என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மயிலாடுதுறையில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • கேரளாவை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களிலும், மயிலாடுதுறையில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தில் மட்டும் 15 இடங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது.

    இந்நிலையில் புரசைவாக்கம் கஸ்தூரி ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஓட்டுநர் அல்பாசித் அமீனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலை சேர்ந்தவராவார்.

    சென்னையில் 8 மாதங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றிக்கொண்டே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது அம்பலமாகி உள்ளது.

    கேரளாவை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை கைப்பற்றிய நிலையில் அல்பாசித்தை கைது செய்துள்ளனர்.

    • ஒவ்வொரு திரையிலும் சுமார் 700- க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் திரையரங்கம் இருந்து வந்தது.
    • விரைவில் குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

    சென்னை :

    சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது. கார்பரேட் நிறுவனங்களால் மல்டிப்ளெக்ஸ் திரைகள் அறிமுகமாவதற்கு முன்னரே சென்னையில் 4 திரைகளுடன் சினிமா ரசிகர்களின் கோட்டையாக விளங்கியது.

    ஒவ்வொரு திரையிலும் சுமார் 700- க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் இந்தத் திரையரங்கம் இருந்து வந்தது. இருப்பினும் காலத்திற்கேற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரத் தவறியதாலும், திரையரங்க பங்கு தாரரர்களுக்குள் ஏற்பட்ட சொத்து பிரச்சனை காரணமாகவும் திரையரங்கின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின.

    இந்நிலையில் திரையரங்கத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில் திரையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

    • பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
    • புறநகர் ரெயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனிடையே, சென்னையில் ராயபுரம், பிராட்வே, எழும்பூர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. மேலும் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கினர்.

    மேலும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சென்னைக்கு வர வேண்டிய ரெயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சேரன் விரைவு ரெயில், நெல்லை விரைவு ரெயில், முத்துநகர் விரைவு ரெயில் உள்ளிட்ட பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனிடையே, புறநகர் ரெயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • கொல்லச்சேரி, பஜார் தெரு, நல்லு ரோடு குன்றத்தூர், ஒண்டி காலனி, திருப்பதி நகர், திருமலை நகர், சுப்புலட்சுமி நகர், சரவணா நகர்.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் முழுப் பகுதி, செந்தில் நகர் முழுப் பகுதி, கோவில்பதாகை முழுப் பகுதி, வைஷ்ணவி நகர் முழுப் பகுதி, நாகம்மை நகர், எச்விஎஃப் சாலை, ஆவடி மார்க்கெட், அசோக் நகர் காந்தி நகர், மோரை வீராபுரம், கன்னியம்மன் நகர், டிஎஸ்பி முகாம், போண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், கொடுவேளி, கவுதிபுரம்

    ராமாபுரம்: ஐபிஎஸ் காலனி, முழு ராமாபுரம் பகுதி, முழு மணப்பாக்கம் பகுதி, முகலிவாக்கம், கொளப்பாக்கம் முழு பகுதி, வெங்கடேஸ்வரா நகர், பூதப்பேடு, ராமச்சந்திரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர் மற்றும் கான் நகர், எம்ஜிஆர் நகர் நெசப்பாக்கம், கே.கே. பொன்னுரங்கம் சாலை (வளசரவாக்கம்).

    அடையாறு: கால்வாய் கரை சாலை (புற்றுநோய் மருத்துவமனை), 4-வது பிரதான சாலை காந்தி நகர் (ஒரு பகுதி), 2-வது கால்வாய் குறுக்குத் தெரு, காந்திநகர், புற்றுநோய் மருத்துவமனை முதல் விவேக் ஷோரூம், 1-வது பிரதான சாலை காந்தி நகர், 2-வது மற்றும் 3-வது குறுக்கு, காந்தி நகர், கிரசண்ட் அவென்யூ காந்தி நகர் (குமாரராஜா காலேஜ்) 1-வது & 2-வது கிரசென்ட் பூங்கா சாலை, காந்தி நகர் 2-வது பிரதான சாலை, 4-வது மெயின் ரோடு, காந்தி நகர் (பம்பிங் ஸ்டேஷன், மலர் மருத்துவமனை, மல்லிப்பூ நகர்) 2-வது பிரதான சாலை, காந்தி நகர் ஒரு பகுதி) 3-வது & 1-வது பிரதான சாலை காந்தி நகர் 1-வது குறுக்குத் தெரு, கால்வாய் கரை சாலை (முழு பகுதி), 3-வது கால்வாய் குறுக்குத் தெரு முதல் 4-வது பிரதான சாலை, கால்வாய் கரை சாலை, காமராஜ் அவென்யூ 1-வது & 2-வது தெரு, டீச்சர்ஸ் காலனி, ஜஸ்டிக் ராமசம் அவென்யூ, கஸ்தூரிபாய் நகர் 7-வது & 8-வது தெரு, 7-வது, 8-வது, 9-வது, 14-வது மற்றும் 15-வது குறுக்குத் தெரு.

