என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருச்சி மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா இன்று தொடங்கியது.
- இந்நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது ஆண்டு வைர விழா மற்றும் பெருந்திரள் பேரணி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட சாரணர் இயக்கத்தினர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், திருச்சி மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிப்காட் வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்தும் சாரணர் இயக்கத்தினர் வருகை தந்துள்ளனர்.
- குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீர் தொட்டிமேல் ஏறும்வரை அதில் எவ்விதமான கழிவுகளும் கலக்கவில்லை.
- வேங்கைவயல் விவகாரத்தில் அறிவியல் பூர்வமான சோதனைக்கு பின்னரே குற்றப்பத்திரகை தாக்கல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா அரசு சார்பில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
* வேங்கைவயல் சம்பவத்தில் 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 196 செல்போன்களும் ஆய்வு செய்யப்பட்டது.
* குற்றவாளிகளின் செல்போனில் இருந்து எடுத்த புகைப்படங்கள் நேரம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
* நீர் தேக்க தொட்டியில் இருந்து குற்றவாளிகள் எடுத்த செல்பிகள், தொடர்பு கொண்ட எண்கள் ஆய்வு செய்யப்பட்டது.
* உண்மை குறற்வாளிகளை கண்டறிய 31 நபர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து அதில் உள்ள புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டது.
* குற்றவாளிகள் மற்ற நபர்களிடம் பேசிய ஆடியோக்கள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உண்மையென உறுதி செய்யப்பட்டது.
* குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீர் தொட்டிமேல் ஏறும்வரை அதில் எவ்விதமான கழிவுகளும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
* சரியாக 7.35 மணிக்குதான் கழிவு கலக்கப்பட்டுள்ளது. கழிவு கலந்த தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை.
* வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. வேங்கைவயல் சம்பவம் என்பது இருவருக்கு இடையிலான தனிமனித பிரச்சனையால் நடந்துள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில் அறிவியல் பூர்வமான சோதனைக்கு பின்னரே குற்றப்பத்திரகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் எஸ்.சி. மக்களுக்கான குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் 26-ந்தேதி மலம் கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை மாநிலம் முழுவதும் எதிரொலித்தது.
குடிநீர் அசுத்தப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குடிநீரை அசிங்கப்படுத்திய விவகாரம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்திய நாராயணனை நியமித்து உத்தரவிட்டது. அவரும் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் கடந்த 24-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பில் ஆஜரான வக்கீல் மணி, சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்யவில்லை என்று வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் அஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் "வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான புலன் விசாரணை முடிந்து விட்டது. இந்த வழக்கில் அந்த ஊரைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம்சாட்டி கடந்த 20-ந்தேதி புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில், வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்கள் அடங்கிய முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா என்பவர், குடிநீர் தொட்டி ஆபரேட்டரான சண்முகத்தை பணி நீக்கம் செய்துள்ளார்.
இதில் ஏற்பட்ட பிரச்சினையில் பஞ்சாயத்து தலைவரின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொய்யான தகவலை முரளிராஜா பரப்பியுள்ளார்.
இதையடுத்து முத்துக்கிருஷ்ணனும், சுதர்சனும் குடிநீர் தொட்டியில் ஏறிச்சென்று பார்ப்பதுபோல் குடிநீரில் மலத்தை கலந்து குற்றச் சம்பவத்தை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது'' எனக் கூறினார். இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே புகார் அளித்தவர்களையே குற்றவாளி என சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர். சிபிசிஐடி இந்த வழக்கை சரியாக கையாளவில்லை. இதனால் சிபிஐ விசாரணை தேவை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- முதல் 4 கி.மீ. வரை 4 ரூபாய், 4 முதல் 6 கி.மீ. வரை 5 ரூபாய், 6 முதல் 8 கி.மீ. வரை 6 ரூபாய் கட்டணம் நிர்ணயம்.
- மாற்றியமைக்கப்பட்ட மினி பேருந்துகளுக்கான கட்டணம் மே 1-ம்தேி முதல் நடைமுறைக்கு வரும் என உத்தரவு.
