என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வெங்கடாஜலத்தை இன்று முதல் கட்சிபொறுப்பில் இருந்து விடுவித்து அறிக்கை.
    • 8 வருடங்களாக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக அ.தி.மு.க.வில் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

    இதில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பதவி வகித்து வந்தார். இவரை மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாநகர் மாவட்ட செயலாளராக அறிவித்தார்.

    இதையடுத்து வெங்கடாஜலம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 8 வருடங்களாக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அவர் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய பொறுப்பாளர்களாக 2 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த வெங்கடாஜலத்தை இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து சேலம் மாநகர் மாவட்ட கழக பணிகளை மேற்கொள்வதற்காக புதிய பொறுப்பாளர்களாக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே.செல்வராஜ், சூரமங்கலம் பகுதி-2 கழக செயலாளராக இருந்த ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    இவர்களுக்கு நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாசனத்தின் மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றது.
    • மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 533 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை பாசனத்தின் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையின் நீர்இருப்பு குறைவாக இருந்ததால் வழக்கம் போல் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. காலதாமதமாக ஜூலை மாதம் 28-ந் தேதி அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 110.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 533 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 79.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • நேற்று ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன்பின்னரும் விலை ஏறி வந்த நிலையில், நேற்று முன்தினம் விலை குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்தே காணப்பட்டது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 540-க்கும், ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,595-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,080

    27-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,320

    26-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

    25-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

    24-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

     கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    27-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    26-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    25-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    24-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    • அகழாய்வில் இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    • தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத்தேர்ந்திருந்தது புலப்படுகிறது.

    நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இரும்பின் தொன்மை குறித்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அறிவியல் ஆய்வு முடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகிற்கு அறிவித்த ஒரு சில தினங்களில், கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், இரும்பினாலான அம்பு முனை, ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது கத்தி கிடைத்துள்ளதன் மூலம், தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத்தேர்ந்திருந்தது புலப்படுகிறது.

    இதற்கு முன்னர் மருங்கூர் அகழாய்வில், இராஜராஜ சோழன் காலத்துச் செம்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரெளலட்டட் பானை ஓடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது இரும்பினாலான கத்தி கிடைத்துள்ளதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் இது என்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • இக்கூட்டம் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக நடைபெறுகிறது.
    • முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் காலை 11 மணிக்கு, அண்ணா அறிவாலயம் 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    இக்கூட்டம் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக நடைபெறுகிறது. முன்னதாக, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வருகிற 31-ந்தேதி உரையாற்றுகிறார்.

    இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்குகிறது. அதன்படி ஜனவரி 31-ந்தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற இருக்கிறார். முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    பிறகு இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி நிறைவு பெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.

    • பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து 31-ந் தேதி 20 பஸ்களும் பிப்ரவரி 1-ந் தேதி 20 பஸ்களும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 365 பஸ்களும், பிப்ரவரி 1-ந் தேதி (சனிக்கிழமை) 445 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31-ந் தேதி வெள்ளிக்கிழமை 60 பஸ்களும் பிப்ரவரி 1-ந் தேதி சனிக்கிழமை 60 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து 31-ந் தேதி 20 பஸ்களும் பிப்ரவரி 1-ந் தேதி 20 பஸ்களும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது.

    இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிப்ரவரி 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • தேர்தல் நடக்கவுள்ள 2026-ம் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அரசால் தாக்கல் செய்ய முடியும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதியன்று ஆட்சிப்பொறுப்பேற்றது. இதுவரை 3 முழு பட்ஜெட்களை தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ளது. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தயாரித்து இறுதி செய்யும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. அதற்கான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கின. பிப்ரவரி 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த பட்ஜெட் தி.மு.க. அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது. தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதி கள் நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்க இது ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பாக அமைகிறது.

    மக்களைக் கவரும் புதிய திட்டங்களை அறிவிக்க இந்த சந்தர்ப்பத்தை அரசு பயன்படுத்தவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியிருந்தபடி மகளிருக்கு விலையில்லா பஸ் பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது.

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இல்லாத திட்டங்களான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், மாணவர்களின் திறன் வளர்க்க நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றையும் இந்த அரசு நிறைவேற்றி உள்ளது.

