என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருமயம் கல் குவாரியில் 6 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்கள் கூடுதலாக வெட்டி எடுப்பு- ஆய்வில் தகவல்
- கல் குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்
- கணக்கீடு பணியில் குவாரிகளுக்குள் 1500 கியூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் சேமிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. சமூக ஆர்வலரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக திருமயம் கல்குவாரியில் முறைகேடாக கல்வெட்டி எடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார்.
இந்த நிலையில் ஜகபர் அலி கடந்த 17-ந் தேதி திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியில் தொழுகை முடித்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்வாரி உரிமையாளர்களான ராசு, ராமையா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராமைய தவிர மற்ற 4 பே ர்கைது செய்யப்பட்டார்கள். அவர்களை திருமயம் நீதிமன்றத்தில் ஆச்சர்யப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு வரும் 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராமையாவை போலீசார் தேடி வந்த நிலையில் நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் அவர் சரண் அடைந்தார். இதனிடையே சமூக ஆர்வலர் ஜகபர் அலி குற்றம் சாட்டிய திருமயம் துளையானூர், மலைக்குடிபட்டி பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்
அனைத்து கல் குவாரிகளும் உரிய அனுமதியோடு இயங்குகின்றதா, அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பது குறித்தும், நேரடியாகவும், ட்ரோன் மூலமாகவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு மற்றும் அளவிடும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் எவ்வளவு தூரம் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்ற அளவீட்டை கனிம வளத்துறை இணை இயக்குனருக்கு அறிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர்.
அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆய்வு மேற்கொண்ட ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்த மான குவாரிகளின் ஒப்பந்த காலம் 2023-ம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் அந்தக் குவாரிகளில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு பக்கமும் ஒரு மீட்டர் நீளமுள்ள கன சதுரத்தின் அளவு ஒரு கியூபிக் மீட்டர் ஆகும். அந்த வகையில் 6 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்கள் கூடுதலாக வெட்ட்டி எடுக்கப்பட்டு உள்ளது அதிகாரிகள் சோதனையில் தெரிய வந்துள்ளது.
மேலும் கணக்கீடு பணியில் குவாரிகளுக்குள் 1500 கியூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் சேமிக்கப்பட்டு உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் மேல் கனிமவளத்துறை இயக்குனர் ஆய்வு செய்து, அதன் பின்னர் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்துவார். அதன் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே புதுக்கோட்டை கனிம வளத்துறை அதிகாரிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ராமையாவுக்கு ரூ.6 கோடியே 70 லட்சம் ரூபாய் அபராதமும், ராசுக்கு ரூ.12 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






