என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையில் 10 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்து அழித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் ஒருவர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகவும் கஞ்சா செடிகள் வளர்ப்பதாகவும் அவிநாசி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் குன்னத்தூரில் உள்ள சின்னசாமி (வயது 45) என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையில் 10 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்து அதனை அழித்தனர். மேலும் அதன் அருகே இரண்டு கஞ்சா செடிகளை வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனையும் அழித்தனர்.

    தொடர்ந்து சின்னச்சாமியிடம் விசாரணை நடத்திய போது தனது சொந்த பயன்பாட்டிற்காக கள்ளசாராயம் காய்ச்சியதாகவும் கஞ்சா செடி வளர்த்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.

    சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த இந்த மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.

    உதயநிதியின் பேச்சை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கவும், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் மனுக்களில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதுகுறித்து தமிழக அரசு கூறுகையில், " துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

    சனாதன பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய 3 ரிட் மனுக்களையும் மனுதாரர்கள் திரும்பப் பெற்றனர்.

    இது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி" என்று தெரிவித்துள்ளது.

    • பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத 47,013 பணியிடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் அமைக்க பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறையில் 47000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத 47,013 பணியிடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் அமைக்க பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளாக தற்காலிக தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த 47,000 பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • பிப்ரவரி 14ம் தேி தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பிப்ரவரி 25ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பிப்ரவரி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

    அதன்படி, பிப்ரவரி 14ம் தேி தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பிப்ரவரி 25ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • "சார்"களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் "சார்"களை நினைவிருக்கிறதா?.
    • அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக-வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் "சார் யார்" என மறந்து விட்டீரா பழனிசாமி.?

    சென்னையில், காதலிப்பதாக கூறி அழைத்து சென்று 3 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். தனது கண்டனத்திலர் "SIR" போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை பெரம்பூரை சேர்ந்த பள்ளி சிறுமி தனது தோழியின் இல்ல விழாவிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற புகாரின் அடிபடையில் உடனடியாக வழக்கு பதிந்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர் காவல்துறையினர்.

    மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவரின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறையினர் அங்கு சென்று சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் அவரோடு இருந்த இரண்டு பள்ளி சிறுமிகளையும் மீட்டுள்ளனர். மூன்று சிறுமிகளையும் காதலிப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து குற்றவாளிகள் அனைவரையும் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். மேற்கொண்டு இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    புகார் பெறப்பட்ட உடனே விரைவாக செயலாற்றி பள்ளி மாணவிகளை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி பெண்கள் தொடர்பான புகார்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியை போன்று அலட்சியமாக இல்லாமல் தீவிரமாக செயலாற்றி வருகிறது தமிழ்நாடு காவல்துறை. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையில் குற்றத்தின் மீதான விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையை பெற்றுக்கொடுத்தும் வருகிறது திராவிட மாடல் ஆட்சி.

    விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியிலும் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அலையும் எடப்பாடி பழனிசாமி வழக்கம்போல அரசை குறை கூறி அவதூறுபதிவு போட்டுள்ளார்.

    "சார்"களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் "சார்"களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக-வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் "சார் யார்" என மறந்து விட்டீரா பழனிசாமி.?

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் "சார் யார்" என்பதை மறந்துபோனீரா பழனிசாமி.?

    மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி ''சார் யார்'' என்பது பழனிசாமிக்கு தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ''சார் யார்'' என்பது மறந்து போனதா?

    நீங்கள் மறந்ததுபோல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் "அதிமுக சார்களை" மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக-வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள்.

    முதலமைச்சரின் தலைமயிலான திராவிட மடல் ஆட்சி பெண்கள் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறதோ அதே அளவு முக்கியத்துவதோடு பெண்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது. முதலமைச்சரின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.

    இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    • ஒரே App-ல் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளது.
    • Account-ஐ ஸ்விட்ச் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

    அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஒரே App-ல் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளது.

