என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தொல்லியல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடம் கட்ட அத்துறை அங்கீகார குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
    • மரகத பூங்காவை ஒட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பழைய அர்ச்சுனன் தபசு உள்ளது

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல், புலிக்குகை ஆகிய பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் கட்டுமானங்களுக்கு தொல்லியல்துறை தடை விதித்துள்ளது. 100 மீட்டர் தாண்டி, தொல்லியல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடம் கட்ட அத்துறை அங்கீகார குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.

    தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான 2.47 ஏக்கரில் உள்ள மரகதபூங்காவில் சுற்றுலாத்துறை, தனியார் முதலீட்டில்,ரூ. 6கோடி மதிப்பில் லேசர் ஒளியுடன் கூடிய "ஒளிரும் தோட்டம்" அமைக்க திட்டமிட்டு உள்ளது.

    இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. மரகத பூங்காவை ஒட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பழைய அர்ச்சுனன் தபசு உள்ளது. அதன் அருகே ஆழமான பள்ளம் தோண்டுவதால் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் தற்போது பணிகளை நிறுத்தக்கூறி தொல்லியல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    • அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
    • தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.

    இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், பிற மாநில முதலமைச்சர்களும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து, திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

    அதன்படி, இன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளார். 

    இதேபோல், அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ராமநாதபுரம் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • நகராட்சி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பாட்டில் நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த வளாகத்தில் தேக்கு மரங்கள் இருந்து வந்த நிலையில் மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றனர். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் நெல்லிக் குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலத்திடம், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில் இன்று காலை நகராட்சி அலுவலகத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்கள் இருந்தது. இதனை பார்த்த நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜனுக்கு தகவல் அளித்தனர். மேலும் இரவு நேரத்தில் நகராட்சி அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில் யார் திருடி சென்ற மரத்தை வைத்தார்கள்? என விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    மேலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுமட்டும் இன்றி வெட்டப்பட்ட தேக்கு மரத்தை நகராட்சி அலுவலர் மற்றும் ஊழியரின் உடைந்தையுடன் வைத்தார்களா? என பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி திருடப்பட்ட தேக்கு மரத்தை மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது.
    • கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் சுமார் 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிபிடி-5204 ரகத்தை விவசாயிகள் நடவு செய்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கன மழையால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. கோளூர், தேவம்பட்டு, கள்ளுர், மெதுர், திருப்பாலைவனம், தத்தைமஞ்சி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயலில் 1000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.

    இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்

    இதற்கிடையே சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது. இது குறித்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலா தேவி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ரமேஷ், வேளாண் அறிவியல் நிலையம் திரூர் முனைவர். சுதாசா, மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் மற்றும் வட்டார வேளாண்மை அலுவலர்கள் கோளூர், மெதூர் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது, நெல் பயிரில் அதிகமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் துத்தநாக சத்து குறைபாடு காரணமாக நுனிகருகல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்குமாறு விவசாயிகளிடம் பரிந்துரை செய்து உள்ளனர்.

    • மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு இந்த ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
    • இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டது.

    இதை எதிர்த்து வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன், கட்சியின் திருத்தப்பட்ட விதிகளுக்கும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், திருத்தப்பட்ட கட்சி விதிகளையும், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராகவும் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளோம்.

    அந்த மனுக்களின் அடிப்படையில் நேரில் விளக்கம் அளிக்கவும், வழக்கு ஆவணங்களை அளிக்கவும் வாய்ப்பளித்து, அவற்றை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு இந்த ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

    • போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் போலீசார்கள் மீதும் கடும் நடவடிக்கை.
    • போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை அடியோடு ஒழிப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் போதை பொருள் விற்றது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய சமீர், ஆனந்த், ஜேம்ஸ் ஆகிய 3 போலீசார்களை கடந்த சிலநாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இதில் ஜேம்ஸ் என்பவர் தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றியவர் ஆவார்.

    போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் போலீசார்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த அருண்பாண்டியன் என்ற போலீஸ்காரரும் நேற்று போதைப்பொருள் விற்ற வழக்கில் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமீபத்தில் காரில் போதைப்பொருள் கடத்தி வந்தது தொடர்பாக பெரம்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம், அசாம் மாநிலத்தை சேர்ந்த பாத்திமா பேகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸ்காரர் அருண்பாண்டியன் தங்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப் பொருளை விற்றதாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தான் அருண்பாண்பாண்டியன் சிக்கி உள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியானது.

