என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று இந்து முன்னணி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழலுக்கு வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    காவல்துறையின் தடையை மீறி திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

    தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    • காரில் வந்த அதிகாரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து சோதனையில் ஈடுபடுகின்றனர்.
    • தற்போது 2-வது முறையாக சோதனை நடைபெறுகிறது.

    மன்னார்குடி:

    தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி சென்னை, திருவாரூரில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் (வயது 38) என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் வந்த அதிகாரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் அந்த இயக்கத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள், தடயங்கள் எதுவும் இருக்கின்றதா? என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது செல்போன்களையும் கைப்பற்றி, அதில் ஏதேனும் தகவல்கள் இருக்கின்றதா? என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீட்டில் ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக சோதனை நடைபெறுகிறது.

    என்.ஐ.ஏ. சோதனையை யொட்டி பாபா பக்ருதீன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மன்னார்குடியில் காலை முதல் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும்.
    • மாத்தூர் எம்எம்டிஏ பகுதி, பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவாட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எச்டி சர்வீஸ், எம்சிஜி அவென்யூ, சின்ன சாமி நகர்.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மாங்காடு: மாங்காடு டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொள்ளுமணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்திரிமேடு, தென் காலனி, சீனிவாசா நகர், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே.கே. நகர்.

    மாத்தூர்: மாத்தூர் எம்எம்டிஏ பகுதி, பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவாட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எச்டி சர்வீஸ், எம்சிஜி அவென்யூ, சின்ன சாமி நகர், காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், அசிசி நகர், அகர்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், காத்தாக்குழி, திடீர் நகர், பாய் நகர் , சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, விளாங்காடுபாக்கம், பெரியார் நகர் தீயப்பாக்கம், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உயிரிழந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை மறுநாள் ( பிப்ரவரி 5-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 7-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.

    கடந்த 20-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன் படி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்து தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் வாக்கு வேட்டையை துவங்கின.

    கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இன்றியும், பரபரப்பு இன்றியும் தற்போதைய தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ஒரு பக்கம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.-வினரும், சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இரு தரப்பினரும் தீவிர இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூர் கட்சி நிர்வாகிகள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (பிப்ரவரி 5-ம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 8-ம் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும்.

    • இந்திய விண்வெளி துறையின் 100-வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
    • இஸ்ரோவில் உள்ள அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளையை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் இஸ்ரோ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு சொந்த கிராமத்தில் நேற்று மாலையில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் பங்கேற்க இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று மதியம் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    இந்திய விண்வெளி துறையின் 100-வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த சாதனையானது நாட்டிற்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும். ஒவ்வொரு இந்தியனும் இதை நினைத்து மகிழ்ச்சி அடையும் தருணம் இது. இஸ்ரோவில் உள்ள அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது. நாட்டில் பாமர மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. மத்திய பட்ஜெட்டில் இந்திய விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடி சென்றனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்றது. இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

    "மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் வாகை சூடியுள்ள நம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ள நம் இளம் வீராங்கனைப் படை, இன்னும் பல வெற்றிகளைக் குவித்திட வாழ்த்துகிறேன்."

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


    • திருச்சியில் நடந்த வைரவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
    • அப்போது அவர் பேசுகையில், மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று என்றார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பெருந்திரளணி `ஜாம்புரி' என்ற பெயரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்து சுமார் 20,000 சாரண-சாரணியர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை கடந்த 28-ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் கலை, பண்பாடு தொடர்பான கலாசார நிகழ்ச்சிகளிலும், குழு மற்றும் தனிநபர் திறன் தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் அங்கேயே தங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

    இந்நிலையில், திருச்சியில் வைரவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் தொடங்கியது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    தமிழ்நாடு சாரணர் இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம், நவீன பயிற்சி வசதிகளோடு ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும்.

    மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான பற்று என்பதைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும். மானிட தத்துவத்தால் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளம் இருக்க வேண்டும்.

