என் மலர்
ஆசிரியர் தேர்வு
நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியது.
தெலுங்கானா மாநிலம் கத்வால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விஜய் தேவரகொண்டா கார் சென்றபோது கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
கார் சேதமடைந்த நிலையில், விஜய் தேவரகொண்டா காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர்.
- சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,"ராமதாசின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர்.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.
முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பா.ம.க.நிறுவனர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முதல்வர் இன்று காலை ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையில் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட உள்ளது.
- 2-ம் பருவத்துக்காக பாட நூல்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றன. தொடா்ந்து மாணவா்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட உள்ளது. மேலும், 2-ம் பருவத்துக்காக பாட நூல்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
- இட்லி கடை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இட்லிக்கடை திரைப்படத்தை பாராட்டி பேசிய சீமான், "வாழ்வதற்குதான் பணம் தேவை. பணமே வாழ்க்கை இல்லை. தன் இட்லி கடை படத்தில், நிறைய செய்திகளை கவித்துவமாக, உணர்ச்சி குவியலாக சொல்லியிருக்கிறார் தம்பி தனுஷ், இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டுள்ளார். இப்படத்தை பார்த்தபின், நாம் எல்லோரும் நம் வேர்தேடி பயணிப்போம்" என்று தெரிவித்தார்.
- திபெத் பிராந்தியத்தில் அமைந்துள்ள மலைச்சரிவுகளில் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.
- இந்த மலைச்சரிவுகளில் வெளிநாட்டினர் மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பீஜிங்:
உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மலைச்சரிவுகளில் தற்போது கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.
இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மலையேற்ற வீரர்கள் அப்பகுதியில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த ஆயிரம் பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பனிப்புயலில் சிக்கியுள்ள ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்பு ப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டது.
- அந்த காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் 7,616 ரூபாய் என்பதை ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைதளத்தில் வைரலானது.
அரசு பள்ளி தாளளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் வினோதத்தில் ஆழ்த்தியுள்ளது.
அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundred and sixteen என்பதற்குப் பதிலாக, Saven Thursday six harendra sixty Rupees Only என எழுதியுள்ளார்.
Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது. hundred என்பதற்கு பதிலாக, harendra என எழுதப்பட்டுள்ளது.
அந்தக் காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர். இதனால் அட்டர்சிங், நெட்டிசன்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார்.
இத்தகவல் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கவனத்துக்குச் சென்றது. பள்ளி முதல்வர், ஆசிரியர் அட்டர் சிங் ஆகியோரிடம் இயக்குனரகம் விரிவான விளக்கம் கேட்டது. பள்ளி கல்வி இயக்குனர் ஆஷிஷ் கோஹ்லி முன்பு ஆஜராகுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில், நேரில் ஆஜரான அட்டர் சிங் கவனக்குறைவால் தெரியாமல் தவறு செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது விளக்கத்தை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. அட்டர் சிங்கை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா நடத்தியது.
- இந்தப் போட்டியை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
புதுடெல்லி:
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுடெல்லியின் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றன. 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
மொத்தம் 186 பதக்கங்களுக்காக போட்டிகள் நடந்தன. இதில், சர்வதேச பாரா தடகள வீரர்கள், உலக சாம்பியன்கள் மற்றும் இந்திய விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், போட்டியை நடத்திய இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் நாடுகளை தொடர்ந்து உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
பதக்கப் பட்டியலில் பிரேசில் முதலிடமும், சீனா 2வது இடமும் பிடித்தன. இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கொழும்பு:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
இலங்கையின் கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்லின் தியோல் 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்னும், பிரதிகா ராவல் 31 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 20 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 35 ரன்கள் அடித்து அசத்தினார்.
பாகிஸ்தான் சார்பில் டயானா பெய்க் 4 விக்கெட்டும், பாத்திமா சனா, சாதியா இக்பால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் சிட்ரா அமின் தனி ஆளாகப் போராடினார். அரை சதம் கடந்த அவர் 81 ரன்னில் அவுட்டானார். நடாலியா பர்வேஸ் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் அணி 43 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் கிராந்தி கவுட், தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
- உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.
- பட்டினியால் இறந்தவர்களில் 154 குழந்தைகள் அடங்குவர்.
டிரம்ப் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் அறிவித்தார்.
ஆனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் பட்டினி இறப்பு எண்ணிக்கை 460 ஆக உயர்ந்தது. பட்டினியால் இறந்தவர்களில் 154 குழந்தைகள் அடங்குவர். ஆகஸ்ட் மாதம் பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 182 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இன்றைய தாக்குதல் தொடர்பாக பேசிய இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும், இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.
இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு ஒன்று, கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸுடன் திங்கட்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.
- மக்களை கூட்ட பகுதிக்கு அனுமதித்தது ஏன்? அப்படி அனுமதித்து நெரிசலை ஏற்படுத்தியது ஏன் ?
- மக்கள் பல மணி நேரமாக நின்றிருந்ததால் குழந்தைகள் மயக்கம் அடைந்ததாக கூறுகிறார்.
கரூர் துயர சம்பவம் விபத்து அல்ல என பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் துயரத்திற்கு காரணமான ஸ்டாலின் அரசை கண்டிக்க திராணியில்லாமல் ஏதோ இந்த சம்பவத்தில் அரசுக்கு தொடர்பே இல்லை என்பது போல பக்கவாத்தியம் வாசிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும், அக்டோபர் 4ஆம் தேதி இந்து பத்திரிக்கையில் 'In Karur Where there was no way out' என்ற தலைப்பில் வெளியான செய்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த செய்தியில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
"Many residents insist that the disaster was neither accidental nor unforeseen and that it was the outcome of poor planning and official neglect"
அதாவது "கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ, கூற முடியாது. சரியாக திட்டமிட தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறையாளும் ஏற்பட்டது" என அப்பகுதி மக்கள் கூறியதாக செய்தி கூறுகிறது.
'இந்த செய்தியில் இருந்து தெரிவது என்னவென்றால், இந்த நிகழ்வை அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கையாண்டிருந்தால் இந்த துயரச் சம்பவத்தை தடுத்திருக்க முடியும் என்பது தானே'.
மேலும் இந்தச் செய்தியில் கூறுவது 'கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கே பலர் வந்துவிட்டனர்.
மதியம் 3:00 மணிக்கு யாரும் சாலையில் வாகனங்களில் போக முடியவில்லை. மாலை அப்பகுதியில் திரும்ப கூட இடமில்லை' என அப்பகுதியில் வசிக்கும் திரு. சீதாராம் என்பவர் தெரிவித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல மணி நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்களை கூட்ட பகுதிக்கு அனுமதித்தது ஏன்? அப்படி அனுமதித்து நெரிசலை ஏற்படுத்தியது ஏன் ? என்ற பல கேள்விகள் அரசு நிர்வாகத்தின் மீது எழுவது நியாயம் தானே.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லில்லி' என்பவர் கூறும் போது, விஜய் பேச ஆரம்பித்தவுடன் மின்தடை ஏற்பட்டதாகவும், மைக் வேலை செய்யவில்லை என்றும், கூட்டம் அமைதியிழந்தது என்றும், அந்த நெரிசலில் இரண்டு குழந்தைகளுடன் கீழே விழுந்துவிட்டதாகவும் கூறுகிறார்.
லில்லி என்பவர் கூறியதில் உண்மை இல்லை என்று கூறிவிடமுடியாது. அப்பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவர் மக்கள் பல மணி நேரமாக நின்றிருந்ததால் குழந்தைகள் மயக்கம் அடைந்ததாக கூறுகிறார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழா ஏற்பாட்டாளர்களிடம் ஏன் கேட்கப்படவில்லை. ஜெனரேட்டராலோ, மின்துறை மூலமோ, மின்தடை ஏற்பட்டாலும், கூட்டம் பதட்டம் அடையத்தானே செய்யும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டம் போட்டாரா?
இதில் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதா? இது பற்றி எந்த விபரமும் இல்லை. இது பற்றியெல்லாம் எந்த பாதுகாப்பு திட்டமும் இல்லை என்றால், இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என ஆளும் கட்சி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழத்தானே செய்யும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அனுமதிக்கப்பட்ட இடம் 10,000 பேர் மட்டுமே கூட வசதியுள்ள நிலையில், 25,000 மக்கள் கூடுவதை காவல்துறை ஏன் தடுக்கவில்லை? மக்கள் அதிக அளவு கூடுவதை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை ஏன் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது.
