என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
    • நீதிபதிகள் இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து பட்டியலிட அறிவுறுத்தினர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வக்கீலான வரலட்சுமியின் கடிதம் ஒன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளான எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு இன்று தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

    மனுவில், " சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை உள்நோக்கத்துடன் அவர்கள் கசியவிட்டுள்ளனர். எனவே வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக கோர்ட்டில் வாதாடிய வக்கீல் ஜெய பிரகாஷ் நாராயணன் சென்னையின் இதய பகுதி போன்ற அண்ணா பல்கலைகழகத்தில் நடந்துள்ள பாலியல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. எனவே ஐகோர்ட்டு இந்த கடிதத்தை ஏற்று தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கோரினார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து பட்டியலிட அறிவுறுத்தினர்.

    அப்போது தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், போலீசார் டி.ஜி.பி. சென்னை போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    தலைமை நீதிபதி உத்தரவுக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியிலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளது.

    உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இன்று மாலை 4.45 மணிக்கு விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, இன்று மாலை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிடவில்லை; இணையத்தில் வெளியான எப்ஐஆர் அறிக்கை தமிழக அரசு முடக்கப்பட்டது.

    வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • ‘பஸ் சிக்னல் முன்னுரிமை’ என்ற திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது.
    • ஜனவரி மாத இறுதியில் இந்தத் திட்டத்துக்கான சோதனை முயற்சி தொடங்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள சிக்னல்களில், மாநகர பஸ்கள் அதிக நேரம் நிற்பதை தவிா்க்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி, திருவனந்தபுரத்தைச் சோ்ந்த சி.டி.ஏ.சி. மையம் சாா்பில் 'பஸ் சிக்னல் முன்னுரிமை' என்ற திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் படி, சிக்னல் அருகே மாநகர பஸ்கள் நிற்கும்போது பச்சை விளக்குகள் கூடுதல் நேரம் ஒளிரும் வகையில் சிக்னல்களில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலில் பஸ்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை குறையும். மேலும் எரிபொருள் செலவை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்காக ஜி.எஸ்.டி. சாலையில், ஆலந்தூா் முதல் சென்னை விமான நிலையம் வரையிலான வழித்தடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.


    இந்த வழித்தடத்தில் உள்ள சிக்னல்களிலும், மாநகர பஸ்களிலும் தொழில் நுட்பத்தை செயல்படுத்தும் வகையில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படவுள்ளன. சிவப்பு விளக்கு எரியும் சிக்னலை மாநகர பஸ் அடையும்போது, ஜி.பி.எஸ். சிக்னலை போக்குவரத்து சிக்னல்கள் அடையாளம் கண்டு கொள்ளும். பின்னா் பஸ்சுக்கு வழிவிடும் வகையில் சிக்னலில் தானாகவே பச்சை விளக்கு எரியும். இதன் மூலம் பஸ்கள் தேவையில்லாமல் நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க தேவையிருக்காது.

    பொதுமக்களும் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். இதைக் கண்காணிக்க மாநகர போக்குவரத்து கழகம், போக்குவரத்து காவல் துறை சாா்பில் ஆய்வுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக தமிழக அரசு, போக்குவரத்து துறை மற்றும் சென்னை ஐ.ஐ.டி. சாா்பில் ரூ. 82 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இந்தத் திட்டத்துக்கான சோதனை முயற்சி தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணாமலை, 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார்.
    • சாட்டையால் அடிக்கும்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்... வீரவேல் என முழக்கமிட்டனர்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன். நாளை முதல் 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்று அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.

    அதன்படி, இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலை, 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார்.

    மேல் சட்டை அணியாமல், பச்சை வேட்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை அண்ணாமலை நடத்தினார். அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்... வீரவேல் என முழக்கமிட்டனர்.

    இந்நிலையில், அண்ணாமலை அடித்துக் கொள்வதற்கு முதலில் அசல் சாட்டை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பிறகு வேறு ஒரு சாதாரண சாட்டையால் அவர் அடித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    போராட்டத்தில் ஈடுபடும் அண்ணாமலை அசல் சாட்டையால் அடித்துக் கொள்ளாமல், அவருக்கேற்ப வேறு ஒரு சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளாரா என வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

    • காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.
    • தோவாளை தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டி அருகே பேச்சாங்குளம் பகுதியில் வேம்படிகுளம் உள்ளது. இந்த குளத்தின் இரு கரைகளிலும் சுடுகாடு, இடுகாடு உள்ளது. இதில் சுடுகாடு அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் ஒருவர் தென்னந்தோப்பு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த தென்னந்தோப்பிற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அவர் தோவாளை தாசில்தாரிடம் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த பகுதியில் சுடுகாடு, இடுகாடு மக்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளார். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேச்சாங்குளம் பகுதியில் திரண்டனர்.

