என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர்.
- மன்மோகன் சிங் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
இந்த நிலையில், மன்மோகன் சிங் அற்புதமான மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர். அவரின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறினார்.
- சதீஷ் பல முறை ஜாமினுக்கு முயன்றும் கிடைக்கவில்லை.
- சதீஷுக்கான தண்டனை விவரம் 30-ந்தேதி அறிவிப்பு.
2022-ம் ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு மாணவி சத்ய பிரியா தள்ளிவிட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சதீஷ் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சதீஷும், சத்யாவும் காதலித்து வந்ததாகவும் பிறகு சதீஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு பிரிய துவங்கியிருக்கிறார் சத்யா. இதை ஏற்றுக்கொள்ள முடியாத சதீஷ், அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. எனினும் சத்யப்ரியா சதீஷின் காதலை ஏற்கவேயில்லை. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரெயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்று கொண்டிருந்த மின்சார ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இதனை தொடர்ந்து கைதான சதீஷ் பல முறை ஜாமினுக்கு முயன்றும் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து சதீஷ் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டதாகவும், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 27ஆம் தேதி அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார். சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிபதி குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரம் 30-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.
- பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
- பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்:
உலக புகழ்பெற்ற அம்மன் ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகளை மாதந்தோறும் 2 முறை எண்ணப்பட்டு பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
கோவிலில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் சரிபார்த்து சொக்க தங்கமாக மாற்றி அனைத்தும் மொத்தமாக மும்பையில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் டெபாசிட் செய்யபடுவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை 2021-2022 மானிய கோரிக்கையின் போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களில், கோவிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள அரசுக்குச் சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என அறிவித்தார்.
இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 9-ந் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ரவிசந்திரபாபு மற்றும் மாலா ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற மொத்தம் 526 கிலோ 435 கிராம் எடையுள்ள பொன் இனங்களை பிரிக்கப்பட்டது.
இப்பணி இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் உறுப்பினர்கள் பிச்சைமணி, சுகந்தி ராஜசேகர், சேதுலெட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை 3 மண்டலம் துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு அலுவலர்கள் சரவணன், சிவலிங்கம், ராமு, ஆகியோர் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் நடைபெற்று முடிந்தது.
இதில் பொன் இனங்களில் உள்ள அரகு, கல் அகற்றி பயன்படுத்த இயலாத 526 கிலோ 435 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி தங்க மூதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்பி வைத்தல் மற்றும் கோவிலில் இருப்பில் உள்ள 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளையும் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதற்காக பொன் இனங்களை பத்திரமாக மூட்டை கட்டி அதற்கு சீல் வைக்கும் பணிகள் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அறங்காவல் குழுவினர், இணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் கல்ந்துகொண்டு வங்கி அதிகாரிகளிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப்குமார், மற்றும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன், இணை ஆணையர் பிரகாஷ் , கோவில் பணியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நாகேந்திரன், சிறையில் இருந்தபடியே கொலை திட்டத்தை வடிவமைத்துள்ளார்.
- ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரூ.10 லட்சம் வரை கொலையாளிகள் செலவிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த படுகொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிந்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 28 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். 300 சாட்சியங்களை சேர்த்துள்ளனர்.
அதில், பிரபல ரவுடியான சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் தேடப்படும் குற்றவாளிகள் என குறிப்பிட்டதோடு, அவர்களின் பெயர்கள் உட்பட 30 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றன.
குற்றப்பத்திரிகையில் வடசென்னையை கலக்கிய பிரபல தாதா நாகேந்திரன், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் என பட்டியல் நீள்கிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விவரங்கள்:
ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியிலும், சமூகரீதியிலும் அதிவேகமாக வளர்ந்துள்ளார். ஒருகாலத்தில் வடசென்னையில் தாதாவாக வலம் வந்த நாகேந்திரனுக்கு இது பிடிக்கவில்லை. அவர்களுக்குள் முன்பகையும் இருந்துள்ளது. மேலும், தனது மகனான அஸ்வத்தாமனுடன் நிலம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் பிரச்சனை செய்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் மகன் கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் எனவும் நாகேந்திரன் நம்பி உள்ளார்.
இதனால் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நாகேந்திரன், சிறையில் இருந்தபடியே கொலை திட்டத்தை வடிவமைத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு எதிரானவர்களைத் தேடி உள்ளார். அப்போதுதான், ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு, அவரது தம்பி பொன்னை பாலு ஆம்ஸ்ட்ராங் மீது வன்மத்தில் இருப்பது தெரியவந்தது.