    தமிழ்நாட்டிற்கு பெரும் புகழை ஈட்டித் தருகிறது பள்ளிக் கல்வித்துறை. இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர் அமைச்சர் அன்பில் மகேஷ். இவர் தலைமையில் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியான நிதி ஆயோக் அறிக்கையில் 17 இலக்குகளிலும் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது.

    நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கருணாநிதி. சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்" என தெரிவித்தார்.

    • பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள்.
    • திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல.

    தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

    இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், திண்டிவனம் அருகே மறைந்த கட்சிநிர்வாகி படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், "இன்றைக்கு பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும், அவர்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.

    திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல. விசிகவுக்கும் அவர்தான் வழிகாட்டி. ஆகவே பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    • த.வெ.க.வின் 2-ம் ஆண்டு கொண்டாட்டம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்றது.
    • த.வெ.க. சார்பில் மதுரை மாவட்டத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டாத அறிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல் மற்றும் கொள்கைகள் என கட்சி சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன.

    மேலும், கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை த.வெ.க. தலைவர் விஜய் பிரமாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிக்கப்பட்டு இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய் த.வெ.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள த.வெ.க. கொள்கை தலைவர்களான தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலையை த.வெ.க. தலைவர் விஜய் திறந்து வைத்தார். மேலும், சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனிடையே த.வெ.க.வின் 2-ம் ஆண்டு கொண்டாட்டம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்றது.

    அவ்வகையில், மதுரை மாவட்டத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதே சமயம் த.வெ.க. நிகழ்ச்சியில் தான் வெற்றிமாறன் கலந்துகொண்டார் என்றும் அக்கட்சியில் அவர் இணையவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'விடுதலை 2' படத்தில் இடம் பெற்றிருந்த 'கொள்கை இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள்' என்ற வசனம் விஜயை குறிப்பிடுவதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோவில் வளாகத்தில் நடந்தது.
    • வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக சுற்றுலா தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் இருந்து ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோவில் வளாகத்தில் நடந்தது. கோவில் சார்பில் பதிவு செய்யப்பட்ட மணமக்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதனால் கூட்டம் அலைமோதியது.

    வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30-க்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. 

    • ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களை கவர்வதற்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க. இளைஞர் அணியினரும் தமிழக அரசின் சாதனைகளை சொல்லி தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    ஆளும் கட்சியான திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதனை மனதில் வைத்து தி.மு.க. தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களை மீண்டும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களை கவர்வதற்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு தலைமை தாங்குபவராக ஒருவர் இருப்பார். அவருக்கு கீழே 10 பேர் செயல்படுவார்கள்.

    இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வீடுகளை கணக்கெடுத்து அந்த வீடுகளில் வசித்து வரும் ஆயிரம் வாக்காளர்களை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு குழுவினரிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    இதன்படி இந்த 11 பேர் கொண்ட குழு தீவிரமாக களமிறங்கி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று வாக்களிப்பவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மீண்டும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்.

    தமிழக அரசின் சாதனைகள் தொடர்வதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சி நீடிப்பதற்கும் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்பது போன்ற பிரசாரங்களை இப்போதே மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதே போன்று தி.மு.க. இளைஞர் அணியினரும் தமிழக அரசின் சாதனைகளை சொல்லி தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் இளைஞரணி நிர்வாகிகளின் கூட்டத்தை போட்டு அவர்களுக்கு முக்கிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

    மாவட்ட செயலாளர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழகம் முழுவதும் இது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    இளைஞர் அணியில் உள்ள இளம் வயது உடைய வாலிபர்கள் தங்களது பகுதிகளில் உள்ள இளம் வாக்காளர்களையும் பெண்கள், முதியவர்களையும் கவரும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி தி.மு.க. இளைஞர் அணியினர் பம்பரமாக சுழன்று பணியாற்றத் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி 2026-ம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற கணக்கை போட்டு தி.மு.க. நிர்வாகிகள் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள்.

    இதன் மூலம் தி.மு.க. நிர்வாகிகள் முன்கூட்டியே சுறுசுறுப்புடன் தேர்தல் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×