என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது
- பருவ மழை மூலம் கிடைக்கும் நீர் இந்த ஏரிகளின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
- புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
சென்னை:
சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது. இதில் பூண்டி ஏரிக்கு தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. நீர், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படுகிறது. அதேபோல், பருவ மழை மூலம் கிடைக்கும் நீர் இந்த ஏரிகளின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இதற்கிடையே ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் போதிய நீர் ஏரிகளில் சேமிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் 3.231 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 3.231 டி.எம்.சி. அதாவது 100 சதவீதம் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. அதேபோல் 1.081 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 346 மில்லியன் கன அடி இருப்பு மூலம் 32.01 சதவீதம் நீர் உள்ளது.
இதேபோல் 3.300 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3.136 டி.எம்.சி. இருப்பு மூலம் 95.03 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 471 மில்லியன் கன அடி இருப்பு மூலம் 94.20 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 3.645 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3.289 டி.எம்.சி. இருப்பு மூலம் 90.23 சதவீதம் நீர் இருப்பு இருக்கிறது.
1.465 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 1.465 மில்லியன் கன அடி இருப்பு மூலம் ஏரி 100 சதவீதம் நிரம்பி உள்ளது.
13.222 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த 6 ஏரிகளிலும் சேர்த்து 11.938 டி.எம்.சி. நீர் இருப்பதன் மூலம் 90.29 சதவீதம் நீர் மொத்த இருப்பு உள்ளது. இதன் மூலம் அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான நீர் கையிருப்பில் உள்ளது. பூண்டி மற்றும் வீராணம் ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. தொடர்ந்து புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளன. இதனால் அனைத்து ஏரிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.






