • பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேத மடைந்தது.

    விழுப்புரம்:

    புயல் கரையை கடந்து 2 வாரங்கள் ஆகியும் விழுப்புரம் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை.

    வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ந்தேதி புதுவை அருகே கரையை கடந்தது. அப்போது புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

    புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 55 செ.மீ. மழை பெய்தது. விழுப்புரம் நகரில் 63.5 செ.மீ. மழை பெய்தது.

    இதன் காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மழை நீர் சூழ்ந்தது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேத மடைந்தது.

    குறிப்பாக விழுப்புரம் நகரத்திற்குட்பட்ட பெரும்பா லான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடு களை மழை நீர் சூழ்ந்தது.

    அதில் விழுப்புரம் புறநகர் பகுதியான கிழக்கு பாண்டி சாலையில் உள்ள லிங்கம் நகர், ஆசிரியர் நகர், நேதாஜி நகர், கணபதி நகர் மற்றும் கீழ் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பஜனை கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீருடன் கலந்த மழை நீர் சுமார் 4 அடி உயரத்துக்கு தற்போதும் தேங்கி உள்ளது.

    இதனால் அப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அப் பகுதி பொதுமக்கள் சிலர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.

    புயல் பாதித்து 2 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் புறநகர் பகுதியில் வெள்ளம் வடியாததால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து நகராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வட்டா ரங்களில் விசாரித்தபோது, ஆசிரியர் நகர், லிங்கா நகர் இடையே உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள நீர் வழிப்பாதையில் தண்ணீ ரை வெளியேற்ற முடிவெடுத்த போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் சுமார் 800 மீட்டர் நீளத்துக்கு 2 பைப் மூலம் தொடர்ந்த னூர் ஏரியில் நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.அப் பகுதி மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது என்றனர்.

    ×