என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா.
    • தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் உயரவும், தமிழர்கள் தமது உரிமையை பெற்றிடவும் தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்ட அரசியல் ஞானி, தாய்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டி தமிழக மக்களின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எந்நாளும் நிலைத்து நிற்கும் தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று.

    தெளிவான சிந்தனை, ஆற்றல் மிக்க பேச்சு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான எழுத்துகளால் தமிழ்ச் சமுதாயத்தை தட்டி எழுப்பியதோடு, தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டிய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் புகழும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளும் தமிழ் இனம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை
    • தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த் தாயின் தவப்புதல்வர்Anna's memorial day

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாளை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

    அவருடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், வழக்கறிஞர், ஆ.பழனி, நிர்மலா பெரியசாமி, டி.கே.எம்.சின்னையா, மாதவரம் மூர்த்தி, கமலக் கண்ணன், கே.பி.கந்தன், தி.நகர், சத்யா, ராஜேஷ், பாலகங்கா உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதுகுறித்து சமூக வலை தளபக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சுயமரியாதை சுடரொளி, தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த் தாயின் தவப்புதல்வர்; திராவிட இயக்கத்தின் பிதாமகன், மேடைதோறும் தமிழ் பொழிந்த காவிய மேகம்! இருள்சூழ் தமிழ்வானுக்கு

    காஞ்சி வழங்கிய ஒளி வெள்ளி! அரசியல் பகை வரும் அண்ணாந்து வியக்கும்படி அறிவாற்றல் சிகரமென அதிசயமாய் உயர்ந்த, 'நம் இயக்கத்தின் கொள்கைச் சுடர்' பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில், அவர்தம் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. அரசு அண்ணாவின் வழியில் நடக்கவில்லை.
    • விஜய் எங்களுக்கு எதிரி இல்லை.

    சென்னை:

    சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தி.மு.க. அரசு அண்ணாவின் வழியில் நடக்கவில்லை. மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புகழை பாடுவதும் அவரது தந்தையின் பெயரை வைப்பதுமாக செயல்பட்டு வருகிறார். அண்ணாவின் பெயரை எந்த கட்டிடத்திற்கும் வைத்ததாக தெரியவில்லை.

    இந்த ஆட்சி கமிஷன் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அறிவாலயத்தின் இன்வெஸ்டிகேஷன் ஆபீசர் ஆர்.எஸ்.பாரதி கம்பி கட்டுற கதைகளை எல்லாம் சொல்லி வருகிறார்.

    அண்ணா பல்கலைக்கழக விவகாரம், கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை காரில் விரட்டிய விவகாரங்களில் பெண்களின் அபய குரலை அனைவருமே பார்த்தோம். அந்த பெண்கள் கதவை திறந்து இருந்தால் என்னவாகி இருக்கும்?

    காவல்துறையினர் யாருக்கும் அரசியல் பின்புலம் இல்லை என்று சொல்கிறார்கள். அதன்பிறகு அரசியல் பின்புலம் உள்ளதாக ஆர்.எஸ். பாரதி கூறுகிறார். இந்த சம்பவத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை அவரே எழுதியுள்ளார்.

    திருமாவளவன் முழுக்க முழுக்க தி.மு.க.விற்கு கொத்தடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளார் அவர் எங்களை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.

    த.வெ.க. முதல் வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இரண்டு ஆண்டு குழந்தைக்கு வாழ்த்துகள். விஜய் எங்களுக்கு எதிரி இல்லை.

    மத்திய பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட் கிடையாது. விமானத்தில் பயணிப்பவர்கள் வசதி உள்ளவர்களா? ரெயிலில் பயணிப்பவர்கள், ஏழைகளைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. தமிழ்நாடு பற்றி ஒரு வார்த்தை இருக்கிறதா?

    பீகாரில் தற்போது தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு பிரத்யேக திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துகின்ற குடிமகனின் வரியை எடுத்து அந்த மாநிலத்திற்கு போட்டால் என்ன நியாயம்? பா.ஜ.க. கட்சியின் நிதியை எடுத்து பீகாருக்கு வளர்ச்சி நிதியாக கொடுக்க வேண்டி யது தானே?

    பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற கருத்தில் என்றென்றும் மாற்றமில்லை என்று அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.
    • நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரி த்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடந்து இருந்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.

