என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
    • வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஒரு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.

    இந்த வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை அடகு நகைகளை சோதனை செய்வது வழக்கம், அதன்படி கடந்த 24-ந் தேதி வழக்கம் போல அடமான நகைகளை மற்றொரு வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கெங்கவல்லியை அடுத்த கூடமலை, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் கணக்கில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 41 லட்சம் பெற்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வங்கியின் மேலாளார் மித்ரா தேவி வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தரிடம் விசாரித்தார். அதில் அவர் 84 பவுன் தங்க முலாம் பூசிய போலி நகையை 2 பேரின் பெயரில் வைத்து பணத்தை எடுத்தது தெரிய வந்தது. மேலும் அதில் பாதி பணத்தை திரும்ப செலுத்தி உள்ளார்.

    இதுகுறித்து வங்கி மேலாளர் கெங்கவல்லி போலீசில் பாலச்சந்தர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாலச்சந்தரை கைது செய்தனர்.

    மேலும் வங்கி மேலாளர் மித்ரா தேவி, உதவி மேலாளர் ஜெகன், வங்கி கேசியர் வேலுசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தர் ஏற்கனவே நடுவலூர் வங்கி கிளையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கெங்கவல்லி கிளைக்கு மாற்றப்பட்டார். அங்கு 11 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் பாலச்சந்தர் ரூ.1 கோடி மதிப்பிலான வீடு கட்டியுள்ள நிலையில் மற்றொரு சொத்து வாங்குவதற்காக போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நூற்றாண்டு கடந்த திமுக இன்றளவும் சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருகிறது.
    • விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 231 திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    வீரத்தின் விளைநிலம் விழுப்புரம் மாவட்டம். வரலாறு பெருமை கொண்டது விழுப்புரம் என்று பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இலக்கிய புகழும், பெருமைகளும் நிறைந்த மாவட்டம் விழுப்புரம்.

    * விழுப்புரத்தின் பெருமையை பற்றி பேச நாளும் பொழுதும் பத்தாது.

    * கோவிந்தசாமி நினைவரங்கம், சமூக நீதி போராளிகள் நினைவாக மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

    * வாழ்நாள் எல்லாம் எண்ணி பெருமைபடும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.

    * தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தவர் ஏ. கோவிந்தசாமி.

    * தமிழகத்தில் உதயசூரியன் சின்னத்தில் நின்று முதலில் வென்றவர் ஏ.கோவிந்தசாமி.

    * வன்னிய சமுதாய மக்கள் இடஒதுக்கீடு கேட்டு போராடிய போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    * இன்றும் துடிப்பு மிக்க போராளியாக திகழ்பவர் பொன்முடி.

    * அதிமுக ஆட்சியில் காக்கை, குருவிகளை போல் போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    * மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர்.

    * இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பென்சன் வழங்கியவர் கலைஞர்.

    * ராமசாமி படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்ட தி.மு.க. ஆட்சியில் தான்.

    * சமூகநீதியை நிலைநாட்டுவது தான் திராவிட இயக்கத்தின் நோக்கம்.

    * சொன்னபடியே 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

    * பிற்படுத்தப்பட்டோர் இன்று முன்னேறுவதற்கு கருணாநிதியை காரணம்.

    * சமூகநீதி அகில இந்திய அளவில் போராடி வருவதும் திமுக தான்.

    * நூற்றாண்டு கடந்த திமுக இன்றளவும் சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருகிறது.

    * விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * சாத்தனூர் அணையின் உபரிநீர் நந்தன் கால்வாய்க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சாத்தனூர் அணை உபரிநீருக்காக ரூ.304 கோடி செலவில் நந்தன் கால்வாய்திட்டம் செயல்படுத்தப்படும்.

    * 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * சங்கரபாணி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும்.

    * விக்கிரவாண்டி பேரூராட்சியில் பல்நோக்கு சமுதாய கூடம் அமைக்கப்படும்.

    * செஞ்சி, மரக்காணத்தில் தலா ரூ.5 கோடியில் புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

    * ரூ.5 கோடியில் திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் வழங்க திட்டம்.

    * நிதி மட்டுமே தடையாக உள்ளது, வேறு எந்த தடையும் எங்களுக்கு இல்லை.

    * குறை சொல்வது எதிர்க்கட்சி தலைவர்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள குறைபாடு

    * எந்த பாகுபாடும் பார்க்காமல் முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.

    * நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது அல்ல நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே எனது இலக்கு.

    * நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதை அடையவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றார். 

    • முதலமைச்சருக்கு கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் முதலமைச்சர் செல்பி எடுத்துக்கொண்டார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரோட் ஷோ மூலமாக சாலைகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திண்டிவனம் பகுதியில் கோரிக்கை மனுவை பெற்றார்.

    இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரி வரை சாலையில் நடந்தே சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் அவர் செல்பி எடுத்து கொண்டார்.

    அப்போது முதலமைச்சருக்கு கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாற்றுதிறனாளிகள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் என பலதரபட்டவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றபோது பெண் ஒருவர் செல்பி எடுக்க கேட்டு கொண்டதின் பேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்ணின் செல்போனை வாங்கி செல்பி எடுத்துக்கொண்டு பெண்ணிடம் செல்போனை கொடுத்தார்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள், விவசாயிகள், வக்கீல்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முதலமைச்சர் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

    • நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.
    • தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் ஊராட்சி சவுளுகொட்டாய், பூசாரி கொட்டாய், சின்ன பாளேத்தோட்டம் மற்றும் மொளுகனூர் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த தார் சாலையானது தற்பொழுது வருவாய் துறை அதிகாரிகள் இந்த பாதையானது நீர் வழிப்பாதையெனவும் இந்த தார் சாலையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கிராமங்களுக்கு செல்ல வேறுமாற்று பாதை இல்லாத நிலையில் தற்பொழுது கிராம மக்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தார் சாலையை தூர்வாரி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊரின் முகப்பு வரை கால்வாய் தூர்வாரும் பணியானது முடிவுற்ற நிலையில் தற்போது கிராம மக்கள் பயன்படுத்தி வந்த தார் சாலையில் தூர்வார அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.