மினி பேருந்துகளுக்கான புதிய ஒருங்கிணைந்த கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதல் 4 கி.மீ. வரை 4 ரூபாய், 4 முதல் 6 கி.மீ. வரை 5 ரூபாய், 6 முதல் 8 கி.மீ. வரை 6 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட மினி பேருந்துகளுக்கான கட்டணம் மே 1-ம்தேி முதல் நடைமுறைக்கு வரும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் நடந்த 2வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
- இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
சென்னை:
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இங்கிலாந்து முழுமையற்ற கிரிக்கெட்டை விளையாடியது. அவர்கள் தொடர் தவறுகளைச் செய்தார்கள். இந்தியாவில் விளையாடும்போது ஒரே டெம்போவில் விளையாட முடியாது.
பெங்களூரு டிராபிக்கில் ஓட்டினால் எப்போதும் நான்காவது கியரில் இருக்க முடியாது. இங்கேயும் அதே லாஜிக் தான். சில நேரங்களில் பெங்களூரில் நான்காவது கியரில் கூட செல்ல முடியாது. இதேதான் நீங்கள் இந்தியாவில் விளையாடும் பொழுதும் அதிரடியாக நான்காவது கியரில் விளையாட முடியாது.
இதைத்தான் நான் கடந்த முறையும் சொல்லி இருந்தேன். இந்தியாவில் பயமற்ற கிரிக்கெட் முறை தேவையானது. ஆனால் அது பவர் பிளேவில் மட்டும் இருக்க வேண்டும்.
எல்லா சூழ்நிலைகளும் ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கு பொருந்தாது. கிரிக்கெட்டில் நிபந்தனைகளே ராஜா என சொல்வார்கள் என தெரிவித்தார்.
- கடந்த 2023-ம் ஆண்டு காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றது.
- மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர்.
பாஜக தலைவர் அண்ணாலை எக்ஸ் பக்க பதிவியில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள சுமார் 350-க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது.
கடந்த 2023-ம் ஆண்டு காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அந்த முடிவைக் கைவிட்டனர். தற்போது மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது திமுக அரசு. அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?
கண்துடைப்புக்காகத் திட்டங்கள் அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காகத் திட்டங்களை மடைமாற்றுவது என, நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிடவேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
- பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது.
- திரிவேணி சங்கமத்தில் நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சென்னை:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் 3 நதிகள் சேரும் திரிவேணி சங்கமத்தில் நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களிலும் கட்டணம் எகிறி உள்ளது. அமாவாசை திதி நாளை வரும் நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல விமான கட்டணம் ரூ.59 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அருகருகே அமர்ந்தும் ராமதாஸ்- அன்புமணி பேசிக்கொள்ளவில்லை.
- கடந்த மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது.
சேலத்தில் இன்று நடந்த பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி பேசினார்.
அப்போது, வரவிருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களாக அன்புமணி கூறியதாவது:-
நெக்ஸலிசம் என்று ஒன்று தமிழ்நாட்டில் இல்லாமல் போனதுக்கு காரணம் மருத்துவர் அய்யா. எவ்வளவோ இருக்கு.. பேசிக்கிட்டே போகலாம்... எவ்வளவு செய்தீர்கள் என்று மக்களுக்கு சொல்லலாம் என்றார்.
அப்போது ஒரு நிர்வாகியின் பெயரை குறிப்பிட்டு உன்னையும் தான் சேர்த்து சொல்றேன். உன் தொகுதியில வாங்குனியே ஓட்டு... உட்காரு. 52ஆயிரம் ஓட்டு வாங்குன தொகுதி அதெல்லாம். இது எல்லாருக்கும் தான் சொல்றேன். 10 மாதம் தான் இருக்கு... களத்துல இறங்கணும். வெறி வரணும். கோபம் வரணும்... என்றார் மீண்டும் அதே நிர்வாகியிடம் வருமா? என கேட்டு பின், உன் முகத்த பார்த்தா வெறி வர மாதிரி தெரியலயே எனக்கு... களத்தில் இறங்குகள். இரண்டில் ஒன்று பார்த்துக்கலாம். என்று சொல்லிக்கொண்டு மற்றொரு நிர்வாகியின் பெயரை குறிப்பிட்டு என்ன கோவம் வந்துருச்சா என கேட்டார்.