    ஆளுங்கட்சியான தி.மு.க. வும், எதிர்கட்சியான அ.தி.மு.க.வும் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த ஒன்றி ணைகின்றன. அ.தி.மு.க வாக்காளர்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து, நீங்கள் தி.மு.க.விற்கு ஓட்டு போடா விட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து விடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர்.

    எங்களைக் கண்டு இவ்வ ளவு பயப்படுவார்கள் என்று நான் நினைக்க வில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க. வினர் சில உதிரிகளை வைத்து பெரியாரை விமர்சனம் செய்கின்றனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள். நாங்கள் உறுதியாய் தனித்து தேர்தல் களத்தில் நிற்கிறோம்.

    உதிரிகளை கூட்டணி சேர்த்து தி.மு.க நிற்கிறது. நாங்கள் பெரியரை விமர்சிக்கவோ, இழிவாகவோ பேசவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக பெரியார்தான் எங்கள் மொழியை, இனத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

    என் கருத்துக்கு எதிர் கருத்து கூறாமல் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். பெரியார் இல்லாமல் ஒன்றுமில்லை என்பது அவர்களின் கருத்து. பெரியாரால் ஒன்றுமில்லை என்பது எங்கள் கருத்து.

    தமிழரான எங்களுக்கு திராவிடன் என பெயர் வைக்க வேண்டாம். எந்த நேரத்தில் எந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்.

    அதுபோல நான் இப்போது பெரியாரை விமர்சிக்கிறேன். சனாதனத்தை ஒழிப்பதாக சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி, ஆதிதிராவிடர்களோடு அமர்ந்து உணவருந்துவதாக ஒரு விளம்பரம் வருகிறது. இதுதான் உண்மையான சனாதானம் என்பதை உணர்ந்து உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தமிழர்கள். கோபம் வராவிட்டால் நீங்கள் திராவிடர்கள்.

    தமிழக மீனவர்கள் சுடப்படும்போது, நான் இந்த நாட்டு மீனவர் இல்லையா என்று கேட்டால் அது தமிழ் தேசியம். கச்சதீவை கொடுத்தது தான் என்றால் திராவிடம். கச்சத்தீவை திரும்ப எடுப்போம் என்றால் தமிழ்தேசியம். தமிழை சனியன் என்று இழித்து பேசுவது திராவிடம். தமிழ் எங்களுக்கு உயிர், முகம், முகவரி, மூச்சு, பேச்சு என்று பேசுவது தமிழ்தேசியம்.

    60 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்து வாக்கை பறித்து மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏழையாய் வைத்திருப்பது திராவிடம்.

    தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றும் தற்சார்பு வாழ்க்கையைத் தருவது தமிழ் தேசியம். மதிப்புமிக்க வாக்குகளை விலைக்கு விற்கும் நாடும், மக்களும் உருப்படமாட்டார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகு தியில் நடப்பது கடுமையான போர். இந்த போரில், எங்க ளுக்கு கை கொடுப்பது தமிழர்களின் கடமை. ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். என் வீட்டைப்போல நாட்டை பார்த்துக் கொள்வோம். என் தாய் மண்ணை என்னை விட எவரும் நேசிக்க முடியாது.

    என் மொழி, இனத்தின் மீது பெரியாருக்கு ஏன் வன்மம்? என் தாய்மொழி தமிழை சனியன் என்று சொன்ன சனியனை ஒழிக்க வேண்டும். வள்ளளார், வைகுந்தரை விட பெரியார் என்ன சீர்திருத்தம் செய்து விட்டார்? எல்லா எலியும் எழுந்து வந்து ஒரு புலிக்கு முன்னாள் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    தாய்ப்பால் போல் தாய்மொழிக் கல்வி அவசி யம் என்றார் காந்தி. உன் மொழியை உலகின் மூத்த மொழியை அசிங்கமாக பேசினால் விட முடியுமா? வீட்டுக்கு தகப்பனை, நாட்டுக்கு தலைவனை கடன் வாங்க முடியாது. என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது.

    ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விட மாட்டேன். பெரியாரால் இந்த நிலத்தில் என்ன நடந்தது? சமூகநீதி, சாதி ஒழிப்பு, பெண்ணிய உரிமை இதெல்லாம் திராவிடத்தில் வெறும் சொல். தமிழ் தேசியத்தில் அது செயல்.

    பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது திராவிடம். இலங்கையில் போரை நிறுத்தவும், பிரபாகரன் உள்ளிட்டவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா விரும்பியது. ஆனால், காங்கிரஸ் குடும்பமும், தமிழக தலைவர்களும் அதனை விரும்பவில்லை.

