என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும்.
    • பீகார் தேர்தலில் கடினமாக உழைத்த இளம் தலைவர் தேஜஸ்விக்கும் வாழ்த்துகள்.

    பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    * பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும்.

    * பீகார் தேர்தலில் கடினமாக உழைத்த இளம் தலைவர் தேஜஸ்விக்கும் வாழ்த்துகள்.

    * பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்.

    * தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மிகவும் கீழ் நிலைக்கு சென்றுவிட்டது.

    * பீகார் தேர்தல் முடிவானது தேர்தல் ஆணையத்தின் தவறான, பொறுப்பற்ற செயலை வெளிப்படுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜப்பான் பிரதமர் தசைச்சி பேச்சு இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.
    • சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    தைவான் தொடர்பாக ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களை சீன அரசு எச்சரித்துள்ளது.

    கடந்த வாரம் டோக்கியோவில் பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். ஜப்பான் பிரதமர் தசைச்சி பேச்சு இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.

    மேலும், ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்கு சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, ஜப்பான் பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், ஜப்பான் பிரதமரின் பேச்சு சீனா-ஜப்பான் பரிமாற்றங்களுக்கான சூழலைக் கடுமையாக பாதிக்கும். ஜப்பானில் உள்ள சீன குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 

    • தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
    • இந்த விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.

    புதுடெல்லி:

    தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சாகித்ய அகாடமி–யின் 2025-ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லி சாகித்ய அகாடமி அரங்கில் நேற்று நடைபெற்றது.

    தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.

    தமிழில் ''ஒற்றை சிறகு ஓவியா'' என்ற நாவலுக்காக பால புரஸ்கார் விருதை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பெற்றார்.

    மேலும், தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.

    • தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
    • இந்தியா கூட்டணி வெறும் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.

    இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று 202 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.

    இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் நிதிஷ்குமார் பீகார் முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்கிறார்.

    • முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது
    • வைபவ் சூர்யவன்ஷி 42 பந்தில் 15 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்தார்.

    தோஹா:

    இளம் வீரர்களுக்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடைபெற்ற குரூப் ஏ லீக் போட்டியில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொண்டது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது

    தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடி 32 பந்துகளில் சதமடித்து வரலாறு படைத்தார். அவர் 42 பந்தில் 15 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜிதேஷ் சர்மாவும் அதிரடியாக ஆடி 32 பந்தில் 6 சிக்சர், 8 பவுண்டரியுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்சில் இந்திய அணி 25 சிக்சர், 24 பவுண்டரிகள் அடித்தது.

    வைபவ் சூர்யவன்ஷி 15 சிக்ரும், ஜிதேஷ் சர்மா 6 சிக்சரும் அடித்தனர்.

    அடுத்து ஆடிய யுஏஇ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    இந்தியா ஏ அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் அடித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

    • மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
    • தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

    243 தொகுதிகளுக்கு நடைபெற்ற பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் இன்று வெளியாகின.

    இரவு 8 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளன. அதேநேரத்தில் பாஜக 76 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 56 இடங்களிலும் வெற்று தனிப்பெரும்பான்மையைப் பதிவு செய்துள்ளன. இதனால், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

    இந்த வெற்றி குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், "2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில், மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இதற்காக, மாநிலத்தின் அனைத்து மரியாதைக்குரிய வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மரியாதைக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

    இந்த மகத்தான வெற்றிக்கு, அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு நன்றி .

    உங்கள் ஆதரவுடன், பீகார் மேலும் முன்னேறும். நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்ககளின் பட்டியலில் பீகார் இடம்பெறும்" என்று தெரிவித்துள்ளார். 

    காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா உள்ளிட்ட படங்களை இயக்கிவர்.

    காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா உள்ளிட்ட பல்வேறு நகைக்சுவையுடன் கூடிய குடும்ப பாங்கான படங்களை இயக்கியவர் வி.சேகர்.

    இவர் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள்.
    • தேர்தல் நேரத்தில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுகிறார்கள்.

    நெல்லை மாவட்ட பா.ஜா.க அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களுக்கு மேலாக முன்னிலை வகித்து வருகிறது. இது ஏற்கனவே அங்கு நடைபெற்றுள்ள ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் வரவேற்கிறேன்.

    நெல்லை தொகுதியில் தி.மு.க. தோற்க கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதியை பொருத்தவரை நான் கேட்ட கல்லூரி உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி தந்துள்ளார். தனிப்பட்ட முறையில் எனக்கும், அவருக்கும் உள்ள நட்பு ஆழமானது. அதற்காக கட்சிகள் என்று வரும்போது விட்டுக் கொடுக்க முடியாது.

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் ஆணையமும் பங்கு வகித்ததால் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக இருந்ததா?

    பீகாரில் 65 லட்சம் வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். அதில் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர். 28 லட்சம் வாக்காளர்கள் வரை வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். பின்னர் நீக்க தானே செய்வார்கள்.

    தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை பொருத்தவரை தமிழகத்தில் தி.மு.க. வட்ட செயலாளர்களை வைத்துதான் இந்த வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக அதிகாரிகளுக்கு நிர்பந்தம் கொடுக்கிறார்கள். அதிகாரிகள் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் மனு அனுப்பியுள்ளேன்.

    டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள். வெளிநாடுகளில் இது போன்ற சம்பவம் நடந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்டு ஆதரவாக பேசுவார்கள். ஆனால் இந்தியாவில் தான் இப்படி குறை கூறும் சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் இங்கு இருப்பவர்களின் தேசப்பற்று குறைந்துவிட்டது தான்.

