என் மலர்
ஆசிரியர் தேர்வு
- 2ஆவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 153 ரன்கள் சேர்த்தது.
- இந்தியா 93 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
30 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. பவுமா 29 ரன்களுடனும், போஸ்ச் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது.
பவுமா- போஸ்ச் ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. போஸ்ச் 25 ரன்கள் அடித்தார். பவுமா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவைவிட 123 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து யான்சன் பந்தில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடினார். ஜுரல் 13 ரன்னிலும், பண்ட் 2 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 31 ரன்னில் வெளியேறினார். அதன்பின் குல்தீப் யாதவ் 1 ரன்னிலும், சிராஜ் ரன்ஏதும் எடுக்காமலும், அக்சர் படேல் 26 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா 2ஆவது இன்னிங்சில் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2ஆவது இன்னிங்சில் ஹார்மர் 4 விக்கெட்டும் மகாராஜ் மற்றும் யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். சுப்மன் கில் 2ஆவது இன்னிங்சில் களம் இறங்கவில்லை.
- தமிழகத்தில் INDIA கூட்டணி எஃகு கூட்டணியாக உள்ளது
- இந்தியா கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைக்கும்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தவெக பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் தொடர்வதாக செல்வபெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகார் மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சிலர் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். பீகார் மாநில தேர்தலை பொறுத்தவரை அங்கு வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் காரணமாக 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதை எதிர்த்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்களும் இணைந்து 16 நாட்கள் பீகார் மாநிலத்தில் வாகன அணிவகுப்பு மூலமாக பரப்புரை மேற்கொண்டார்கள். இந்த பின்னணியில் பீகார் மாநிலத்தில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு தேஜஸ்வி யாதவ் அவர்களை முதலமைச்சராக இந்தியா கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றி வாய்ப்புகள் நிச்சயமாக இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத வகையில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த 2005 முதல் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கிற நிதிஷ்குமார் மீண்டும் வெற்றி பெறுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் பா.ஜ.க. கூட்டணியின் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று என்று அரசியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். பீகாரில் மொத்த மக்கள் தொகையில் 33.76 சதவிகிதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகிறார்கள். பீகாரில் உள்ள குடும்பங்களில் 64 சதவிகிதம் பேர் மாதம் ரூபாய் பத்தாயிரத்திற்கும் குறைவாக வருவாய் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவிலேயே வேலையில்லா திண்டாட்டம் 10.8 சதவிகிதமாக பீகாரில் தலைவிரித்தாடி வருகிறது. ஏறத்தாழ 3 கோடி பேர் பீகாரில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேலை செய்து பிழைத்து வருகிறார்கள். இத்தகைய அவலநிலைக்கு பீகார் மாநிலத்தை கொண்டு சென்ற பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க எந்தவித நியாயமான காரணங்கள் இல்லை என்று உறுதியாக கூற முடியும். ஆனால் வெற்றி வாய்ப்ப எப்படி ஏற்பட்டது ?
இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் இருந்து 2023 இல் இந்திய தலைமை நீதிபதியை நீக்கி விட்டு பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என்று மாற்றியமைத்தார்களோ அன்றைக்கே இந்திய தேர்தல் ஆணையம் மோடி - அமித்ஷாவின் கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட்டது. இந்த பின்னணியில் தான் கடந்த காலங்களில் வாக்குத் திருட்டு மூலமாக மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அத்தகைய உத்தியை தான் பீகாரிலும் பின்பற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள். பீகார் வெற்றி என்பது மோடி-அமித்ஷா-கெய்னேஷ்குமார் கூட்டணியினால் விளைந்ததே தவிர, மக்கள் வாக்களித்து பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறவில்லை.
பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிப்பதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது 1.21 கோடி பெண்களுக்கு தலா ரூபாய் 10,000 விநியோகம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட போது, அதனை தடுத்து நிறுத்த மறுத்து விட்டது. ஆனால், தெலுங்கானா, ஜார்கண்ட் மாநிலத்தில் இத்தகைய திட்டங்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 10,000 வாக்குகளுக்காக கொடுக்கப்பட்டது லஞ்ச பணமாகத் தான் கருத வேண்டும். இது வெற்றிக்கான மிக முக்கிய காரணமாகும்.
நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் 20.6 சதவிகித வாக்குகளை பெற்று 89 இடங்களில் பா.ஜ.க.வும், 20.3 சதவிகித வாக்குகளை பெற்று 85 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. ஆனால், 23 சதவிகித வாக்குகளை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இன்றைக்கும் தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் விளங்கினாலும் 2020 சட்டமன்றத் தேர்தலில் 15.39 சதவிகித வாக்குகளை பெற்று 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் தற்போது 85 இடங்களில் எப்படி வெற்றி பெற முடிந்தது என்பது கடுமையான சந்தேகத்திற்கு உரியதாகும். இதில் தேர்தல் ஆணையத்தின் சதி இருப்பதை அனைவரும் உறுதி செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் ஆகியவற்றில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளுக்காகவும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற நோக்கத்திலும் இந்தியா கூட்டணி வெற்றிக் கூட்டணியயாக செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத போக்கிற்கு எதிராக மக்கள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கிறார்கள். எக்கு கோட்டை போல இருக்கிற இந்தியா கூட்டணிக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி பங்கு போட்டுக் கொள்கிற சூழல் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் இருக்கப் போகிறது. இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
- வீடியோவில், மாணவரை கீழே தள்ளி அடித்ததோடு சித்ரவதை செய்தது வெளியாகி இருந்தது.
- விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கிய நேரத்தில் அரசு சமூக நல விடுதி காப்பாளர், சமையலர் எங்கே என கேள்வி எழுந்துள்ளது.
ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்மா பூங்கா பகுதியில் உள்ள அரசு சமூக நல விடுதியில் 8-ம் வகுப்பு மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர். வீடியோவில், மாணவரை கீழே தள்ளி அடித்ததோடு சித்ரவதை செய்தது வெளியாகி இருந்தது.
இந்நிலையில் விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைத்த ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சக மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கிய நேரத்தில் அரசு சமூக நல விடுதி காப்பாளர், சமையலர் எங்கே என கேள்வி எழுந்துள்ளது.
- இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
- இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது.
இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை GenZ போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களை சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ராஜ்நாத் சிங் லக்னோவில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை அமைந்துள்ளது என்றார்.
லக்னோ:
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலத்திற்குச் சென்றார். அவர் லக்னோவில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நமது தலைமை, நமது தொண்டர்களின் உழைப்பால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளது.
லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.
பா.ஜ.க.வில் நான் மாவட்ட இளைஞரணி தலைவராகவும், தேசிய இளைஞரணி தலைவராகவும், கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளேன். கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் பிரதமர் மோடி உயர்த்தி உள்ளார். தற்போது இந்தியா பேசும்போது உலகம் கேட்கிறது என தெரிவித்தார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- அரையிறுதி சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் தோல்வி அடைந்தார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் மோதினர்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், இத்தாலியின் சின்னருடன் மோதுகிறார்.
- படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
- இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
ஐதராபாத்:
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது
ஏற்கனவே மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு பேசுகையில் தனது மறைந்த தந்தை நடிகர் கிருஷ்ணாவை நினைவு கூர்ந்தார்.
புராணப் படங்களில் நடிக்க வேண்டும் என எனது தந்தை விரும்பியிருந்தார்.
இந்தப் படத்தைப் பார்த்து தனது தந்தை பெருமைப்படுவார் என நம்புகிறேன்.
இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி.
இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு.
இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன்.
வாரணாசி படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும் என தெரிவித்தார்.
- பீகார் சட்டசபை தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.
- காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. 243 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், குஜராத் மாநிலத்தில் வசிக்கும் பீகார் மக்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழா சூரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
நாடு ஏற்கனவே இந்த முஸ்லிம் லீக்- மாவோயிஸ்ட் காங்கிரஸை (MMC) நிராகரித்துள்ளது. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியுடன் பணியாற்றிய ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சியை பாதுகாப்பது தற்போது மிகவும் கடினமானது என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
50-60 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர் தோல்வியால் இப்படித்தான் முடிவடைகிறார்கள் என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது என்பதை உணர்த்தும் தெளிவான விசயம்.
