என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
    • பாராளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    25.1.2025 ம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், மீனவர்களது படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது என்றும்,

    விடியா திமுக அரசு மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது வேலை முடிந்துவிட்டதாக கருதி அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவதாக பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்கவும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் 39 எம்.பி-க்களும் பாராளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறேன்.

    மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.



    • முதல் ஆண்டு நிறைவு விழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார்.
    • கட்சிக்கு ஏற்கனவே 19 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வருகிற பிப்ரவரி 2-ந்தேதியுடன் 1 வருடம் நிறைவு பெறுகிறது.

    முதல் ஆண்டு நிறைவு விழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 கொள்கை தலைவர்கள் சிலைகளை கட்சி தலைவர் விஜய் திறந்து வைப்பதுடன் கட்சி கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதுமட்டுமின்றி கட்சி முதலாமாண்டு விழாவை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், அன்னதானங்கள் வழங்கி கோலாகலமாக கொண்டாட கட்சி தலைவர் விஜய் வலியுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

    கட்சிக்கு ஏற்கனவே 19 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் மீதமுள்ள மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்போதே விழாவுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி கிளை வாரியாக விழாவை சிறப்பாக நடத்தி அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் பொதுமக்களை நேரடியாக சென்று சேரும் வகையில் அதற்கான பணிகளில் நிர்வாகிகள் செயல்படும்படி கட்சி தலைமையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம் ஆகிய 4 தொகுதிகளிலும் மாவட்ட நிர்வாகி தி.நகர் அப்புனு தலைமையில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம், கட்சி பெயர் பலகைகள் புதிதாக திறப்பு, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையற்ற நோட்டு, புத்தகங்கள் வழங்குதல் உள்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கின்றது.

    சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர், மதுரவாயல், கொளத்தூர், ஆவடி ஆகிய தொகுதிகளில் பொதுமக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

    5 பள்ளி கூடங்களுக்கு கம்ப்யூட்டர் சாதனங்கள் மற்றும் பெண்களுக்கு தையல் எந்திரங்கள், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் ஏழைகளுக்கு விலையில்லா வேஷ்டி, சேலைகள் வழங்கி கொடி ஏற்றுதல் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோலாகலமாக முதலாமாண்டு விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.
    • ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை, வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக சார்பில் சுற்றுலா வளாகத்தில் இருந்து திருச்செந்தூர், ராமேசுவரத்திற்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் ராமேசுவரம், சென்று மீண்டும் திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

    முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவில், ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில், ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சாமி கோவிலில் சிறப்பு தரிசனம், 22 தீர்த்தங்கள் தொடர்ந்து தனுஷ்கோடியையும் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்ய www.ttdconline.com இணையதள பக்கத்திலும் அல்லது சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 180042531111 (கட்டணமில்லா தொலைபேசி எண்) மற்றும் 044-2533 3333 மற்றும் 044-2533 3444 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் கூறி உள்ளார்.

    • கடும் குளிர் காரணமாக அதிகாலை நடைபயிற்சி செல்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    பெரும்பாறை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தற்போது சராசரியாக 7 டிகிரி செல்சியஸ் முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நிலவுகிறது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். கடும் பனியால் பயிர்களும் பாதிப்படைவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். நகர் பகுதி மட்டுமின்றி மலை கிராமங்களிலும் பனி வாட்டி வருகிறது.

    கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூலத்தூர், மங்களம்கொம்பு, கும்பரையூர், மஞ்சள்பரப்பு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை போன்ற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெயிலுக்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் காலை 10 மணிக்கு மேல் தான் வெயில் வருகிறது. பெரும்பாலான நேரங்களில் அதுவும் வருவதில்லை. அதே போல் மாலை 4 மணிக்கு மேல் குளிர் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. கடும் குளிர் காரணமாக அதிகாலை நடைபயிற்சி செல்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

    மொத்தத்தில் வாட்டி எடுத்து வரும் கடும் குளிர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வருகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    • பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது.
    • பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஜெகமுத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தை மாதம் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம்.

    அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு திருமணம், குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்களுடன் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.

    இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது. முன்னதாக கோவிலில் ஜெகமுத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரி அம்மனை பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடை வீதி, தென் கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மேடையில் அம்மன் எழுந்தருள, பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.

    தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு உண்டனர். சில நாட்களில் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு பயணமாக செல்ல உள்ளனர்.

    • வெற்றி புள்ளிகள் தொடர்பாக சிறிய மன கசப்பும், அதனை தொடர்ந்து சிறு வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
    • தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    2024-25-ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அளவிலான பெண்கள் கபடி போட்டி பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டத்தில் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது.

    தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா, பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களில் இருந்து 36 வீராங்கனைகள் சென்றிருந்தனர். அவர்களுடன், 3 மேலாளர்கள், 3 பயிற்றுநர்கள் சென்றனர். அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டி நடைபெற்றது.

    தமிழ்நாடு- பீகார் இடையிலான போட்டியில் போட்டியின்போது, வெற்றி புள்ளிகள் தொடர்பாக சிறிய மன கசப்பும், அதனை தொடர்ந்து சிறு வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வீராங்கனையின் மீது தாக்குதல் நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில், பயிற்சியாளர் பாண்டியராஜனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    இந்த விவகாரம் தெரியவந்தவுடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உடனடியாக அங்குள்ள மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் பேசி, தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டார்.

    இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் பஞ்சாபிற்கு கபடி போட்டியில் விளையாட சென்ற தமிழக வீராங்கனைகள் தமிழகம் திரும்பினர்.

    கபடி பயிற்சியாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், துணை முதலமைச்சர் உதவியால் பஞ்சாபில் இருந்து பாதுகாப்பாக தமிழகம் திரும்பி உள்ளோம். தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பற்ற சூழலில் இருந்தோம். உடனடியாக துணை முதலமைச்சர் தொடர்பு கொண்டார்.

    போட்டியின்போது அருகில் டிஎஸ்பி அமர்ந்திருந்தார். துணை முதல்வர் பேசிய உடன் அவர் எங்களை நடத்தும் தன்மையே மாறியது.

    நமது அணி வீராங்கனையை எதிரணியினர் தாக்க முயற்சித்தபோது தற்காப்புக்காக தமிழக வீராங்கனைகள் தாக்கினர். துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டால் பத்திரமாக காக்கப்பட்டோம்.

    உடனடியாக டெல்லி அழைத்து வந்து தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்து தற்போது சென்னை அழைத்து வரப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

    தமிழக கபடி பயிற்சியாளரை தனியாக அழைத்து சென்றும் தாக்கியதாக வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.

    • நீரும், சோறும் இல்லை என்றால் ஒரு நாட்டில் புரட்சி வெடிக்கும்.
    • தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சம்பத் நகர் பகுதியில், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

    இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தி.மு.க. அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தது. தமிழுக்கும், தமிழினத்திற்கும் தி.மு.கவும், கருணாநிதியும் பல துரோகங்களைச் செய்துள்ளனர். அதனை பொறுக்க முடியாமல் தான் நாம் தமிழர் இயக்கம் உருவானது.

    நாட்டு மக்களுக்கு மொபைல்போன், கார் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்க அரசிடம் திட்டம் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு உணவு கொடுக்க அரசிடம் திட்டம் இல்லை. நீரும், சோறும் இல்லை என்றால் ஒரு நாட்டில் புரட்சி வெடிக்கும். இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் இது நடந்துள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சொத்துவரி, மின்கட்டண உயர்வு பற்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. சாராய விற்பனையைத் தவிர இவர்களுக்கு வருவாய் தரும் மாற்றுத் திட்டம் இல்லை.

    எனவே வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து, நான் வாக்காளர்களை ஏமாற்ற விரும்பவில்லை. நாங்கள் குறைகேட்க வரவில்லை. குறைதீர்க்க வந்திருக்கிறோம். 100 நாள் வேலைத்திட்டத்தில், சோம்பி உட்கார்ந்து இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றனர்.

    அவர்கள் தினம் ஒரு மரம் நட்டிருந்தால் கூட பூமி பசுமையாகி இருக்கும். 100 நாள் வேலை திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. தமிழகத்தில் முன்பு இந்தி திணிக்கப்பட்டது.

