என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    30-ந்தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    31-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    01-ந்தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    02-ந்தேதி மற்றும் 03-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • அதிகாலை ஒரே படகில் நடுக்குப்பம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
    • சிறிது நேரத்தில் பாஸ்கர், ராஜி ஆகியோரது உடல்கள் மெரினா கடற்கரை அருகே கரை ஒதுங்கியது.

    ராயபுரம்:

    சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர் (வயது 61), ராஜி (35). மீனவர்கள். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை ஒரே படகில் நடுக்குப்பம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது ராட்சத அலையில் சிக்கிய படகு கடலில் கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் பாஸ்கர், ராஜி ஆகிய இருவரும் கடலில் மூழ்கினர். சிறிது நேரத்தில் பாஸ்கர், ராஜி ஆகியோரது உடல்கள் மெரினா கடற்கரை அருகே கரை ஒதுங்கியது. அவர்களது படகு மட்டும் விவேகானந்தர் இல்லம் அருகே கரை ஒதுங்கியது.

    போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும்.
    • 2 ஆண்டுகள் கழித்து மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என கூறுகிறார் முதலமைச்சர்.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    * மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும்.

    * வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

    * வன்னியர் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பது எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் இருந்தது.

    * மருத்துவர் ராமதாஸ் எடுத்து கூறிய போது எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார்.

    * எம்.ஜி.ஆர். ஆட்சியில் வன்னியருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க கோப்புகள் தயாராயின.

    * கலைஞர் கூட வன்னியர்களுக்கு ஏதோ கொஞ்சம் செய்தார்.

    * கலைஞர் MBC வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தார்.

    * ஜெயலலிதா வன்னியர்களுக்கு நல்லதும் செய்யவில்லை, கெட்டதும் செய்யவில்லை.

    * எடப்பாடி பழனிசாமி காலத்தில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    * நீதிமன்றத்தில் முறையாக வாதாடாத காரணத்தால் உள் ஒதுக்கீடு ரத்தானது.

    * எங்களிடம் செய்து தருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

    * 2 ஆண்டுகள் கழித்து மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என கூறுகிறார் முதலமைச்சர்.

    * வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

    * நானும் ராமதாசும் பலமுறை முதலமைச்சர் சந்தித்து விட்டோம் என்றார். 

    • திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான்.
    • என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் போது முடிவுற்ற திட்டங்களையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார். அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987-ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது. குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ. 5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் அருகில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்த சாமி முழுஉருவ சிலையுடன் ரூ. 4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் 21 சமூக போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்து 21 சமூக நீதி போராளிகளின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சாமிநாதன், ராஜேந்திரன் மற்றும் ஏ.கே.கோவிந்தசாமியின் மகனும், பா.ஜ.க. மாநில துணைத்தலைவருமான ஏ.ஜி.சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். ரூ. 133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என் வாழ்நாள் முழுக்க எண்ணி பெருமைப்படும் வகையில் ஏ. கோவிந்தசாமியின் நினைவு மண்டபம் திறந்து வைத்த நிகழ்வாகும். 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது பிரசாரத்துக்கு வந்த என்னிடம் அமைச்சர் பொன்முடி, அன்னியூர் சிவா ஆகியோர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது கோரிக்கை வைத்தவர்களிடம் நிச்சயம் மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்தேன். அதன்படி ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இது என் வாழ்நாளில் மறக்க முடியாததாகும். மாற்றார்கூட குறை சொல்ல முடியாதவர் ஏ. கோவிந்தசாமி என்று பெரியார் தெரிவித்தார்.

    21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு உருவாக்கப்பட்டு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    மேலும் உயிர் தியாகம் செய்த குடும்பத்தாருக்கு மாதாமாதம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது, வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது தி.மு.க. ஆட்சியில்தான்.

    தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத்திற்கான தேவைகள் கண்டறியப்பட்டது.

    அதன்படி நந்தன் கால்வாய் ரூ.304 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு, ரூ.84 கோடியில் தளவானூர் தடுப்பணை, காணையில் ரூ.35 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவாமாத்தூரில் ரூ. 4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் ரூ. 2 கோடி மதிப்பில் டவுன் ஹால் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவிக்கிறேன்.

    என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்.