பிரபல ரவுடியான சம்போ செந்திலும் ஆம்ஸ்ட்ராங் மீது பகையில் இருந்துள்ளார். இதையடுத்து, கொலை திட்டத்தை சிறையில் இருந்தவாறே நாகேந்திரன் விரிவுபடுத்தியுள்ளார்.
அதன்படி, நேரடியாக களத்தில் சென்று கொலை செய்யும் பொறுப்பு பொன்னை பாலு தரப்பினருக்கும், பணத்தின் ஒரு பகுதியை கொடுப்பதோடு நாட்டு வெடிகுண்டு உட்பட கொலைக்கான ஆயுதங்களை ஏற்பாடுசெய்யும் பொறுப்பு சம்போ செந்திலிடமும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு அஸ்வத்தாமனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகள் 6 மாதமாக ('ரெக்கி' ஆபரேஷன்) ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து கண்காணித்துள்ளனர். அதன்பிறகு, யாருக்கும் சந்தேகம் வராதபடி ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் போல் சென்று அவரை கொலை செய்துள்ளனர்.
வேலூர் சிறையில் இருந்து நாகேந்திரன் சிகிச்சைக்கு வெளியே வரும்போது ஒன்றுகூடி கொலை திட்டம் குறித்து கொலையாளிகள் விவாதித்துள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரூ.10 லட்சம் வரை கொலையாளிகள் செலவிட்டுள்ளனர்.
ஆற்காடு சுரேஷ் மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு விரைந்து செயல்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணை நடத்தப்பட்டு கண்ணுக்குத் தெரியாத மற்ற குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் 63 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1½ கோடி பணமும் ரொக்கமாக ரூ. 80 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர்.
- பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடைகள், குடோன்கள் உள்பட பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி பதுக்கி வைக்கப்படும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் வாகன சோதனை நடத்தி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர்.
- பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோது அண்ணாமலைக்கு சாட்டை கிடைக்கவில்லையா?
- அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தவில்லை.
சென்னை:
மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டார். இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில்,
* அண்ணாமலையின் போராட்டம் கேலிக்கூத்தாக உள்ளது. அண்ணாமலையின் கேலித்கூத்துகளை பா.ஜ.க.வில் இருப்பவர்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன்.
* பகுத்தறிவிற்கு ஒவ்வாத ஒரு போராட்டத்தை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார்.
* பதவி பறிபோகும் என யாரோ கூறியதால் அண்ணாமலை சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்.
* வேடிக்கை காட்டுவதற்காக அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்கிறார்.
* பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோது அண்ணாமலைக்கு சாட்டை கிடைக்கவில்லையா?
* அண்ணாமலைக்கு வயது இருக்கிறது சாட்டையால் அடித்துக்கொள்கிறார். என்னை போன்றோர் அடித்து கொள்ள இயலுமா?
* அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தவில்லை.
* அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒரு மணிநேரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே, திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் இனி செருப்பு அணிய முடியாது என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
- காரை நிறுத்தி விட்டு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் ஏற்றி செல்கிறார்கள்.
- ரேசன் கடை ஊழியரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ரேசன் அரசி உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து ஆந்தி மாநிலத்திற்கு கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது. பஸ், ரெயில்களில் கடத்தப்படும் ரேசன் அரிசி மூட்டைகளை அவ்வப்போது அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரேசன் கடையில் இருந்து இரவு நேரத்தில் மூட்டை,மூட்டையா ரேசன் அரசி கடத்தப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் இரவு நேரத்தில் கடையின் முன்பு காரை நிறுத்தி விட்டு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் ஏற்றி செல்கிறார்கள். இதனை அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியே எடுத்து வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இரவு நேரத்தில் ரேசன் கடை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட ரேசன் கடை ஊழியரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அந்த ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் சரிவர வழங்குவதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சாட்டையில் அடிப்பது என்பது தமிழர் மரபில் நடப்பது தான்.
- நான் லண்டன் சென்று வந்த பிறகு இன்னும் நல்லவனாகி இருக்கிறேன்.
கோவை:
சாட்டையடி போராட்டத்துக்கு பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்துள்ளார். முதலில் அவருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். நாட்டின் புதிய பொருளாதார கொள்கைகளை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங். அவர் நாட்டிற்கு வகுத்து கொடுத்த பொருளாதார கொள்கைகளை வருகின்ற நாட்களில் நாங்கள் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
இன்றைக்கு எடுத்துள்ள இந்த போராட்டம் வருகிற காலத்தில் தீவிரப்படுத்தப்படும்.
இது ஒரு தனி மனிதனை சார்ந்தோ, தனி மனிதனுக்கு ஆட்சியாளர்கள் மீது கோபத்தை காட்டவோ இந்த போராட்டம் கிடையாது. கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. அதனை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரம் பின்தங்கி செல்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீது தொடுக்கப்படும் குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துள்ளது.