    குன்றத்தூர்: பாபு கார்டன், திருச்செந்தூர்புரம், கொல்லச்சேரி, பஜார் தெரு, நல்லு ரோடு குன்றத்தூர், ஒண்டி காலனி, திருப்பதி நகர், திருமலை நகர், சுப்புலட்சுமி நகர், சரவணா நகர்.

    திருமுடிவாக்கம்: திருமுடிவாக்கம் சிட்கோ 8-வது தெரு, திருமுடிவாக்கம் சிட்கோ மெயின் ரோடு லேன், வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர், திருமுடிவாக்கம் நகரின் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகநாதா நகர், பழந்தண்டலம், நாகன் தெரு.

    பெருங்களத்தூர்: பூமாலை, மப்பேடு, கலைஞர் நகர், முருகன் அவென்யூ, ரூபி வில்லா, ஸ்ரீ சாய் அவென்யூ, வெங்கம்பாக்கம் பிரதான சாலை, எஸ்பி அவென்யூ, அசோக் நகர், என்ஆர்கே நகர், எம்எம் வில்லா, ஜிகேஎம் கல்லூரி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2,500 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
    • போர் விமானியாக நியமிக்கப்பட்டார்.

    தாம்பரம் விமானப்படை தளத்தின் புதிய தலைவராக ஏர் கமாடோர் தபன் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டார். இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. தலைமை மாற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு முழு மரியாதையுடனும் இராணுவ மரபுகளை பின்பற்றி நடத்தப்பட்டது.

    ஏர் கமாடோர் தபன் சர்மா டிசம்பர் 1997-ம் ஆண்டு இந்திய விமானப் படையின் பறக்கும் பிரிவில் போர் விமானியாக நியமிக்கப்பட்டார். அவர் ஏ வகை தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர் ஆவார். மேலும், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பணியாளர் சேவைகள் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

    இந்திய வான்படையின் பல்வேறு வகையான விமானங்களில் 2,500 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். தனது 25 ஆண்டுகால வாழ்க்கையில், இரண்டு போர் விமான ஸ்குவாட்ரன்கள், விமானப்படையின் விமானப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றுக்கு தலைமை வகித்துள்ளார்.

    • தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நாளை அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது.
    • இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் கோவிலுக்கு தை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் சாமி தரிசனம் செய்ய வருவதும் வழக்கம்.

    தை அமாவாசையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையொட்டி கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் கடலில் புனித நீராடவும் தீர்த்தக் கிணறுகளில் நீராடி மற்றும் சாமி தரிசனம் செய்யவும் வசதியாக பல்வேறு இடங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன.

    மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து கோவிலின் ரதவீதி சாலையிலும் போலீஸ் சார்பிலும் தடுப்பு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நாளை அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது. 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் பூஜை நடக்கிறது. தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெறுகின்றது. வழக்கமாக பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    அமாவாசை என்பதால் பகல் முழுவதும் நடை திறந்திருக்கும். இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அது போல் தை அமாவாசையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ராமேசுவரம் கோவிலில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை சூப்பிரண்டு சாந்தமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் உத்திரபாண்டி, தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்களின் வசதிக்காக புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வர உள்ளது.
    • திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனை முயற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    தமிழக அரசு, பொதுமக்கள் நிலம் தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கும், நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்கும் https://eservices.tn.gov.in/eservicesnew/ index.html என்ற இணையதளம் மூலம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் தங்களது வீடு, நிலம் மற்றும் அனைத்து சொத்துகளுக்கான பட்டா மற்றும் வரைபடங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால் இப்போது செல்போன் எண் கொடுத்து அதில் வரும் ஓ.டி.பி. மூலம் தான் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். அதுவும் ஒரு செல்போனுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 8 முறை மட்டுமே ஆவணங்களை பெற முடியும். இந்த முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசு இந்த கட்டுப்பாடுகளை நீக்க மறுத்து விட்டது.

    இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வர உள்ளது. இப்போது உள்ள நடைமுறையின்படி, பட்டாவையும், அந்த நிலத்திற்கான வரைபடத்தையும் தனித்தனியாக தான் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. கொடுத்து பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இனிமேல், மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றுடன் சர்வே விவரங்களை கொடுத்துவிட்டாலே, பட்டாவுடன், அதன்கீழ் வரைபடமும் ஒரு சேர வந்துவிடும். அதன் மூலம் பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டா மற்றும் வரைபடங்களை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

    இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனை முயற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அதில் முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதனை பிரிண்ட்-அவுட் எடுப்பதில் சில இடையூறுகள் ஏற்பட்டது. எனவே அதனை மேம்படுத்திவிட்டு, விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் தங்களது சொத்திற்கான அளவு, வரைபடங்களை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

    • ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தில் மட்டும் 15 இடங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களிலும், மயிலாடுதுறையில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தில் மட்டும் 15 இடங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. 

    • 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது.
    • தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி நாளை காலை 6.23 மணிக்கு, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையல், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஞானசேகரனின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னை ஐகோர்ட்டில் நைஜீரியாவைச் சேர்ந்த கைதி எக்விம் கிங்க்ஸ்லி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    • வெளிநாட்டு கைதிகளுக்கு காலை உணவு சிறையில் வழங்கப்படுவதில்லை என்று கூறினார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துக் கொடுப்பது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் நைஜீரியாவைச் சேர்ந்த கைதி எக்விம் கிங்க்ஸ்லி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.சுந்தரேசன் ஆஜராகி, 'வெளிநாட்டு சிறைக் கைதிகள் நலன் தொடர்பாக விதிகள் உள்ளதா? என்பது குறித்து விளக்கமளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

    மனுதாரர் தரப்பில், 'வெளிநாட்டு கைதிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் காலை உணவு சிறையில் வழங்கப்படுவதில்லை' என்று கூறினார். இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை தரப்பில் மறுத்தது. 'கைதிகளுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படுகிறது' என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து, 'வெளிநாட்டு சிறைக் கைதிகளாக இருந்தாலும் அவர்களை மனிதத் தன்மையுடன் நடத்த வேண்டும். அவர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும். வெளிநாட்டு சிறைக் கைதிகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்தே அந்த நாட்டில் நம் நாடு குறித்து மதிப்பிடு செய்யப்படும்' என்று கூறி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்

    • பருவ மழை மூலம் கிடைக்கும் நீர் இந்த ஏரிகளின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
    • புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது. இதில் பூண்டி ஏரிக்கு தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. நீர், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படுகிறது. அதேபோல், பருவ மழை மூலம் கிடைக்கும் நீர் இந்த ஏரிகளின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

    இதற்கிடையே ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் போதிய நீர் ஏரிகளில் சேமிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் 3.231 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 3.231 டி.எம்.சி. அதாவது 100 சதவீதம் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. அதேபோல் 1.081 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 346 மில்லியன் கன அடி இருப்பு மூலம் 32.01 சதவீதம் நீர் உள்ளது.


    இதேபோல் 3.300 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3.136 டி.எம்.சி. இருப்பு மூலம் 95.03 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 471 மில்லியன் கன அடி இருப்பு மூலம் 94.20 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 3.645 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3.289 டி.எம்.சி. இருப்பு மூலம் 90.23 சதவீதம் நீர் இருப்பு இருக்கிறது.

    1.465 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 1.465 மில்லியன் கன அடி இருப்பு மூலம் ஏரி 100 சதவீதம் நிரம்பி உள்ளது.

    13.222 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த 6 ஏரிகளிலும் சேர்த்து 11.938 டி.எம்.சி. நீர் இருப்பதன் மூலம் 90.29 சதவீதம் நீர் மொத்த இருப்பு உள்ளது. இதன் மூலம் அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான நீர் கையிருப்பில் உள்ளது. பூண்டி மற்றும் வீராணம் ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. தொடர்ந்து புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளன. இதனால் அனைத்து ஏரிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

    ×