இந்தச் செய்தியில் ஈரோட்டில் இருந்து வந்து உயிர் தப்பிய கார்த்திக் என்பவர் கூறுவது 'ஒரு சில காவலர்களே சாலையோரம் நின்று இருந்தனர். பல காவலர்கள் வெளி வளையத்தில் போக்குவரத்தை சரி செய்தனர். 10 முதல் 15 காவலர்கள் வரை மட்டுமே வாகனத்தை ஒட்டியும், முன்னும் நடந்து வந்தனர். அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்திருந்தால், இந்த துயர சம்பவம் தவிர்த்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே கள நிலவரப்படி கூட்ட இடத்தில் போதுமான காவலர்களை கொண்டு ஆரம்பம் முதலே கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அரசு தவறிவிட்டது என்பது தான் இதன் பொருள். மேலும் விஜய் வாகனத்தை கூட்ட நெரிசலில் காவலர்கள் உள்ளே கொண்டு வரவும் அதை பாதுகாக்கவும் காட்டிய அக்கறையில் பொதுமக்களை பாதுகாப்பதில் காட்டவில்லை என்பது தானே இதன் மூலம் தெரிகிறது.
ஆனால் கூடுதல் காவல்துறை தலைவர் தேவ ஆசீர்வாதம் 20 நபர்களுக்கு ஒரு காவலர் போடப்பட்டதாக கூறுகிறார். இது ஒரு வேலை norms ஆக இருக்கலாம். ஏனெனில் 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக ஆரம்பத்தில் இவர் கூறினார். அதன் பிறகு எண்ணிக்கையை அவர் குறிப்பிடவேயில்லை.
மேலும் உண்மையில் எவ்வளவு காவலர்கள் கூட்ட நிகழ்வுக்கு பணியமர்தப்பட்டனர் என்பதை ஏன் வெளிப்படையாக கூறவில்லை. இந்தச் சம்பவ நிகழ்வின் போட்டோக்களிலும், வீடியோக்களிலும் குறிப்பாக கூட்டம் நடந்த இடத்தில் அதிகமாக காவலர்கள் காணப்படவில்லை என்று தான் மக்கள் பேசுகின்றனர். இது எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களாலும், சம்பவ இடத்தில் இருந்தவர்களாலும் கூறப்படும் உண்மைகள். இவற்றை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இந்த துயர சம்பவத்திற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட தவறிய மாநில அரசின் தவறுகளை மறைத்து இந்த அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்க வாத்தியங்கள் இந்த செய்தியை மீண்டும் படித்து உண்மையை உணர்ந்து நடுநிலையோடு பேச வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கே மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.
- லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன்.
நடிகரும், ரேசருமான அஜித் குமார் சர்வதேச போட்டியின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார்- ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகரும், ரேசருமான அஜித் குமார் மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் ரேசிங்கை தமிழ்நாடு அரசு சென்னையில் நடத்தியது மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கே மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.
ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகனாக அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன்.
அவர்கள் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை, யாரிடமும் நான் ஸ்பான்சர்ஷிப் கேட்பதும் இல்லை. இந்த விளையாட்டு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளுக்கும் பல நல்ல விஷயங்களை SDAT செய்து வருகிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- மொபைல் போனை வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்க வசதி செய்யப்படும்.
- ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு பீகார் வந்துள்ளது.
நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு கட்சிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
இந்நிலையில் ஞானேஷ் குமார் இன்று பீகாரின் வைஷாலி நகரில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார்.
அதில் பேசிய அவர், பீகாரில் 243 சட்டமன்ற இடங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.
மேலும், அனைத்து பொறுப்பு அதிகாரிகளுடனும் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். வாக்களிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மொபைல் போனை வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்க வசதி செய்யப்படும். அவற்றை வெளியே வைத்துவிட்டு வந்த பின்பே வாக்களிக்க அனுமதிக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இருக்கும்.
பீகார் தேர்தலில் 17 புதிய சோதனைகளை பரிசோதிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும்.
வாக்காளர் அடையாள அட்டைகளில் வாக்காளர் அடையாள எண்கள் பெரிதாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணுவதில் பிழை இருந்தால், அனைத்து VVPAT, வாக்குச்சீட்டு வாக்குகளும் எண்ணப்படும்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது அவசியம், பீகார் சிறப்பு தீவிர திருத்தும் சட்டப்படி நடத்தப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு அதை மறுபரிசீலனை செய்வது சட்டத்திற்கு முரணானது.
வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் தான் பொறுப்பு. பீகாரின் 243 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை தணிக்க செய்ய ஒன்றிணைந்து பணியாற்றினர்.
நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியல் அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் விடுபட்டிருந்தால், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம்" என்று தெரிவித்தார்.