என்.டி.ஏ. வெற்றி பெண்கள் மற்றும் இளைஞர் வாக்காளர்கள் கிடைக்கப்பெற்றது. ஜாமினில் வெளியே வந்தவர்கள், ஜாதிவாத விசத்தை பரப்ப தங்களுடைய அனைத்து எனர்ஜிகளையும் பயன்படுத்தினர். அவர்கள் இதுமட்டுமே வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தனர். பீகார் தேர்தல் சாதிவாத விசத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. இது நாட்டிற்கு மிகவும் பிரகாசமான அறிகுறியாகும்.
தலித் மக்கள் அதிகம் உள்ள 38 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் எதிர்க்கட்சியை நிராகரித்துள்ளனர்.
பீகார் தேர்தலின்போது, ஜாமினில் வந்த அரசியல்வாதிகளும், அவர்களுடைய கூட்டாளிகளும் ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று மசோதாவை பொது வெளியில் கிழித்தனர். பீகார் மக்கள் இந்த வகுப்புவாத விசத்தை முற்றிலுமாக நிராகத்துள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
- 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.
அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.
மேலும், ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- SIR-க்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் விஜய் கூறியதாவது:-
* கொஞ்சம் ஏமாந்தா.. நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்.
* வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் SIR படிவம் எப்படி சென்று சேரும்?
* SIR பணியால் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு போகும் பெண்கள்தான்.
* FORM கொடுக்க வருவீர்கள் என்பதற்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா?
என்று தெரிவித்தார்.
- மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்குச் சென்றுள்ளது.
- பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 3.44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு -பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
கூட்டணியில் 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களிலும், 101 இடங்களில் போட்டியிட்ட ஜேடியு 85 இடங்களிலும், 29 இடங்களில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி 19 இடங்களிலும் இதர கூட்டணி கட்சிகள் 9 இடங்களிலும் வென்றன.
மறுபுறம் ஆர்ஜேடி - காங்கிரசின் மகபந்தன் கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் 143 இடங்களில் போட்டியிட்ட ஆர்ஜேடி 25 இடங்களிலும், 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 5 இடங்களில் வென்றுள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதம் வெளியாகி உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 20.08 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி பெற்றதை விட 0.5 சதவீதம் அதிகம் ஆகும்.
அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 19.25 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் உயர்வாகும்.
மகபந்தன் கூட்டணியில், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 23 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 0.11 சதவீதம் குறைவாகும்.
அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 8.71 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 0.80 சதவீதம் குறைவு ஆகும். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 3.44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
அதேபோல் 243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் (1.81 சதவீதம்) நோட்டாவுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2020-இல் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தோ்தலில் 7.06 லட்சம் வாக்காளா்கள் (1.68 சதவீதம்) நோட்டாவுக்கு வாக்களித்தனா்.
வாக்கு சதவீதம் என்ற முறையில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி அதிக வாக்குகளை பெற்றிருந்தபோதும் அதன் வெற்றி பெற்ற பெற்ற இடங்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலில் 75 ஆக இருந்த நிலையில் இந்த தேர்தலில் 25 ஆக சுருங்கி உள்ளது.
பாஜக, ஜேடியு தலா 101 இடங்களில் போட்டியிட்ட நிலையில் ஆர்ஜேடி 143 இடங்களில் போட்டியிட்டதால் அதன் வாக்கு சதவீதம் கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
- ரூ.1 லட்சம் கடன் வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கரிவிடி மண்டலம், கோனூரில் நேற்று ஒரு வீட்டில் பூஜை செய்தனர். பின்னர் மொட்டை மாடியில் விளக்கேற்றி வைத்தனர். அந்த விளக்கின் மேல் பகுதியில் தூக்கி செல்லும் வகையில் கம்பி இருந்தது.
அங்கு வந்த ஒரு காகம் விளக்கை தனது கால்களால் அலேக்காக தூக்கி சென்றது. அதை ஒரு குடிசை வீட்டின் மீது போட்டது. இதனால் வீடு தீப்பிடித்தது. அருகே இருந்த மேலும் 3 குடிசை வீடுகளும் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
குத்தகை விவசாயியான கோபி என்பவரது வீடு முழுமையாக எரிந்தது. அவர் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்துடன் தங்க நகைகளும் எரிந்தன.
தாசில்தார் சி.எச் பங்கர்ராஜு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சொத்து இழப்பு சுமார் ரூ.4 லட்சம் என்று மதிப்பிட்டனர். அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி அளிக்கப்படும் என தெரிவித்தனர்.