    அருண் பாண்டியன் வண்ணாரப்பேட்டை போலீஸ்நிலையத்தில் கோர்ட்டு வழக்குகள் தொடர்பான பணிகளை கவனித்து வந்தார்.

    கடந்த 2022-ம் ஆண்டு பாலசுப்பிரமணியன் மீது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப் பொருள் வழக்கு உள்ளது. இதுதொடர்பாக பாலசுப்பிரமணியம் கோர்ட்டுக்கு வந்து சென்றபோதுதான் போலீஸ்காரர் அருண் பாண்டியனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட மெத்தப்பட்டமைன் போதைப்பொருளை போலீஸ்காரர் அருண் பாண்டியன் அதிகாரிகளுக்கு தெரியாமல் பாலசுப்பிரமணியனுக்கு விற்றது தெரிந்தது.

    இதுவரை சுமார் 2 கிலோ மெத்தப்பட்டமைனை விற்று ரூ.16 லட்சம் வரை பணம் பெற்று இருப்பது தெரியவந்தது.

    இந்த போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சாய்தீன் அசாம், முசாபீர் ஆகிய மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசியல்வாதியின் ஆக்கிரமிப்பையும் அகற்றப்பட்டு வந்தன.
    • அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரிகிறது.

    மதுரை:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள விழுந்தமாவடியின் ஊராட்சித் தலைவர் மகாலிங்கம்,  ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 12-ந்தேதி நானும், என்னுடைய மகனும், விழுந்தமாவடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான அலெக்ஸ் ஆகிய இருவரும் 2.25 கிலோ கஞ்சா பதுக்கியதாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். என் மகனை தேடி வருகின்றனர்.

    நாங்கள் சட்டவிரோதமான எந்த செயலிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எடுக்கப்பட்டு உள்ளது. எனவே எங்கள் மீதான பொய் வழக்கில் சிறையில் அடைத்துள்ளதால் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அபுடு குமார் ராஜரத்தினம், ஜான்சன் யுவராஜ் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர் ஊராட்சித்தலைவர் என்பதால், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதில் அரசியல்வாதியின் ஆக்கிரமிப்பையும் அகற்றப்பட்டு வந்தன.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிலர், போலீசார் மூலமாக மனுதாரர், அவரது மகன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்ய வைத்து, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே மனுதாரர் சென்னையில் போதைப்பொருள் பதுக்கியதாக பதிவான வழக்கில் 5 நாளில் ஜாமீன் வழங்ப்பட்டது. அதைப் போல இந்த வழக்கிலும் அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என வாதாடினார்கள்.

    விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மனுதாரர், அவரது மகன் ஆகியோர் கடந்த ஆண்டு சென்னை ராயபுரத்தில் 500 கிராம் மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக கைதானார்கள். அவர்கள் மீதான வழக்கு பொய்யானது என்றும், அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்றும் போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    ஊராட்சி தலைவரான மனுதாரரும், ஒன்றிய கவுன்சிலரான அவரது மகனும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லாமல், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரிகிறது.

    இவர்கள் சுயேட்சைகள் என்பதால் அவர்கள் மீது அரசு தரப்பில் ஏற்கனவே 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதையும், இதே வழக்கில் மனுதாரர் மகனுக்கு முன்ஜாமீன் வழங்கியதையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 19). இவரும் பாடியூர் கிராமத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்நிலையில் முத்துலட்சுமி செல்போனில் அடிக்கடி பேசுவதை அவரது பெற்றோர் நோட்டமிட்ட போது அவர் காதலில் விழுந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிக்க முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவீட்டில் இருந்தும் பெற்றோர் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனால் பெற்றோர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என நினைத்து தாங்களாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வீட்டிற்கு சென்றால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என அவர்களது பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு மணமகன் வீட்டாருடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.

    மகளிடம் அவரது தாய் மன்றாடி தன்னுடன் வருமாறு கேட்டும், வராமல் காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்ததால் கதறி அழுது புலம்பியது அங்கிருந்தவர்கள் மத்தியில் கண்கலங்க வைத்தது.

    • ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
    • நாணய மூட்டைகளை நோட்டாக மாற்ற நீதிபதி உத்தரவு.

    கோவை:

    கோவையை சேர்ந்த ஒரு தம்பதியர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    பின்னர் அந்த நபர் உடனடியாக காருக்கு சென்று அங்கு பத்திரமாக வைத்திருந்த நாணய மூட்டைகளை எடுத்து வந்தார்.

    அப்போது அவர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு தர வேண்டிய ஜீவனாம்ச பணத்தில் ரூ.80 ஆயிரம் பணத்தை ஒரு ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களாக மாற்றி சுமார் 20 மூட்டைகளில் கட்டிவந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதனை பார்த்து நீதிமன்ற ஊழியர்கள் திடுக்கிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் அதிர்ச்சிக்குள்ளானார்.

    பின்னர் நாணய மூட்டைகளை நோட்டாக மாற்றி கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியதுடன் வழக்கை ஒத்தி வைத்தார். தொடர்ந்து அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்திருந்த நாணயங்களை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.

    • பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்றவர்கள் உயரிய பதவியில் அமரலாமா?
    • மரியாதை நிமித்தமாக சவ ஊர்வலத்தில் சென்று உடல் அடக்கத்தில் பங்கேற்பது மனித மாண்பு.

    திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பாஷாவுக்கு இறுதி ஊர்வலம் நடந்தது தொடர்பாக சீமான் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    * சிறையில் 50 நாட்கள் பாஷாவுடன் இருந்த காலத்தில் இருந்து அவரை அப்பா என்று தான் கூப்பிடுவேன்.

    * இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் இடத்திற்கு எப்படி எடுத்து செல்வது?

    * ஆர்.எஸ்.எஸ். பேரணியின் போது இஸ்லாமிய அமைப்பினர் யாராவது போராடினார்களா?

    * விநாயகர் ஊர்வலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த அரசு அனுமதி கொடுக்கத்தான் செய்கிறது.

    * பாஷா குற்றவழக்கில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை யாரும் மறுக்கவில்லை.

    * குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியாதா?

    * பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்றவர்கள் உயரிய பதவியில் அமரலாமா?

    * 2 லட்சம் ராணுவ வீரர்களை அனுப்பி 26 ஆயிரம் மக்களை கொன்றுகுவித்த ஒரு நாட்டின் தலைவரை பற்றி பேசமாட்டீர்கள். அந்த செயலையும் பேசுங்க.

    * ஒரு தரப்பில் மட்டும் பேசிக்கொண்டு இருப்பது எப்படி?

    * மரியாதை நிமித்தமாக சவ ஊர்வலத்தில் சென்று உடல் அடக்கத்தில் பங்கேற்பது மனித மாண்பு. அது குறிப்பாக தமிழ் பேரினத்தின் மாண்பு.

    * மக்களோடு மக்களாக நிற்பவர்களை அப்படி பேசுவதை ஏற்க கூடாது.

    * பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்வதை சடங்கு என்பது தவறான வார்த்தை. அப்படி சொல்லக்கூடாது. விஜய் ஏன் அந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை என்றார். 

    • இன்று மாலை 3 மணிக்கு அண்ணாசாலை தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்.
    • அமித் ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித் ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் அறைகூவல் விடுத்திருக்கிறது.

    அதன்படி சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு அண்ணாசாலை தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

    இந்தியாவிற்கு அரசமைப்புச் சட்டத்தை வழங்கி 140 கோடி மக்களும் ஜனநாயக உரிமையோடு வாழ்வதற்கு அடித்தளம் அமைத்த அம்பேத்கரை இழிவு படுத்துகிற பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்களின் முயற்சிகளை முறியடிக்க காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும்.

    சென்னை:

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின்னர் மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனிடையே எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என அஸ்வினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- சென்னை முதல் உலக அரங்கு வரை, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

    ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு விக்கெட்டிலும், ஒவ்வொரு ஸ்பெல்லிலும், ஒவ்வொரு போட்டியிலும், நீங்கள் விளையாட்டை உயர்த்தி, எண்ணற்ற நினைவுகளை எங்களுக்குக் கொடுத்தீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்! என கூறியுள்ளார். 



    ×