    நிதி இல்லாவிட்டாலும் மக்களின் கோரிக்கையை தீர்க்கும் அரசாக தி.மு.க. திகழ்கிறது. எதிர்க்கட்சிகள் குறைகளை மட்டுமே சொல்லி கொண்டிருப்பார்கள். அது ஆட்சியின் மீதான குறை அல்ல. எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடத்தி சோர்ந்து விட்டனர். தமிழகம் சிறப்பாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சென்றுள்ளேன். ஆனால் அதிக திட்டங்களை பெற்றது விழுப்புரம் மாவட்டம்தான். நேற்று இரவு மாவட்ட கலெக்டர் பழனியுடன் ஆய்வு நடத்தினேன். அப்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டறிந்து கொண்டேன். விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    • அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாகும்.
    • இதுவரை இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை 105 நாட்கள் நீடித்துள்ளது.

    நெல்லை:

    தமிழகத்திற்கு பெருமழை யையும், செழுமையையும் அளிக்கும் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் விலகியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    கோடைகால மழை, தென்மேற்கு பருவமழை உள்ளிட்ட பருவமழை காலத்தில் தமிழகம் மழை பெற்றாலும், வடகிழக்கு பருவமழைக்கு ஈடாகாது. ஒவ்வொரு ஆண்டும் மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31 வரையிலான காலக்கட்டம் வடகிழக்கு பருவமழை காலமாகும்.

    இந்த காலகட்டத்தில் தமிழகம் மட்டுமே அதிக மழை பெறும். இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு 105 நாட்கள் நீடித்துள்ளது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 98 நாட்கள் நீடித்திருந்தது.

    வரலாற்றில் வடகிழக்கு பருவமழை மிக விரைவாக விலகிய ஆண்டு 1994-ம் ஆண்டாகும். அந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிக விரைவாக டிசம்பர் 14-ந்தேதியே தமிழ்நாட்டில் இருந்து விலகியுள்ளது.

    அதேபோல வரலாற்றில் வடகிழக்கு பருவமழை மிக தாமதமாக விலகிய ஆண்டு 1933 ஆகும். 1933-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பருவமழை 1934-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி தான் விலகியது.

    கடந்த 1992-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை வரலாற்றிலேயே மிக குறைவாக 51 நாட்கள் மட்டுமே மழை நீடித்துள்ளது. 1992-ம் ஆண்டில் குறைவான நாட்கள் மழை பெய்தாலும் அந்த ஆண்டில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென்மாவட்டங்கள் உருக்குலைந்தது.

    அந்த ஆண்டில் நவம்பர் மாதம் 14-ந்தேதி நெல்லை மாவட்டம் காக்காச்சியில் ஒரே நாளில் 965 மில்லிமீட்டர் மழை பெய்து தமிழகத்தை அதிரவைத்து விட்டது.

    வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரே நாளில் 540 மில்லிமீட்டர் மழை பதிவானது.

    அம்பாசமுத்திரம் பகுதியில் 366 மில்லிமீட்டரும், அதே நாளில் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் 312 மில்லிமீட்டர் மழையும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 365 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    கடந்த அக்டோபர் முதல் இன்று வரையிலான கால கட்டத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து எஸ்டேட்டில் 3 ஆயிரத்து 436 மில்லிமீட்டர் (344 சென்டி மீட்டர்) மழை பதிவாகியுள்ளது. இது நாட்டிலேயே வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு பகுதியில் பதிவான அதிகபட்ச மழையாகும்.

    • நான்கு பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
    • வெளியூர் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர் அன்பு (வயது 32). ரவுடி. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் உள்ளன.

    மேலும் பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடி திலீப்பின் கூட்டாளியாவார்.

    இவர் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் அங்குள்ள ஜிம்முக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் தெரு சுற்றுலா வாகன பார்க்கிங் பகுதியில் வந்த போது இரு வேறு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு உயிருக்கு பயந்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்திச் சென்று பார்க்கிங் பகுதியில் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    இதில் தலை, கழுத்து, கைகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது.

    பின்னர் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அன்பு இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட அன்புவுக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மனைவி மற்றும் உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.

    மேலும் கொலை நடந்த பகுதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வெளிமாநில மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் வாகன நிறுத்தமிடமாகும்.

