என் மலர்tooltip icon

    இந்தியா

    • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 270 பஸ்கள் இயக்கப்படும்.
    • மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு இன்று 270 பஸ்களும், நாளை (22-ந்தேதி) 275 பஸ்களும் இயக்கப்படும்.

    கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 பஸ்களும் என மொத்தம் 616 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வருகிற 23-ந்தேதி சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நாங்கள் உங்களை விட கம்மியாக படித்தவர்கள்தான்.
    • எங்களுக்கு என்று கொள்கை இருக்கிறது. எங்களுக்கு எங்களது தலைவர் இருக்கிறார்.

    சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி (அ.தி.மு.க.) பேசும் போது, நிதி நிலை அறிக்கையில் உறுப்பினர் பேசும்போது ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியது சம்பந்தமாக நான் கேட்ட கேள்வி இந்த நிதி ஆண்டுக்கு முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதி என்றார்.

    இதை முதலில் கூறி இருந்தால் தெரிந்திருக்கும். நாங்கள் உங்களை விட கம்மியாக படித்தவர்கள்தான். கூட்டல் கணக்கு எங்களுக்கு சரியாக தெரிந்தாலும் கூட நீங்கள் இன்னொற்றை சொன்னீர்கள். வேறு ஒரு கூட்டல் கணக்கில் நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு என்று கொள்கை இருக்கிறது. எங்களுக்கு எங்களது தலைவர் இருக்கிறார். சாதாரணமான ஒரு கிராமத்தில் இருந்து வந்த அவர் இந்த அளவுக்கு இயக்கத்தை வலிமையோடு நடத்தி கொண்டிருக்கிறார் என்று சொன்னால், எந்த கூட்டல் கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம் என்றார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீங்கள் (அ.தி.மு.க.), ஏமாறாமல் இருந்தால் எங்களது வாழ்த்துகள்" என்றார்.

    • 2-ம் தளத்தில்-கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்.
    • 5-ம் தளத்தில்-அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி.

    சென்னை:

    காவிரிக் கரையில் அமைந்த திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக்களஞ்சியமாக அமைந்திடும் என்றும் முதலமைச்சர் 27.6.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

    அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டடம் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தொழில்நுட்ப சாதனங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

    இந்நூலகத்தின் தரைத் தளத்தில் வரவேற்பறை, தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி, பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை, சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, பருவ இதழ்கள் / பத்திரிகைகள் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி மற்றும் 1000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம்; முதல் தளத்தில்-அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் படப்புத்தகங்கள் பகுதி.

    2-ம் தளத்தில்-கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்.

    3-ம் தளத்தில் தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம்-படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி.

    4-ம் தளத்தில்-ரோ பாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, இணைய (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி.

    5-ம் தளத்தில்-அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி.

    6-ம் தளத்தில் நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி, டிஜிட்டல் மயமாக்கல் பகுதி, டிஜிட்டல் ஸ்டுடியோ, போட்டித் தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடம்.

    7-ம் தளத்தில்-காணொலி (வீடியோ கான்பரன்சிங்) காட்சியரங்கம். தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, நிர்வாகப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

    மேலும், நகரும் படிகட்டுகள், 2 கண்ணாடி மின் தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள், மின்மாற்றிகள், சூரிய மின்களங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

    இந்நூலகத்தில், உலகத் தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணம், கலை, கவிதை, நாடக நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் திராவிட தலைவர்களின் நூல்கள், பெண்ணியம், தேசிய இயக்கத் தலைவர் நூல்கள், அரிய நூல்கள், மருத்துவம், பொறியியல், இசை, விளையாட்டு, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த நூல்கள், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான நூல்கள் ஆகியவை இடம்பெற உள்ளன.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், பொதுப்பணித்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், பொது நூலக இயக்குநர் முனைவர் பொ.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருச்சி காணொலிக் காட்சி வாயிலாக கலெக்டர் எம்.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.1,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இறுதி துணை மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் மொத்தம் ரூ.19,287.44 கோடிக்கு நிதி ஒதுக்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிதிநிலை தன்மையை உயர்த்துவதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பங்கு மூலதன உதவியாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.1,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ்கள் வாங்குவதற்காக போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பென்ஜல் புயல் பாதிப்பு துயர் தணிப்பு பணிகளுக்காக ரூ.901.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார்.
    • தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது.

