என் மலர்tooltip icon

    இந்தியா

    • தமிழகத்தைப் புறக்கணித்து தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது கவலை அளிக்கிறது.
    • முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது?

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சீனாவைச் சேர்ந்த மின் சார மகிழுந்து நிறுவனமான பி.ஒய்.டி ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது மகிழுந்து உற்பத்தி ஆலையை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

    தமிழ்நாட்டிற்கு இந்த மகிழுந்து ஆலையைக் கொண்டு வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, அந்த வாய்ப்புகளை தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது.

    பி.ஒய்.டி மகிழுந்து ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போட்டியிட்டன.

    இந்த மாநிலங்களில் தமிழ்நாட்டுக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன.

    ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது.

    தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை.
    • ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

    எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தால் சமீப நாட்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் வகை புகைப்படங்கள் டிரெண்டிங்கில் இருப்பதை காணலாம்.

    கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தொங்கி திரைபிரபலலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த டிரெண்டில் இணைந்துள்ளனர். அவர்களின் அனிமேஷன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

    அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஜிப்லி டிரெண்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து ஸ்டுடியோகிப்லி உலகம் வரை எனது மிகவும் மறக்க முடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • கட்சி கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது.
    • யார் பேட்டிக்கு அழைத்தாலும் தலைமையின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    கட்சி கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. கட்சி வளர்ச்சி அடையும் போது, முன்னணி தலைவர்கள் இடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும்.

    கட்சியில் ஒவ்வொரு வரும் கட்டுப்பாடுகளோடு செயல்பட வேண்டும்; அந்த கட்டுப்பாடு, பிறருக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், முன்னணி பொறுப்பாளர்களே சமூக வலைதளங்களில், இஷ்டத்துக்கும் பதிவிடுகின்றனர்.

    அது கட்சிக்கும், தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கடும் மன வேதனையில் இருக்கிறேன். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், கட்சியினரின் செயல்பாடுகள் உள்ளன. கட்சி முன்னணியினரின் செயல்பாடுகளால் காயம் பட்டிருக்கிறேன்.

    கட்சிக்குள், ஒருவருக்கு மற்றொருவர் முரண்பாடு களுடன் இருக்கலாம். அதற்காக, முரண்பட்ட கருத்துகளையெல்லாம் சமூக வலைதளங்களில் பகிர்வது, கட்சிக்கு நல்ல தல்ல. அப்படிப்பட்ட கருத்துகளை இனி, கட்சி யினர் யாரும் பதிவு செய்யக் கூடாது.

    எல்லா விஷயங்களிலும் கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும். யு டியூப் சேனலில் பேச அழைக்கின்ற னர் என்றதும், சுய விளம் பரத்துக்காக எதைப் பற்றியும் கவலைப்படாமல் போய் விடக்கூடாது.

    பேச அழைப்பவர்கள், என்ன நோக்கத்திற்காக அழைக்கின்றனர் என பார்க்காமல், வாய்ப்பு கிடைக்கிறதே என்று செல்வதும், அங்கு சென்று இஷ்டத்துக்கு பேசுவதும் கவலைக்குரியது.

    யார் பேட்டிக்கு அழைத்தாலும், கட்சித் தலைமையின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

    என்னை பொறுத்த வரை, வரும் 2026-ல் நடக்கவிருக்கும் சட்ட சபைத் தேர்தல் வரை, கட்சி முன்னணியினர், யூ-டியூப் சேனல்களுக்கு பேசச் செல்லாமல் இருப்பதோடு பேட்டி கொடுக்காமலும் இருப்பது நல்லது. வாய்ப்பு வந்தாலும் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி வினியோகம் வெளிப்படுத்தியது.
    • சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சசிதருர். இவர் தனது மனதில் உள்ள கருத்துக்களை கட்சிக்கு அப்பாற்பட்டு மிகவும் வெளிப்படையாக தெரிவிப்பார். இதனால் அவருக்கு காங்கிரஸ் கட்சி யிலேயே கடும் எதிர்ப்பு உள்ளது.

    இந்தநிலையில் சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருகிறார். அமெரிக்காவில் அதிபர் டிரப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசியதை பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் செயல்பாட்டையும் பாராட்டினார்.

    அது மட்டுமின்றி கேரள மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசையும் பாராட்டினார். சசிதரூரின் இந்த செயல்பாடு காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்தநிலையில் பிரதமர் மோடியை சசிதரூர் எம்.பி. மீண்டும் பாராட்டியுள்ளார்.

    "கோவிட்-19" காலக் கட்டத்தில் பல நாடுகளுக்கு "கோவிட்" தடுப்பூசிகளை வினியோகிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உதவியதாக கூறியி ருக்கும் அவர், அதற்கு பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சசிதரூர் எம்.பி. கூறியிருப்ப தாவது:-

    "கோவிட்-19" காலத்தில் உலகின் தடுப்பூசி மையமாக இந்திய திகழ்ந்தது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது. "கோவிட்" தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது வளரும் நாடுகளுக்கு இந்தியா, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வினியோகம் செய்தது.

