என் மலர்tooltip icon

    இந்தியா

    • சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.
    • கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது.

    உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் சமீபத்தில் 100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழும் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடு சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.

    இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், பஜார் வழியாக மக்கள் நடந்து செல்வதும், அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்து, அந்த இடத்தில் புகை மேகம் சூழ்வது பதிவாகி உள்ளது.

    கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கி அந்த நாய் உயிரிழந்தது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.     

    • டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • ஹோலி கொண்டாட்டத்தின் போது நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் வர்மா. இவர் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதனால் அவர் டெல்லியில் ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    சமீபத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது அவரது வீட்டில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி மாடிக்கும் பரவியது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு படை வீரர்கள் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. பிறகு தீயணைப்பு படை வீரர்கள் நீதிபதி வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று முழுமையாக தீ அணைக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் ஆய்வின்போது அறைகளில் சில பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதை கண்டதும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இதுபற்றி விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை செய்தார்.

    அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டார். மீண்டும் அவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.

    இதற்கிடையே, நீதிபதி வீட்டில் எரிந்து பணத்தின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    தீயை அணைக்கும் பணியின்போது நீதிபதியின் வீட்டில் கத்தை, கத்தையாக பணம், நகைகளும் இருந்தது தெரியவந்துள்ளது.

    மேலும், தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதில், நீதிபதி வீட்டில் ரூ.11 கோடி பணம் எரிந்து விட்டதாகவும், மேலும் ரூ.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.

    அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்பு சட்ட விரோத பேச்சாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது.
    • கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    தளி:

    கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் ஆகிய பொருள்கள் பொது மக்களுக்கு தரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என சோதனைகளை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

    அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓசூர், சூளகிரி, தளி கெலமங்கலம் போன்ற பகுதிகளில் உணவு பொருட்கள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.

    அதன் தொடர்ச்சியாக தேன்கனிக்கோட்டை பகுதியில் ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முத்து மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் பிரகாஷ் மற்றும் சந்தோஷ் மற்றும் உணவு பகுப்பு ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் இருந்த 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 8 டன் அளவில் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து, அதன் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

    • அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் நடைபெற்றது
    • டெல்லி தலைமையில் இருந்த கோபால் ராய் குஜராத் ஆம் ஆத்மி மாநில தலைவராக மாற்றலானார்.

    தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகால ஆட்சி அதிகாரத்தை பாஜகவிடம் ஆம் ஆத்மி பறிகொடுத்தது. தற்போது பஞ்சாபில் மட்டுமே ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் கட்சியை வலுப்படுத்த ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது.

    அதன்படி டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் தலைமையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

    அவ்வாறாக டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவராக இருந்த கோபால் ராய்க்குப் பதிலாக சௌரப் பரத்வாஜ் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் மாநில பொறுப்பாளராக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் டெல்லி தலைமையில் இருந்த கோபால் ராய் குஜராத் ஆம் ஆத்மி மாநில தலைவராக மாற்றலானார்.

    கோவாவின் பொறுப்பாளராக பங்கஜ் குப்தாவும், சத்தீஸ்கரின் பொறுப்பாளராக சந்தீப் பதக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் ஆம் ஆத்மி மாநிலத் தலைவராக மகாராஜ் மாலிக் நியமிக்கப்பட்டார்.

    • தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது.
    • துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் 32 ஆண்டு காலம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சியில் அமர்ந்து முத்தான பல்வேறு திட்டங்களை, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தந்தது அ.தி.மு.க.தான். ஆனால் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச்சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள். அமைதி பூங்காவான தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக மாறி இருக்கிறது. இதனை மாற்றும் சக்தி வாக்காளர்களாகிய மக்களிடம் உள்ளது.

    எனவே தான் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. ஆட்சியில் தொடரும் வேதனைகளையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு அம்மா பேரவை சார்பில் வீதிவீதியாக, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம். அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் திண்ணைப் பிரசாரம் நடந்து வருகிறது.

    இதுவரை 5 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை 6-வது வாரமாக 82 பகுதியிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சம் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக பங்கேற்கிறார்கள். வியாபாரிகள் பொதுமக்களும் எங்களின் துண்டு பிரசுரங்களை ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கிறார்கள்.

    இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து இந்த திண்ணை பிரசாரம் நடக்கும். ஒவ்வொரு வாரமும் வேறு மாதிரியான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 2026 பொது தேர்தலில் மக்கள் அ.தி.மு.கவை மீண்டும் தமிழக ஆட்சி அரியணையில் ஏற்றுவார்கள். பொதுச் செயலாளர் எடப்பாடியார் மக்களின் முதலமைச்சராக பதவியேற்பார். அப்போது தி.மு.க. அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்கள் அனைத்தும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.

    வரிச்சுமையும் மக்களிடம் இருந்து இறக்கி வைக்கப்படும். எனவே இந்த மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட அம்மா பேரவை நடத்தி வரும் திண்ணை பிரசாரம் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.
    • கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.

    இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

    அப்போது, பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கைவிலங்கிடுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    மேலும், " பெண்கள், சிறார்கள் விலங்கிடப்படுவதில்லை என்றாலும், நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.

    கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.

    அமெரிக்காவில் இருந்து இதுவரை மொத்தம் 388 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

    • சில தொகுதிகளில் தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்திருக்கிறது.
    • உள்கட்சியில் நிலவும் பூசல்தான் காரணம் என்று ஆய்வில் தெளிவாகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. இந்த இலக்குடன் தேர்தல் பணிகளை தி.மு.க. மேலிடம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரப்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தி.மு.க. சார்பில் 234 தொகுதிகளிலும் ரகசிய ஆய்வு நடந்ததாக தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று மூலம் இந்த ஆய்வு நடந்துள்ளது.

    மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளது? ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள செல்வாக்கான நபர்கள் யார்-யார்? என்பது போன்ற கேள்விகளுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.

    ஆய்வு முடிவில் சுமார் 50 தொகுதிகளில் தி.மு.க. 100 சதவீதம் வெல்லும் வாய்ப்புடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    என்றாலும் சில தொகுதிகளில் தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்திருக்கிறது. உள்கட்சியில் நிலவும் பூசல்தான் அதற்கு காரணம் என்று ஆய்வில் தெளிவாகிறது. இதையடுத்து அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தி.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதே போன்ற ஒரு கருத்து கணிப்பை அ.தி.மு.க.வும் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதில் எத்தகைய முடிவுகள் கிடைத்து இருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை.

    • சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி ரூ.42 கோடியில் நடைபெறும்.

    2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை மாநகரை அழகுபடுத்த ரூ.65 கோடி ஒதுக்கப்படுவதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

    அதன்படி சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

    மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி ரூ.42 கோடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சென்னை - திருச்சி இடையே தினசரி விமான சேவையை நாளை தொடங்குகிறது.
    • இந்த விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்புகளும் உள்ளன.

    சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு, இண்டிகோ நிறுவனம் மட்டுமே தினசரி சேவைகளை வழங்கி வந்தது. இதனால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்காக இருந்தது. எனவே கூடுதல் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் இருந்தது.

    இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், சென்னை - திருச்சி இடையே தினசரி விமான சேவையை நாளை தொடங்குகிறது.

    சென்னையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    திருச்சியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 9.15 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்புகளும் உள்ளன.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22, 26, 29, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
    • ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வருகிற 31-ந்தேதி, எப்ரல் 7-ந்தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனுாரை அடையும். மறுமார்க்க ரெயில் வருகிற 31-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்னையை வந்தடையும்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22, 26, 29, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த 3-வது நாளில் காலை 7.15 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் சந்திரகாச்சிக்கு செல்லும்.

    சந்திரகாச்சியில் இருந்து வருகிற 24, 28, 31, ஏப்ரல் 4-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் மாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.

    இதேபோல் ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வருகிற 31-ந்தேதி, எப்ரல் 7-ந்தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 270 பஸ்கள் இயக்கப்படும்.
    • மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு இன்று 270 பஸ்களும், நாளை (22-ந்தேதி) 275 பஸ்களும் இயக்கப்படும்.

    கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 பஸ்களும் என மொத்தம் 616 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வருகிற 23-ந்தேதி சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×