என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
    • பல்சர் மற்றும் யமகா மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்து 2 பேர் மோதியதாகவும் எப்.ஐ. ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் கடந்த மாதம் 13-ந்தேதி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    சனிக்கிழமைகள்தோறும் பிரசாரம் செய்ய திட்டமிட்ட அவர் அதற்கு அடுத்த வாரம் 20-ந்தேதி நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். 3-வது வாரமாக கடந்த 27-ந்தேதி நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இன்னொரு நிர்வாகியான நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டது.

    கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இருவரும் தலைமறைவாக உள்ளனர். 2 பேரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியான நிலையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு அதுபோன்று இனி வரும் காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய சம்பவத்தை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்தார்.

    விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் போலீசார் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர். யாரும் புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்காமல் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து அதில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

    இதை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து எந்த இடத்தில் விபத்து நடைபெற்றது என்பது பற்றி போலீ சார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கரூர் வேலாயுதம்பாளையம் சோதனை சாவடி பகுதியில் வைத்து தான் பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதியது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

    விஜயின் பிரசார வாகனத்தின் பதிவு எண்களான டி.என்.14ஏ.எஸ்.0277 என்ற எண் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. டிரைவர் பெயர் இல்லாமல் வாகன டிரைவர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    பல்சர் மற்றும் யமகா மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்து 2 பேர் மோதியதாகவும் எப்.ஐ. ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    பி.என்.எஸ். 281 என்கிற சட்டப் பிரிவில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், மற்றவர்களின் உயிருக்கு காயம் ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கரூர் தவிட்டுப்பாளையம் சோதனை சாவடி அருகில் பணியில் இருந்த ஏட்டு தெய்வ பிரபு அளித்த புகாரின் பேரிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வேலாயுதம் பாளையம் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து விஜயின் பிரசார வாகனத்தை இன்றோ அல்லது நாளையோ பறிமுதல் செய்ய உள்ளனர்.

    கிழக்கு கடற்கரை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தை எப்போது பறிமுதல் செய்யலாம் என்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று வேலாயுதம்பாளையம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    கரூர் போலீசார் சென்னை வந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக சென்னை மாநகர போலீசாரின் உதவியையும் கரூர் போலீசார் நாடி உள்ளனர்.

    இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யும்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் முடிவு செய்யப்பட்டது.

    • பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாக ஆதார் பயன்படுகிறது.
    • ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில், 7 முதல்15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு 125 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த கட்டண தள்ளுபடி கடந்த அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்ததாக ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் 6 கோடி குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது.

    இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் கிழக்கு கடற்கரையோரம் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

    • துப்பாக்கி, ஜில்லா படத்தில் விஜயுடன் இவர் நடித்துள்ளார்.
    • ஆவடி நகைக்கடை திறப்பு விழாவில் காஜல் அகல்வால் கலந்துகொண்டார்.

    தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த தெலுங்கு படமான மகதீரா இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தது.

    தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாரி போன்ற படங்களில் நடித்து இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். துப்பாக்கி, ஜில்லா படத்தில் விஜயுடன் இவர் நடித்துள்ளார்.

    திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர், தமிழில் கடைசியாக கமல் நடித்த இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தில் இவரது போர்ஷன்கள் இடம் பெறவில்லை.

    இந்நிலையில், ஆவடி நகைக்கடை திறப்பு விழாவில் காஜல் அகல்வால் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் விஜயின் கரூர் துயர சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பாக கருத்து கூற மாட்டேன். அது வேறு களம்.

    விஜய் குறித்து பேசிய அவர், விஜயுடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் நடிகர் விஜயின் மிகப்பெரிய ரசிகை.

    தமிழ் படத்தில் மிக விரைவில் நடிப்பேன் என அவர் கூறினார்.

    • இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் அகமதாபாத்தில் நடந்தது.
    • இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதனால் டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 104 ரன் மற்றும் 4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில், உங்களது பார்ட்னர் அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜடேஜா கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அஸ்வினை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம். பல ஆண்டாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் போட்டியை வென்று கொடுப்பவர். டெஸ்ட் போட்டிகளின்போது அஸ்வின் பந்து வீச வேண்டும் என தோன்றும். ஆனால் அவர் அணியில் இல்லை என்பதை உணர்வேன் என உருக்கமாகத் தெரிவித்தார்.

    எதிர்காலத்தில் என்னுடைய இடத்துக்கு வேறு ஒரு வீரர் வருவார். இது கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்தார்.

    • இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
    • திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், படத்தின் மூன்றாம் சிங்கிளான 'சிங்காரி' பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    • தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும்.
    • இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள்.

    பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    செங்கல்பட்டு மறைமலைநகர் பெரியார் திடலில் நடக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கருஞ்சட்டைக்காரர்கள் தமிழ்நாட்டின் காவலுக்கு கெட்டிக்காரர்கள்.

    தமிழ் சமுதாயத்திற்காக 92 வயதிலும் இளைஞர் போல் ஓய்வின்றி ஊழைத்து வருகிறார். கி.வீரமணி. கலைஞர், பேராசிரியருக்கு பிறகு தன்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. இந்த வயதிலும் தினமும் எழுதுகிறார், பிரசாரம் செல்கிறார்.

    பெரியாரின் சிந்தனைகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் போற்றப்படுகிறது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போற்றுவது பெரியாரின் கொள்கை, திராவிட சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி.

    திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    எனது ஒரு மாத ஊதியம், 126 எம், எம்எல்ஏக்கள் ஊதியத்தை சேர்த்து ரூ.1.5 கோடியை பெரியார் உலகத்திற்கு வழங்குவதில் மகிகழ்ச்சி.

    பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும். சாதி பெயரில் உள்ள 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும். நன் இனத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்கு பிடிக்கவில்லை.

    இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்துவது திராவிட மாடல் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ரோகித், கோலி முனைப்பு காட்டவில்லை.
    • 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நீக்கி விட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்ததுக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ரோஹித், கோலி முனைப்பு காட்டவில்லை. 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒருநாள் போட்டிகள் குறைவாகவே விளையாடுகிறோம். இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால்தான் 2027 உலகக் கோப்பைக்கு தயாராக முடியும்.

    என கில் கூறினார்.

    • சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    • கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

    பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.

    கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது. மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

    ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.

    இந்நிலையில், ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

    ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் அல்லது வீடியோக்கள் எவரிடமேனும் இருந்தால், அதனை அவர்கள் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பலுசிஸ்த்தான் பிரதேசத்தின் கனிம மாதிரிகளை டிரம்ப்பிடம் காட்டிய புகைப்படங்கள் வைரலானது.
    • உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல ஒரு ஏற்றுமதி முனையமாக பயன்படும்.

    அரபிக் கடலில் ஒரு புதிய துறைமுகத்தைக் கட்டவும் வர்த்தக திட்டங்களை செயல்படுத்தவும் பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.

    பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம வளங்களை பூமியில் இருந்து வெட்டி எடுத்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது.

    அண்மையில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஐ சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீர் அவருக்கு தங்கள் நாட்டின் அங்கமான பலுசிஸ்த்தான் பிரதேசத்தின் கனிம மாதிரிகளை காட்டிய புகைப்படங்கள் வைரலானது. மேலும் அந்தச் சந்திப்பில், ஷெரீப் அமெரிக்க நிறுவனங்களிடம் வேளாண்மை, தொழில்நுட்பம், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீடு செய்யக் கோரியிருந்தனர்.

    இந்நிலையில் பலுசிஸ்தான் பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல ஒரு ஏற்றுமதி முனையமாக பாஸ்னி நகரில் புதிய துறைமுகம் கட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி, அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தத் துறைமுகத்தைக் கட்டவும் இயக்கவும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது வர்த்தக நோக்கங்ககுக்காக மட்டுமே என்றும் இந்த  துறைமுகம் அமெரிக்க ராணுவ தளமாக இருக்காது என்றும் பாகிஸ்தான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.

    பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் நடைமுறை சாத்தியம் கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • இரு வேரியண்ட்களில் VX வேரியண்ட்டில் எல்சிடி டிஸ்பிளே உள்ளது.
    • VX மற்றும் ZX என ஹீரோ டெஸ்டினி 110, 2 வேரியண்ட்களில் கிடைக்கும்.

    ஹீரோ நிறுவனம், புதிய டெஸ்டினி 110 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 110 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8.1 ஹெச்பி பவர், 8.8 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

    இந்த ஸ்கூட்டரில் புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட், எச் வடிவ எல்இடி டெயில் லைட்கள் என வடிவமைப்புகள் பெரும்பாலும் டெஸ்டினி 125 ஸ்கூட்டரை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் VX மற்றும் ZX என ஹீரோ டெஸ்டினி 110, 2 வேரியண்ட்களில் கிடைக்கும்.

    இரு வேரியண்ட்களில் VX வேரியண்ட்டில் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இதன் விலை ரூ.72 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் மூன்று நிறங்களில் வருகின்றன. ZX வேரியண்டிலும் 3 நிறங்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.

    கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    இதன் பின் ஹமாஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு விதித்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது.

    மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் திட்டத்தின் பிற விவரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தைநடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.

    டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

    ஆயுதத்தை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்களை ஹமாஸ் ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது.

    ×