    இப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலை நிமித்தமாக குடியேற்றம் செய்யும் சதி நடக்கிறது. இதனை தடுத்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு, நல்ல வாழ்க்கை வழங்க நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும்.

    மக்கள் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையத்தை கட்டிக் காட்ட முடியுமா? பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்லும் நாளை நான் உருவாக்குவேன். நீங்கள் எல்லாம் சூத்திரன் என்று சொல்லி பெரியார் நம்மை ஏமாற்றினார். அதில் நானும் ஏமாந்தேன்.

    திராவிடர்களுக்கு ஒரு பெரியார் தான். தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள் இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் எங்களுக்கு வாக்களித்து நம்பிக்கையோடு ஒரு அடி எடுத்து வையுங்கள். மாபெரும் அரசியல் புரட்சிக்கான காலடித்தடம் ஈரோடு கிழக்கில் தொடங்கட்டும். இந்த வெற்றி தமிழ் தேசிய இனத்தின் வெற்றியாக கருதி எங்களுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம்.
    • ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.

    வடவள்ளி:

    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மருதமலை கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணி, மருதமலை அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை வைக்கும் இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 2,400 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. குறிப்பாக தமிழ்க்கடவுள் முருகன் கோவில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 90 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

    60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்களை அறுபடை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல இருப்பிட வசதி, போக்குவரத்து வசதியோடு ஏற்பாடு செய்துள்ளோம்.

    பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட 7 முருகன் கோவில்கள் பெருந்திட்ட பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    மருதமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    மருதமலை கோவிலில் நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணிகள் மே மாதத்தில் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும்.

    மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை அமைக்கப்பட உள்ளது. இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டது. இதற்கான ஆய்வு நடந்து வருகிறது. முதலமைச்சரின் அனுமதியுடன் தமிழ்கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது அமையும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் 11 கோவில்களில் முழு நேர அன்னதானம் வழங்கப்படுகிறது. 17 கோவில்களில் ஒரு நேர அன்னதானத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.

    தைப்பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அன்னதான பிரபுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும்,

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொடிமரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    • கொடியேற்றத்துக்காக 75 அடி உயர மூங்கில் மரம் வெட்டி எடுத்து வரப்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகுவி மரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி நாளை காலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடக்கிறது.

    அதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் முன்புள்ள கொடிக்க ம்பத்தில் குண்டம் திருவிழாவுக்கான கொடியேற்றப்படுகிறது.

    அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 1 மணிக்கு மயான பூஜையும், 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30க்கு மகா பூஜை நடக்கிறது.

    13-ந் தேதி(வியாழன்) காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை 6.30 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்து இழுத்தல், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் திரு விழா வருகிற 14-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏராளமான விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர்.

    15-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கொடி இறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.

    முன்னதாக குண்டம் திருவிழாவையொட்டி, மாசாணியம்மன் கோவிலில் கொடியேற்றுவதற்காக, சர்க்கார்பதி வனத்தில் இருந்து கொடிமரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    100-க்கும் மேற்பட்டோர் வனத்திற்கு சென்று 75 அடி உயர மூங்கில் மரத்தை வெட்டி சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். 

    • விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
    • விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அதன்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அவருக்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



    மேலும், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். 

    • மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது.
    • போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.

    கோவை:

    கோவையை அடுத்த மேற்குத்தொடர்ச்சிமலை பூண்டியில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலின் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக உள்ள 7 மலைகளை கடந்து அங்கு சுயம்புவடிவில் காட்சி தரும் சிவனை தரிசிக்க, ஆண்டுதோறும் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம்.

    வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வாரம் வரையிலும் வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள்.

    மேலும் மகாசிவராத்திரி மற்றும் சித்ராபவுர்ணமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து, 7 மலைகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக, வனத்துறையினர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

    இதில் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரையிலும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே அதுபோன்ற பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    வெள்ளியங்கிரி கோவில் மற்றும் மலையேறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.

    • வெள்ளி விலை மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக கடந்த வாரம் ஒரு சவரன் ரூ.60,440-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,510-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.60,080-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலை மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,320

    26-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

    25-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

    24-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

    23-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    26-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    25-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    24-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    23-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    ×