இன்று தவ வேள்வியாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எதற்காக சாட்டையடி. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. முருகப்பெருமானிடம் வேண்டுதலாக இந்த சாட்டையடியை நான் சமர்ப்பிக்கிறேன். விரதம் இருக்க போகிறோம். அரசியல் பணி மேற்கொள்ள போகிறோம். ஆண்டவனிடம் முறையிட போகிறோம்.
தி.மு.க.வின் 3 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே கிடைக்கிற அனைத்து மேடைகளிலும் தி.மு.க.வை தோலுரித்து காட்ட போகிறேன். சென்னையில் நடந்த சம்பவம் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் யோசித்து முடிவுக்கு வந்துள்ளேன். தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணி அணிய போவதில்லை. தமிழக மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் செய்து கொண்டிருக்கிறேன்.
பா.ஜ.க தொண்டர்கள் களத்திற்கு சென்று தீவிர களப்பணியாற்ற வேண்டும். இன்று போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தோம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து எங்களது போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். புதிய தேதியை பின்னர் அறிவிப்போம்.
நம்முடைய மண்ணில் உடலை வருத்தி செய்யும்போது, அதற்கான உரிய பலன் நமக்கு கிடைக்கும். சமுதாயத்தில் ஏற்படக்கூடிய எல்லாத்துக்கும் சேர்த்தே சாட்டையடி அடித்து கொண்டேன்.
தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் அறவழியில் கூட போராட முடியவில்லை. போலீசாரின் நடவடிக்கையால் பெண் திருப்தியாக இருப்பதாக போலீஸ் கமிஷனர் கூறியது மிகவும் தவறு. இன்னல்களை சந்தித்த பெண் எப்படி திருப்தியா இருக்க முடியும்?.
ஒரு விஷயத்தை சாதாரணமாக கடந்து போக போலீசார் முயற்சி செய்கிறார்கள். எப்.ஐ.ஆர். மூலம் இளம்பெண்ணின் வாழ்க்கையையே நாசம் செய்து விட்டனர். நான் போலீஸ் துறையை குறை சொல்பவன் அல்ல. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. காக்கியின் மீது தான் என் கோபம். எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்போது காவல்துறையை சீர்படுத்துவோம்.
சாட்டையில் அடிப்பது என்பது தமிழர் மரபில் நடப்பது தான். அதனை தான் நானும் செய்தேன். ஆண்டவனுக்கு இந்த சாட்டையடியை சமர்ப்பித்துள்ளேன். பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் இதனை செய்ய மாட்டார்கள். பா.ஜ.க.வினர் அறவழியில் போராட வேண்டும். எல்லா அரசியல் பதவிகளுமே வெங்காய பதவிகள் தான்.
வருகிற 2026 தேர்தலில் போட்டியிடுகிறேன். தோல்வியடைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன். அதனை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். வெற்றி தோல்வி என்பது சகஜம். மக்களின் மீது மட்டுமே நம்பிக்கை வேறு யாரும் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
நான் லண்டன் சென்று வந்த பிறகு இன்னும் நல்லவனாகி இருக்கிறேன். எனது அரசியல் தெளிவாக உள்ளது. லண்டனில் அரசியல் படிப்பு படித்த பிறகு எனக்கு அரசியல் சார்ந்த புரிதல் கிடைத்துள்ளது. நான் காலணியை கழற்றிய பின்பு முதலில் சென்றது தேவாலயம் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படாது.
- விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பஞ்சாப் மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் ஒரு டன் கரும்பு ரூ.4100 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த்சிங் மான் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே கரும்புக்கு அதிக கொள்முதல் விலை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை பஞ்சாப் தக்கவைத்துக் கொண்டுள்ளது. உழவர்கள் நலனில் அக்கறை கொண்டு கரும்பு விலையை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பது பாராட்டத்தக்கது.
ஆனால், தமிழ்நாட்டில் நடப்புப்பருவத்தில் ஒரு டன்னுக்கான கொள்முதல் விலை ரூ.3150 மட்டும் தான். இது மத்திய அரசு அறிவித்த விலை தான். தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு டன்னுக்கு ரூ.215 ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ஊக்கத்தொகை எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனால் பஞ்சாப் மாநிலத்தில் வழங்கப்படுவதை விட தமிழ்நாட்டில் டன்னுக்கு ரூ.950 குறைவாக கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.38,000 இழப்பு ஏற்படும். இப்படியெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?