    இலங்கை போரை விரைந்து முடிக்க அவர்கள் விரும்பினார்கள் என்று முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சிவசங்கர மேனன் எழுதி இருக்கிறார்.

    பிரபாகரன் இருப்பது இவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக இருக்கும் என்று கருதினார்கள். 13 கோடி தமிழ் சொந்தம் இருக்கும்போது, இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு கொடிய நிகழ்வு நடந்தது. பிரபாகரன் மகன் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பது தமிழக, இந்திய தலைவர்களுக்கு சொல்லப்பட்டது.

    ஆனால், பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் பாலச்சந்திரனைக் கொன்றார்கள். இதை மறந்து, கடந்து போக முடியுமா? இதற்கு காரணமானவர்களை வஞ்சம் வைத்து கருவருக்காமல் விடமாட்டேன்.

    பேரரசுகள் சாம்ராஜ்யங்களே வீழ்ந்துள்ள போது உங்களை வீழ்த்துவது எம்மாத்திரம்? வீழ்ந்து விட்டதால் தான் இப்போது காசு கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். சாதி பார்க்காமல் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளோம். ஈரோடு கிழக்கு மக்களுக்கு நான் யாருக்காக பேசுகிறேன் என்று தெரியும்.

    உதட்டில் இருந்து அல்ல, உள்ளத்தில் இருந்து பேசுகிறேன். உண்மையை, உரக்கப் பேசுவோம். உறுதியாக பேசு வோம். சத்தியத்தை சத்தமாக பேசுவோம். என்னை தோற்கடிக்க துடிக்கிறது திராவிடம். நான் வீழ்வது மகிழ்ச்சி என்றால் தி.மு.க. விற்கு வாக்களியுங்கள்.

    வீழ்ந்த தமிழினம் எழ வேண்டுமானால், தன்மானத்தோடு மக்கள் வாழ வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள். கட்சிகளை, தலைவர்களை நம்பியது போதும். ஒருமுறை எங்களை நம்புங்கள். எங்களின் வெற்றி தமிழ் பேரினத்தின் வெற்றி. மக்களின் வெற்றி. அரசியல் புரட்சிக்கான வெற்றி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!
    • வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்.

    தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

    தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:

    "எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்."

    தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!

    நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!

    வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    • ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர்.
    • விசைப்படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

    அவர்கள் எல்லைதாண்டி வந்தாக கூறி சிறைபிடிப்பு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் 13 பேரை சிறைபிடித்து சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து 171 விசைப்படகுகளில் 1,200-க்கும் மேற்பட்ட மீனர்கள் மீன்துறை அலுவலக அனுமதி பெற்று கடலுக்கு சென்றனர். அவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியான தனுஷ்கோடி-தலை மன்னார் இடையே வலை களை விரித்து இருந்தனர்.

    நள்ளிரவில் அந்த பகுதிக்கு ரோந்து பணி வந்த இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட படகு களை சுற்றிவளைத்தனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட பெரும்பாலான படகுகளில் இருந்த மீனவர்கள் அவசரம் அவசரமாக வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதில் கடைசியாக தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினத்தை சேர்ந்த சந்தியா சதீஷ் (வயது 30) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல்பகு தியில் மீன்பிடித்ததாக கூறி, அந்த படகில் இருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த எபிரோன், காட்ரு, டிரோன், பிரசாத், முனியசாமி, சிவா, அந்தோணி, பயாஸ், சேசு, மண்டபம் காந்தி நகரைச் சேர்ந்த ரவி ஆகிய 10 பேரையும் சிறைபிடித்து இலங்கையில் உள்ள தாழ்வுப்பாடு துறைமு கத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    முன்னதாக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த நண்டு, இறால் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்களையும், அவர்களுக்கு சொந்தமான ஜி.பி.எஸ். கருவி மற்றும் மீன்பிடி உபகரணங்களை யும் கைப்பற்றினர்.