    சமமான தடுப்பூசி வினியோகத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு இந்திய பங்களித்தது. தொற்றுநோயின் இருண்ட காலத்திலும், உலகளாவிய சுகாதார ராஜ தந்திரத்தில் இந்தியா தனது திறமையை வெளிப்படுத்தியது. நெருக்கடியான நேரங்களில் பல்வேறு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி வினியோகம் வெளிப்படுத்தியது.

    பணக்கார நாடுகள், தங்களின் சொந்த குடிமக்களுக்காக அதிக அளவிலான தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கு தங்களின் வளங்களை செலவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்பட வேண்டியிருந்தது. அவை ஏழை நாடுகளுக்கு வினியோகிக்கப்பட்டிருந்தால் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.

    இவ்வாறு சசி தரூர் கூறியிருக்கிறார்.

    சமீபத்தில் ஒரே மாதத்தில் இரண்டு முறை பிரதமர் மோடியை பாராட்டி சசி தரூர் பேசியிருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரத மரை பாராட்டியிருக்கிறார். சசிதரூரின் இந்த செயல்பாடு காங்கிரஸ் கட்சியின் தலை மைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சோதனையில் ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
    • விளைநிலத்தில் தற்காலிகமாக செட் அமைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் அதர்நத்தம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் விளைநிலத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ளநோட்டுகள் அச்சடித்துள்ளனர்.

    காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு அதிரடியாக நுழைந்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்தில் காவல்துறை சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விளைநிலத்தில் தற்காலிகமாக செட் அமைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நிலத்தின் உரிமையாளரான வி.சி.க. நிர்வாகி செல்வம் தலைமறைவானதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.
    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

    கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி விட்டது. குறிப்பாக கடந்த 27-ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

    இதனால் தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதில் அதிகபட்சமாக சேலத்தில் 102.2 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலரும் வெளியில் தலைகாட்ட முடியாமல் ஏ.சி. அறைகளிலும், மரங்கள் நிறைந்த நிழல் பகுதிகளிலும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

    கடந்த 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வெப்பம் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படியே வெயில் சுட்டெரித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்

    கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் பறவைகளுக்கு நீர், உணவு அளிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    • அணையினால் ஏற்படும் ஆபத்து மக்களை காவு வாங்க காத்திருக்கிறது.
    • தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    கூடலூர்:

    கேரளாவின் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் கடந்த 27ந் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் நெடும்பள்ளி டேம் என்ற பெயரில் முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், எம்புரான் திரைப்படத்தில் கதாநாயகி மஞ்சுவாரியர் ஒரு காட்சியில் பேசும்போது நாம் பிறப்பதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்பு பிரிட்டீஸ் சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ராஜாக்களில் ஒருவர் சாம்ராஜ்ய பக்தி என்ற பெயரில் கையெழுத்து போட்டு 999 வருட ஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்டது நெடும்பள்ளி டேம். ராஜாக்களும் ஆக்கிரமிப்பு சக்திகளும் நாட்டை விட்டு சென்ற பின்பும் ஜனநாயகத்தின் பெயரில் இன்றும் நம்மை ஆக்கிரமித்து உள்ளனர்.

    இந்த டேமால் வரக்கூடிய ஆபத்துக்களை தடுப்பதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசி இருப்பார். இது பெரியாறு அணை குறித்தே பேசப்படுகிறது என்பதால் கண்டிக்கத்தக்கது.

    கேரளாவில் நடக்கும் இத்தகைய கேடுகெட்ட அரசியல் பெரியாறு அணையை பலிகிடாவாக ஆக்குவது கண்டிக்கத்தக்கது. அணையினால் ஏற்படும் ஆபத்து மக்களை காவு வாங்க காத்திருக்கிறது.

    அணையை காப்பாற்ற செக்டேம் என்னும் சுவர்களால் பயன் இல்லை. அணையே இல்லாமல் இருப்பதே சரி என்ற வசனமும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இதன் தயாரிப்பாளர்களை கண்டிக்கிறோம்.

    இந்த வசனங்களை திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். 2 ஷட்ட ர்களை திறந்தாலே மக்களை பழிவாங்குகிற அணையை குண்டு வைத்து தகர்த்தால் கேரளம் மறுபடியும் தண்ணீரில் மூழ்கும் என்றும் வசனம் இடம் பெற்றுள்ளது.

    படத்தின் மொத்த களத்தையும் அடித்து நொறுக்குகின்ற வசனங்கள் பெரியாறு அணை மீது அவதூறு மற்றும் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    ஒரு திரைப்படமாக பல்வேறு வகையில் வரவேற்பை பெற்ற நிலையில் கதை களத்திற்கு பொருத்தம் இல்லாத வகையில் முல்லைப்பெரியாறு அணை மீது இனவெறியை வெளிப்படுத்தியிருப்பது இரு மாநில உறவில் பாதிப்பு ஏற்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்.

