என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுக்க கோரி வழக்கு.
- இளையராஜா நேரில் ஆஜராகி சாட்சியங்களை சமர்ப்பித்தார்.
சென்னை:
மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் தாங்கள் உரிமம் பெற்றுள்ள பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில், தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களின் உரிமத்தை பெற்றதற்கான ஒப்பந்தம், இசையமைப்பாளர் இளையராஜா மனைவி பெயரிலுள்ள நிறுவனத்துடன் போடப்பட்டதாகவும், அந்த பாடல்களை தற்போது யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மனைவி பெயரிலுள்ள நிறுவனம் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று காலை இளையராஜா நேரில் ஆஜராகி சாட்சியங்களை சமர்ப்பித்தார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தவிர வேறு எந்த கட்சிகளும் இல்லை.
- எடப்பாடி பழனிசாமி தலைமையிடம் யாருக்கும் நம்பிக்கை இல்லை.
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவருமான கே.சி.பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதிகளின் படி இந்த இயக்கம் வழிநடத்தப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறோம்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தேர்தல் ஆணையத்தின் பணியை குமாஸ்தா பணி என தெரிவித்துள்ளார். இந்த குமாஸ்தா தானே இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடலாம் என்று ஓராண்டுக்கு முன்பு கடிதம் கொடுத்தார். அந்த குமாஸ்தா கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் தானே எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்து போட்டுக் கொண்டு இருக்கிறார்.
சின்னம் தொடர்பான அந்த விதிகளின் கீழ் இதை பரிசீலனை செய்யுங்கள் என உத்தரவு கொடுத்துள்ளார்கள். எனவே அதனை மீண்டும் பரிசீலனை செய்யும் உரிமையை தேர்தல் ஆணையம் இன்று பெற்றிருக்கிறது.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாக தீர்ப்பு வர அதிக வாய்ப்புள்ளது. அப்போது அ.தி.மு.க. தலைமை மாற்றத்தை நோக்கி நகரலாம். இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயமும் உள்ளது.
அ.தி.மு.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எதிர்க்கட்சி அரசியலை கூட அவர் சரியாக செய்யவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் தி.மு.க.வை வீழ்த்தும் வலிமை அ.தி.மு.க.விற்கு இல்லை. அ.தி.மு.க.வின் அனைத்து மட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது தனது அதிருப்தியை வெளிக்காட்டி விட்டார். அதிருப்தி இருந்ததால் தான் அதனை வெளியில் சொல்லி உள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தவிர வேறு எந்த கட்சிகளும் இல்லை. பிரசாந்த் கிஷோர் அ.தி.மு.க. தேர்தல் ஆலோசனை ஆலோசகராக வருவார் என்றார்கள். ஆனால் அவர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்று விட்டார். எடப்பாடி பழனிசாமி எதையும் கண்டு கொள்ளாமல் தனது தலைமையை காப்பாற்றுவதில் மட்டும் குறியாக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிடம் யாருக்கும் நம்பிக்கை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும்.
- ஒதுக்கப்பட்ட சிறப்புநிதியை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, மேலப்பிடவூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனை சாதிவெறி பிடித்த 3 நபர்கள் எங்கள் முன் எப்படி நீ வாகனத்தை ஓட்டி செல்லலாம் என்று கூறி, அவரது இரு கைகளையும் வெட்டியதோடு மட்டுமல்லாமல் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளார்கள். கல்லூரி மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
விஞ்ஞானத்தில் முன்னேறிய நாகரீக காலத்தில் கூட இதுபோன்ற சாதிய வன்கொடுமை தாக்குதல் நடைபெறுவது என்பது மனித குலத்திற்கு இழுக்கு. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவுகளின் கீழும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும். காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இதுபோன்ற தீண்டாமை கிராமங்களை அடையாளம் கண்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்துறைக்கு ஒதுக்கப்பட்ட சிறப்புநிதியை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்.
இவர்களை போன்ற சாதிய மனப்பான்மை கொண்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பூண்டுள்ளார்கள். மேலும் சமுதாய மாற்றம் வராமல் இதுபோன்ற சமூகநீதிக்கு வேட்டு வைக்கின்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
- 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
- 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் இங்குள்ள ஆனந்தசஸட குளத்தில் தான் உள்ளார். இந்த குளம் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே திறக்கப்படும்.
இந்த முறை 3 நாட்கள் தெப்ப உற்சவத்திற்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் என மொத்தம் 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தாயாருடன் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
முதல் நாள் என்பதால் மூன்று சுற்றுகள் தெப்பம் சுற்றிவந்தது. 2-வது நாளான இன்று 5 சுற்றுகள், 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.
இதில் திரளான பக்தர்கள் கலந்த கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.