    இதன்மூலம், Account-ஐ ஸ்விட்ச் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ் அப்பில் ஏற்கனவே ஸ்விட்ச் அக்கவுண்ட் என்கிற ஆப்ஷன் உள்ளது. அதில் நுழைவதன் மூலம் மற்றொரு வாட்ஸ் அப் அக்கவுண்டுக்குள் நுழைய முடியும்.

    ஆனால் இது இன்ஸ்டாவில் வருவது போன்று ஒரே வாட்ஸ் அப் கணக்கின் மூலம் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சமாக விரைவில் வர இருக்கிறது.

    • காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
    • பள்ளிக்குழந்தைகளுக்கு தரமான உணவை தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் எனவும் அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு தரமான காலை உணவை வழங்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 300-க்கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதனை நிறுத்தி வைப்பதாக அறிவித்த மாநகராட்சி நிர்வாகம், தற்போது மீண்டும் செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் காலை உணவை அம்மா உணவகங்கள் மூலம் தயாரித்து வழங்கினால், மாணவ,மாணவியர்களுக்கு உரிய நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதோடு, திமுக ஆட்சிக்கு வந்தபின் கவனிப்பின்றி இருக்கும் அம்மா உணவகங்களும் மேம்படுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

    எனவே, மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தப்புள்ளியை உடனடியாக ரத்து செய்வதோடு, அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு தரமான உணவை தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    • 22,931 SmartClassroom அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.
    • மாடல் ஸ்கூல்ஸ் எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்.

    அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 SmartClassroom அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.

    அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி அன்பில் மகேஷ்

    அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.

    நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் #ModelSchools எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்!

    அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இன்னும் எத்தனையோ இளைஞர்கள் சீமான் சொல்லும் கதைகளை நம்புகிறார்கள்.
    • சீமானின் ஆமைக்கறி கதைகள் எல்லாம் விடுதலை புலிகள் அமைப்பை கொச்சைப்படுத்தியுள்ளது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தி, "சம்ஸ்கிருத திணிப்பை விட இந்தி திணிப்பை விட கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று சீமான் இன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் படித்தால் தான் டாக்டர் ஆக முடியும் பட்டம் பெறமுடியும் என்ற நிலையை மாற்றி, சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்று ஒரு கோட்பாடு சொல்லியபோது தமிழ் என்பது தனித்த மொழி என்று அரசியல் களத்தில் பண்பாட்டுக் களத்தில் வென்று காட்டியவர் தந்தை பெரியார்.

    சமஸ்கிருத திணிப்பை விட இந்தி திணிப்பை விட கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று சீமான் பேசுவாரே என்றால் அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐ விட ஆபத்தானவர். ஆர்.எஸ்.எஸ்.-இன் கைக்கூலியாக மட்டுமில்லை, இந்திய அரசியலில் தமிழ்நாடு தமிழர் அரசியல், ஈழ விடுதலையில் தேசிய இன உரிமை என அத்தனையையும் காட்டிக்கொடுக்கிற ஆளாக இருக்கிறார்.

    எங்களை போன்ற இளைஞர்களின் அறிவை சுரண்டி, பொருளாதாரத்தை சுரண்டி, உழைப்பை சுரண்டி, இன்னும் எத்தனையோ இளைஞர்கள் சீமான் சொல்லும் கதைகளை நம்புகிறார்கள். சீமானின் ஆமைக்கறி, மான் வேட்டை உள்ளிட்ட கதைகள் எல்லாம் விடுதலை புலிகள் அமைப்பை கொச்சைப்படுத்தியுள்ளது.

    ஒரு போராளியை மாவீரரை ஸ்டார் ஓட்டல் செப் போல காட்டி, இளைஞர்களின் போராட்ட எழுச்சியை, தமிழ், தமிழர் மீதான உரிமையை மட்டுப்படுத்தியுள்ளார். இது ஆபத்தான மனநோய் மட்டுமில்லை, அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கம் சீமான்" என்று தெரிவித்தார். 