    • கோவிலில் தினசரி பூஜை நடப்பதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
    • கனிந்த மரத்திற்கு அடியில் நின்று பழம் விழுந்தால் தன்னால்தான் விழுந்தது என்று சொல்வார்கள்.

    சென்னை:

    சென்னையில் உள்ள பாரம்பரிய விக்டோரியா அரங்கத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆலய போராட்டம் நடத்துவோம் என சீமான் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    திரவுபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த கோவிலில் தினசரி பூஜை நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    இன்னும் ஒரு வாரத்தில் திரவுபதி அம்மன் கோவில் திறக்கப்பட உள்ளது. கனிந்த மரத்திற்கு அடியில் நின்று பழம் விழுந்தால் தன்னால்தான் விழுந்தது என்று சொல்வார்கள்.

    இந்த ஆட்சி ஒரு செயலை முன்னெடுத்து அதை செய்வதற்கு காலம் கனிந்து வருகின்றபோது அதற்கு ஒரு போராட்டத்தை அறிவித்து அரசியல் நாடகம் செய்கிறார்கள். இதுபோன்ற அறிவிப்புகளை கண்டு மக்கள் மயங்க மாட்டார்கள். வெகு விரைவில் திரவுபதி அம்மன் கோவில் மக்கள் தரிசனத்திற்கு ஒப்படைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எடுத்துக்காட்டும் பெருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் அன்பர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்.
    • அனைவரின் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    உடல் ஆரோக்கியத்துக்கும் மன நலனுக்கும் ஈகைச் சிந்தைக்கும் எளியோரை அரவணைக்கும் தன்மைக்கும் குறியீடாக விளங்கும் நன்னாள்; சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எடுத்துக்காட்டும் பெருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் அன்பர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பா.ஜ.க. சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவரின் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும் சிறக்கவும், செழிப்பை அளிக்கக்கூடிய நன்னாளாக, இந்த ரமலான் தினம் அமையட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வார நாட்களில் 6 ஆயிரம், சனி, ஞாயிறு 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
    • சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு

    ஊட்டி:

    ஊட்டி, கொடைக்கானலுக்கு வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நின்று வருகிறது.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களான கோடை காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளாலும், அவர்கள் வந்து செல்லும் வாகனங்களாலும் நீலகிரி மாவட்டத்தில் 2 மாதங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிகளுக்கு வரும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.

    வெளியூரில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றே நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.

    மேலும் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றி வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும்.

    மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகளை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை (1-ந் தேதி) முதல் புதிய கட்டுப்பாடுகள் நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வர உள்ளது.

    மாவட்டத்தில் நாடுகாணி, குஞ்சப்பனை, பர்லியார், கக்கநல்லா, கெத்தை, தேவாலா என 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் அனைத்திலும் நாளை முதல் சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சுற்றுலா வருபவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருகின்றனரா? என சோதனை செய்ய உள்ளனர். இ-பாஸ் பெறாதவர்களுக்கு அந்த இடத்திலேயே இ-பாஸ் எடுத்து கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    ஐகோர்ட்டு கூறியுள்ளபடி வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி கொடுக்க உள்ளனர். உள்ளூர் மக்களுக்கும், அரசு பஸ்களில் வருபவர்களுக்கும் இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி வருவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாட்டை ரத்து செய்யக் கோரி அவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் தங்கள் கடைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நாளை மறுநாள் (2-ந் தேதி) மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்தும் கலெக்டர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    காவல்துறையின் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒருவழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ரோஸ் கார்டன், பிரையண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கொடைக்கானல் நகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்படும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, காவல் துறையின் சார்பில் வழங்கப்படும் கியூ.ஆர். கோடு மூலம் அவசரம் மற்றும் அவசியம் குறித்து தெரிவிக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும். சுற்றுலா மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த உதவி மையத்தினை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    25 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும். சென்ற வருடத்தில் 15 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 10 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும்.

    மேலும், 25 இடங்களில் ஆர்.ஓ. குடிநீர் முறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினந்தோறும் குடிநீரை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சாலைகளில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் விதி மீறல் இருப்பதாக தெரிய வருகிறது.

    அதனால் கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • ஏப்ரல் 11-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின் பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இத்திருவிழாவின் போது பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத்திருவிழா ஏப்ரல் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருஆவினன்குடி கோவிலில் காலை 11 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி தங்க குதிரை வாகனம், தங்க மயில், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    6ம் நாள் நிகழ்ச்சியாக ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் வள்ளிநாயகி அம்மன், திருமுருகன், திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 7ம் நாளான ஏப்ரல் 11-ந் தேதி பங்குனி உதிரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு கிரி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் நிறைவாக ஏப்ரல் 11-ந் தேதி இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறும். பங்குனி உத்திரம் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.

    ×