இதனிடையே, பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அருகருகே அமர்ந்தும் ராமதாஸ்- அன்புமணி பேசிக்கொள்ளவில்லை. கடந்த மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- திருமுருகன்பூண்டி பகுதியில் 4 பேரை கைது செய்தனர்.
திருப்பூர்:
தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள வங்கதேசத்தினர், மேற்கு வங்க மாநிலத்தவர் போல் போலி ஆவணங்கள் தயார் செய்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களை கைது செய்ய உள்ளூர் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 63 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் பனியன் நிறுவனங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நல்லூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வள்ளியம்மை நகர், ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் சோதனை செய்த போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வங்கதேசத்தினர் 11 பேரை கைது செய்தனர். திருமுருகன்பூண்டி பகுதியில் 4 பேரை கைது செய்தனர். இவர்கள் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தினர் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், பிப்ரவரி மாத இறுதிக்குள் வங்கதேசத்தினர் ஒருவர் கூட தமிழகத்தில் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றனர்.
- 92 சென்ட் நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு 11 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில், 30 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை.
- 30 ஆண்டுகளாக வழங்கப்படாததால் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு.
மதுரையில் வீட்டு வசதி வாரிய திட்டத்திற்கு 92 சென்ட் நிலத்தை முருகசாமி என்பவரின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். இதற்காக 11 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு, மீதமுள்ள 30 லட்சம் ரூபாயை 30 ஆண்டுகளாக தரவில்லை என புகார் அளித்திருந்தனர்.
நிலுவைத் தொகையை வழங்காதததால் வீட்டுவசதி வாரிய பொருட்களை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது.
- பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது என்றார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோழை தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தத் துணிந்துள்ளார்கள்.
பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது.
பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசுவோர் பாஜகவின் கொள்கைப் பரப்பு அணி போல் செயல்படுகிறார்கள்.
பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் ஆதரிக்கின்றனர்.
அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் என்றாவது பிரபாகரனை ஆதரித்ததுண்டா?
விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் வரிந்துகட்டி சீமானை ஆதரிப்பது ஏன்?
பா.ஜ.கவின் கொள்கை பரப்பு அணி போல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படுகிறார்.
இது வெறும் திராவிட எதிர்ப்பு அரசியல் அல்ல, நமது கோட்பாட்டுக்கு எதிரான அரசியல் என தெரிவித்தார்.
- ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம் மும்பை போலீஸ் துறையில் இருந்து பேசுவதாக கூறி டிஜிட்டல் கைது மூலம் ரூ.88 லட்சம் பறிக்கப்பட்டது.
- அமலாக்கத்துறையும், பண முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சென்னை:
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம் மும்பை போலீஸ் துறையில் இருந்து பேசுவதாக கூறி டிஜிட்டல் கைது மூலம் ரூ.88 லட்சம் பறிக்கப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரதீம் போரா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் இணைந்து டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட துருபா ஜோதி மஜிம்தார், ஸ்வராஜ்பிரதான், பிரசாந்த் கிரி, பிரஞ்ரல் ஹசாரிகா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இந்த கும்பல் டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், தமிழ்நாடு, மும்பை, கோவா உள்ளிட்ட பல இடங்களில் ஏஜெண்டுகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்கள், அவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து பொதுமக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணத்தை பறித்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக அமலாக்கத்துறையும், பண முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஏராளமான செல்போன்கள், லேப்-டாப்கள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதை ஆய்வு செய்ததில் டிஜிட்டல் கைது மூலம் கிடைக்கும் பணத்தை மோசடி கும்பல் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்கள் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்யும் தனியார் நிறுவனங்களின் கணக்குக்கு கொண்டு சென்று இருப்பதும், பின்னர் தங்களது வங்கி கணக்கில் பணத்தை பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு செல்போன் எண்கள் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றிருப்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட ஒருவர் கொல்கத்தாவிலும், மற்றொருவர் டெல்லியிலும் பிடிபட்டு உள்ளனர். அவர்களை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
30-ந்தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
31-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01-ந்தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02-ந்தேதி மற்றும் 03-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.