    கடந்த மாதம் ஒரே நாளில் ராமேசுவரம் மீன வர்கள் 34 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலை யில் மீண்டும் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்ப வம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் 3 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 இடங்களிலும், திருவாரூர், மன்னார்குடியில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
    • என்.ஐ.ஏ. சோதனையையொட்டி பாபா பக்ருதீன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை பகுதியில் தனியாக அலுவலகம் அமைத்து தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தக்ரீர் என்கிற இயக்கத்துக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வந்தது கடந்த ஆண்டு மே மாதம் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஹமீது உசேன், அவ ரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகிய 3 பேரை முதலில் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்கனவே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது முகமது, அகமது அலி, காதர் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மேலும் சிலரை கண்காணித்து வந்தனர். இதுதொடர்பாக தமிழகத்தில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையில் 3 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 இடங்களிலும், திருவாரூர், மன்னார்குடியில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    சென்னையையொட்டிய புறநகர் பகுதிகளான முடிச்சூர், குன்றத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் சோதனையில் 2 பேர் சிக்கியுள்ளனர். மன்னார்குடியில் நடைபெற்று வரும் சோதனையின்போது பாபா பக்ருதீன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைதாகி உள்ள நிலையில் மேலும் 3 பேர் என்.ஐ.ஏ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தை பொறுத்தவரையில் தடை செய்யப் பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பது, பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை முளையிலேயே கிள்ளி எறியும் நோக்கத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதன்படி கடந்த சில நாட்களாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வரிசையில்தான் தற்போது ராயப்பேட்டையில் செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்கள் பற்றிய விசாரணையில் அதிரடியாக ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் (வயது 38) என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் சென்ற அதி காரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பக்ருதீனின் வீட்டில் முக்கிய ஆவணங்கள், தடயங்கள் எதுவும் இருக்கின்றதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும், அவரது செல்போன்களையும் கைப்பற்றி, அதில் ஏதேனும் தகவல்கள் இருக்கின்றதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீட்டில் ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது 2-வது முறையாக சோதனை நடைபெற்றது.

    என்.ஐ.ஏ. சோதனையையொட்டி பாபா பக்ருதீன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது 10.30 மணிக்கு முடிவடைந்தது. சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களையும், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக பாபா பக்ருதீனையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    இந்த சோதனை தொடர்பாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 10 இடங்களிலும், செப்டம்பர் மாதம் 12 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தோம். இதைத் தொடர்ந்தே இன்று 6 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.

    இதன்மூலம் இந்த வழக்கில் மட்டும் கடந்த 8 மாதத்தில் 28 இடங்களில் சோதனையை நடத்தி முடித்துள்ளோம். இன்று கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சோதனையை மேற்கொள்ள உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதன்மூலம் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத்தக்ரீர் இயக்கத்துடன் தொடர்புடைய மேலும் பலர் விரைவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 20-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • இடைத் தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி வெளியான உடனேயே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    கடந்த 20-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இன்று மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூர் கட்சி நிர்வாகிகள் இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 3 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தவிர 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனை சாவடிகளில் துணை ராணுவத்தினருடன் உள்ளூர் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இன்று முதல் 5-ந் தேதி வரையும் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளான பிப்ரவரி 8-ந் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த தடையை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தங்கம் விலை மேலும் ‘கிடுகிடு'வென உயர்ந்து இருந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம் விலை கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் ரூ.60 ஆயிரத்தை தொடுவதற்காக கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

    அதனைத்தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த மாத இறுதியில் சவரன் ரூ.61 ஆயிரத்தையும் கடந்தது.

    இதற்கிடையே மத்திய பட்ஜெட் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அதுகுறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாமல் போனது. இதனால் ஏமாற்றமே மிஞ்சியது. பட்ஜெட் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து காணப்பட்டது. பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தங்கம் விலை மேலும் 'கிடுகிடு'வென உயர்ந்தது.

    மதியம் 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. சவரனுக்கு மொத்தமாக ரூ.480 உயர்ந்தது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 62,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,790 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,320

    01-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,320

    31-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,840

    30-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,880

    29-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-02-2025- ஒரு கிராம் ரூ. 107

    01-02-2025- ஒரு கிராம் ரூ. 107

    31-01-2025- ஒரு கிராம் ரூ. 107

    30-01-2025- ஒரு கிராம் ரூ. 106

    29-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    • அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.
    • பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    அமைதிப்பேரணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.

    பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.

    அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி தொடங்கியது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். இதைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.

    அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க.வினர் அமைதிப் பேரணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியார் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் செல்ல அனுமதியில்லை. கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, ராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது.

    வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திரும்பி அண்ணா சிலை வழியாக செல்லலாம்.

    • போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று இந்து முன்னணி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழலுக்கு வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    காவல்துறையின் தடையை மீறி திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

    தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    ×