    திடீரென நாகர்கோவில்-இறச்சகுளம் சாலையில் பேச்சாங்குளம் பகுதியில் ஊர் தலைவர் கார்த்திக் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறச்சகுளம் ஊராட்சி தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், துணை தலைவர் மனோ சிவா, மீனவ கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சகாயம், தி.மு.க. தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாகர்கோவில் ஏ.டி.எஸ்.பி. லலித்குமார், இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தோவாளை தாசில்தார் கோலப்பன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டு அகற்றப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட பஸ்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்தும் சீரானது. பின்னர் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்றினர்.

    • அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    28-ந்தேதி முதல் 31-ந்தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    01-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    02-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • ஸ்டீல் கைப்பிடியை பொருத்தும் பணியில் காகிதப்பட்டறையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.
    • மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் உயிரிழந்தனர்.

    வேலூர் மாவட்டம் மேல்வல்லம் பகுதியில் புதிய வீட்டின் மொட்டை மாடியில் சீலிங் வேலை நடந்து கொண்டிருந்தது. ஸ்டீல் கைப்பிடியை பொருத்தும் பணியில் காகிதப்பட்டறையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    கைப்பிடியை பொருத்தும் பணியின்போது அவர்களுக்கு மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர்.

    ஸ்டீல் கம்பி எதிரே உள்ள மின்கம்பியில் உரசியதில் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் முகேஷ் (24), சதீஷ் (24) பலியாகினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மறைந்த தே.மு.தி.க. தலைவரான கேப்டன் விஜயகாந்த் எங்கள் அனைவருக்கும் குருவாக திகழ்ந்தவர்.
    • கோயம்பேடு மேம்பாலத்தை ஒட்டியுள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.

    இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.

    இந்த குரு பூஜையில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க. துணை செயலாளர்களான எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று இதற்கான அழைப்பிதழ்களை வழங்கி உள்ளனர். இதனை ஏற்று நாளை அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்த் நினைவு இடத்தில் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா தலைமையில் நாளை காலை 8.30 மணி அளவில் கோயம்பேடு மேம்பாலத்தை ஒட்டியுள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    தே.மு.தி.க. அலுவல கத்தை ஊர்வலம் வந்தடைந்ததும் அங்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்கிறார்கள்.

    இதுதொடர்பாக தே.மு.தி.க. துணை செயலாளரான எல்.கே.சுதீஷ் கூறியதாவது:-

    மறைந்த தே.மு.தி.க. தலைவரான கேப்டன் விஜயகாந்த் எங்கள் அனைவருக்கும் குருவாக திகழ்ந்தவர். இதன்படி அவரது நினைவு நாளை குரு பூஜை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளை குரு பூஜை தினமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு குரு பூஜை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி விஜயகாந்த் கேப்டன் ஆலயத்துக்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. 25 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு நாளை அன்னதானம் நடைபெறுகிறது.

    பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உள்ளே வருவதற்கு தனி வழியும் வெளியே செல்வதற்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதற்கும் தனி வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நாளை நடைபெற உள்ள கேப்டனின் முதலாம் ஆண்டு குரு பூஜையில் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று மரியாதை செலுத்த இருப்பதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம்.

    இவ்வாறு எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

    நாளை நடைபெற உள்ள விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குரு  பூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களை பாதுகாப்புக்காக நிறுத்தி வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • சென்னையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • பூந்தமல்லி, மடிப்பாக்கம், அடையாறு, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக நெரிசல் ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சென்னையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 48 முக்கிய சந்திப்புகளில் கார், மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி செல்லும் நிலையே இருந்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு மாற்று பாதைகளிலும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

    இப்படி நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணம் செய்யும் போது குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

    இதன் மூலம் ஒவ்வொரு 10 நிமிட தாமதத்துக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.40 முதல் ரூ.130 வரையிலும் எரி பொருள் செலவு ஏற்படுவதாக ஆசிய மேம்பாட்டு வங்கி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.


    கார்களுக்கு ரூ.130 வரையில் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ. 63 வரையிலும் கூடுதல் செலவாகும் நிலையில் ஆட்டோக்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.41 எனவும் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இப்படியே கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1696 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி, மடிப்பாக்கம், அடையாறு, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக நெரிசல் ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது. மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலைகளை சமன் செய்யும் பணிகள், சேதமடைந்த சாலைகளை சரி செய்யும் பணிகள் என தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பணிகள் முடிவடைவதற்கு இன்னும் 3 ஆண்டுகளாவது ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பழைய மகாபலிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    மடிப்பாக்கம்-மேடவாக்கம் சாலையில் மெட்ரோ பணிகளால் சாலைகள் குறுகலாக காட்சி அளிக்கின்றன. இதனால் அனைத்து வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியாத நிலையே நீடித்து வருகிறது. மாநகர பஸ்கள் இந்த வழியாக செல்ல முடியாத நிலையில் மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மடிப்பாக்கம், நங்கநல்லூர், புழுதிவாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வழியே வேகமாக செல்வதால் விபத்துகளும் நடை பெறுகின்றன.

