என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெளிநாட்டு கைதிகளை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும்- ஐகோர்ட் அறிவுரை
- சென்னை ஐகோர்ட்டில் நைஜீரியாவைச் சேர்ந்த கைதி எக்விம் கிங்க்ஸ்லி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- வெளிநாட்டு கைதிகளுக்கு காலை உணவு சிறையில் வழங்கப்படுவதில்லை என்று கூறினார்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துக் கொடுப்பது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் நைஜீரியாவைச் சேர்ந்த கைதி எக்விம் கிங்க்ஸ்லி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.சுந்தரேசன் ஆஜராகி, 'வெளிநாட்டு சிறைக் கைதிகள் நலன் தொடர்பாக விதிகள் உள்ளதா? என்பது குறித்து விளக்கமளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
மனுதாரர் தரப்பில், 'வெளிநாட்டு கைதிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் காலை உணவு சிறையில் வழங்கப்படுவதில்லை' என்று கூறினார். இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை தரப்பில் மறுத்தது. 'கைதிகளுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படுகிறது' என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, 'வெளிநாட்டு சிறைக் கைதிகளாக இருந்தாலும் அவர்களை மனிதத் தன்மையுடன் நடத்த வேண்டும். அவர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும். வெளிநாட்டு சிறைக் கைதிகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்தே அந்த நாட்டில் நம் நாடு குறித்து மதிப்பிடு செய்யப்படும்' என்று கூறி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்