    ஆனால் நிறைவேற்றப்படாத சில முக்கிய திட்டங்களும் உள்ளன. குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி. கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, கியாஸ் சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல் விலை குறைப்பு போன்ற திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    ஏற்கனவே நிதிச்சுமை உள்ள நிலையிலும், மத்திய அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையிலும், இந்த பட்ஜெட் தமிழக அரசுக்கு சவாலான பட்ஜெட்டாக இருக்கும்.

    கடந்த 4 ஆண்டுகளாக பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி, மனதில் இடம் பிடித்துள்ளது. அதை மேலும் உறுதி செய்ய, பெண்களுக்கான கூடுதல் திட்டங்கள், இந்த பட்ஜெட் மூலம் தீட்டப்பட வாய்ப்புள்ளது.

    அவர்களுக்கான நிதியுதவியை உயர்த்தி வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம். தேர்தல் நடக்கவுள்ள 2026-ம் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அரசால் தாக்கல் செய்ய முடியும் என்பதால், மக்களைக் கவரும் திட்டங்கள், இந்த பட்ஜெட்டில்தான் முழுமையாக வெளியிட முடியும்.

    எனவே இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் பல்வேறு திட்டங்கள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.

    • நீலகிரியில் கோடை சீசன் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது.
    • பல்வேறு வகையான மலர்ச்செடிகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும். அப்போது விடுமுறை காலம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம்-மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் குன்னூருக்கு திரண்டு வருவர்.

    தொடர்ந்து அவர்கள் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்காக்களில் நடைபெறும் மலர்சீசனை கண்டுகளித்தும், இதர சுற்றுலா தலங்களை பார்வையிட்டும் விடுமுறையை கொண்டாடி செல்வது வழக்கம்,

    அந்த வகையில் நீலகிரியில் கோடை சீசன் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில், அங்கு தற்போது பல்வேறு வகையான மலர்ச்செடிகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதில் ஒருபகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு 5 லட்சம் மலர் செடிகளை நடவுசெய்வதென தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதற்காக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 35-க்கும் மேற்பட்ட மலர் செடி வகைகள் மற்றும் 130 வகையில் மலர்நாற்றுகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் குன்னூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பிரபு, துணை இயக்குனர் அப்ரேஸ்பேகம், தோட்டக்கலைத்துறை அலுவலர் லட்சுமணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சால்வியா, டேலியா, ஆண்ட்ரினம், பால்சம், பெகோனியா, மேரிகோல்ட், பிரெஞ்ச் மேரிகோல்ட், பேன்சி, காஸ்மாஸ், டேலியா, ஜினியா, லூபின், கேலன்டுல்லா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகளில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • பெரியார் சர்ச்சை தேவையில்லாதது. நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.
    • சீனா உருவாக்கியுள்ள AI கருவி உலகத்தையே தற்போது உலுக்கி வருகிறது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், "பெரியார் சர்ச்சை தேவையில்லாதது. நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.

    சீனா உருவாக்கியுள்ள AI கருவி உலகத்தையே தற்போது உலுக்கி வருகிறது. பங்குசந்தைகளில் பல நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனில் பலருக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

    பொருளாதாரம், வேலையின்மை என அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளன. ஆனால், என்ன உணவு சாப்பிட வேண்டும், தனிமனித உரிமைகள் இவைகள்தான் சர்ச்சை ஆகின்றன

    நம் அரசியல் மேடை போகும் திசை மிகவும் வருத்தம் அளிக்கிறது. விஞ்ஞான ரீதியான, அறிவுபூர்வமான பொருளாதாரம் குறித்த விவாதங்கள் நடக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    இதனிடையே, விஜயின் அரசியல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு 'அரசியலில் கெளரவத் தோற்றம் போல விஜய் வருகிறார்' என்று கிண்டலாக பதில் அளித்தார்.

    • தமிழ்நாட்டின் GSDP கடந்த பல ஆண்டுகளாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில்தான் உள்ளது.
    • விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், என்ன சாதனை செய்துவிட்டதாக தொழில் துறை மந்திரி கூறுகிறார் என்பது விந்தையாக உள்ளது.

    அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் GSDP கடந்த பல ஆண்டுகளாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில்தான் உள்ளது. 1960-ம் ஆண்டு முதலே தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு சில ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் 8 முதல் 9 சதவீதமாகத்தான் இருந்து வருகிறது.

    ஆனால் தொழில்துறை மந்திரி 26.1.2025 அன்று வெளியிட்ட அறிக்கையில், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டை இரண்டாம் இடத்திற்கு விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுதான் கொண்டு வந்ததுபோல் கூறுகிறார்.

    1960-61-ல் 8.7%-ஆக இருந்த பங்களிப்பை, 2023-24-ல் 8.9% ஆக உயர்த்தியது திமுக-வின் பெரும் சாதனை என்று அவர் கூறுகிறார்.

    அமைச்சர் கூறியபடி பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் இந்திய உற்பத்தி மதிப்பில், தமிழ்நாட்டின் பங்களிப்பு கீழ்க்கண்டவாறு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    1960-61 - 8.7%

    1970-71 - 7.3%

    1980-81 - 6.9%

    1990-91 - 7.1%

    2000-01 - 8.3%

    2010-11 - 8.4%

    2020-21 - 8.9%

    2023-24 - 8.9%

    மத்திய தணிக்கை குழுவின் அறிக்கைபடி GSDP அளவு

    2016-17ல் 8.46%

    2017-18ல் 8.57%

    2018-19ல் 8.62%

    2019-20ல் 8.68%

    2020-21ல் 8.90%

    2021-22ல் 8.72%

    2022-23ல் 8.81%

    2023-24ல் 8.90% என உள்ளது.

    2023-24-ம் ஆண்டுக்கான, மேற்குறிப்பிட்டுள்ள விபரங்கள்கூட, முதற்கட்ட மதிப்பீடுதான். இறுதி மதிப்பீட்டில் இந்தப் புள்ளி விவரம்கூட மாறலாம்.

    எனவே, 2020-21-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த, அதே 8.90% அளவிலேயே இந்தப் பங்களிப்பு உள்ளது.

    நிலைமை இப்படி இருக்க, விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், என்ன சாதனை செய்துவிட்டதாக தொழில் துறை மந்திரி கூறுகிறார் என்பது விந்தையாக உள்ளது.

    வெற்றறிக்கை வெளியிட்டு வரும் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், இந்த இரண்டாவது இடத்தைக்கூட குஜராத்தோ, உத்திரப் பிரதேசமோ பிடித்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டதுதான் உண்மை. தொழில்துறை மந்திரியின் பதிலைப் பார்ககும்போது, சட்டியில் இருந்தால்தானே, அகப்பையில் வரும் என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது.

    மேலும், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உள்நாட்டுத் தொழில் முதலீடுகள் மூலம் தமிழகத்தில் 10.07 லட்சம் கோடி முதலீடு என்று தொழில்துறை மந்திரி குறிப்பிடுவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே. பிற மாநிலங்களைப்போல டாவோஸ் நகரில் தமிழ்நாடு ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவில்லை என்பதற்கு பதில் இல்லை.

    19.17 லட்சம் பேருக்கு 'நேரடி வேலை வாய்ப்பு' மற்றும் 31.53 லட்சம் பேருக்கு 'மொத்த வேலை வாய்ப்பு' என்ற அவரது கூற்று மீண்டும் ஒரு கற்பனையான விவரம்தான். உண்மையான முதலீடு எவ்வளவு என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் கேட்ட கேள்விக்கு நேரடி பதில் இல்லை. மேலும், தொழிற்சாலைகள் வாரியாக விபரங்கள் தரப்படவுமில்லை. தமிழகத்தில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு உருவாக்கத்தின் தாக்கம் உண்மையில் இதுவரை தென்படவில்லை.