    அந்த வகையில் கமல்ஹாசன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்குகிறார்.

    வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி.ஆக இருக்கும் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

    இதற்காக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தி.மு.க.வுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசனையும் களமிறக்க தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் கமல்ஹாசனை அதிக அளவில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து அவருக்கு பதிலடி கொடுக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் 2026-ம் ஆண்டு தேர்தல் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பேருந்தில் குதித்து உள்ளார்.
    • சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் நிறுவன மினிபஸ்சில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் விஷால் கெய்க்வாட் கூறுகையில்,

    ஊழியர்கள் உயிரிழப்பிற்கு தீ விபத்து காரணமல்ல... நாசவேலை தான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர், ஏற்கனவே சில ஊழியர்களுடன் தகராறு செய்ததாகவும், அவர்களை பழிவாங்க விரும்பியதும் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பள குறைப்பில் அதிருப்தியில் இருந்த அவர் பஸ்சுக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.

    இறந்த நால்வரில் அவர் மீது வெறுப்பு கொண்டிருந்த ஊழியர்கள் இல்லை என்றும் காவல்துறை துணை ஆணையர் கூறினார்.

    புனே நகருக்கு அருகிலுள்ள ஹின்ஜாவாடி பகுதியில் வ்யோமா கிராபிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பஸ் 14 ஊழியர்களை பணியிடத்திற்கு ஏற்றிச்சென்றது.

    குற்றம் சாட்டப்பட்டவர் பென்சீனை (அதிகமாக எரியக்கூடிய ரசாயனம்) வாங்கியிருந்தார். டோனர்களைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணியையும் அவர் பஸ்சில் வைத்திருந்தார். நேற்று பஸ் ஹின்ஜாவாடி அருகே வந்தபோது, அவர் தீப்பெட்டியை ஏற்றி துணியை தீ வைத்துக் கொளுத்தினார்.

    ஓட்டுநர் ஜனார்தன் ஹம்பர்டேகர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து உள்ளார். அவர் வெளியே வருவதற்கு முன்பே தீக்காயமடைந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவசரகால வெளியேறும் கதவை சரியான நேரத்தில் திறக்க முடியாததால் 4 ஊழியர்கள் இறந்தனர். மேலும், 6 பயணிகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.

    ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    • மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.
    • போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    திருச்சி:

    விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் 120 நாளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை அந்த மாநில காவல்துறை துணை ராணுவப்படை உதவியோடு விவசாயிகள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.

    இதனைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரி பாலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.

    அதனை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு , மாநில துணைத் தலைவர் மேகராஜன்உள்ளிட்ட 20 விவசாயிகளை கைது செய்தனர். இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

    சென்னை:

    சென்னை வானலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. அதே நேரம் சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வரும் 25-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    • இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி.
    • எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது.

    கர்நாடகாவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) தேர்வில் மூன்றாம் மொழிப்பாடமான இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

    மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றுவதற்காக பல மாநிலங்களில் இந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அது மாணவர்களின் அறிவுக்கு பங்களிக்கவோ, அவர்களின் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவோ இல்லை என்பதையே இந்த முடிவு எடுத்துக் காட்டுவதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.

    மேலும், மாநில அரசு மாணவர்களின் எதிர்கால நலனில் தொடர்புடைய ஒன்றை தேர்வு செய்ய அனுமதிக்காமல், எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    மூன்றாவது மொழியாக இந்தியை கற்பதால் ஏற்படும் கூடுதல் சுமையால், தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை கற்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. அரசாங்கம் கன்னடம் மற்றும் ஆங்கிலக் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    அதுவே அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை சார்ந்த எதிர்காலத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் என்று பேராசிரியர் நிரஞ்சனாராத்யா வலியுறுத்தியுள்ளார்.