    மெட்ரோ ரெயில் பணிகளால் பல இடங்களில் சாலைகள் மோசமாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையே உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களுக்கு முதுகுவலி ஏற்பட்டு மூச்சு குழாயிலும் அலர்ஜி போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

    அதே நேரத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்வது வாகன ஓட்டிகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

    • செருப்பை கழற்றியும், சவுக்கால் அடித்துக்கொண்டும் அற்ப அரசியல் செய்கிறார் அண்ணாமலை.
    • நியாயமாக தமிழக மக்கள்தான் அண்ணாமலையை சாட்டையால் அடிக்க வேண்டும்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார். வீட்டு வாசலில் சாட்டையால் சட்டை அணியாத உடலில் தனக்கு தானே அடித்துக் கொண்டார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

    * அண்ணாமலை சவுக்கால் அடித்துக்கொண்டதை பார்த்தேன். மீண்டும் அவர் பயிற்சி எடுக்க வேண்டும்.

    * செருப்பை கழற்றியும், சவுக்கால் அடித்துக்கொண்டும் அற்ப அரசியல் செய்கிறார் அண்ணாமலை.

    * அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

    * அண்ணாமலை லண்டனில் சென்று படித்தாரா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது:

    * அண்ணாமலையின் போராட்டம் நகைப்புக்குரியதாக மாறி விட்டது.

    * பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஜனநாயக ரீதியாக அண்ணாமலை போராடி இருக்கலாம்.

    * சட்ட ரீதியான போராட்டத்தையும் அண்ணாலை முன்னெடுத்து இருக்கலாம்.

    * தன்னை வருத்திக்கொள்ளும் அண்ணாமலையின் போராட்டம் நகைப்புக்குரியதாக மாறி விட்டது என்று கூறினார்.

    மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது:

    * தமிழக மக்கள் தான் அண்ணாமலையை சாட்டையால் அடித்திருக்க வேண்டும்.

    * மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று தர அண்ணாமலை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    * உண்மையான பிரச்சனையை மடைமாற்றும் வேலையை செய்கிறார் அண்ணாமலை.

    * நியாயமாக தமிழக மக்கள்தான் அண்ணாமலையை சாட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறினார்.

    • திருமூலர் சொன்ன தத்துவத்தின் படி திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது.
    • திராவிட மாடல் ஆட்சி மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சி.

    நெல்லை:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமூலர் சொன்ன தத்துவத்தின் படி திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. தி.மு.க. கூட்டணி தேர்தல் சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி. என்றும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்போம்.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. அது கலியுகத்தின் கோலம். கடைசி யுகத்தின் கோலம் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

    இது போன்ற கொலை சம்பவங்களை தடுக்க ஆன்மீக நெறியை மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. கொலை சம்பவம் தொடர்பாக உடனடியாக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குற்றம் நடந்த பின்னர் தான் தடுக்க முடியும். குற்றம் நடப்பதற்கு முன் அதனை தடுக்க வேண்டும் என்பது ஆண்டவனாலும் முடியாத காரியம்.

    அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்து கொள்வது அவர் செய்த பாவத்தை தடுப்பதற்கு. தி.மு.க. அரசை அகற்றினால் தான் காலணி அணிவேன் என்று கூறினால் அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் செருப்பு போட்டு நடக்க முடியாது.

    திராவிட மாடல் ஆட்சி மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் பரவ வேண்டும். அனைத்து மாநிலத்திலும் பரவ வேண்டும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகள் கேட்போம். அதில் நெல்லை மாவட்டத்தில் ஒரு தொகுதி இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
    • பயணிகள் கடைசி ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை, AM ஜெயின் கல்லூரி மைதானத்தில், நாளை "Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி" நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

    "Insider" or "District" தளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும். இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.

    நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

    நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் இரவு 12:00 மணிக்குபுறப்படும். பயணிகள் கடைசி ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • போதை ஆசாமி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்களிடம் தகராறு செய்ததோடு அத்துமீறியதாக தெரிகிறது.
    • போலீசார் போதை ஆசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்கள், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படும்.

    இந்தநிலையில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்களிடம் தகராறு செய்ததோடு அத்துமீறியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அவரது அராஜகம் அதிகமாகவே வேறு வழி இல்லாமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இணைந்து போதை ஆசாமியை பிடித்து உடுமலை புறக்காவல் நிலையத்துக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமரா அறையில் அடைத்தனர்.

    இதனால் ஆவேசம் அடைந்த போதை ஆசாமி அறைக்குள் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.யை உடைத்ததுடன் மது பாட்டில்களையும் உடைத்து வீசியதாக தெரிகிறது.

    இதையடுத்து அங்கு வந்த உடுமலை போலீசார் போதை ஆசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த சம்பவத்தால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×