    கிராம மக்கள் மாற்று பாதை அமைத்து தந்த பின்னரே கால்வாயினை தூர்வார வேண்டும் என நூதன முறையில் வீடுகளின் முன்பும், தெருக்களின் முன்பும் கருப்பு கொடியினை கட்டி தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    வீடுகளில் முன்பு கருப்பு கொடிகளை கட்டி பாதை கேட்டு போராட்டம் நடத்தி வரும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் விரைந்து பாதைக்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

    • தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
    • நடிகர் தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

    நடிகை நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம் பெற்று இருந்தது.

    இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 22-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

    நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    இதற்கு தனுஷின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் அனைத்தும் தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். இந்தப் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும்போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்பந்தமிடப்பட்டு, அதில் அவரும் கையெழுத்திட்டுள்ளார், படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது என்று வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    நடிகர் தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனர். தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரிய நெட்பிளிக்சின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது எனக்கூறி நெட்பிளிக்ஸ் மனுவை நிராகரித்தனர்.

    இதைத்தொடர்ந்து வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கை பிப்.5-க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணை மூலம் 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர ஏராளமான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறப்பது வழக்கம்.

    அணையின் நீர் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறிப்பிட்ட நாளில் அல்லது பின்னர் திறக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு ஒரு மாதம் தாமதமாக ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அதிக அளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பான உத்தரவு வந்ததும் அதிகாரிகள் தண்ணீர் நிறுத்தம் செய்வார்கள்.

    • வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன் உபயோகிக்க மற்றும் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் சினிமா துணை நடிகரான செல்வா என்பவர் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வது போல உள்ளே சென்று செல்போனில் அத்துமீறி வீடியோ எடுத்துள்ளார்.

    அந்த வீடியோவில் கருவறையில் உள்ள மூலவரையும் வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஆன்லைன் மூலம் துணை நடிகர் செல்வா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த ஆய்வின் போது முடிவுற்ற திட்டங்களையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார். அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987-ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது. குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ. 5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் அருகில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி முழுஉருவ சிலையுடன் ரூ. 4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



    இதனை தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். ரூ. 133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவரிடம் மனுக்களை வழங்கினர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகையையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷாமிட்டல் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 20 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர்.
    • படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

    காரைக்கால்:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிறை பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக வேதாரண்யம், ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

    காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் கோடியக் கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

    மீனவர்களை சிறை பிடித்த போது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளனர்.

    சமீபத்தில்தான் 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது 13 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
    • பாராளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    25.1.2025 ம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், மீனவர்களது படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது என்றும்,

    விடியா திமுக அரசு மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது வேலை முடிந்துவிட்டதாக கருதி அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவதாக பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்கவும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் 39 எம்.பி-க்களும் பாராளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறேன்.

    மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.



    • முதல் ஆண்டு நிறைவு விழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார்.
    • கட்சிக்கு ஏற்கனவே 19 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வருகிற பிப்ரவரி 2-ந்தேதியுடன் 1 வருடம் நிறைவு பெறுகிறது.

    முதல் ஆண்டு நிறைவு விழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 கொள்கை தலைவர்கள் சிலைகளை கட்சி தலைவர் விஜய் திறந்து வைப்பதுடன் கட்சி கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதுமட்டுமின்றி கட்சி முதலாமாண்டு விழாவை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், அன்னதானங்கள் வழங்கி கோலாகலமாக கொண்டாட கட்சி தலைவர் விஜய் வலியுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

    கட்சிக்கு ஏற்கனவே 19 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் மீதமுள்ள மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்போதே விழாவுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி கிளை வாரியாக விழாவை சிறப்பாக நடத்தி அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் பொதுமக்களை நேரடியாக சென்று சேரும் வகையில் அதற்கான பணிகளில் நிர்வாகிகள் செயல்படும்படி கட்சி தலைமையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம் ஆகிய 4 தொகுதிகளிலும் மாவட்ட நிர்வாகி தி.நகர் அப்புனு தலைமையில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம், கட்சி பெயர் பலகைகள் புதிதாக திறப்பு, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையற்ற நோட்டு, புத்தகங்கள் வழங்குதல் உள்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கின்றது.

    சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர், மதுரவாயல், கொளத்தூர், ஆவடி ஆகிய தொகுதிகளில் பொதுமக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

    5 பள்ளி கூடங்களுக்கு கம்ப்யூட்டர் சாதனங்கள் மற்றும் பெண்களுக்கு தையல் எந்திரங்கள், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் ஏழைகளுக்கு விலையில்லா வேஷ்டி, சேலைகள் வழங்கி கொடி ஏற்றுதல் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோலாகலமாக முதலாமாண்டு விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.
    • ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை, வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக சார்பில் சுற்றுலா வளாகத்தில் இருந்து திருச்செந்தூர், ராமேசுவரத்திற்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் ராமேசுவரம், சென்று மீண்டும் திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

    முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவில், ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில், ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சாமி கோவிலில் சிறப்பு தரிசனம், 22 தீர்த்தங்கள் தொடர்ந்து தனுஷ்கோடியையும் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்ய www.ttdconline.com இணையதள பக்கத்திலும் அல்லது சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 180042531111 (கட்டணமில்லா தொலைபேசி எண்) மற்றும் 044-2533 3333 மற்றும் 044-2533 3444 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் கூறி உள்ளார்.

    ×