    • 1937 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு பள்ளிகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தது.
    • நடராசனின் இறுதி ஊர்வலமும், தாளமுத்துவின் இறுதி ஊர்வலமும் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது.

    மொழிப்போர் தியாகிகளை நடராசன், தாளமுத்துவுக்கு சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மொழிப்போர் ஈகியர், நடராசன், தாளமுத்து இருவருக்கும் உருவச் சிலைகள் எழுப்பப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    1937 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு பள்ளிகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தது. அதை எதிர்த்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தலைமையில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது.

    அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட மாவீரன் நடராசன் 1939 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் சிறையிலேயே உயிர்நீத்தார்.

    அவரைத் தொடர்ந்து 1939 மார்ச் மாதம் 11 ஆம் நாள் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தார். நடராசனின் இறுதி ஊர்வலமும், தாளமுத்துவின் இறுதி ஊர்வலமும் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது.

    தாளமுத்துவை அடக்கம் செய்துவிட்டு மூலக் கொத்தளம் இடுகாட்டில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் " விடுதலைப் பெற்ற தமிழ்நாட்டில் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

    இதுவரையிலும் செயல் வடிவம் பெறாமலிருந்த பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முன் வைத்தோம்.

    தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்தவர்களைப் பெருமைப்படுத்திவரும் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மொழிப்போர் ஈகியர் நடராசன், தாளமுத்து ஆகியோருக்குச் சிலை எழுப்பிச் சிறப்பு சேர்ப்பது பாராட்டுக்குரியது.

    பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தவாறு அந்தச் சிலைகளைத் தந்தை பெரியார் சிலையோடு சேர்த்து நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    1965 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இராசேந்திரனின் நினைவு நாள் இன்று( 27.01.2025).

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயிலில் அவருக்குச் சிலை எழுப்பியுள்ளார்.

    அந்தச் சிலையின் பீடத்தை மேம்படுத்தி அழகுபடுத்த வேண்டுமென்றும், அவரை அடக்கம் செய்த பரங்கிப்பேட்டையில் இராசேந்திரனுக்கு நினைவு மண்டபம் ஒன்றை எழுப்பி அவரது ஈகத்தைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது.
    • வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

    சென்னையில், காதலிப்பதாக கூறி அழைத்து சென்று 3 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வௌயிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன.

    சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும்.

    "SIR" போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது.

    இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடும் திராவிட மாடல் அரசு.
    • ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்கச் சொல்வேன்.

    திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினி, திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு. எல்லாருக்கும் எல்லாம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அனைவருக்குமான ஆட்சியைப் பாகுபாடின்றி வழங்கி வரும் திராவிட மாடல் எனும் மக்கள் அரசின் மீது தமிழ்நாடு எந்தளவு நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மதுரையில் மக்கள் பெருந்திரளுடன் நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் மெய்ப்பித்திருக்கிறது.

    தமிழர்களின் பண்பாடும், நாகரிகமும் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை அண்மையில் வெளியிடப்பட்ட 'இரும்பின் தொன்மை' என்கின்ற ஆய்வறிக்கையின் மூலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர்கள் இரும்புத் தாதிலிருந்து, இரும்பைப் பிரித்து எடுத்து, கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்த உலகின் மூத்த முன்னோடி நாகரிகம் என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம்.

    மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாபட்டி எனும் பழம்பெருமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க, பல்லுயிர்ச் சூழல் கொண்ட பகுதியில் டங்ஸ்டன் என்கின்ற கனிமத்தை எடுப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது, அதனைத் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை எதிர்த்து நின்றது திராவிட முன்னேற்றக் கழகம். டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு சட்ட விதிகளைத் திருத்தி ஏலம் விடுவதற்கு முனைப்பு காட்டியபோது, அதற்கும் கண்டனம் தெரிவித்துச் செயல்பட்டது திராவிட மாடல் அரசு.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா காட்டிய வழியில் செயல்படுகின்ற திராவிட மாடல் அரசு மதுரையில் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து, கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை நாடாளுமன்ற விவாதங்களில் உறுதியான குரலில் எதிரொலித்தனர்.