    கொலையாளிகள் அன்புவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்வதை பார்த்து வெளியூர் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    மேலும் அந்த வழியாக வந்த பள்ளி மாணவ மாணவிகளும் நாலா புறமும் சிதறி ஓடினர். சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அன்புவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கல் குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்
    • கணக்கீடு பணியில் குவாரிகளுக்குள் 1500 கியூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் சேமிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. சமூக ஆர்வலரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக திருமயம் கல்குவாரியில் முறைகேடாக கல்வெட்டி எடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜகபர் அலி கடந்த 17-ந் தேதி திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியில் தொழுகை முடித்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்வாரி உரிமையாளர்களான ராசு, ராமையா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராமைய தவிர மற்ற 4 பே ர்கைது செய்யப்பட்டார்கள். அவர்களை திருமயம் நீதிமன்றத்தில் ஆச்சர்யப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு வரும் 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    ராமையாவை போலீசார் தேடி வந்த நிலையில் நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் அவர் சரண் அடைந்தார். இதனிடையே சமூக ஆர்வலர் ஜகபர் அலி குற்றம் சாட்டிய திருமயம் துளையானூர், மலைக்குடிபட்டி பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்

    அனைத்து கல் குவாரிகளும் உரிய அனுமதியோடு இயங்குகின்றதா, அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பது குறித்தும், நேரடியாகவும், ட்ரோன் மூலமாகவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வு மற்றும் அளவிடும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் எவ்வளவு தூரம் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்ற அளவீட்டை கனிம வளத்துறை இணை இயக்குனருக்கு அறிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர்.

    அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆய்வு மேற்கொண்ட ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்த மான குவாரிகளின் ஒப்பந்த காலம் 2023-ம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் அந்தக் குவாரிகளில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

    ஒவ்வொரு பக்கமும் ஒரு மீட்டர் நீளமுள்ள கன சதுரத்தின் அளவு ஒரு கியூபிக் மீட்டர் ஆகும். அந்த வகையில் 6 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்கள் கூடுதலாக வெட்ட்டி எடுக்கப்பட்டு உள்ளது அதிகாரிகள் சோதனையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் கணக்கீடு பணியில் குவாரிகளுக்குள் 1500 கியூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் சேமிக்கப்பட்டு உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த அறிக்கையின் மேல் கனிமவளத்துறை இயக்குனர் ஆய்வு செய்து, அதன் பின்னர் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்துவார். அதன் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே புதுக்கோட்டை கனிம வளத்துறை அதிகாரிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ராமையாவுக்கு ரூ.6 கோடியே 70 லட்சம் ரூபாய் அபராதமும், ராசுக்கு ரூ.12 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எலும்புகள் வெளியில் தெரியும் அளவுக்கு சதைகளை குதறி எடுத்தது.
    • நாய்க்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

    திருமங்கலம்:

    சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வெளிநாட்டு இனமான ராட்வீலர் என்ற நாய் கடித்து குதறியதில் 5 வயது சிறுமி ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து ராட்வீலர் என்ற நாய்களை அப்புறப்படுத்த மாகராட்சி உத்தரவிட்டது.

    வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இருந்தபோதிலும் பலர் செல்லப்பிராணிகளாக வெளிநாட்டு நாய் இனங்களை வளர்ப்பதை கவுரமாக கொண்டு வளர்த்து வருகிறார்கள். அப்படி வளர்த்த ஒரு நாய் தனது எஜமானரையே கடித்து குதறியுள்ளது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுசாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர்கள் கண்ணன்-ஜான்சி ராணி தம்பதியினர். இவர்கள் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் 2 வெளிநாட்டு ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். ஜான்சி ராணியின் மகன் சென்னையில் வசித்து வருவதால் தம்பதியினர் மட்டுமே வீட்டிலிருந்து நாய்களை பராமரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காய வைத்த துணிகளை எடுப்பதற்காக மாலை 5 மணி அளவில் ஜான்சிராணி மாடிக்கு சென்றுள்ளார். அப்போது நாயின் அருகில் இருந்த துணியை எடுக்க முயன்ற போது திடீரென ஒரு நாய் ஜான்சிராணி மீது ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்து குதறியது. இதில் அவரது இடது கை பலத்த சேதம் அடைந்து சிதைந்து போனது.

    கையில் இருந்த எலும்புகள் வெளியில் தெரியும் அளவுக்கு சதைகளை குதறி எடுத்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தாலும், நாய்க்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. பின்னர் ஒரு வழியாக நாயிடம் இருந்து தப்பித்து மாடியில் இருந்து மெதுவாக ஜான்சி ராணி கீழே இறங்கி வந்துள்ளார்.

    தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஜான்சி ராணி இடது கை மிகவும் சேதம் அடைந்திருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுவயதில் இருந்து பழக்கப்பட்ட நாய், வளர்த்த வரையே கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாடியில் இருக்கும் நாயை கட்டிப்போட்டு வைக்காததால் அப்பகுதியில் குடியிருக்கும் அனைவரும் வெளியே வர பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    • கணவன்-மனைவி இருவரும் செய்வதறியாது தவித்தனர்.
    • நேற்றும் வங்கியை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு வந்து கடன் தொகை கேட்டு சத்தம் போட்டனர்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் முத்தையால் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 46). வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி ரேகா (40). இந்த தம்பதியின் மகள் ஜனனி (17). ஒரே மகள் ஆவார். இவர் சேலம் அழகாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் பால்ராஜ் தான் வசித்து வந்த இடத்தில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி புதியதாக 2 தளங்களை கொண்ட அடுக்குமாடி வீடு கட்டினார். மேலும் மனைவியும் தனியாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வீட்டில் வெள்ளிப்பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். இதில் கிடைத்த வருமானத்தை கொண்டு குடும்ப செலவுக்கும், கடன் தொகைக்கும் செலவழித்து வந்தார்.

    இதனிடையே அவருக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடன் தொகையை மாதந்தோறும் செலுத்த முடியாமல் தாமதமானது. கடன் தொகையை குறிப்பிட்ட நாளில் சரியாக கட்டாததால் கடன் தொகை, அபராத வட்டியுடன் சேர்த்து பல மடங்கு அதிகமானது.

    இதனால் கணவன்-மனைவி இருவரும் செய்வதறியாது தவித்தனர். இதனிடையே கடன் தொகையை திரும்பி கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டது. தினமும் குடும்பத்தினர் மன வேதனையில் தவித்தனர்.

    நேற்றும் வங்கியை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு வந்து கடன் தொகை கேட்டு சத்தம் போட்டனர். அப்போது நாளை (இன்று) கடனை கொடுக்க வேண்டும் என சொல்லியுள்ளனர்.

    இந்த நிலையில் வங்கியில் கடன் செலுத்த பணம் இல்லாததால் மன வேதனை அடைந்த பால்ராஜ் இரவு உயிரை விட முடிவு எடுத்தார். நேற்று இரவு பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகிய 3 பேரும் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் உறவினர் சந்தேகம் அடைந்தார். உறவினரின் மகள் வழக்கம்போல் பள்ளிக்கு ஜனனியுடன் செல்வார்.

    இதனால் ஜனனியை பள்ளிக்கு கூப்பிட வேண்டி உறவினர் மகள் அவருடைய வீட்டுக்கு சென்றார். அங்கு கதவு திறந்து கிடந்தது. வீட்டின் அறையில் பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகிய 3 பேரும் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் வீட்டின் முன்பு திரண்டு கதறி அழுதனர்.

    இது பற்றி தகவல் அறிந்த சேலம் மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனர் கீதா மற்றும் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவி, மகள் ஆகிய 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அறையில் கடிதம் இருக்கிறாதா? என சோதனை நடத்தினர். இதில் ஒரு உருக்கமான கடிதம் சிக்கியது. பால்ராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் உள்ள தகவலை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். அதில் கடன் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    கடன் தொல்லையால் கணவன்-மனைவி, மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை இருந்தது.
    • 2 வருடம் கழித்து லென்ஸ் பொருத்தவும் திட்டமிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அப்பனம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது 9 மாத ஆண் குழந்தைக்கு பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை இருந்தது. இதனால் அரவிந்த்குமார் குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் கண்புரை பிரச்சனை இருப்பதை கண்டறிந்து கண்பிரிவு டாக்டர்களை சிகிச்சையளிக்க பரிந்துரைத்தனர். கண்பார்வை பிரிவு டாக்டர்கள் குழந்தைக்கு லென்ஸ் பொருத்தலாமா? என ஆலோசித்தனர்.

    ஆனால் 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் லென்ஸ் சிகிச்சை செய்ய முடியும் என்பதால் தற்போது கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

    முதலில் வலது கண்ணில் சிகிச்சை செய்தனர். ஆரோக்கியமான நிலையில் குழந்தைக்கு கண் பார்வையும் கிடைத்தது. மீண்டும் 1 மாதம் கழித்து இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, 2 வருடம் கழித்து லென்ஸ் பொருத்தவும் திட்டமிட்டனர்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக 9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அறுவை சிகிச்சை குழுவில் உள்ள குழந்தைகள், மயக்கவியல், கண்பார்வை போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் டாக்டர்களை பாராட்டினர்.

    • 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
    • வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஒரு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.