    • அதிக கடன் வாங்கியது தான் தி.மு.க. அரசின் சாதனை.
    • எந்த புதிய திட்டத்தையும் தொடங்காமல் புள்ளி விபரங்களை மட்டுமே சொல்லி சமாளிக்கின்றனர்.

    சென்னை:

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.

    * 5 ஆண்டு தி.மு.க. ஆட்சி நிறைவில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும்.

    * சதவீத அடிப்படையில் கூறி நிதி அமைச்சர் சமாளித்து கொண்டிருக்கிறார்.

    * கடனை குறைத்து வருவாய் அதிகரிக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.

    * தி.மு.க. ஆட்சி அமைத்த நிதி மேலாண்மை குழு 4 ஆண்டுகளில் என்ன அறிக்கை சமர்பித்துள்ளது. நிதி மேலாண்மை குழு அமைத்த பின்னர் தான் 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.

    * மாநில அரசின் வரி வருவாய் 1 லட்சத்து ஓராயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

    * மத்திய அரசின் வரி பகிர்வில் 33 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

    * மூலதன செலவு வெறும் 57 ஆயிரம் கோடி ரூபாய் என்று தான் கணக்கிடப்பட்டுள்ளது.

    * அரசின் கடன் தொடர்பான வெள்ளை அறிக்கை கேட்டோம், அதையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.

    * அதிக கடன் வாங்கியது தான் தி.மு.க. அரசின் சாதனை.

    * எந்த புதிய திட்டத்தையும் தொடங்காமல் புள்ளி விபரங்களை மட்டுமே சொல்லி சமாளிக்கின்றனர்.

    * பட்ஜெட் கணக்கை சரியாக செய்யுங்கள், எங்களது கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

    * ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறாம். எங்கள் மீது நீங்கள் கரிசனை காட்ட வேண்டாம். அ.தி.மு.க. தன்மானத்தை இழக்காது என்றார். 

    • 15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை.
    • நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.

    மதுரை:

    மதுரையில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

    15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள், கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் லஞ்சம் வேண்டுமென அதிகாரிகள் கேட்பதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

    முளைத்த நெல்லுடன் மாவட்ட ஆட்சியரிடம், நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.

    • அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை தமிழக பா.ஜ.க.வின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை. ஆனால் இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து நாளை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார்.

    இதற்கு முன்பாக, நீட் எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். யாரும் மதிக்கவில்லை. இப்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிப் போயின. ஆனால் கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்து விடச் சொல்ல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை. தமிழக விவசாயிகளை விட, அவரது இந்தி கூட்டணிதான் முக்கியமாக இருக்கிறது. அவருக்கு மேகதாது அணை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு தெளிவுபடுத்திய பின்னரும் மேகதாது அணையைக் கட்ட தமிழகத்தின் சம்மதம் தேவையில்லை. அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதலமைச்சர் D.K சிவக்குமார் அவர்களுக்குத் தான் வாழிய பாடி வரவேற்கிறது திமுக.

    முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. பேபி அணையைப் பழுது பார்க்கக் கூட தமிழக வல்லுநர்களை அனுமதிப்பதில்லை.

    தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்சினை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம். இது தவிர, தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரள மாநிலத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், சாதித்தது என்ன?

    அரிசி பருப்பு, காய்கறிகள் என தமிழகத்தில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது மருத்துவக் கழிவுகளும் இறைச்சிக் கழிவுகளும் தான். கேரள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கழிவுகளைக் கூட நமது எல்லை மாவட்டங்களில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது கேரள அரசு. இரண்டு நாட்களுக்கு முன்பாக, அங்குள்ள தெரு நாய்களைக் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்றார்கள். இவை அனைத்தும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்குத் தெரியாமலா நடக்கிறது? இப்படி தமிழகத்தை ஒரு குப்பைக் கிடங்காகப் பார்க்கும் கேரள முதலமைச்சருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தொடர்ந்து தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களை வைத்து தனது அரசியல் இருப்பைக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. தொடர்ந்து தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நாளை தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

    தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும் நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



    ×