    மொத்தத்தில் இந்தப் புள்ளி விவரம் ஒரு ஏட்டு சுரைக்காய்தான். அம்மாவின் ஆட்சிக் காலத்தில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுபோல் உண்மையான முதலீட்டு விவரங்களைக் கேட்டு அம்மா அரசின் மீதும், தனிப்பட்ட முறையில் எங்களைக் குறிவைத்துத் தாக்கியும் அறிக்கை வெளியிட்டபோதுகூட 'அரைவேக்காடு' என்ற வார்த்தைகளை அம்மாவின் அரசு ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

    ஆனால், தற்போது அரசுப் பதவியில் உள்ள விடியா திமுக-வின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், புள்ளி விவரத்துடன் கேட்கப்படும் எங்களது அறிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தனிப்பட்ட முறையில், அரசுப் பதவியில் இருக்கிறோம் என்ற நெறிமுறை சிறிதும் இன்றி வசைபாடி, குற்றம்சாட்டி சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கின்றனர்.

    எங்கள் கேள்விகளுக்கு நேரடியான பதில் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

    கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்றும்; தற்போது, டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எத்தனை போடப்பட்டது என்றும், அதில் இதுவரை உண்மையாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்றும், எங்கள் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் எழுப்பிய கேள்விகளுக்கு, பிரச்சனையை திசை திருப்பாமல் நேரடியான, சரியான புள்ளி விவரங்களை விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தொழில் துறை மந்திரி பதில் அளித்தால் நல்லது.

    இவ்வாறு எஸ்.பி. வேலுமணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது.
    • மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விவசாயிகள் பாதிப்பு குறித்து விளக்கி கூறினர். இதனால் மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்தது.

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உட்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.

    தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமான இந்த பகுதிகள் கழுகுமலை, கழிஞ்சமலை, நாட்டார்மலை, ராமாயி மலை, ஆப்டான் மலை, தேன்கூடு மலை, கூகைகந்தி மலை ஆகிய 7 சிறிய குன்றுகளை கொண்டுள்ளன.

    அதேபோல் 2,200 ஆண்டுகளுக்கு முந்தய தமிழ் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால கற்படுக்கைகள், குடைவரைக் கோவில்கள் என தனித்துவமான அடையாளங்களும் அரிட்டாபட்டியில் அமைந்துள்ளன.

    முல்லைப் பெரியாறு அணை நீரால் இப்பகுதியில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் ஒரு போக பாசன விவசாயமும் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியை மையமாக கொண்டு அந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கனிமவளம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கு அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியானது.

    அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தெற்குத் தெரு, முத்து வேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளாளப்பட்டி, சிலீப்பியாபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, சண்முகநாதபுரம் என 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பகுதியில் இந்த திட்டத்தை அமல்படுத்த வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.

    இது தொடர்பான அறிவிப்பை மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நம்பவர் 7-ந்தேதி வெளியிட்டது. இதனால், அதிருப்தியடைந்த மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த ஜனவரி 7-ந்தேதி நடைபெற்ற பிரமாண்ட போராட்டத்தில் மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

    டிசம்பர் 9-ந்தேதி தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது.

    இருந்தபோதிலும் மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யாமல் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தளத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலத்தை தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுவரையறை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. எனவே பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.

    இந்த நிலையில் டெல்லி சென்ற போராட்டக்குழுவினர், டங்ஸ்டன் கனிம சுரங்கத்தால் மேலூர் வட்டத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், நிலத்தடி நீர் சீர்கேட்டையும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விளக்கி கூறினர். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். அத்துடன்

    இன்று அரிட்டாபட்டியில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தினர்.

    இந்த நிலையில் மேலூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சென்னை கிரீன்ஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    • செ.ம. வேலுசாமி (முன்னாள் அமைச்சர், கோவை மாநகர் மாவட்டம்), முல்லை வேந்தன் (முன்னாள் அமைச்சர், தருமபுரி மாவட்டம்).
    • வி. மைத்ரேயன் (முன்னாள் எம்.பி. தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டம்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில்,

    செ.ம. வேலுசாமி (முன்னாள் அமைச்சர், கோவை மாநகர் மாவட்டம்), முல்லை வேந்தன் (முன்னாள் அமைச்சர், தருமபுரி மாவட்டம்), வி. மைத்ரேயன் (முன்னாள் எம்.பி. தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டம், ஆர். சின்னசாமி (முன்னாள் எம்.பி., சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோவை மாநகர் மாவட்டம்) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    அதிமுக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    அவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

    ×