    இந்த வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை அடகு நகைகளை சோதனை செய்வது வழக்கம், அதன்படி கடந்த 24-ந் தேதி வழக்கம் போல அடமான நகைகளை மற்றொரு வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கெங்கவல்லியை அடுத்த கூடமலை, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் கணக்கில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 41 லட்சம் பெற்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வங்கியின் மேலாளார் மித்ரா தேவி வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தரிடம் விசாரித்தார். அதில் அவர் 84 பவுன் தங்க முலாம் பூசிய போலி நகையை 2 பேரின் பெயரில் வைத்து பணத்தை எடுத்தது தெரிய வந்தது. மேலும் அதில் பாதி பணத்தை திரும்ப செலுத்தி உள்ளார்.

    இதுகுறித்து வங்கி மேலாளர் கெங்கவல்லி போலீசில் பாலச்சந்தர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாலச்சந்தரை கைது செய்தனர்.

    மேலும் வங்கி மேலாளர் மித்ரா தேவி, உதவி மேலாளர் ஜெகன், வங்கி கேசியர் வேலுசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தர் ஏற்கனவே நடுவலூர் வங்கி கிளையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கெங்கவல்லி கிளைக்கு மாற்றப்பட்டார். அங்கு 11 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் பாலச்சந்தர் ரூ.1 கோடி மதிப்பிலான வீடு கட்டியுள்ள நிலையில் மற்றொரு சொத்து வாங்குவதற்காக போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நூற்றாண்டு கடந்த திமுக இன்றளவும் சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருகிறது.
    • விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 231 திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    வீரத்தின் விளைநிலம் விழுப்புரம் மாவட்டம். வரலாறு பெருமை கொண்டது விழுப்புரம் என்று பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இலக்கிய புகழும், பெருமைகளும் நிறைந்த மாவட்டம் விழுப்புரம்.

    * விழுப்புரத்தின் பெருமையை பற்றி பேச நாளும் பொழுதும் பத்தாது.

    * கோவிந்தசாமி நினைவரங்கம், சமூக நீதி போராளிகள் நினைவாக மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

    * வாழ்நாள் எல்லாம் எண்ணி பெருமைபடும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.

    * தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தவர் ஏ. கோவிந்தசாமி.

    * தமிழகத்தில் உதயசூரியன் சின்னத்தில் நின்று முதலில் வென்றவர் ஏ.கோவிந்தசாமி.

    * வன்னிய சமுதாய மக்கள் இடஒதுக்கீடு கேட்டு போராடிய போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    * இன்றும் துடிப்பு மிக்க போராளியாக திகழ்பவர் பொன்முடி.

    * அதிமுக ஆட்சியில் காக்கை, குருவிகளை போல் போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    * மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர்.

    * இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பென்சன் வழங்கியவர் கலைஞர்.

    * ராமசாமி படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்ட தி.மு.க. ஆட்சியில் தான்.

    * சமூகநீதியை நிலைநாட்டுவது தான் திராவிட இயக்கத்தின் நோக்கம்.

    * சொன்னபடியே 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

    * பிற்படுத்தப்பட்டோர் இன்று முன்னேறுவதற்கு கருணாநிதியை காரணம்.

    * சமூகநீதி அகில இந்திய அளவில் போராடி வருவதும் திமுக தான்.

    * நூற்றாண்டு கடந்த திமுக இன்றளவும் சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருகிறது.

    * விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * சாத்தனூர் அணையின் உபரிநீர் நந்தன் கால்வாய்க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சாத்தனூர் அணை உபரிநீருக்காக ரூ.304 கோடி செலவில் நந்தன் கால்வாய்திட்டம் செயல்படுத்தப்படும்.

    * 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * சங்கரபாணி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும்.

    * விக்கிரவாண்டி பேரூராட்சியில் பல்நோக்கு சமுதாய கூடம் அமைக்கப்படும்.

    * செஞ்சி, மரக்காணத்தில் தலா ரூ.5 கோடியில் புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

    * ரூ.5 கோடியில் திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் வழங்க திட்டம்.

    * நிதி மட்டுமே தடையாக உள்ளது, வேறு எந்த தடையும் எங்களுக்கு இல்லை.

    * குறை சொல்வது எதிர்க்கட்சி தலைவர்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள குறைபாடு

    * எந்த பாகுபாடும் பார்க்காமல் முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.

    * நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது அல்ல நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே எனது இலக்கு.

    * நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதை அடையவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றார். 

    ×