- ‘வணிகம் காக்க வெள்ளையன் இளைய தலைமுறை எழுச்சி மாநாடு’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
- அனைவரும் குடும்பத்தோடு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்றார்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் தலைமையில் பெரம்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பொது செயலாளர் ராகவேந்திரா மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இமானுவேல் ஜெயசீலன், தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிச்சா ரமேஷ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.அந்தோணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வருகின்ற மே 5-ந்தேதி வணிகர் தின மாநாடு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாடு 'வணிகம் காக்க வெள்ளையன் இளைய தலைமுறை எழுச்சி மாநாடு' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு பின்னர் எனது தலைமையில் செயல்படும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து முதன் முதலாக என்னுடைய தலைமையில் நடத்த இருக்கும் முதல் மாநாடு என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில, மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்தோடு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்றார்.
- இனியாவது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
- அரசு நிர்வாகம் திட்டமிட்டு அறுவடை எந்திர தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். 505 வாக்குறுதிகளில் 328 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக முதலமைச்சர் பொய் சொல்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 3.5 லட்சம் வேலைவாய்ப்புகள் நிறைவேற்றப்படும். மாணவர்களின் கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படும். சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்பட்டு அவை நேரலை செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடை 13 சதவீதம் உயர்த்த முடிவெடுத்துள்ளது. தெலுங்கானாவில் இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த இடதுக்கீடு 66 சதவீதமாக உயரும். இதற்கான சட்ட முன் வரைவு வரும் மார்ச் மாதம் கொண்டுவர உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இனியாவது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
புதிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமான பி அண்டு சி பள்ளியை திறக்க தமிழக அரசு மறுத்துவிட்டதால் ரூ.2,151 கோடி தொகையை மத்திய அரசு வழங்க மறுத்து விட்டது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கிட வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.
காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்பட கூட்டம் நடத்தவேண்டும். கோதாவரி ஆற்றிலிருந்து 1100 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி.தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை தீவிரமடைந்துள்ளது. அரசு நிர்வாகம் திட்டமிட்டு அறுவடை எந்திர தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 39 ஆயிரத்து 393 களப்பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். இரண்டாம் நிலை காவலர்கள் 7 ஆண்டுகளில் முதல்நிலை காவலர்களாகவும் 10 ஆண்டுகளில் தலைமை காவலராகவும், 20ஆண்டுகளில் சிறப்பு காவல் ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அடுத்த நிதிநிலை அறிக்கையில் பதவி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
15-ந்தேதி: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு பேசியுள்ளார்.
இந்த சந்திப்பானது சென்னையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. கமல்ஹாசன் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்ததாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:- மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியிருந்தார். இதனை தொடர்ந்து, தி.மு.க. சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம், தொண்டர்கள் அதனை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
- ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை நாம் பார்க்கின்ற பொழுது, தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் தொடங்கி, நீதிக் கட்சி பரிணாம வளர்ச்சியில் திராவிட இயக்கம் தந்தை பெரியார் தலைமையில் தொடர்ந்து, தேர்தல் அரசியல் என்கிற அடிப்படையிலே பேரறிஞர் அண்ணா கொட்டுகிற மழையில் ராவிட்சன் பூங்காவிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் உருவாக்கினார்.
அதனைத் தொடர்ந்து அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கேள்விக்குறியான திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த மிகப்பெரிய பங்கு வகித்த புரட்சித்தலைவர், ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாய மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தர மக்களையும் வாழ்வில் ஒளியேற்ற 1972-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார்.
அப்போது அவர் சந்தித்த விமர்சனம், அவமானங்களை எல்லாம் தூள், தூளாக்கி மன வலிமையோடு, மக்கள் பேராதரோடு ஆட்சியை அமைத்தார். எம்.ஜி.ஆர். இருக்கும் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதா இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பினையும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்கின்ற பொறுப்பையும் ஏற்றார்.
அத்தனை வேதனைகளையும், கஷ்டங்களையும் தனதாக்கிக் கொண்டு, ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி, மூன்றாம் பெரிய இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். எங்களைப் போன்ற சாமானிய தொண்டர்களை எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக உருவாக்கி சேவை செய்யும் அரிய வாய்ப்பினை அளித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, இந்த இயக்கத்தை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடியார் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவிடு, பொடியாக்கி அனைவரும் தாயை போல அரவணைத்து இன்றைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ளார். அதனால் தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.
இன்றைக்கு தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாய் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எடப்பாடியார் திகழ்ந்து உரிமை குரல் எழுப்பி, எட்டு கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இன்றைக்கு இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார்.
அ.தி.மு.க. என்று சொன்னாலே சோதனையை சந்தித்த இயக்கம். அ.தி.மு.க. என்று சொன்னாலே அது எல்லோருடைய கண் திருஷ்டி பெற்று சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றிய இயக்கம். இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம், தொண்டர்கள் அதனை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், அ.தி.மு.க.வை அசைத்துப் பார்க்க முடியாது. எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அ.தி.மு.க.வுக்கு எந்த சேதாரமும் இல்லை, இது மக்களால் பாதுகாக்கப்படுகிற இயக்கம்.
ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனால் தற்போது அ.தி.மு.க.வில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதில் கூறும் வகையில் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளதாக கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.
- உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.
- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடி அவர்கள், நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2018-2019 ஆம் ஆண்டு, சமக்ர சிக்ஷா திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) தொடர்பாக சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தனிப் பாடமாக இடம்பெற வேண்டும் என்றும், இதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் ICT Labs அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவற்றை அமைக்க மூலதனச் செலவுகளுக்காக, ரூ.6.40 லட்சமும், இந்தப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் பயிற்றுனருக்கு மாத ஊதியமாக ரூ. 15,000 மற்றும் இதர செலவுகள் சேர்த்து, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி ரூ.1,050 கோடி.
ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வயதிலிருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நமது குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டு என்ற இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்திருக்கிறது.
டெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எல்லாம் ஆறாம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், தமிழ் உட்பட மும்மொழிகளில் ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரள மாநிலத்திடம் இருந்து, தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, நமது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.
ஆனால், திமுக செய்திருப்பது என்ன? இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களை, கேரள மாநில அரசு நிறுவனமான Kelton நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில், அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிப் பணியில் அமர்த்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, கணினி அறிவியல் ஆசிரியர்கள் B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவர்களை, அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற பெயரில் நியமித்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.
தமிழகம் முழுவதும் கணினி பயிற்சி பெற்ற B.Ed பட்டதாரிகள் சுமார் 60,000 பேர் இருக்கையில், அவர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல் வஞ்சித்திருப்பது ஏன்?
கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1.050 கோடி எங்கே சென்றது? அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில், ICT Labs செயல்பாட்டில் உள்ளது? ஏன் ஆறாம் வகுப்பிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை? இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.
- முன்னாள் சென்ற ஒரு லாரியின் மீது மாநகர பஸ் மோதி நின்றது.
- கைதான ஆபிரகாமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூரில் மாநகர பஸ் பணிமனை உள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, பிராட்வே, கிளாம்பாக்கம், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரவு கடைசி பஸ்சேவை முடிந்ததும் பணிமனையில் மாநரக பஸ்களை நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் போதை வாலிபர் ஒருவர் திடீரென பணிமனைக்குள் புகுந்தார்.
இதனை அங்கிருந்த ஊழியர்கள் கவனிக்க வில்லை. திடீரென அவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மாநகர பஸ்சில் ஏறி வண்டியை வெளியே ஓட்டிச்சென்றார்.
வழக்கமான டிரைவர் தான் பஸ்சை ஓட்டிச் செல்வதாக நினைத்து ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து போதை வாலிபர் மாநகர பஸ்சை தாறுமாறாக சோழிங்கநல்லூர் அருகே அக்கரை, கிழக்குகடற்கரை சாலையில் வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது முன்னாள் சென்ற ஒரு லாரியின் மீது மாநகர பஸ் மோதி நின்றது. இதையடுத்து லாரிடிரைவர் கீழே இறங்கி வந்து விசாரித்த போது பஸ்சை ஓட்டி வந்த வாலிபர் மதுபோதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து விசாரித்த போது பஸ்சை ஓட்டி வந்தது பெசன்ட் நகரை சேர்ந்த ஆபிரகாம்(33) என்பது தெரிந்தது. கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பழிவாங்க மாநகர பஸ்சை எடுத்து ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.
நேற்று காலை ஆபிரகாம் திருவான்மியூர்-ஊரப்பாக்கம் இடையே மாநகர பஸ்சில் பயணம் செய்து உள்ளார். அப்போது அதில் இருந்த கண்டக்டருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை பழிவாங்க ஆபிரகாம் திருவான்மியூர் பணிமனையில் நிறுத்தி இருந்த மாநகர பஸ்சை எடுத்து ஓட்டி வந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் ஆபிரகாம் பஸ்சை ஓட்டி வந்து உள்ளார். அதிகாலை நேரம் என்பதால் வாகன போக்குவரத்து அதிகம் இல்லை. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாநகர பஸ் விபத்தில் சிக்காமல் இருந்து இருந்தால் அந்த பஸ்சை ஓட்டிச் சென்றது யார் என்பதே தெரியாமல் இருந்து இருக்கும்.
இது தொடர்பாக கைதான ஆபிரகாமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவர் இல்லாத ஒருவர் பணிமனையில் இருந்து மாநகர பஸ்சை ஓட்டிச்சென்றதை அங்கிருந்து ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது எப்படி? என்பது குறித்து போக்குவரத்து அதிகாரிகளும் விசாரித்து வருகிறார்கள்.
- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை, மஞ்சள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பல கோடி மதிப்பிலான பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ் குமார், இசக்கிமுத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு முதல் கடற்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரை செல்லும் சாலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 15 மூட்டை சமையல் புளி, 1 லட்சம் எண்ணிக்கையிலான இங்கிலாந்து நாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும்.
இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து கொண்ட கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கடற்கரை ஓரமாக போட்டுவிட்டு பைபர் படகில் தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