2024-25 ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு 3,400 ரூபாயும், 9.50% அல்லது அதற்கும் குறைவானத் திறன் கொண்ட கரும்புக்கு 3150 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பஞ்சாப் கரும்பு 10% சர்க்கரைத் திறன் கொண்டது என்பதால் அதற்கு மத்திய அரசின் விலை ரூ.3400, மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.710 ஆகும். தமிழக கரும்புகளுக்கு அதிகபட்ச சர்க்கரைத் திறன் 9.50% தான் இருக்கும் என்பதால், அவற்றுக்கு ரூ.3150 மட்டும் தான் கிடைக்கும்.
கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் கொள்கை கடைபிடிக்கப்படுவது தான் பஞ்சாபில் உழவர்களுக்கு அதிக விலை கிடைக்க காரணம் ஆகும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை சர்க்கரை ஆலைகளே வழங்கி விடும் என்பதால் அரசுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லை; அதே நேரத்தில் உழவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தமிழ்நாட்டிலும் 2017-ஆம் ஆண்டு வரை குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கும் முறை தான் இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த போது தான் அந்த முறை கைவிடப்பட்டு ஊக்கத்தொகை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.650 ஊக்கதொகை சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. அதே முறை நீடித்திருந்தால் ஊக்கத்தொகை இப்போது ரூ.1000 ஆக உயர்ந்திருக்கும். அதனால் ஒரு டன் கரும்புக்கு ரூ.4150 கிடைத்திருக்கும். ஆனால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அதை செயல்படுத்தத் தவறியதால் தான் உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படாது. மாறாக, ஊக்கத்தொகை முழுவதையும் சர்க்கரை ஆலைகள் ஏற்றுக்கொள்ளும் என்பதால், அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை அரசுக்கு மிச்சமாகும். ஆனால், சர்க்கரை ஆலைகளுக்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் அதைத் தாங்கி கொள்ள முடியாது என்பதால் அந்த முறையை செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
தமிழகத்தில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ.1750 சேர்த்து டன்னுக்கு ரூ.5250 கொள்முதல் விலை வழங்க வேண்டும். குறைந்தது டன்னுக்கு ரூ.5000 ஆவது வழங்க வேண்டும். மத்திய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் ரூ.1000 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- யார் தவறு செய்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
- அண்ணா பல்கலைக்கழக மாணவிகளின் பாதுகாப்புக்கு நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார். வீட்டு வாசலில் சாட்டையால் சட்டை அணியாத உடலில் தனக்கு தானே அடித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
* தொட்டதற்கு எல்லாம் அரசியல் செய்ய நினைக்கிறார் அண்ணாமலை.
* நீதி நிலைநாட்டப்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
* அண்ணா பல்கலைக்கழக மாணவிகளின் பாதுகாப்புக்கு நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும்.
* எப்.ஐ.ஆர். தகவல்களை வெளியிட்டவர்கள் காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
- சூமோட்டா வழக்காக எடுக்குமாறு வரலட்சுமி அனுப்பிய கடிதத்தை நீதிபதிகள் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு ஏற்றது.
- சென்னை காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை இன்றே விசாரிக்குமாறு வரலட்சுமி என்ற வழக்கறிஞர் நீதிபதிகளிடம் முறையிட்டார்.
சூமோட்டா வழக்காக எடுக்குமாறு வரலட்சுமி அனுப்பிய கடிதத்தை நீதிபதிகள் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு ஏற்றது.
இதையடுத்து இந்த வழக்கை இன்றே விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.
சென்னை காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் மட்டுமின்றி அது தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியானது குறித்தும் இன்றே விசாரிக்கப்பட உள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2.15-க்கு நடைபெற உள்ளது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
பழனி:
பழனி மதனபுரம் பகுதியை சேர்ந்தவர் பஷிராபேகம் (வயது 45). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் திருஆவிணன்குடி கோவில் சாலையில் டீக்கடை மற்றும் துணிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவருக்கும் அடிவாரம் சரவணப் பொய்கை சாலையை சேர்ந்த மாரிமுத்து (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவரம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவரவே கண்டித்துள்ளனர். இதனால் மாரிமுத்துவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இருந்த போதும் அவருடன் பேச மாரிமுத்து முயன்றுள்ளார். ஆனால் பிடிவாதமாக பஷிராபேகம் தவிர்த்து வந்ததால் இன்று காலை அரிவாளுடன் மாரிமுத்து அவரது கடைக்குச் சென்றார்.
அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். அவர் உயிருக்கு பயந்து ஓடியபோதும் துரத்தி வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தானும் வெட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனால் மாரிமுத்துவுக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த மாரிமுத்துவையும் சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சாலை பழனி கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். அந்த பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக சென்று வந்த போது நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்களும் அலறியடித்து ஓடத்தொடங்கினர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






