என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு பருவமழை: நாட்டிலேயே அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 344 செ.மீ பதிவு
- அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாகும்.
- இதுவரை இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை 105 நாட்கள் நீடித்துள்ளது.
நெல்லை:
தமிழகத்திற்கு பெருமழை யையும், செழுமையையும் அளிக்கும் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் விலகியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோடைகால மழை, தென்மேற்கு பருவமழை உள்ளிட்ட பருவமழை காலத்தில் தமிழகம் மழை பெற்றாலும், வடகிழக்கு பருவமழைக்கு ஈடாகாது. ஒவ்வொரு ஆண்டும் மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31 வரையிலான காலக்கட்டம் வடகிழக்கு பருவமழை காலமாகும்.
இந்த காலகட்டத்தில் தமிழகம் மட்டுமே அதிக மழை பெறும். இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு 105 நாட்கள் நீடித்துள்ளது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 98 நாட்கள் நீடித்திருந்தது.
வரலாற்றில் வடகிழக்கு பருவமழை மிக விரைவாக விலகிய ஆண்டு 1994-ம் ஆண்டாகும். அந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிக விரைவாக டிசம்பர் 14-ந்தேதியே தமிழ்நாட்டில் இருந்து விலகியுள்ளது.
அதேபோல வரலாற்றில் வடகிழக்கு பருவமழை மிக தாமதமாக விலகிய ஆண்டு 1933 ஆகும். 1933-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பருவமழை 1934-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி தான் விலகியது.
கடந்த 1992-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை வரலாற்றிலேயே மிக குறைவாக 51 நாட்கள் மட்டுமே மழை நீடித்துள்ளது. 1992-ம் ஆண்டில் குறைவான நாட்கள் மழை பெய்தாலும் அந்த ஆண்டில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென்மாவட்டங்கள் உருக்குலைந்தது.
அந்த ஆண்டில் நவம்பர் மாதம் 14-ந்தேதி நெல்லை மாவட்டம் காக்காச்சியில் ஒரே நாளில் 965 மில்லிமீட்டர் மழை பெய்து தமிழகத்தை அதிரவைத்து விட்டது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரே நாளில் 540 மில்லிமீட்டர் மழை பதிவானது.
அம்பாசமுத்திரம் பகுதியில் 366 மில்லிமீட்டரும், அதே நாளில் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் 312 மில்லிமீட்டர் மழையும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 365 மில்லிமீட்டரும் மழை பதிவானது.
கடந்த அக்டோபர் முதல் இன்று வரையிலான கால கட்டத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து எஸ்டேட்டில் 3 ஆயிரத்து 436 மில்லிமீட்டர் (344 சென்டி மீட்டர்) மழை பதிவாகியுள்ளது. இது நாட்டிலேயே வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு பகுதியில் பதிவான அதிகபட்ச மழையாகும்.