    தேர்தல் நேரத்தில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுகிறார்கள். பீகாரில் தேர்தல் நடந்தது. டெல்லியில் கொண்டு வெடித்தது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனது வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டது குறித்து நான் அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரம் எனக்கு யாரும் வெடிகுண்டு மிரட்டல் விடவில்லை.

    அ.தி.மு.க.வில் ஒரு காலத்தில் ஜே அணி, ஜா அணி என்று இருந்தது. பின்னர் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தார்கள். மிகப்பெரிய வெற்றியை பெற்றார்கள். அதேபோன்று தற்போது அ.தி.மு.க.வினர் அணிகளாக உள்ளனர். இது அ.தி.மு.க. வில் வழக்கமாக நிகழக்கூடிய ஒன்றுதான்.

    அதே நேரத்தில் எங்கள் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கட்சி. தற்போது பீகாரில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதனை கொண்டாடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ராம், ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த பும்ரா ஓவரை மட்டும் தடுத்து ஆடினார். சிராஜ் ஓவரை சிக்சரும் பவுண்டரியுமாக பறக்க விட்டனர். இதனால் அக்சர் படேலுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அவர் ஓவரையும் அதிரடியாக விளையாடினர்.

    இந்த ஜோடி முதல் 10 ஓவருக்கு 57 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரிக்கல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 22 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து 13-வது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மார்க்ரம் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த கேப்டன் பவுமா, 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதனையடுத்து வியான் முல்டர்- டோனி டி சோர்ஜி ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி வியான் முல்டர் 24, டோனி டி சோர்ஜி 24 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

    அதனை தொடர்ந்து கைல் வெர்ரேய்ன் 16, மார்கோ ஜான்சன் 0, கார்பின் போஷ் 3, சைமன் ஹார்மர் 5, கேசவ் மகராஜ் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும் சிராஜ், குல்தீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • 1995 ஆம் ஆண்டு 4 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
    • 2005ஆம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது.

    பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போது 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    பொதுவாக தேர்தலின்போது வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறும். இதனால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயமும் ஏற்படும். வாக்குச்சாவடிகளில் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாக்கு அளிக்க அனுமதிக்கவில்லை. கள்ள ஓட்டு செலுத்திவிட்டனர் என குற்றச்சாட்டு எழும். இதனால் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படும்.

    ஆனால் பீகாரில் முதன்முறையாக வாக்குப்பதிவின்போது வன்முறையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேபோல் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு என்பது இல்லை.

    கடந்த 1985 சட்டசபை தேர்தலின்போது 63 பேர் உயிரிழந்துள்ளனர். 156 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடபப்ட்டது.

    1990 தேர்தலின்போது வாக்குப்பதிவு வன்முறை தொடர்பாக 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

    1995ஆம் ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறை வெடித்ததாலும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு காரணமாகவும் டி.என். சேஷன் நான்கு முறை தேர்தலை ஒத்திவைத்தார்.

    2005ஆம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது.

    • டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர்.
    • குருகிராம் மற்றும் நுகு உள்ளிட்ட பகுதிகளில் இது வாங்கப்பட்டு உள்ளது.

    டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோனது. எனவே அவர்தான் காரை ஓட்டி வந்தாரா? என சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதே சமயம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளில் அவரது உருவம் கண்டறியப்பட்டு, அந்த காரில் அவர் சென்று வந்த இடங்கள் எல்லாம் ஆராயப்பட்டன. இவர்தான் வெடிப்பைச் செய்திருப்பார் என போலீசார் உறுதியாக நம்பினர். இருந்தாலும் டி.என்.ஏ. பரிசோதனையில் அதனை உறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    உமர் முகமது ஜம்மு காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்தவர். அங்கு அவருடைய தாயார் மற்றும் சகோதரரிடம் டி.என்.ஏ. மாதிரிகள் பெறப்பட்டன. அவை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    கார் வெடித்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட உமரின் உடல் பாகங்கள் என்று சந்தேகம் கொள்ளப்பட்ட பாகங்களுடன் மேற்கண்ட மாதிரிகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இந்த பரிசோதனையில் இரண்டும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்திப்போனது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டது உமருடைய உடல் பாகங்கள்தான் என கண்டறியப்பட்டது.

    இதனால் கார் வெடிப்பை நிகழ்த்தியது அவர்தான் என்பது உறுதியானது. பயங்கரவாதியாக அவர் மாறி இருக்கிறார். இதுபற்றி மேலும் விசாரணை தொடர்கிறது.

    இதற்கிடையே டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர். இதற்காக உமர் முகமது, முசமில் ஷகீல், ஷாகீத் ஷாகீன் மற்றும் அதீல் அகமது ராதர் ஆகியோர் ரூ.20 லட்சம் நிதி திரட்டி உள்ளனர். இது உமர் முகமதுவிடம் கொடுத்து வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பணத்தில் ரூ.3 லட்சம் மதிப்புக்கு 2 டன் அமோனியம் நைட்ரேட்டை உரக்கடைகளில் வாங்கி உள்ளனர். குருகிராம் மற்றும் நுகு உள்ளிட்ட பகுதிகளில் இது வாங்கப்பட்டு உள்ளது. பணத்தை வைத்திருப்பது தொடர்பாக உமர் அகமதுவுக்கும், முசமிலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் அமைந்துள்ள உமர் முகமதுவின் வீடு இடிக்கப்பட்டுள்ளது. 



    • மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பீகார் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.

    வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 'விவிபாட்' எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டது.

    இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

    எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று இன்று தெரிந்துவிடும்.

    ×