    சட்டமன்றத்திலும் இதற்கான தீர்மானத்தை உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் முன்னெடுத்து, மக்களின் குரலாக ஒலித்தேன். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமின்றி நம் தோழமைக் கட்சியினர், மாற்றுக் கட்சியினர் ஆகியோருடன் எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து ஆதரிக்கின்ற அளவில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.

    அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும், திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பணியச் செய்தது. டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியைக் கைவிடுவதாக ஒன்றிய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது.

    திராவிட மாடல் அரசின் உறுதியான நிலைப்பாட்டுடன் மக்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை அடுத்து, அரிட்டாபட்டி மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய பாராட்டுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புக்கட்டளை விடுத்தனர்.

    அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்று மறுநாளே குடியரசு நாளான ஜனவரி 26 அன்று சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியமே மதுரைக்கு புறப்பட்டேன். அவர்களிடம் உரையாற்றிய நான், இது என்னுடைய அரசின் வெற்றியல்ல. நம்முடைய அரசின் வெற்றி என்பதை உறுதிபடத் தெரிவித்தேன்.

    டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம ஏலங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் சட்டத்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தன்னுடைய கருத்தை பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத் தெரிவித்து இருந்தபோதும், சட்டமன்றத்தில் டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரித்ததையும் மற்ற கட்சிகள் ஆதரித்ததையும் மனதாரப் பாராட்டி, இது தமிழ்நாட்டின் வெற்றி என்பதை அரிட்டாபட்டி மக்களிடம் தெரிவித்தேன். அவர்கள் அதனை முழு மனதுடன் வரவேற்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    அரிட்டாபட்டி போலவே அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களும் தங்கள் நன்றியைத் தெரிவிப்பதற்காக வல்லாளப்பட்டியில் திரண்டு இருந்தனர். அவர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றதுடன், உங்களுக்கு என்றும் இந்த அரசு துணையாக இருக்கும் என்பதை தெரிவித்து, மக்கள் நலன் காப்பதில் திராவிட மாடல் அரசு எப்போதும் உறுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வழங்கினேன். அவர்களின் வாழ்த்து முழக்கங்களும் ஆரவாரமும் இந்த அரசு மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

    வல்லாளப்பட்டியில் கழகத் தொண்டர் ஒருவர் என்னிடம் ஒரு தாளைக் கொடுத்தார். அதனைப் படித்துப் பார்த்த பொழுது மிகவும் மனம் நெகிழ்ந்தேன். அதில், "டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யக்கோரி மக்களின் மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக நமது A.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி பகுதியில், நமது பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தந்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பு: கடந்த 1984ல் இதே இடத்தில் டாக்டர் கலைஞர் உரையாற்றினார். 41 வருடங்களுக்குப் பிறகு தற்போது எங்களது ஊரில் தாங்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது" என்று எழுதப்பட்டிருந்தது. கழகத் தொண்டரின் அந்த உணர்ச்சிமிகு சொற்களில் நான் என்னை மறந்தேன். இதுதான் தி.மு.க. என்கின்ற மக்கள் இயக்கம். எத்தனை ஆண்டுகள் இடைவெளி ஆனாலும் மக்களின் உரிமைக்காக இன்றும் துணை நிற்கின்ற மாபெரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் உங்களில் ஒருவனாக என்னுடைய தலைமையிலான திராவிட மாடல அரசு உறுதியாக இருக்கிறது. டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை மக்களின் ஆதரவுடன் ரத்து செய்த பெருமையுடன், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறேன். விழுப்புரம் மாவட்ட மக்களின் கோரிக்கையை மட்டுமின்றி, நம் உயர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரோடு கலந்த உடன்பிறப்புகளான உங்களையும் சந்தித்து மகிழ்வேன்! ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்கச் சொல்வேன்!.

    இவ்வாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×